கோமறு மாகதை எனப்போற்றப்பட்டு ப்ரும்ஹாவால் நாரதருக்கு உபதேஸிக்கப்பட்டு அவரால் வால்மீகி ரிஷிக்குச் சொல்லப்பட்டு தன் குமாரர்கள் வாயால் ராமனே கேட்ட சரிதையே ஶ்ரீமத் ராமாயணம். திவ்ய தம்பதியே ஶரணாகதி அனுக்ரஹித்ததும், பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதும், கண்ணுக்குப்புலப்படாத மோக்ஷம் கண்ணுக்குப்புலப்படும் நன்னடத்தை இவற்றை அளிக்கும் இதிகாசம் இது. பிறந்தது முதல் நடையில் நின்று உயர்ந்தவன் கதை இது. ஆசார்யர்கள் எல்லாரும் காலக்ஷேபங்கள் பலமுறை செய்த கதை. ஶ்ரீபாஷ்யகாரர் 18 முறை கேட்டு விஸேஷார்த்தங்கள் அறிந்த கதை. "ம்ருத்ஸஞ்சீவனாம்ருதம்" என்பதாக மறித்தவரைப்பிழைக்க வைக்கு மஹா காவ்யம் இது. பகைவர் குடும்பமே ராமபிரானின் குணக்கடலில் திளைத்த காவ்யம் இது என பராஶரபட்டர் கூறுகிறார்.
அர்ச்சாரூபியான ஶ்ரீ ராமபிரானின் ரூப, வீர, குணவிஸேஷத்தில் ஈடுபட்ட ஸ்வாமி தேஶிகனின் உன்னத க்ரந்தம் ஶ்ரீரகுவீர கத்யம்.
1. ஜெயத்யாஶ்ருத ஸந்த்ராஸ த்வாந்த வித்வம்ஸனோதய: ப்ரபாவான் ஸீதயா தேவ்யா:பரமவ்யோம பாஸ்கர:!
ஆஶ்ருதர்களின் பயமாகிய இருட்டைப்போக்கும் ராமசந்த்ரனாகிய சூர்யன் ஸீதை என்ற ப்ரபையை எப்போதும் பிரியாமல் உடையவன்.
2. ஜெயஜெய மஹாவீரா!
ராமன் எதிரிகளே கொண்டாடும் வீரன். இவன் போரிட்ட பாங்கை ராவணன் வெகுவாய் ஸ்லாகிக்கிறான். இரு திக்கஜங்கள் மோதியதுபோல, ஹிரண்யகசிபு நரஸிம்ஹ யுத்தம்போல, ஆதிஸேஷனும் கருடனும் பொருததுபோல இருந்ததாம் ராம ராவணயுத்தம்.
"வாரணம் பொருத மார்பும் வரயினை எடுத்த தோளும் நாரதமுனிவர்கேட்க நயம்பட உரைத்த நாவும் தார்அணிமௌளி பத்தும் சங்கரன்கொடுத்த வாளும் வீரமும் களத்தே போட்டு வெறும்கையோடு திரும்பினான்"....என்கிறான் கம்பன்.
அன்று ஶ்ரீதேவியைப்பார்த்தவன் இன்று பூதேவியைப்பார்த்து நடந்தான். அரண்மனை சென்ற ராவணனுக்கு உறக்கம்வராது உள்ளம் வியர்த்ததாம். ராமனின் அழகிலும் வீரத்திலும் மயங்கினான்.
எதிரிகளின் மனத்துக்கும் இனியானாகிய ராமனது அழகுக்கு முன் மன்மதனே வரினும் நாயை ஒப்பான் என்கிறான் கம்பன். இவ்வழகிய ராமனைவிட்டு ஸீதா எப்படித் தன்னை விரும்புவாள் என நினைக்கிறான் ராவணன்.
3. மஹாதீர தௌரேயா!
ஏக சிந்தையனான தீரம் மிக்கவன்ராமன்."ராஜ்யம் ஆள்" என்றதைவிட "காடுபோ" என்றதும்.
அளவுக்குமீறி பொதிஏற்றிய வண்டியை இழுத்துவந்த மாடுகளை அவிழ்த்து அவற்றின் பாரம்நீங்கி விடுவித்த நிலையடைந்தானாம் ராமன். தெளிந்த நீரோடைபோலிருந்த கைகேயி மனத்தை மந்தரை என்ற காட்டுயானை கலக்க குழம்பிய கைகேயி பக்ஷபாதம்கொண்டு பரதனிடம் பாரத்தை ஏற்றி, என்னிடமிருந்துவிலக்கினாள் என்பது அவனது தீரத்வம்.
பாலகாண்டம்
4. தேவாஸுர ஸமரஸமய! ஸமுதித நிகில நிர்ஜர நிர்தாரித நிரவதிக மாஹாத்ம்ய!
5. தஶவதன தமித தைவத பரிஷதப்யர்த்தித தாஸரதி பாவ!
தேவாஸுர யுத்தங்களால் ஏற்பட்ட வெற்றிகளால் அளவற்ற மாஹத்ம்ய செல்வம்உடையவன்.தேவதைகள் செய்த ப்ரார்த்தனையால் எம்பெருமானே 4 உருவாகப்பிறக்கப் போவதை வஸிஷ்டன் நினைவுகூர எந்த லோபமும் இல்லாத அஶ்வமேத வேள்வியையும், (அனிஷ்ட நிவர்த்தி) புத்ரகாமேஷ்டி யாகத்தையும் (இஷ்டபூர்த்தி) செய்தான்தஶரதன்.
அன்று அங்கதேசத்தில் ருஷ்யஶ்ருங்கர் அடிவைத்தும் வெளுத்த மேகமே நிறைந்திருந்த வானம் சிவனின் கண்டம் போலக் கறுத்து எப்படி மழைபெய்ததோ அதேபோல கலைக்கோட்டு மாமுனி யாகசாலைக்குள் நுழைந்ததுமே தனக்கு புத்ரபாக்யம் கிடைத்து விட்டதாக உணர்ந்தான் தஶரதன். இக்ஷ்வாகு குலத்தவர்க்கே ஆசார்ய அனுக்ரஹம் நிறைய உண்டு.
6. தினகரகுலகமல திவாகர!
புத்ரகாமேஷ்டியாகம் முடிந்தவுடன் தஶரதனின் மூன்று மனைவிமார்களும் தௌஹ்ருத லக்ஷணம் (ஒரேஸமயம் இரு ஹ்ருதயம் பெறுதல்) பெற்றனர். ப்ரளய காலத்தில் அண்டங்களனைத்தையும் தன்னுள்ளடக்கியவனைத் தன் வயிற்றில் தாங்கிய மன்னுபுகழ் கோஸலைதன் "மணிவயிறு வாய்த்தான் எம்பெருமான் ராமனாக".
சூர்யகுல தாமரையின் சூர்யனாய்த்தோன்றினான். ஒரே ஸமயத்தில் விபவா ராமனாகவும் அர்ச்சாரூபியாகவும் (ரங்கநாதன்) ஆகின்றான்.
7. திவிஷததிபதி ரணஸஹசரண சதுர தஶரத சரமருண விமோசனா!
இப்படி நீபிறந்ததால் இந்த்ரனுக்கு யுத்தகாலத்தில் உதவியதால்முன்பே தேவக்கடன்கழற்றிய தஶரதருக்கு எஞ்சியிருந்த பித்ருகடன்களையும்அகற்ற உதவியவனாகிறாய்.
8. கோஸல ஸுதா குமாரபாவகஞ்சுகித காரணா கார!
ரங்கனைத்தினம் ப்ரார்த்தித்து ஜகத்காரணனான எம்பெருமானை கோஸலை தன் பிள்ளை என்ற போர்வையில் மறைத்தாள். உலகெல்லாம் ஒடுக்கியவயிறனைத் தன் மணிவயிற்றில் வாய்க்கப் பெற்றாள் கோஸலை!
9. கௌமாரகேளி கோபாயித கௌஶிகாத்வர!
"யாகம் செவ்வனேமுடிக்க இடையூறாயிருக்கும் ராக்ஷஸர்களைக் கொல்ல கரிய செம்மலை அனுப்பு" என்ற விஸ்வாமித்ரர் யமன்போலத் தோன்றினார் தஶரதனுக்கு. வாழ்க்கையில் முன்னேற காமம் க்ரோதம் இரண்டையும் தள்ளிவைக்கவேண்டும். ஸுபாகுவைக் கொன்ற ராமன்மாயமான் வேஷமேற்க வேண்டி மாரீசனை விட்டுவைத்தான்.
எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பிய சொல்லால் ஏற்கனவே புண்ணுற்ற நெஞ்சில் கனல் விழுந்ததுபோலத் துடித்தான் தஶரதன். அம்ருதத்தை ஸுதர்ஶனம் காத்துபோல இம்முனிவன் ராமாம்ருதத்தைக்காப்பான் எனப்புரியவில்லை அவனுக்கு.
