Friday, September 11, 2020

ராமானுஜ தயா பாத்ரம்


Thoopul Swami Desikan Durmukhi Varusha Aippasi Sravana Purappadu |  Anudinam.orgSwami Vedanta Desika #750thBirthday #JanmaNakshatra |  
"ராமானுஜ தயா பாத்ரம்
ஞான வைராக்ய பூஷணம்
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்
வந்தே வேதாந்த தேசிகம்"
32 அக்ஷரங்கள் கொண்ட  இந்த தனியன் ஸ்ரீ ப்ரம்ஹ தந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர் என்ற ஸ்வாமி தேசிகனின் ப்ரதம ஸிஷ்யரால் ஸமர்ப்பிக்கப்பட்டது.
"ராமானுஜரின் தயைக்குப் பாத்ரமானவரும், சிறந்த ஞானத்தையும் வைராக்யத்தையும் ஆபரணமாகக் கொண்டவரும், திருவேங்கடவனின் கருணையால் தோன்றிய வேதாந்த தேசிகனை வணங்குகிறேன்"-- என்பது இத்தனியனின் அர்த்த விசேஷம்.
எம்பெருமானாரின் மானஸீக ஞானபுத்ரனாகிய திருக்குருகைப்பிரான் பிள்ளான் எம்பெருமானாரின் திருவாக்குப்படி திருவாய்மொழிக்கு வ்யாக்யானம் அருளினார். அதுவே "திருஆறாயிரப்படி" என்ற பகவத்விஷயத்துக்கான முதல் வ்யாக்யானமாகும். இதனை அடியொற்றி ஸ்வாமி தேசிகன் அருளிய வ்யாக்யான க்ரந்தம் "நிகமபரிமளம்" என்பது (64 ஆயிரப்படி) ப்ரம்ஹதந்த்ர ஸ்வதந்த்ரர் ஸ்வாமியின் திருக்குமாரர் ஸ்ரீ குமாரவரதாச்சாரியாரிடம் பகவத் விஷயக் காலக்ஷேபம் கேட்க அனுமதி பெற்ற ஸம்பவத்தில் ஆவணி ஹஸ்தத்தன்று பிறந்த தனியன்தான் "ராமானுஜ தயாபாத்ரம்".
நிகமபரிமளத்தின் அடியொற்றி பகவத் விஷயம் காலக்ஷேபம் கேட்டு
ஆசார்யனுக்கீடான கீர்த்தி ஆசார்யனது குமாரருக்கும் உண்டெனக் காட்டுகிறது இச்சம்பவம்.
ஒரு ஸ்லோகத்துக்குப்பல அர்த்த விசேஷங்களை அளிப்பதில் ஸமர்த்தர் ஸ்வாமி தேசிகன். 
"ஸூபாஷித நீவி" என்ற க்ரந்தத்தில் ஸ்வாமி தேசிகன் ஒரு ஸ்லோகத்துக்கு 20அர்த்தங்கள் ஸாதித்திருக்கிறார் என்பது ஆச்சர்யமான விஷயம். 
"பாதுகா ஸஹஸ்ரத்திலும்" நிறைய ஸ்லோகங்களுக்கு 10க்கும் மேற்பட்ட அர்த்த விஸசேஷங்கள் உள்ளன.
ஆக ஸ்வாமியின் ஸிஷ்யர் ஸாதித்த தனியனுக்கு  ஆச்சார்யர்கள் ஸாதித்துள்ள அர்த்த விசேஷங்கள் பல.     
எப்படி எல்லாம் ஸ்வாமி தேசிகன் ராமானுஜ தயா பாத்ரமாக ஆகிறார் எனப்பார்ப்போம்.
  1. ராமானுஜ ஸித்தாந்தத்தில் திளைத்து  அவரே ஸ்வப்னத்தில் தோன்றி விஸிஷ்டாத்வைத   ஸித்தாந்தத்தை ப்ரகாசிக்கச்செய்ய  ஆசி வழங்கியதால் ராமானுஜ தயா பாத்ரமாகிறார். ஸ்வாமி தேசிகன் எம்பெருமானாரின் அனைத்து க்ரந்தங்களுக்கும் ஸ்வாமி தேசிகன் வ்யாக்யானம் ஸாதித்துள்ளார்.
  2. சித்திரை ஆதிரையில் தோன்றி ஸ்வாமி தேசிகனுக்கு 5ம் வயது தொடங்கி 20வயதுக்குள் ஸகல கலைகளையும் கற்றுவித்து த்வய திருமந்த்ர உபதேசமளித்தவர் அவரது மாதுலர் கிடாம்பி அப்புள்ளார் எனும் ராமானுஜர். கிளிப்பிள்ளைக்குச் சொல்வதுபோல் எனக்கு சொல்லிப்பழக்கினார் என ஸ்வாமி கூறுகிறார். அவரது தயைக்குப்பாத்ரமானதால் ராமானுஜ தயாபாத்ரம்.
  3. காடுறையப்போ என்றதும் புறப்பட்ட ஸீதாராமனைச்சரணாகதி செய்த இளைய பெருமாளின் மறு அவதாரமே ராமானுஜர். அவரது தயாபாத்ரமாகிறார். பெருமாளுக்கீடான பெருமை உடைய தாயாரையும் சேர்த்து சரணாகதி செய்கிறார் இளைய பெருமாள்.
