Sunday, June 27, 2021

தயாதேவியா தயாளனா !!


ப்லவ வருஷம் எழுந்து ஸார்வரி உறங்கிற்று. 


பல பலவென ப்லவ வருஷம் நல்விடியலாகும் என எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்!


இன்னும் குறையவில்லையே இந்த கோவிட் பாதிப்பு.


அலைமேல் அலையாக அல்லவா பாதிக்கிறது. அசுரனைவிட மோசமாக!! இந்த தொற்று எப்படித் தோன்றியது, எப்படிப் பரவி விதவிதமான தாக்குதலையும், பாதிப்புகளையும் நமக்குக் கொடுத்துக் கொண்டு இந்தப்ரபஞ்சம் முழுதையும் தன் அதீனத்தில் வைத்துக் கொண்டுள்ளது என்பதை அந்த ஸர்வேஶ்வரன் மட்டுமே அறிவான். 


ஸார்வரிக்கு "இருட்டு" என அர்த்தமானாலும் ஆத்யாத்திமிக ஞானப்ரகாசத்தை பல சேதனர்களிடையே உண்டாக்கியதில் பெரும் பங்கு வகித்தது என்பதில் சந்தேகமில்லை.இந்த ப்லவ வருஷமும் இந்த ஞானவிகாஸத்தை தொடரச்செய்யும் என நம்புவோம்.


இத்தகைய ஞானவிகாஸம் தாயார்-எம்பெருமானின் கல்யாண குணங்களை ஓரளவு உணர்ந்து அனுபவிக்க உதவியுள்ளது. அதனால் அவர்களது கருணா கடாக்ஷத்தை ப்ரார்த்திப்பதைத் தவிர இத்தொற்றினுடைய பாதிப்பினின்று

நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவேறு  மார்க்கமில்லை. 


இந் நெருக்கடியிலிருந்து நம்மை மீட்க வல்லது பிராட்டியின் பரிவே என்கிறார் ஸ்வாமி தேஶிகன். பிராட்டியின் கடாக்ஷம் சக்தி மிக்கது.

ஆத்யாத்மிக, ஆதிபௌதிக, ஆதிதைவிகத்தால் ஏற்படும் தாபத்ரய அக்னியை அணைக்க வல்லது. பிறர் கஷ்டத்தைப்பார்த்து பரிதாபப்படுவது தயை இல்லை.


"பரதுக்க நிராகரண இச்சா தயா" - என்கிறார் ஸ்வாமி.


கண்களாலேயே தயையை வெளிப்படுத்துபவள் தாயார்.

குற்றம் பாராத வாத்ஸல்யம் தாயாருடையது. ஸ்நேஹபூர்வமான தாயாரின் கடாக்ஷம் அம்ருத ஸஞ்சீவினி போல வர்ஷிக்கும்.


தோஷமற்ற, பாகுபாடு பாராத தாயார் கடாக்ஷம், எம்பெருமான் மீது அனவரதமும் நிறைவதாலன்றோ அவன் பரப்ரும்ஹமாயுள்ளான்!!


सानुप्रासप्रकटित दयैः सान्द्रवात्सल्यदिग्धैः
अम्ब स्निग्धैरमृतलहरी लब्धसब्रह्मचर्यैः ।
घर्मे तापत्रयविरचिते गाढतप्तं क्षणं माम्
आकिञ्चन्यग्लपितमनघैः आर्द्रियेथाः कटाक्षैः ।।



அசோக வனத்தில் ஸீதாபிராட்டியிடம் தன் ஸ்வப்னத்தை விவரிக்கிறாள் த்ரிஜடை. அதில் ராமனின் ஜெயத்தையும் ராவணனின் வீழ்ச்சியும் சொல்லி, "இந்த ஸீதாபிராட்டி ஸாக்ஷாத் தாயாரே. நாம் இவளிடம் ஶரணாகதி செய்து அழிவிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வோம்" - என்றாள்.


அதனை ஏற்ற தாயார் தன்னைத்துன்புறுத்திய ராக்ஷஸிகள்

அனைவருக்கும் (unconditional rakshanam) அபயமளித்தாளல்லவா! அந்த தயை நம்மையும் ரக்ஷிக்கட்டும்.


"ஆரால் இவ்வையம் அடியளப்புண்டது

ஆரால் இலங்கை பொடிப்பொடியா வீழ்ந்தது

ஆரால் கல்மாரி காத்ததுதான்

ஆரால் ஆழிநீர் கடைந்திடப்பட்டது" 

எம்பெருமான் இத்தகைய ஸர்வ ஶக்தன் - கலியனின் சிறியதிருமடல் சொல்கிறது.


"புகழும் நல் ஒருவன் நீ !

பொருவில்சீர் பூமி நீ !

திகழும் தண் பரவை நீ !

தீ வாயு ஆகாசம் நீள் சுடர் இரண்டும்நீ!

குன்றங்களனைத்தும், மேவுசீர்மாரி, விளங்கு தாரகைகள் நீ!

நாவியல் கலைகள்நீ! ஞானநல்லாவிநீ !

அடியவர் வினைகெடுக்கும் நச்சுமாமருந்தம் நீ!

ஊனமில் சுவர்க்கம் நீ!

ஊனமில் மோக்கம் நீ!”

- என்று எம்பெருமானின் ஸர்வஞத்வத்தைப் பட்டியலிடுகிறார் நம்மாழ்வார். 