10. ரணாத்வர துர்யபௌவ்ய திவ்யாஸ்த்ர ப்ருந்த வந்தித!
காகபக்ஷனாக இருந்து கல்விச்சிலையால் யாகஸம்ரக்ஷணம் செய்தது உன் பால்ய லீலையின் ஒரு துளியே! இந்த வல்லமையால் அரிய பெரும் ஸஸ்த்ரங்கள் எல்லாம் தாமே உன்னைத் தொழுது வந்தடைந்தன.
11. ப்ரணத ஜன விமத விமதன துர்லளித தோர்லளித!
ஶரீர பலமும் அஸ்த்ரபலமும் கொண்ட நீ உன் பக்தர்களின் விரோதிகளை அழித்துகந்தாய்.
12. தனுதர விஸிக விதாடன விகடித விஸராரு ஸராரு தாடகா தாடகேயா!
ஜீவஹிம்ஸையே செய்யாத எதிரிகளே இல்லாத ரிஷிகளை ஹிம்ஸித்த தாடகையை சிறிய பாணத்தால் தேகநாசம் செய்யும் ஸ்த்ரீவதம் தப்பில்லை என்றபடி வதம் செய்தாய்.
13. ஜடகிரண ஸகலதர ஜடில நடபதி மகுடதட நடனபடு விபுத ஸரிததிபகுள மதுகளன லளித பத நளினரஜ உபம்ருதித நிஜவ்ருஜின ஜகதுபல தனுரசிர பரம முனிவர யுவதிநுத!
பிறைச்சந்த்ரனைத்தரித்த சடாமுடியன் தலையில் நடம்பயிலும் கங்கை அலம்பும் தேனொழுகும் திருவடித்தாமரையின் துகள் ஒன்று பட்டதால் தன்பாவம் தொலைய கல்லாயிருந்து பெண்ணாகிய கௌதமமுனியின் பத்னி அகல்யாவினால் போற்றப்பட்டவனே!
கம்பன் கூறும் எட்டு வண்ணங்களில் மைவண்ணம் என்பது தாடகை முகில்வண்ணம் ராமன் கைவண்ணம் வில்லிறுத்தது கால்வண்ணம் ஆஶ்ருத ரக்ஷணம் என்பன ரசம் மிக்கவை.
14. குஸிக ஸுத கதித விதித நவ விவித கத!
ஸித்தாஶ்ரமத்திலிருந்து மிதிலை செல்லும் வழியில் குஸிகனின் பிள்ளையாகிய கௌஶிகன்9கதைகளைக்கூற அந்த மதுரமான கதைகளைக்கேட்டு நடந்த பாலகர்கள் பாதவலியை மறந்தனர். (மன்மதனை எரித்தது, ஸரயூநதி தோன்றியது, வாமன அவதாரம், தாடகைவதம், பாகீரதியின் தோற்றம், அகல்யாவின் பூர்வகதை) ஆகியன கௌஶிகன் கூறியவை.
15. மைதில நகர ஸுலோசனா லோசன சகோர சந்த்ர!
மிதிலா நகரப் பெண்களின் கண்களாகிய சகோர பக்ஷிக்கு சநத்ரன் போலானார்கள் ராமலக்ஷ்மணர்கள். பௌர்ணமி சந்த்ரனைப்பார்த்து தாகம் தணித்துக்கொள்ளும் அபூர்வபக்ஷி இது. பதினாறு கலைகொண்ட சந்த்ரன் கண்ணையும் மனஸையும் வசமாக்குவதுபோல 16 குணங்கள் நிறைந்த ராமன் காண்போர் கண்களைக் கவர்ந்தான்.
16. கண்ட பரஸூ கோதண்ட ப்ரகாண்ட கண்டன ஸௌண்ட புஜ தண்ட!
ஸுதன்வராஜா பறிக்க விரும்பிய சிவதனுஸை ஒடிக்க ஆற்றல்மிக்க தடி போன்ற தோள்வலிமை மிக்கவனே!
17. சண்ட கரகிரண மண்டல போதித புடண்டரீகவனருசி லுண்டாக லோசன!
ஸூர்யனின் ஒளிக்கற்றைகளால் மலர்த்தப்பட்ட தாமரைக்காட்டின்அழகைத் திருடும் அழகிய கண்களை உடையவனே!
18. மோசித ஜனக ஹ்ருதய ஶங்காதங்க!
மிக உயர்ந்தவளாகிய ஸீதாவுக்கு தர்மம்மீறாது மணமுடிக்க தருணம் ஏற்படுத்தி ஜனகரின் ஹ்ருதய சஞ்சலத்தைப் போக்கியவனே!
19. பரிஹ்ருத நிகில நரபதிவரண ஜனகதுஹித்ரு குசதடவிஹரண சமுசித கரதல!
கர்ம யோகியான ஜனகருக்கு மிக அபிமானவளாயினாள் ஸீதா. ராமன் இந்த்ர நீலக்கல் என்றால் அதைப்பதிக்கும் தங்கம் போன்றவள் ஸீதா. யோகமும் போகமும் கலந்தது போல ஸீதாகல்யாணம். பகுதியும் விகுதியும் சேர்ந்தால் உண்டாகும் நற் சொல் போன்றது ஸீதாராம ஐக்கியம். ஶரணாகத ரக்ஷணமே இவர்களின் ஏக தர்மம். ஜனகரின் தம்பி குசத்வனின் குமாரத்திகள் ஊர்மிளா, மாண்டவி, ஸுதகீர்த்தி முறையே ல்க்ஷ்மண, பரத, ஶத்ருக்னன் மனைவியானார்கள். கல்யாணம் முடிந்து அயோத்தி திரும்பகையில் பரஸுராமர் எதிர்க்கிறார்.
20. ஶதகோடி ஶதகுண கடினபரஶூதர முனிவரகரத்ருத துரவனமத நிஜ தனுராகர்ஷண ப்ரகாஶித பாரமேஷ்ட்ய!
இந்த்ரனின் வஜ்ராயுதத்தைவிட 100 மடங்கு கடினமான பரஶுராமனிடமிருந்த விஷ்ணுதனுஸை இழுத்து வளைத்து பரதேவதை என்று காட்டியவனே!
21. க்ரதுஹர ஶிகரி கந்துக விஹ்ருத்யுன்முக ஜிதஹரிதந்த தந்தி தந்த தந்துரோதந்த தஶவதனதமன குஶல தஶ-ஶத-புஜமுக ந்ருபதிகுலருதிர ஜரபரபரித ப்ருததர தடாகதர்பித பித்ருக பிருகபதி ஸுகதி விகதி கரனதபரி டிஷுபரிக!
பரஶுராமன் எம்பெருமானின் ஸ்வரூப ஆவேச அவதாரம், கார்த்யவீர்யார்ஜூனன்ஶக்தி ஆவேச அவதாரம்
கைலாஸகிரியைப் பந்தாடினான் ராவணன்.திக்கஜங்களைவென்று தந்தம் பதித்த மார்பினன். இத்தகைய ராவணனைத்தன் ஆயிரம் கைகளின் கீழ் சிறைவைத்தான் கார்த்ய வீர்யார்ஜுனன். இவனது குலத்தில்வந்த அரசர்கள் அனைவரையும் கொன்று ரத்தக்குளமாக்கி அதில் தன்தந்தைக்கு ஆத்திரம் தீர தர்ப்பணம் செய்த பராக்ரமஸாலி இந்த பரஸுராமன். இத்தகைய பரஸுராமனின்புண்ய லோகமார்கங்களை எல்லாம் அந்த விஷ்ணுதனுஸில் தொடுத்த ஒரு கணைக்கு நீ இரையாக்கனாய்!
அயோத்யா காண்டம்
22. அந்ருதபய முஷிதஹ்ருதய பித்ருவசனபாலன ப்ரதிஞா வஞாத யவ்வராஜ்ய!
இத்தகைய விஜயஶ்ரீயுடன் அனைவரும் அயோத்திசேர்ந்து 12 வருஷகாலம் ஸந்தோஷமாய் ஓடியது. பொய்சொல்ல பயந்த கைகேயி வசனத்தால்மனமுடைந்த தஶரதனின் வார்த்தைக்கு மதிப்பளித்து ராஜ்யத்தை புல்போல் துரந்து வனமேகிய விகாரமற்றமனமுடையவனே!
23. நிஷாத ராஜ ஸௌஹ்ருத ஸூசித ஸௌஸீல்ய ஸாகரா!
பண்டிதனும் பாமரனும் கலந்து பழகியதுபோல் வேடுவர் தலைவன் குஹனுடன் கலந்து பழகிய ஸௌஸீல்ய குணக்கடல் நீ!
பிறப்பு, கல்வி, அனுஷ்டானம் இவைமூன்றும் நட்பு கொள்ளும்முன் கருத்தில்கொள்ளப்படவேண்டியவை.
இவைமூன்றுமே இல்லாத குஹனிடம் "ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கிய" உன் நீர்மைதான் என்னே!