  4. ராமனின் அனுஜன் பரதன் சரணாகதிசெய்து பாதுகைபெற்றான். பரதன் பெற்றது பகவத்ஸேஷம். அந்த ராமானுஜனின் தயைக்குப் பாத்ரமாகி பாதுகாஸஹஸ்ரம் ஸாதித்தார்.
  5. ராம அனுஜன் சத்ருக்னன் தயைக்குப் பாத்ரமாகி பாகவத ஸேஷத்வம் பெற்றார். (ஸ்வாமியை அவமதிக்கும் வகையில் அவரது க்ருஹத்தில் தோரணமாயிட்ட பாதரக்ஷைகளை பாகவத பாதுகைகளாய் ஏற்றது).
  6. க்ருஷ்ணாவதாரத்தில் பலராமனுக்கு அனுஜனாகிய க்ருஷ்ணன்  "கோபாலவிம்சதி" என்ற ஸ்லோகத்தைச்செய்விக்கச் செய்து தன் 20 லீலைகளையும் தேசிகன் அனுபவிக்கும்படி காட்டி அருளி  ராமானுஜ தயாபாத்ரமாக்குகிறார். காவ்ய ரத்னம் எனும் "யாதவாப்யுதயம்" என்ற மஹாகாவ்யம் அருளினார். நம்மாழ்வாரையடுத்து க்ருஷ்ண தர்சனம் பெற்ற பெருமை ஸ்வாமி தேசிகனுக்கே.
  7. ஸ்ரீராம மிஸ்ரர் எனும் மணக்கால்நம்பியை ஆசார்யனாகக் கொண்டவர் ஆளவந்தார். ஸ்ரீ ராமமிஸ்ரரின் அனுஜனாக அவருக்குப்பின்வந்த ஆளவந்தார் ராமானுஜராகிறார். நாதமுனி அருளியவற்றை எல்லாம் ராமானுஜரிடம் கொண்டு சேர்த்தவர் ஆளவந்தார். இவர் அருளிய அத்தனை க்ரந்தக்களுக்கும் வ்யாக்யானம் அருளி ராமானுஜ தயாபாத்ரமாகிறார் ஸ்வாமி தேசிகன்.
  8. திருக்குருகைப் பிரான் பிள்ளான் ராமானுஜருக்குபின் ஸிம்ஹாஸனாதிபதியான அவரது ஞானபுத்ரன். அவர் அருளிய திருவாய்மொழி வ்யாக்யானத்துக்கு உரை எழுதி ராமானுஜ தயாபாத்ரமாகிறார்.
  9. ராமானுஜரை நடுநாயகமாய் வைத்த ஸ்வாமி தேசிகன், திரு முடிசம்பந்தம் பெற்ற ஆழ்வார்கள் திருவடி சம்பந்தம் பெற்ற ஆசார்யர்களின் தயைக்குப்பாத்ரமாகி ராமானுஜ தயாபாத்ரமாகிறார்.
  10. எல்லா பெருமாள்களின் தயைக்குப்பாத்ரமாகிய எம்பெருமானார்க்கு எல்லாவற்றையும் அளித்து  "உடையவர்" ஆக்கினான் அரங்கன். "கத்யத்ரயம்" அருளி சரணாகதி செய்த அந்த எம்பெருமானாரின் தயைக்குப்பாத்ரமாகிய ஸ்வாமி தேசிகனை வேதாந்தாசார்யனாக்கிய ரங்கனுக்கு "பாதுகா ஸஹஸ்ரம்" அருளிச் செய்தார் ஸ்வாமி தேசிகன்.
காஞ்சி வரதனுக்கு தீர்த்த கைங்கர்யம் செய்து முக்தி மழை பொழியும் முகில் வண்ணனாக்கிய எம்பெருமானாரின் தயைக்குப்பாத்ரமாகிய ஸ்வாமி தேசிகன் "அத்திகிரி மஹாத்மியம்" செய்தருளினார்.
சங்கு சக்ரம் ஸமர்ப்பித்து திருமலையப்பனை ஸ்தாபித்த  எம்பெருமானாரின் தயைக்குப்பாத்ரமாகிய ஸ்வாமி தேசிகன் "தயா சதகம்" அருளினார்
திருநாராயணபுரத்தின் "செல்வப்பிள்ளையை" தன் "செல்லப்பிள்ளை" யாக்கிய எம்பெருமானாரின் தயையினால் ஸ்வாமி தேசிகனை திருநாரணன் தன் கைங்கர்யத்தில் ஈடுபடச்செய்து "ராமனுஜ தயாபாத்ரம்" தனியன் ஏற்படுத்தி உகந்தான் அந்த திருநாரணன்.

இத்தகைய பெருமைவாய்ந்த இந்த தனியன் அத்யயன உத்ஸவத்தில் ஸேவிக்கப்படும் சீர்மை பெற்றுள்ளது.

அரிதான இந்த தனியன் விளக்கங்கள் ஆவணி ஹஸ்தத்தன்று நாவல்பாக்கம் ஸ்ரீ வாஸூதேவாச்சார் ஸ்வாமியின் உபன்யாஸத்திலிருந்து  தொகுக்கப்பட்டது(21-8-20)
********************🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸***************