இத்தனை பெருமையுடைய 

"உன்னிடம் ஶரணாகதி செய்து கொண்ட முத்ரையுடன் உன் எதிரே நான் படும் இந்த அவஸ்தை அனுபவம் உனக்குப் பெருமை ஏற்படுத்தாது" 

- என்று  எம்பெருமானிடம் உரிமையுடன் முறையிடுகிறார் ஆளவந்தார்.


"அபூதபூர்வம் மம பாவிகிம்வா

ஸர்வம் ஸஹேமே ஸஹஜம்ஹி து:கம்

கிம்து த்வதக்ரே ஶரணாகதானாம் 

பராபவோநாத நதேனு ரூப:”

- என்பது ஸ்தோத்ர ரத்ன ஶ்லோகம்.


இன்னும் ஒருபடி மேலேபோய் நம் ஸ்வாமி தேஶிகன் நமக்காக

நம் கஷ்டங்களைப்போக்க வேண்டி தூப்புல் தீபப்ரகாஶப் பெருமானிடம் சவால் விட்டு உரிமையுடன்

"ஶரணாகதி தீபிகை" - என்ற க்ரந்தத்தில் ப்ரார்த்திக்கிறார்.



"ஸ்வாமீ தயா ஜலநிதிர் மதுர க்ஷமாவாந்

ஶீலாதி க:ஶ்ரித வஶ:ஶுசிரத்யுதார:

ஏதாநி ஹாது மநகோ ந கிலார்ஹஸித்வம்

விக்யாதி மந்தி பிருதாநி மயா ஸஹைவ" 

- என்கிறார்


எம்பெருமானுக்கு இதிகாச புராணங்கள் கொடுத்துள்ள

பிருதங்கள் எண்ணிலடங்கா. 


"உன் முன்நின்று ரக்ஷணம் செய்யும்படி கேட்கக்கூடத் தகுதியற்ற அபராத சக்ரவர்த்திநான். அகிஞ்சன ஸார்வ

பௌமனாகிய என்போன்றவர்களை அனுக்ரஹிப்பது உன் கல்யாண குணங்களுக்குப் பெருமை தருமேயன்றி குறைவு ஏற்படுத்தாது. அன்றி என்னை அனுக்ரஹிக்கவில்லையானால் என்னையும் இழந்து உன்பிருதங்களையும் இழக்க நேரிடும்" 


-என உரிமையுடன் நமக்காகப்பரிகிறார் ஸ்வாமி.


மேற்காட்டிய ஶ்லோகத்தில் எம்பெருமானின்  9 பிருதங்களின்

மகத்துவத்தைக் காட்டுகிறார்.


ஸ்வாமி - சேதந அசேதநங்கள் உமது ரக்ஷணத்தில் உள்ளன. ரக்ஷிக்காவிடில் உமது ஸ்வாமித்வத்துக்கு இழுக்கு!


தயா - பயன்கருதாமல் எம்கஷ்டங்களை நீக்குவதே உம் கருணைக்கு அழகு!


மதுர: - மிக இனியவன்நீ! விசாரப்படாதே என என்னை அரவணைக்கவேண்டாமா!


க்ஷமாவான் - பொறுமைசாலி என்று பெயர் பெற்ற நீ என் தவறுகளை பொறுக்கலாகாதா!


ஶீலாதி: - ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இறங்கி வந்து பழகும் குணம் நிறைந்த நீ என்னிடம் ஶீலமில்லாதிருப்பது ஏன்?


ஆஶ்ருத பரதந்த்ரன் - உன்னைஅண்டிநின்ற பஞ்சவர்க்கு தூது சென்றாய்.தேரோட்டினாய். அவற்றைஎல்லாம் செய்த உனக்கு என்னை ரக்ஷிப்பது பாரமா ?


ஸுத்தி: - உன்னையே நினைப்பவர்களை பரிஸுத்தனாக்குபவன் நீ. என்னையும் பரிஸுத்தனாக்கு.


அத்யுதாரன் - நீ பேரருளாளன். தரம் பாராது தாழாது எனக்கருள மாட்டாயா!


அநக: - தோஷமற்றவன் நீ. உன் திருவடியைப் பற்றிய யாரையம் நீ காப்பாற்றாது இருந்ததில்லை. நான் இதற்கு விதிவிலக்காக வேண்டாம்.


என ஸ்வாமி பெருமானின் குணக்கடல் கலங்காதிருக்க, ஆஶ்ருதர்களை ரக்ஷிக்க வேண்டுகிறார்.


தாயாரின் தயையும் எம்பெருமானின் தயாளகுணமும் நம் இருகண்கள் போன்று உயர்ந்தவை. இவ்வுலகுய்ய இப்போது நிலவும்  நெருக்கடி தீர அவர்களை ப்ரார்த்திப்பதைத்தவிற வழி ஏதும் உண்டோ!!!!


மேற்கூறிய ஶ்லோகங்களை தினம் அனுஸந்தித்து தற்போது ஏற்பட்டிருக்கும் பேரிடர் அகல நாம் ப்ரார்த்திப்போமாக.


The above write-up is the outcome of listening to Navalpakkam U.Ve. Sri Raamaachar Swami's Desika Stotra Nirvaaham in Vande Vedanta Desikam Series.


🌺🌺🌺🌺🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌷🌷🌷🌷