24. பரத்வாஜஸாஸன பரிக்ரிஹீத விசித்ர சித்ரகூடகிரி கடகதட ரம்யாவஸத!
அழகிய சித்ரகூடமலையின் தாழ்வரையில் பரத்வாஜமுனிவரின் கட்டளைப்படி ரம்யமான வாஸத்தை மேற்கொண்டாய்.
25. அனன்யஸாஸநீய!
மற்றவர்களால் ஆணையிடப்பட முடியாதவனே!
26. ப்ரணதபரத மகுடதட விகடித பாதுகாக்ரியபிஷேக நிர்வர்த்தித ஸர்வலோக யோகக்ஷேம!
சித்ரகூடத்துக்கு வந்து உன் திருவடிவணங்கிய பரதன்தலைக்கணியாக உன்பாதுகையைச்சேர்த்து ஸர்வலோக யோகக்ஷேமத்தை ஏற்படுத்தி உகந்தாயே!
அயோத்தி திரும்பிய பரதன் கௌஸல்யாவைக்காணச்சென்றான் "கொடிய செயலைச்செய்த கைகேயியின் தீர்கதரிசியானபிள்ளாய் பரதா" என அழைக்கிறாள் கோஸலை. மனம் வெதும்பி தன்தவறு இதில் அணு அளவுமில்லைஎன சபதம் செய்கிறான் பரதன். இதைக்கேட்டு மனம்மாறிய அன்னை பரதனை "ஆய அன்பினால் அழுது கட்டினாள்" என்கிறான் கம்பன். பரதனைமடியில் கிடத்தி அழுது புலம்புகிறாள். பரதனுக்காக தான் சபதம் செய்பளாயினாள். ராஜ்யமும் நானும் இனிப் பெருமாளால் காக்கப்பட வேண்டியவை என பரதன் அனைவருடன் ராமனை மீட்கச்சென்றான். முதலில் தேரில் ஏறியவள் கைகேயி. சிங்கபேரி சேர்ந்த பரதன் குஹனின் நல்லெண்ணத்தை பெறுகிறான்.
ஸீதாராமன் ஸயனித்திருந்த இடத்தைக்காட்டினான். மஹாத்மாவைப்பற்றியும் இளையபெருமானின் கைங்கர்ய பாவத்தையும் ஸ்லாகித்தான் காட்டுவாஸியானகுஹன் அப்ரமேயனான பரதனிடம்! "எம்பெருமான்பின்பிறந்தோர் இழைப்பரோ பிழைப்பு" என்கிறான் பரதனின் உயர் குணத்தால் வியந்த குஹன் "1000 ராமன்கள் ஒரு பரதனுக்கு ஈடாகமாட்டார்கள்" என்கிறான் அண்ணன் இருக்க தம்பி கல்யாணம் செய்து கொள்வது தோஷம். ராமன் ஸ்வீகரிக்கவேண்டிய அயோத்தியைத் தான் கொள்ளாது நீத்தான் என்றால் புகழ் மிகுவது பரதனுக்கே. குஹன் வழிகாட்ட பரத்வாஜா ஶ்ரமம் சேர முனிவர் அதிதி ஸத்காரம் செய்கிறார்.முனிவரும் தன்னைத்தவறாக எண்ணியதில் பரதன் மிக வருந்த ,வந்த அயோத்தி ஜனங்களின் மனநிலைமாற்றவே தான் பேசியதாய்கூறினார் முனிவர். நீசனிடம் அபசாரப்படுவது கல்உடைந்தமாதிரி. ஒட்ட வைக்கமுடியாது. நடுத்தரவர்கத்தவரிடம் படுவது நகை உடைவதுபோல. மஹான்களிடம் அபசாரப்படுவது நீர்க்கோடு போடுவதுபோல எனப்புரிதல் கிடைத்த பரதன்சித்ரகூடம் விரைந்தான் அனைவருடன்.
சித்ரகூடத்தின் ரம்யமான இயற்கை எழிலை ரஸித்து உரையாடிக் கொண்டிருந்த பெருமான் தன் க்ஷத்ரிய ஞானத்தால் அன்யரின் வருகையை உணர்ந்து லக்ஷமணனிடம் கூற உடனே அருகேயிருந்த மரத்தின்மீதேறி "கோபிதாரக்கொடி" பறக்கும் பரதன் தேரைக்கண்டு அக்னியை அணைத்து (புகையினால் இருப்பிடம் அறியாதவாறு) ஸீதையை குகைக்குள் பாதுகாப்பாக இருக்கச் சொன்னான். மரத்திலிருந்து இறங்கி வில்லில் நாணேற்றினான். "கைகேயின் பிள்ளை நம்மைக்கொல்ல வருகிறான். நம்மை நோக்கி வரும் ஸிம்ஹத்தைக் கொல்வது தவறில்லை". இது போன்ற பல வன்மொழிகள் பேசக் கோபமடைந்த ராமன் "வில் வாளுக்கு வேலை இல்லை லக்ஷ்மணா! பரதன் பரம பாகவதன். அவனிடம் பட்ட அபசாரம் என்னிடம் பட்டதுபோன்றது. நிஷ்டூரம் பேசாதே. அவன் நமக்கு என்றாவது கெடுதல் நினைத்தானா. என்தம்பிகள் மூவருக்கும் இல்லாத சுகம் எனக்கு வேண்டாம். அதனைத்தீ அழிக்கட்டும். என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ"
"நீ பரதனை வைவது என்னைவைவது போல. உனக்கு ராஜ்ய ஆசை இருக்குமேயானால் உனக்கு பட்டாபிஷேகம் பண்ணலாம். பரதன் இங்கு கைங்கர்யம் செய்யட்டும் என்றால் அப்படியே ஆகட்டும் என்பான் பரதன்" என்றதும் புழுபோலத் துடித்தான் இளையபெருமாள்.
சித்ரகூடத்தை அடைந்த ஜடாமுடி தரித்தபரதன் ராமனின் திருவடியில் வீழ்ந்தான். தம்பியை ஆலிங்கனம் செய்த எம்பெருமான் அழுதான். அன்று எம்பெருமான் திருவடியிலிருந்து பெருகிய கங்கையைச் சிவன்சடையில் தாங்கினான். இன்று ராமபிரானது தாமரைத் திருக்கண்களிலிருந்து பெருகிய கண்ணீரை பரதன் சடையில் தாங்கினான் என்றால் மிகையாகாது!தேசமாளும் சின்னமுடைய ராம திருவடியை என்தலையில் தரிக்கும் வரை எனக்கு சாந்தியில்லை என்கிறான். அவன் ஶரணாகதி பலித்தது பாதுகை ஆள வந்தாள். ஸாலோக்யம், ஸாமீப்யம், ஸாரூப்யம் மூன்றுடன் கைங்கர்யமாகிய ஸாயுஜ்யத்தைப்பெற்றான் பரதன். நந்திக்ராமத்திலிருந்து பாதுகா ராஜ்யம் புகழுடன் நடத்தியது.
27. பிஶிதருசி விஹித துரித வலமதன தனய பலிபுகனுகதி ஶரபஸ ஸயனத்ருண ஸகல பரிபதன பயசகித பஹுமத மஹாஸ்த்ர ஸாமர்த்ய!
இந்த்ரன் மகன் காகவடிவெடுத்து மாமிஸ வெறிகொண்டு தாயாரிடம் அபசாரப்பட அதனை உன்ஆஸனத்திலிருந்த புல்லை ப்ரும்ஹாஸ்த்ரமாக்கி ஏவ எத்திசையும் உழன்றோடி இளைத்து உன்னைத் திரும்ப சரணடைய அதன்ஒருகண்ணைப்போக்கி உயிர்பிச்சை அளித்து திரும்ப தர்பாஸ்த்ரமாக்கி உன் அஸ்த்ர ஸாமர்த்யத்தைக் காண்பித்தாயே!
28. த்ருஹிண ஹர வலமதன துராலக்ஷ்ய ஶரலக்ஷ்ய !
அரன் அயன் இந்த்ரன் இவர்களால் எட்ட இயலா இலக்கைத்தொடும் அஸ்த்ரங்கள் உடையவன் நீ!ராமனால் முடிக்கத்தீர்மானிக்கப்பட்டவனை யாராலும்காப்பாற்றமுடியாது.அதேஸமயம்அவனை ஶரணடைந்தவர்களைக் கைவிடான்.
ஆரண்ய காண்டம்
29. தண்டகா தபோவன ஜங்கம பாரிஜாத!
தண்டகாரண்ய ஆஶ்ரமங்களில் நடமாடும் கல்பவ்ருக்ஷமானாய்!
தண்ட்யன் என்ற அராஜகன்வாழ்ந்த விந்த்யமலைத்தாழ்வரை தற்போதுஸூதீக்ஷணர், ஸரபங்கர், அத்ரி முதலான ப்ரும்ஹஞானிகள் வாழுமிடமாயிற்று. அவர்களுக்குத் தன் திருமேனிஸேவை தந்து காக்கவும் செய்தான்பெருமான். தமக்கு ராக்ஷஸர்களால் தொந்தரவு இல்லாதபோது அவர்களை ஸம்ஹரிக்க ஆக்ஷேபித்த பிராட்டியிடம் ரிஷிகளைக் காத்தே தீருவேன் என்றான் க்ஷத்ரியதர்மவானாகிய ராமன்.
30. விராதஹரிண ஸார்தூல!
அங்கு விராதன் முதலான ராக்ஷஸமான்களுக்கு புலிபோலானாய்!
31. விலுளித பஹுபல மக களம ரஜனிசர ம்ருக ம்ருகயாரம்ப ஸம்ப்ருத சீரப்ருதனுரோதா!
பல பலன்களை அளிக்கும் யாகமாகிய பயிரை அழிக்கும் ராக்ஷஸ ம்ருகங்களை அழித்து மரவுரிதரித்த ரிஷிகளுக்கு அனுகூலனாகியவனே!
32. த்ரிஶிர ஶிரஸ்த்ரிதய திமிரநிராஸ வாஸரகர!
மூன்று தலையுடைய ராக்ஷஸனைக்கொன்று இருளைப்போக்கிய ஸூர்யனே!
33. தூஷண ஜலநிதி ஸோஷண தோஷித ருஷிகண கோஷித விஜய கோஷணா!
தூஷணன் என்ற ஜலப்ரவாஹம் போன்ற ராக்ஷஸனை வற்றச்செய்து ரிஷிகளைக்காத்து அவர்கள் விஜயகோஷம் செய்ய நின்றாய்!
34. கரதர கரதரு கண்டன சண்ட பவனா!
கரன் என்ற மரம்போன்ற வலிவுடைய ராக்ஷஸனை ச்சாய்த்த புயல்போன்றவனே!
35. த்விஸப்த ரக்ஷ:ஸஹஸ்ர நளவன விலோலன மஹாகளபா!
ஜனஸ்தானத்தில் பதினான்காயிரம் ராக்ஷஸர்களாகிய கோரைகளை மத்தகஜமென மிதித்து துவைத்தாய்!
36. அஸஹாய ஸூர!
தனிஒருவனாக இந்த ஸாஹஸத்தை செய்த அஸஹாய ஸுரா! "கூட்டு ஒருவரையும் வேண்டா கொற்றவா!"
கம்பன் தமிழ்படுத்துகிறான் இந்த விளிச்சொல்லை. வாலி வியக்கிறான் ராம பராக்ரமத்தை இப்படி!.
"பெற்றதாதை பூட்டிய செல்வம் ஒன்றை தம்பிக்குக் கொடுத்துப் போந்து நாட்டில்ஓர் தர்மம் காட்டொறு தர்மம் செய்தாய். தர்மம்தான் இனிமேல் உண்டோ?"
(நாட்டில் தமையன் ராஜ்யம் தம்பிக்கு காட்டிலும் என் ராஜ்யம் என் தம்பிக்கு இனி ஒன்று உள்ளது ராவணன் ராஜ்யம் அவன் தம்பிக்கு. இந்நிகழ்வு ஒவ்வொன்றிலும் ஒரு உயிர் பிரிகிறது. இது வாலியின் வாய்ச்சொல்லாக கம்பன் கூறுகிறான்)
37. அநபாய ஸாஹஸ!
நல்ல முடிவுகளைத்தரும் ஸாஹஸங்களைச் செய்பவனே!
38. மஹித மஹாம்ருத தர்ஶனமுதித மைதிலீ த்ருடதர பரிரம்பண விபவ விரோபித விகட வீரவ்ரண!
பெரிய மஹரிஷிகளைக் காக்கச்செயத பெரும் யுத்த வெற்றியை பிராட்டி கொண்டாடினாள். வீர புருஷனை அழுந்த ஆலிங்கனம் செய்தது காயங்களுக்கு ஒத்தடம் கொடுத்த ரீதியிலிருந்தது.
39. மாரீச மாயாம்ருக சர்ம பரிகர்மித நிர்பர தர்பாஸ்தரண!
மாரீசன் என்ற மாய மான்தோலினால் நீ உன் தர்பாஸனத்தை அழகுபடுத்திக்கொண்டாய்!
விந்த்ய மலைத்தாழ்வரையில் நடந்த போரில் ராமனின் வீரத்தைக்கண்டு பயந்து தப்பி ஓடிய அகம்பனன் ராவணனிடம் சென்று ராமனின் பராக்ரமத்தைவெகுவாய் புகழ்ந்து யுத்தம் செய்து அவனை வெல்ல முடியாது என்ற பேச்சு அவனை உசுப்பி விட அவனை அவமானமடையச்செய்து மாய்ப்பதே வழி என்றான். உடனே ராவணன் மாரீசனிம் சென்றான். ஸூர்பனகா மோஹிப்பதற்கு முன்பே ஸீதையைக்கவர அகம்பனன் வழி வகுத்தான். மாரீசன் ராமன்அடித்த சாதாரண அடியிலேயே 100 யோஜனை தூரத்தில் போய்விழுந்தவன். "பாம்பைத்தூண்டி அதன் படநிழலில் உறங்க முறபடாதே" என்று சொல்ல ராவணன் திரும்புகிறான். இதன்பின் ஸுர்பனகா காது மூக்கறுபட்டு வந்த முறையிடவே ராவணனின் கோபமும் ஆசையும் அதிகரிக்க திரும்ப மாரீசனிடம் செல்ல மாரீசன் "இடிப்பாரில்லா ஏமரா மன்னன் கெடுப்பாரின்றிக் கெடும்" என்பதை உணர்த்த முற்பட்டு தோற்றான். "அறம் என்ற சொல்லின் ரூபம் ராமன். தர்மோ விக்ரஹவான்" ராமனிடம் அடி வாங்கி ப்ரும்ஹஞானம் பெற்றமாரீசன் கூறுகிறான் ஸுர்யனிமிருந்து பிரிக்க முடியாத ஒளிபோன்றவள் ஸீதா. ஸீதாராமனைப்பிரிக்கமுடியாது என்கிறான். கேட்க மறுத்த ராவணனின் மிரட்டலுக்கு பணிந்து மானாய் மாறி ஸீதையின் முன் நின்று கருத்தைக்கவர்ந்தான். பிராட்டி ஆசையை பெருமாள் பூர்த்தி செய்யப்புறப்பட்டான். வெகுதூரம் அழைத்துச்சென்ற மான் ராமபாணத்தால் ஒருபனைமர உயரம் எகிறி "ஹே ஸீதே! ஹே லக்ஷ்மணா"!எனவிளித்து தன்கடனை முடித்தது. அபயக்குரலால் மிரண்ட ஸீதா லக்ஷ்மணனை ராமனைக் காப்பாற்றச் செல்ல நிர்பந்திக்கிறாள். மறுத்த இளையபெருமாளை கர்ணகடோரமான வார்த்தைகளால் வைகிறாள். செல்லாவிடில் "கோதாவரியில் வீழ்வேன், தீகுளிப்பன்" என்றெல்லாம் சொல்லி வயிற்றிலடித்து அழுதாளாம். வால்மீகி சொல்கிறார்.
ஸாத்வீகனுக்கு பழிபொறுக்காது. தர்ம சங்கடத்தில் அகப்பட்ட இளையபெருமாள் பிராட்டியை வணங்கி நகர்ந்தான். கற்புடைய பெண்ணின் நிலையில் ஸீதை 15 கேள்விகள் கேட்கிறாள்
(ஸ்த்ரீகள் புருஷர்களைவிட 4 மடங்கு அதிக புத்தி கூர்மையுடையவர்கள், பிடிவாதம அதிகம். அதனால்அவர்களுகு சமூகத்தில் கட்டுப்பாடுகளதிகம். காளைக்குக் கடிவாளமில்லை. ஆனால் குதிரேயின்வேகம் அதிகம். பக்கபார்வை கோணத்தைக்குறைக்க கடிவாளம் அவசியமாகிறது. பெண்கள் குதிரைபோல).
40. விக்ரம யஶோலாப விக்ரீத ஜீவித க்ருத்ர ராஜ தேஹதிதக்ஷாலக்ஷித பக்தஜன தாக்ஷிண்ய!
புகழ் என்றலாபத்தைப்பெற தனன்னுயிரை விற்ற ஜடாயுவுக்கு அந்திம க்ரியை செய்த பக்த ரக்ஷகா!
கற்புடைய ஸீதா தன்கணவனைக்காக்கப்பேசினாள். ராவணன் பிக்ஷை கேட்டு ரிஷியாகவந்தான் ஸீதையை அபஹரித்தான். வழியில் பெரிய உடையார் ராவணனுடன் போரிடுகிறார்" ராவணன் கழுத்தில் விழுந்த காலபாசம் ஸீதா", என்கிறார் ஜடாயு. என் உயிருள்ளவரை நீ ஸீதையைக்கடத்துவதை அனுமதியேன் என்ற ஜடாயுவின் இறகையும் காலையும் வெட்டினான்.தன்னுயிர் புகழுக்கீந்த ஜடாயுவை வந்து சார்ந்தான்" எனக் கம்பன் அனுமன் வாயிலாக ஸீதையிடம் சொல்கிறான்.
41. கல்பித விபுதபாவ கபந்தாபி நந்தித!
வயிற்றில் தலையைக்கொண்டகபந்தன் உன்னால் தேவத்தன்மை பெற்று உன்னைப்புகழ்ந்தான். கம்பன் 9 பாசுரங்களால் இவனது அவதாரக்கதையை கபந்தஸ்துதியாக காட்டுகிறான்.
42. அவந்த்ய மஹிம முனிஜனபஜன முஷிதஹ்ருதய கலுஷ ஶபரீ மோக்ஷஸாக்ஷீ பூத!
மதங்க முனி ஆஶ்ரமத்தை அடைகிறான் ராமன். பழுதற்ற பெருமைகளை உடைய ஆசார்ய கைங்கர்யபலத்தால் மன அழுக்கைப்போக்கி ஸாத்யோபாயத்தால் ஶபரி மோக்ஷமடைய நீ ஸாக்ஷியாக விளங்கினாய்!பகதியோக நிஷ்டையின்கடைசி ஜன்மத்தில் எம்பெருமான் தர்ஶனம்கிடைக்கப்பெற்றாள். நல்ல பழங்களைச் சேகரித்து ஸமர்ப்பித்தாள்.
கிஷ்கிந்தா காண்டம்
43. ப்ரபஞ்சன தநய பாவுக பாஷித ரஞ்சித ஹ்ருதய!
வாயுபுத்ரனின் விஸேஷ வார்த்தைகளால் வசீகரிக்கப்பட்டாய்!
44. தரணிஸுத ஶரணாகதி பரதந்த்ரீக்ருத ஸ்வாதந்த்ரிய!
சூர்யபுத்ரனாகிய ஸுக்ரீவனிடம் ஸக்யம் கொண்டு உன் ஸ்வாதந்தர்யத்தை அவனிட்ட வழக்காக்கினாய்.! மஹாவிஸ்வாஸம் வைக்குமிடத்தில் மந்தவிஸ்வாஸமாவது வைத்தால் அவன் மஹா விஸ்வாஸமாக்கிக்காப்பான்.
45. த்ருடகடித கைலாஸ கோடி விகடதுந்துபி கங்காள கூட தூரவிக்ஷேப தக்ஷதக்ஷிணேதர பாதாங்குஷ்ட தரசலன விஶ்வஸ்த ஸுஹ்ருதாஶய!
த்ருடமான கைலாஸ மலை போலக்குவிந்திருந்த துந்துபியின் எலும்புக்குவியலை உன் இடப்பாத கட்டைவிரலால் ஓச்சி ஸுக்ரீவனின் சஞ்சலத்தைப்போக்கினாய்!
46. அதிப்ருதல பஹுவிடபிகிரிதரணி விவரயுகபதுதயவிவ்ருத சித்ரபுங்க வைசித்த்ரயதய!
மலைகள் நீர்நிலைகள் பூமி இவைகளூடே ஒரேஸமயத்தில் பாயவல்ல பாணப்ரயோகத்தைக்கண்டுஎம்பெருமான் என உணர்ந்த ஸுக்ரீவன் கைகொடுத்து காலில்விழுந்தான்.!
47. விபுல பஜ ஸைலமூல நிபிட நிபீடித ராவண ரணரணக ஜனக சதுர கபிகுலபதி ஹ்ருதய விஶால தாரண தாருண ஶிலீமுக!
மலைபோன்ற தன்கைகளின் கீழ் அகப்பட்ட, தன்பலத்தைக் குறைவாய்மதிப்பிட்ட ராவணனைக்கசக்கிப்பிழிந்த, நான்குகடலையும் ஒரேஸமயத்தில் தாண்டவல்ல பலசாலியான வாலியை அவனது கல்போன்ற அகன்ற மார்பினைப் பிளக்கும் பாணமுடையவனே!
சுந்தரகாண்டம்
48. அபாரபாராவார பரிகா பரிவ்ருத பரபுர பரிஶ்ருத தவ தஹன ஜவனபவன பவ கபிவர பரிஷ்வங்க பாவித ஸர்வஸ்வதான!
எல்லையற்ற கடல்சூழ்ந்த லங்காவில் தீ மூட்டினான் ஹனுமான். அதற்காக அவனை ஆரத்தழுவி அதுவே தான்கொடுக்கும் தலைசிறந்த பரிசு என மொழிந்தாய்!
இடங்களைக்கொண்டு காண்டங்களுக்குப் பெயரிட்ட வால்மீகி இதற்கு சுந்தரகாண்டம் எனப்பெயரிட க்காரணம், காவ்யத்துள் உயர்ந்த ராமாயணத்தில் "சுந்தரன்" என்ற பெயர் கொண்ட ஹனுமான் செய்த "சுந்தரச்செயலே". ஆசார்யன் ஸ்தானத்திலிருந்த ஹனுமான் பெருமானையம் பிராட்டியையும் சேர்க்கிறான். இலக்கியத்தில் ரசம் கூட்டுவது ஶ்ருங்காரம். விரகத்தில் இந்த ரசம் அதிகமாய்த் தெரியும். ராமனைப்பற்றி ஹனுமன் சொல்லும்போதும், ஸீதையைப்பார்த்தபின் ராமனிடம் சொல்லும்போதும் இதை உணரலாம். வானர நர ஸக்யம் ராம ஸுக்ரீவ ஸக்யம். ஸீதையைத்தேட ராமன் தன் தம்பியை அனுப்பாது தன்னை அனுப்பியது அந்த இருவரிடையே உள்ள ஸ்வாதீனத்தாலும் புரிதலினாலும் ஏற்பட்ட ஆழமான நட்பு. இந்த ஐக்யம் அதிசயமானது என்கிறான் ஹனுமான் ஏனெனில் வேற்று தேசத்தில் சிறையிருக்கும் பிராட்டியிடம் தூது வந்துள்ளான்.
"சொல்லின் செல்வன்" என்று பிராட்டி புகழ்ந்தாள் அவன் பேசுவதைக்கேட்டு. ஹனுமனை ராமனைப்பிரிந்த நாள் முதல் ஸம்ஸாரம் என்ற சிறையிலிருந்த ஸீதை மனம் என்ற ரதத்தில் ஸங்கல்பம் என்ற குதிரையைப்பூட்டி ராமன் என்ற இலக்கைநோக்கி செலுத்தினாள். ராமனைப்பற்றிய பேச்சு அபிராமமானது, துக்கத்தைப்போக்கவல்லது என்கிறாள். பக்தியோடு செய்யுமிந்த சுந்தரகாண்ட பாராயணம் பற்பல நன்மைகளைச் செய்யவல்லது. இந்த விருத்தாந்தத்தை கலியன் "நெறித்திட்ட மென்கூழை நன்னேரிழையோடு"---(பெரியதிருமொழி- 10-6-8) என ஒருபாசுரமிட்டான். ஸ்வாமி ஒரு ஸ்தோத்ரத்தில் முடித்தார்.
ராக்ஷஸ வேடமிட்டுக்கலியன் அவர்கள்வாயிலாக "பொங்கத்தம் பொங்கோ" என்று ராமன்புகழ் பாடுகிறார் பத்துபாசுரங்களால் (10-2 பெரிய திருமொழி)
இரு உடம்பைச்சேர்த்துக்கொடுத்து பல உடம்பைக் காப்பாற்றியஹனுமன் என்ற ஒருஉடம்புக்குச் செய்த ஸம்பாவனையே பெருமாளின் ஆலிங்கனம். ஜீவாத்மாவை பரமாத்மாவுடன் சேர்க்க ஆசார்யன் படும்பாட்டை ஹனுமான் செயதுகாட்டியதற்கான வெகுமதியே பிராட்டி ஆலிங்கனம் செய்த திருமேனியைப் பெருமாள் தந்தது! இதுவே ஹனுமான் பெற்ற பெரிய ஐஶ்வர்யம்.
யுத்தகாண்டம்
49. விமத ஸஹோதர ரக்ஷப்பரிக்ரஹ விஸம்வாதி விவித ஸசிவ விப்ரலம்ப ஸமய ஸம்ப்ரம்ப ஸமுஜ்ரும்பித ஸர்வேஶ்வரபாவ!
ஶத்ருவின் சகோதரனாகிய விபீஷணன் வந்தபோது அவனைச்சேர்த்துக்கொள்ளும் விஷயத்தில் வானரங்கள் பலவாறு பேசப்புக, அப்போது நீ பேசியது உன் ஈஶ்வரத்தன்மையைக் காட்டுவதாயிற்று.
இச்சமயத்தில் அக்கரையில் அக்கரையில்லா சபை கூடியது. நிகும்பாதிகள் பேசுவது விபீஷணனுக்கு கர்ணகடோரமாகியது கங்கைக்கரையில் குளித்துக்கிடந்த யானைபோன்ற ராவணனுக்கு ரூப யவன ஸம்பன்னவதியாக மண்டோதரி இருந்தாள். தஶரதனின் தந்தையானவன் "தாஸரதன்" எம்பெருமான். அவனை "தாஸரதி"யாகப் பார்க்காதே எனகிறான் விபீஷணன். நீ கவர்ந்து வந்த ஸீதையை நான் திருப்பி ஸமர்ப்பித்து வருகிறேன் என்கிறான். எதையும் கேட்காத ராவணனையும், தன்மனைவி, மக்களையும் விட்டு பெருமாளிடம் ஶரணடைந்தான்."ஸர்வலோகஶரண்யாய ராகவாய மஹாத்மனே! நிவேதனம் தமாம் க்ஷிப்ரம்" என்று கூவினான் விபீஷணன் என்ற ராக்ஷஸ தன்மையற்ற ராக்ஷஸன்.
பாகவதாபசாரம்பட்ட லோகஸாரங்கமுனியின் தோளில் திருப்பணாழ்வாரை ஏற்றிவரச்செய்தான் அரங்கன். இங்கு சுக்ரீவனைக்கொண்டே விபீஷணனைத் தன்னுடன் சேர்க்கவைத்தான் விபவா அரங்கன்!!!
50. ஸக்ருத் ப்ரபன்ன ஜன ஸம்ரக்ஷண தீக்ஷித!
உனதடிகள் அடைகின்றேன் என்று ஒரு கால் உரைத்தவரை போதும் எனச்சொல்லி அஞ்சேல் என கைவிடாதவனாகிறாய் நீ!
51. வீர!
52. ஸத்யவ்ரத!
வீரனாகிய நீ ஸத்ய வ்ரதனாயிருக்கிறாய் "மாஸுச:" என்றான் க்ருஷ்ணன். ஸத்யவ்ரதன் ராமன். ராமனே கருணைக்கடல் அக்கடலுக்கு எப்படி அனதிகாரியான சமுத்ர ராஜனிடம் ஶரணாகதி சாத்யம்?
53. ப்ரதிஸயன பூமிகாபூஷித பயோதி புளின!
கருங்கடலைத்தொட்டுக்கிடந்த கருணைக்கடல் ராமன். தர்ப்ப சயனத்தில் மறியல் செய்தார்
54. ப்ரளய ஶிகி பருஷ விஸிக ஶிகாஸோஷிதகூபார வாரிபூர!
சமுத்ரராஜன் முகம் காட்டத காரணத்தால் ப்ரளயகால படவாக்னிக்கு ஒப்பான அம்புமழையால் கடலையே வற்றச்செய்து மணற்காடாக்கினாய்!
55. ப்ரபலரிபு கலஹ குதுக சடுல கபிகுலகரதலதுலித ஹ்ருதகிரி நிகர ஸாதித ஸேதுபத ஸீமா ஸீமந்தித ஸமுத்ர!
சண்டையை எதிர் நோக்கிய வானரப்படைகள் கொண்டுகுவித்த மலைகளாலே கடலின் நடுவே வகிடு எடுத்து வாருவதுபோல அணைகட்டினாய்!
56. த்ருதகதி தரும்ருக வரூதிநீ நிருத்த லங்கா வரோத வேபதுலாஸ்ய லீலோப தேஶிக தேஶிக தனுர் ஜ்யாகோஷா!
கடலைத்தாண்டி லங்கையடைந்து கருடவ்யூஹம் அமைத்து மதிள்சுவரே வானரமாய் எழுப்பியது போலத்தோன்றியது. தன் அரண்மனைக்கோபுரத்திலிருந்து நோக்கிய ராவணன்மீது எம்பிக்குதித்த வேகத்தில் ராவணன் கிரீடம் உருண்டது.ஆக யுத்தம் மூண்டது. ராமனது நாண் ஒலி லங்கா அந்தப்புரப் பெண்களை நடுங்கச் செய்தது. நாண் ஒலி நாட்யாசிரியன் போலவும் பெண்களின் உடல்நடுக்கம் நாட்யம் போலவும் உருவகப்படுத்தியுள்ளார் ஸ்வாமி.
இந்நாணொலி ஸீதைக்கு ஸந்தோஷமளித்தது. ருக்மிணிக்கு சங்கொலி ஸந்தோஷமளித்தது. இதனை "பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும் சார்ங்கவில் நாணொலியும் தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ" என்கிறாள் ஆண்டாள்.
57. ககன-சர கநக-கிரி கரிம-தர நிகம-மய நிஜ-கருட- கருத-நில லவகலித விஷ-வதன ஶரகதந!.
அங்கதன் தூது பலிக்கவிலல்லை.இந்த்ரஜித் ரதம் அடிவாங்கியது. கோபமடைந்த இந்த்ரஜித் ராமனையும் சார்ந்தவர்களையும் நாகபாசத்தால் கட்டினான். அப்போது ஆகாயத்தில் தங்கமலை உருண்டோடி வருவதுபோல கருடன் தோன்றி தன் இறகுகளால் வேகத்தில் வீச விஷமிறங்கி எழுந்தீர்கள்!
58. அக்ருதசர வனசர ரணகரண வைலக்ஷ்ய கூணிதாக்ஷ பஹுவித ரக்ஷோபலாத்யக்ஷ வக்ஷகவாட பாடனபடிம ஸாடோப கோபாவலேப!
இதற்குமுன் கண்டறியாதபடி வானரங்கள் செய்த யுத்தத்தைக்கண்டு வெட்கமடைந்த ராக்ஷஸ தலைவர்களின் மார்பாகிற கவாடம் பிளந்திட மிகவும் முனிந்தவனே! முதல்நாள் யுத்தத்தில் ராவணன் மகுடம் உருண்டது. ராவணனின் சேனைகாற்றில் கரைந்த பூளைப்பூவைப்போல் மறைந்தது "காற்றிடைப்பூளைகரந்தனவரந்தையுறக் கடலரக்கர் தம்சேனை கூற்றிடைச்செல்லக் கொடுங்கணை துரந்த, கோலவில்லி ராமன் தன்கோயில்"--- என்று திருவெள்ளியங்குடிப்பாசுரத்தில் கலியன் ராமனின் வில்லாற்றலை வர்ணிக்கிறார்."மாருதம் அறைநாத பூளையாயினகண்டனை"---எனக்கம்பனும் கூறுகிறான்!.
59. கடுரடதடநிடங்க்ருத சடுரகடோர கார்முகா!
கேட்போர் காதுகிழிய டங்காரம் செய்யும் கோதண்ட வில்வலவா!
60. விஶங்கட விஶிக விதாடனவிகடித மகுட விஹ்வல விஶ்ரவஸ்தநய விஶ்ரமஸமய விக்யாத விக்ரம!
"நீமிகச்சோர்வுடனிருக்கிறாய். உன்னையும் உன் சேனையையும் சரிப்படுத்திக்கொண்டு வா" -என்று கோஸலநாடுடை வள்ளல் மிக்க பெருந்தன்மையுடன் சொல்கிறான்.
தன்னோடு போரிட்டவன் ஸாக்ஷத் நாராயணன்தான் என்று வியக்ககும் ராவணன் அவனது வீரத்திலும், அழகிலும் ஈடுபட்டு வியக்கிறான்.
61. கும்பகர்ண குலகிரிவிதலனதம்போளி பூத நிஶ்ஶங்க கங்க பத்ர!
கும்பகர்ணன் என்ற பெருமலையை பிளந்திட்ட வஜ்ராயுதம்போன்ற அம்புகளை எய்தவனே!
"நீர்க்கோல வாழ்வைஅஞ்சி நெடுநாள் வளர்த்து போர்காகோலம் கொடுத்தான்.உயிர்கொடாது திரும்பேன். நீ கார்கோலமேனியானைச்சேர். மலரின் மேலிருந்த வள்ளல் அளித்த வரத்தினால் நீ தர்மிஷ்டனாக இருக்கிறாய். நம் குலதிலகமாயிரு"--- என்று விபீஷணனிடம் கூறிப் போரிட்டு மடிந்தான் கும்பகர்ணன். ராமனின் ஶௌர்யத்தை வியந்து புகழ்ந்தான் கும்பகர்ணன்.
62. அபிசரண ஹுதவஹ பரிசரண விகடன ஸரபஸ பரிபத தபரிமித கபிபலஜலதி லஹரி கலகல ரவ குபித மஹவஜிதபிஹநநக்ரதனுஜ ஸாக்ஷிக ராக்ஷஸ த்வந்த யுத்த!
இந்த்ரஜித்செய்த ஆபிசாரயாகத்தை இளையபெருமாள் வானரசேனையுடன் சென்று கலைக்க அப்போது கடல் கலந்தது போல் எழுந்த போரில் இந்த்ரஜித் மாண்டான். லக்ஷ்மணன் சாக்ஷியாக மூலபலத்தை(நான்குபடையின கூட்டு பெருமாள் அழித்தார்.
நூற்றுக்கணக்கான தாமரை இதழ்களை ஒரு ஊசி அழுத்துவதுபோல எப்படியுத்தம் நடந்ததென அறியமுடியா வேகத்தில் போரிட்டான் பெருமாள்.
"குழல்நிறவண்ணநின்கூறுகொண்ட
தழல்நிறவண்ணன் நண்ணார்நகரம்
விழநனிமலைசிலைவளைவுசெய்து
அங்கழல்நிறவம்பதுவானவனே"
என்கிறார் கலியன் திருவிண்ணகர் பாசுரத்திலே.
63. அப்ரதித்வந்த பௌருஷ!
64. த்ரயம்பக ஸமதிக கோராஸ்தாடம்பர!
இணையற்ற பராக்ரமம் உடையவனே! சிவனினும் மேம்பட்ட பாணப்ரயோக லாகவமுடையவனே!
65. ஸாரதி ஹ்ருத ரத ஸத்ரப ஶாத்ரவ ஸத்யாபித ப்ரதாப!
பெருமாளின் வீரத்துக்கு ஈடுகொடுக்க இயலாது ராவணன் மூர்சிக்க தேரைப்பின்வாங்கித் தப்பிக்கவைத்து அவனாலேயே நீ புகழப்பட்டாய்! இன்னின்ன காலத்தில் தேரைப்பின்வாங்கலாம் என ஸாஸ்த்ரம் கூறுகிறது என்றதும் சமாதனமாயினான் ராவணன்.
66. ஶிதஶர க்ருதலவந தஶமுக முகதஶக நிபதநபுநருதய தரகலித ஜநிததரதரல ஹரிஹய நயன நலின வனருசிகசித நிபதித ஸுரதரு குஸுமவிததி ஸுரபிதரதபத!
இறந்தபின் மறுபிறப்பு கிடைப்பதுபோல தன் வரபலத்தால் ராவணன் தலை ஒன்றுபோனால் அடுத்தது வருகிறது என்கிறான் கம்பன். தலைவீழும்போது இந்த்ரனின் 1000 கண்களும் மலர, திரும்ப தலைவரும்போது பயத்தால் மூடுகின்றன. தாமரைக்காட்டுக்குள் மலர்ந்த புஷ்ப ஸமூகத்தின் காந்தியாலே இந்த்ரனின் கண்களனைத்தும் ஒருமித்து மலர்ந்தன ப்ரும்ஹாஸ்த்ரத்தால் ராவணனின் தலை திரும்பத்தோன்றாது வீழ்ந்தபோது!
தேவதைகளின் ஶரணாகதி நிறைவேறியது. கற்பக வ்ருக்ஷம்ராம லக்ஷ்மணாதிகள் மேல்புஷ்ப வ்ருஷ்டி செய்தது.
67. அகிலஜகதிக புஜபல வரபல தஶலபந லபந தஶக லவந ஜநித கதந பரவஶ ரஜநிசரயுவதி விலபன வசன ஸமவிஷய நிகம ஶிகர நிகரமுகர முகமுநிவர பரிபணித!
விரோதிகளின் மனைவிகளாகிய தாரையும் மண்டோதரியும் ராமனைக்கண்டதும் எக வசனத்தில் ஏச எண்ணனர். ராமனைக் கண்ட க்ஷணத்தில் ஸ்தோத்ரம் செய்யத் துவங்கினர். உபநிஷத்துக்கு ஈடானவை அவர்கள் பெருமாளைப்போற்றிப்பேசியவை அவை நித்யானுஸந்தானத்தில் இடம் பெற்றுள்ளன என்றால் விஷயமும் பக்தியும் முக்யமாகிறது.
உலகை ஆட்டிப்படைத்த புஜபல வரபலனாகிய ராவணனின் தலை ஒருகொத்தென வீழ்ந்ததைக்கண்ட அவன் மனைவி புலம்பி அழுகிறாள்.
"வேதத்தைவிட உயர்ந்த ஸாஸ்த்ரமில்லை. கேஶவனைவிட பரதெய்வமில்லை. பரமயோகியான பரமாத்மா இவன். விகாரமற்றவன். தமஸ:பரமோதாதா. பிராட்டியுடன் கூடிய திவ்ய மங்கள விக்ரஹன்." என்றெல்லாம் ஏற்றிப்புகழ்ந்தாள். மகரிஷிகளனைவரும் வாழ்த்தினர்.
68. அபிகத ஶதமக ஹுதவஹ பித்ருபதி நிர்ருதி வருணபவன தநத கிரிஶமுக ஸுரபதி நுதிமுதித!.
அஷ்டதிக் பாலகர்களும் மற்றதேவர்களும் வெகுவாக உன்புகழ் பாடினார்கள்..!
69. அமிதமதி விதித கதித நிஜவிபவஜலதி ப்ருஷதலவ!
தேவஶ்ரேஷ்டனாகிய ப்ரும்ஹா உன் கடலொத்த பெருமையயில் ஒருசிறிதே அறிவார்.
70. விகத பய விபுத விபோதித வீர ஶயன ஶாயித வானர ப்ரதனௌக!
தேவர்களும் பயம் போனவர்களாகி ப்ரத்யுபகாரமாக மாண்ட வானர வீரர்களை மீண்டும் உயிர்ப்பித்தெழச் செய்தனர்!
71. ஸ்வஸமய விகடித ஸுகடித ஸஹ்ருதய ஸஹதர்ம சாரிணீக!
தம் ஸங்கல்பத்தால் ஆஶ்ருத ரக்ஷணத்திற்காகப் பிறிந்த பெருமாளும் பிராட்டியும் ஒன்றுசேர்ந்தனர்!
72. விபீஷண வஶம்வதீக்ருத லங்கைஸஶ்வர்ய!
கைங்கர்யம் மட்டுமே வேண்டி ஶரணாகதி செய்த விபீஷணனுக்கு லங்கைஶ்வர்யம் முற்றிலுமளித்தாய்!
அனன்ய ப்ரயோஜனாகிய விபீஷணாழ்வானுக்குத்தம்மிலும் சிறிய கோவிலாழ்வாரைக் கொடுத்தான். ஆபத்து நிலையில் கூட தர்மிஷ்டனாக இருக்க மூர்த்தம் ப்ரும்ஹ ததோபித் ப்ரியதரம்என வேண்டினான் ராஜ்ய ஆசையற்ற விபீஷணன்.
73. நிஷ்பன்ன க்ருத்ய!
74. கபுஷ்பித ரிபுபக்ஷ!
உன் அவதார மனோரதம் பூர்த்தியாகியது. ரிஷிகள், விபீஷணன் எல்லோர்க்கும் அபயப்ரதானம் செய்தாயிற்று.
75. புஷ்பக ரபஸ கதிகோஷ்பதீ க்ருத ககநார்ணவ!
76. ப்ரதிஞார்ணவ தரண க்ருதக்ஷண பரத மனோரத ஸம்ஹித ஸிம்ஹாஸநாதிரூட!
77. ஸ்வாமிந்! ராகவஸிம்ஹ!
ககனம் என்ற ஆர்ணவம் (கடல்)கோஷ்பதமாகியது விபீஷணன் அளித்த புஷ்பக விமானத்தால்!தாம் செய்த ப்ரதிஞை என்ற கடலையும் தாண்டினர் பெருமானும் பரதனும்.!
குபேரனை வென்று ராவணன் கொணர்ந்த விமானம் இந்த புஷ்பக விமானம். இதன் சிறப்பை ஒரூ ஸர்கம் முழுக்க விரித்துள்ளார் வால்மீகி! இது தேவைக்கேற்ப பெரிதாயும் சிறிதாயுமாகும். தாழ, உயர, வேகம், மெதுவாய்ப் பறக்கும் சக்தி படைத்தது. வழிமுழுதும் ஸீதைக்கு வர்ணித்து பரத்வாஜ ஆஶ்ரமம் சேர்ந்து வணங்கி நந்திக்ராமம் விரைகிறார். முன்பே ஹனுமனை அனுப்பி அவன் இங்கிதம் அறிந்தார். ஹனுமனை ஆரத்தழுவிய பரதனால் பாகவத ஸன்மானமும் பெற்றான் ஹனுமன். எத்துணை கஷ்டங்கள்வரினும் கலங்காது வாழும் நெறியே பரதன்காட்டிய நெறி!! பரதனின் மனோரதம் பூர்த்தியாகி ராமன் சிங்காதனம் ஏறினார்!
உத்தரகாண்டம்
78. ஹாடக கிரி கடஹலடஹ பாதபீட நிகடதட பரிலுடடித நிகில ந்ருபதி கிரீட கோடி விவிதமணிகண கிரண நிகர நீராஜித சரண ராஜீவ!
ஹே ஸர்வலோகேஶ்வர! ஹே ராகவ ஸிம்ஹமே! நீ ராஜ்ய பரிபாலனம் செய்யும் போது மேருமலைச்சாரலையொத்த உன்பொற்றாமரை அடிகளில் தலைபதித்து வணங்கிய ராஜாக்களின் கிரீடமணிஒளி அத்திருவடிக்கு ஆரத்திஎடுத்தாற்போலிருந்தது!
ராம பட்டாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் ஶத்ருக்னன் மேற்பார்வையில் நடந்தேறின. ராம ஸேவையில் சிறிய திருவடி ஐக்கியமானார். பரதன் திருமுடியிலிருந்து பாதுகை ராமன் திருவடியை அலங்கரித்தது. தீக்ஷா விஸர்ஜனமாகி, பீதாம்பரம் தரித்து, உயர்ந்த ஆபரணங்களணிந்து அயோத்தி சேர்ந்தனர். ராஜாக்கள், வானர ராஜாக்கள், வானரமுதலிகள் தங்க மாளிகைகள் அமைக்கப்பட்டன. வானர ஸ்த்ரீகளுக்கு கௌஸல்யா தலைவாரி அலங்காரம் செய்தாள். நால்திசை தீர்த்தம் கொணர்ந்து வஸிஷ்டர் முன்னின்று அஷ்டவஸுக்கள் திருமஞ்சனம் செய்ய வேதவித்துக்கள் விஜயகோஷமிட ஸர்வாலங்காரபூஷிதையாக ஸீதாபிராட்டியுடன் ஶ்ரீராம பட்டாபிஷேகம் பரத லக்ஷ்மண ஶத்ருக்னர் சூழ நடந்தேறியது. அத்தருணத்தில் பிராட்டியிடம் ராமபிரான் ஒரு முத்து ஹாரம் கொடுத்து நல்ல ஞானம், வீரம், பௌருஷம் நிறைந்தவர்க்கு பரிசளிக்கக்கோர பிராட்டி அதனை ஹனுமானுக்களித்து மகிழ்ந்தாள். தாயினும் மிக்க அன்புடையாள்.ஆக பிராட்டி ஸம்பந்தமாய் மாபெரும் ஸம்மானம் ஹனுமான் பெற்றான்.
யுவராஜ பட்டத்தை லக்ஷ்மணன் மறுத்த நிலையில் பரதன் ஏற்றான். ஆக ராமராஜ்யம் பதினோராயிர வருடம் செவ்வனே நடந்தது.
79. திவ்யபௌமாயோத்யாதி தைவத!
இவ்விதம் விண்ணிலும் மண்ணிலுமாக இரு அயோத்தியை ஆண்டாய்!
80. பித்ருவதகுபிதபரஶூதரமுனி விஹித ந்ருபஹநந கதநபூர்வகால ப்ரபவ ஶதகுண ப்ரதிஷ்டாபித தார்மிக ராஜவம்ஶ!
தன் தந்தையைக்கொன்ற கார்த்தவீர்யார்ஜுனனிடம் கொண்ட கோபத்தினால் பரஶுராமன் அழித்த ராஜவம்ஸங்களை முன்னிலும் நூறுமடங்கு தழைக்கும்படி நீசெய்தாய்!
81. ஶுபசரித ரதபரதகர்வித கர்வ கந்தர்வயூத கீதவிஜய காதாஶத!
பரம தார்மீகனாகிய பரதாழ்வான் கரவபங்கம் செய்த கந்தர்வர்கள் புத்தி தெளிந்து உன் புகழறிந்து போற்றிப்பாடினர்!
82. ஶாஸித மதுஸுத ஶத்ருக்னஸேவித!
ஶத்ருக்னாழ்வான் மதுவின் பிள்ளையான லவணாஸுரனை வென்று உன்னை வணங்கினான்.
83. குஶ-லவ பரிக்ரஹீத குலகாதா விஶேஷ!
இக்ஷுவாகு வம்ஶசரிதையான ஶ்ரீமத்ராமாயணத்தை உன் திருக்குமாரர்களான குஶலவர்கள் கானமழையாகப்பொழிய நீ அதனைத் திருச்செவி சாய்த்தாய்!.
"மிதிலைச்செல்வி உலகுய்யத் திருவயிறுவாய்த்த மக்கள் செம்பவளத்திரள்வாய்தன் சரிதைகேட்டான்"-(பெரு.திரு 10-8)
84. விதிவஶ பரிணமதரபணிதி கவிவர ரசித நிஜசரித நிபந்தன நிர்வ்ரத!ஸர்வஜன ஸம்மானித!
ப்ரும்ஹாவின் அருளால் வால்மீகி அருளிய உன்சரித்ரத்தைக்கேட்டு தாபம் தணியப்பெற்றாய்! உலகெல்லாம் உன்னைக் கொண்டாட நின்றாய்!
85. புனருபஸ்தாபித விமானவர ப்ரீணித வைஶ்ரவணவிஶ்ராவித யஶ:ப்ரபஞ்ச!
மீண்டும் புஷ்பக விமானத்தை குபேரனிடம் வழங்கி உகப்படைந்த அவனால் புகழப்பெற்றாய்!
86. பஞ்சதாபன்ன முனிகுமாரக ஸஞ்சீவனாம்ருத!
சம்புகமுனி தவற்றினால் மாண்டுபோன வேதியன் மகனை மீட்டுக் கொடுத்தாய்!
"செறிதவச்சம்புகன்தன்னைச்சென்றுகொன்று செழுமறையோன்உயிர்மீட்டுத்தவத்தோனீந்த"---(பெருமாள் திருமொழி 10-9)
87. த்ரேதாயுகப்ரவர்த்தித கார்த்தயுக வ்ருத்தாந்த!
த்ரேதாயுகத்தில் க்ருதயுக தர்மத்தை அனுஷ்டித்தவன் நீ!
88. அவிகல பஹூஸுவர்ண ஹயமக ஸஹஸ்ரநிர்வஹண நிர்வர்த்தித நிஜவர்ணாஶ்ரம தர்ம!
தங்கத்தில் ஸீதையைப்பதுமையாக வைத்து (ஸஹதரமிணியாக) 1000 அஶ்வமேதயாகம்செய்து உன் வர்ணாஶ்ரம தர்மங்களை முடித்தாய்!
89. ஸர்வகர்ம ஸமாராத்ய! ஸநாதன தர்ம!
உலகத்தவர்கள் தம்வர்ணாஶ்ரம தர்மங்களைச்செய்து உன்னை ஆராதித்தனர்! நீயே நிலையாகநிற்கும் தர்ம ஸ்வரூபி!
90. ஸாகேத ஜனபத ஜநிதநிக ஜங்கமதிதர ஜந்து ஜாததிவ்ய கதி தானதர்ஶித நித்யநிஸ்ஸீமவைபவ!
நீ திருநாட்டுக்கு நடந்தபோது திரு அயோத்தியில் பிறந்த எல்லா ஜீவராசிகளையும் உன்னுடன் வைகுந்தமேற்றி உன்ஸர்வேஶ்வர பாவத்தை வெளிப்படுத்தினாய்!
91. பவதபநதாபித பக்தஜன பத்ரா ராம! ஶ்ரீராமபத்ர!
ஸம்ஸார தாபத்தில் தவிக்கும்உன் பக்தர்களுக்கு நீ எப்போதும் குளிர்ந்த பூஞ்சோலையாக இருக்கிறாய்! இவ்விதமாக எல்லோர்க்கும் "பத்ர+ஆராமன்" ஆன நீ "ராமபத்ரன்" என அழைக்கப்படுகிறாய்.!
92. நமஸ்தே புநஸ்தே நம:!
உன்னை வணங்குகிறேன். திரும்பத்திரும்ப வணங்குகிறேன்!
93. சதுர்முகேஶ்வர முகை:புத்ர பௌத்ராதி ஶாலிநே! நமஸ்ஸீதா ஸமேதாய ராமாய க்ருஹ மேதிநே!
ப்ரும்ஹாவை பிள்ளையாகவும், சிவனைப் பேரனாகவும் பெற்ற பிராட்டி ஸீதாவுடன் நீயுமான பெரும் குடும்பஸ்தனாகிய உங்களுக்கு ப்ரணாமங்கள் பலபல!
94. கவிகத:ஸிம்ஹ கதிதம் கடோர ஸுகுமார கும்ப கம்பீரம்.பவபயபேஷ மேதத் படத மஹாவீர வைபவம் ஸுதீய:!
கவிஸிம்ஹமாகிய நான் பிறவிப்பிணிக்கு அருமருந்தாக எழுதிய மென்மையும், கடினமும் இழைந்த கருத்துடைய மஹாவீர வைபவம் என்ற இந்த ஸ்தோத்ரத்தைக்கற்று ராமபத்ரனின் க்ருபைக்கு பாத்ரமாகக்கடவீர் என்று தலைக்கட்டுகிறார் ஸ்வாமி தேஶிகன்.
[A compilation of the Ramayana Navaaham Upanyasam by U.Ve Pazhaveri Balaji Swami in January 2021 - With the base being Swami Desikan's Mahaveera Vaibhavam, connecting Valmiki Ramayanam, Divya Prabandham and Kamba Ramayanam]