**************************************************************************
The
greatness of the "unsung hero" - Bharatha, in the
great epic Srimad Ramayanam is brilliantly brought out in a
befitting manner by the great saint Valmiki and Kavi Chakravarthy Kamban.
The supremacy of Bharatha over Sri Rama is vividly explained by U.Ve Pazhaveri
Sri Balaji Swamy in a very captivating manner. Below is the summary of
Swamy's emotive and powerful Upanyasam series on the above topic.
*************************************************************************
"குணம் நாடி
குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி
மிக்கக் கொளல்"
"ஈதல் இசைபட
வாழ்தல் அதுவல்லது
ஊதியமில்லை
உயிர்க்கு"--என்ற இரண்டும் வள்ளுவன் வாக்கு
ராமாயண காவ்யத்தின் இரு முக்கிய பாத்ரங்கள் கைகேயியும் அவள் ஈன்ற பரதனும். நற்குணத்தினராயினும் காலச்சூழ்நிலை இவர்களது புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தியது. அதனைச் சரிசெய்து கைகேயியை நற்தாயாகவும் பரதனை காவ்ய நாயகனைவிட உயர்ந்தவனாயும் நாம் உணர்ந்து அனுபவிக்கும் வகையில் காட்டிய கம்பனின் காவ்ய நயத்தை வெகு நேர்த்தியாக ஸ்ரீ பழவேரி உ.வே.பாலாஜி ஸ்வாமி செய்த உபந்யாஸத்திலிருந்து அடியேன் க்ரஹித்ததைப் பகிர்கிறேன்.
பாகம் - 1
ப்ரஹ்லாதாழ்வான், விபீஷணாழ்வான், கஜேந்த்ராழ்வான், கூரத்தாழ்வான் வரிசையில் சேர்ந்த கம்பநாட்டாழ்வானால் உயர்த்திக் காட்டப்ட்ட இரு ஆழ்வார்கள் பரதாழ்வானும், ஶத்ருக்னாழ்வானும்.ஸ்வாமி தேஶிகன் காட்டியபடி பன்னிரு ஆழ்வார்களுள் ஆண்டாள் பெரியாழ்வாருள்ளும், மதுரகவி நம்மாழ்வாருள்ளும் அடங்குவதுபோல பரதனுள் அடங்குபவன்ஶத்ருக்னன்.
"லக்ஷதா மாதுல
குலம் பரதேன ஶஸானத:
நித்ய
ஶத்ருக்ன: அனக: நீத:ப்ரீதி புரஸ்க்ருத: " என்கிறார்
வால்மீகி.
பரதன் இட்ட
கட்டளைகளை ஏற்பவனாயும், லவணாசுரவதம் முடித்தவனாயும் சித்தரிக்கப்படும் ஶத்ருக்னனின்
கீர்த்தி மிகப்பெரியது."ஶத்ருக்ன":(ஶத்ருக்களைக் கொல்பவன்)
என்றும்,
"நித்ய
ஶத்ருக்ன": (புலன்களை வென்றவன்) என்றும் வால்மீகி புகழ்கிறார்இவனை.
"முத்துருக்
கொண்டசெம்முளரி அலர்ந்தால்
ஒத்திருக்கும் எழிலுடைய இவ்ஒளியால் எத்திருக்கும்
கெடும் என்பதை என்னா ஶத்தருக்னன் எனச் சாற்றினன் நாமம்"
எனக் கம்பன் தமிழ் படுத்துகிறான் வால்மீகி வாக்கியத்தை.
"உள்நிலாவிய
ஐவர்" என நம்மாழ்வார்
குறிப்பிடும் இந்த ஐம்புலன்களை வெல்வது அவ்வளவு சுலபமல்ல. புலிவாயிலகப்பட்ட குழந்தை
தன்னைக்காப்பாற்றக் கதறுமாப்போல ஆழ்வார் இந்த இந்த்ரியங்களின் தாக்கத்திலிருந்து
தன்னை மீட்கக் கோறுகிறார் எம்பெருமானிடம்.
எம்பெருமானைப்பெற்றாள்
கௌஸல்யா. பரதாழ்வனைப் பெற்றாள் கைகேயி. இளையபெருமாளையும், ஶத்ருக்னாழ்வானையும் பெற்று
உயர்ந்தவளாகிறாள் ஸுமித்ரா. ஆக பகவத் கைங்கர்யஸ்ரீ என்றும், பாகவத கைங்கர்யஸ்ரீ என்றும்
உயர்ந்த பெருமை இவர்களுக்கு! இத்தகைய பெருமை வாய்ந்த ஶத்ருக்னன் நிறைந்த தேஜஸ்
உடையவன். பரதனை நிழல் போலத் தொடருபவன். பரதன் தன் மாமன் வீடு செல்லும்போது இவனும்
பரதனைத் தொடர்ந்து அங்கே செல்கிறான். பரதன் பிறந்த புஷ்யநக்ஷத்ரமே தன் பிறந்த
நாளாய்க் கருதினான்.
14 ஆண்டுகள்
முடிந்து ராமன் வரவில்லையானால் தான் தீயில் விழும்போது, அரசனின்றி அயோத்தி
தவிக்காதிருக்க ஶத்ருக்னன் அரசனாக வேண்டும் என்கிறான் பரதன்.
"சொன்ன நாளில்
ராகவன் தோன்றிலின்
மின்னு தீயிடை
யானும் வீழ்வன்
மன்னனாதி
என்சொல் மறவாதென்றான்".
இதனைக் கேட்ட
ஶத்ருக்னனின் நிலைப்பாட்டை நிழல்படம் ஆக்குகிறான் கம்பன்.
"கேட்ட
தோன்றலும் கிளர் தடக்கைகளால்
தோட்டச்செவி
பொதிந்து குலுங்கினான்
ஊட்ட நஞ்சம்
உண்டான் எனத் துயங்கினான்
நாட்டமும்
மனமும் நடுங்கா நின்றான்".
நான் தீயில் வீழும்போது
மன்னனாவாய் நீ" என்பது பரதன் வாக்கு. இதனைக்கேட்ட
ஶத்ருக்னன் தன் காதுகளைப் பொத்திக்கொண்டு ஊட்டு
நஞ்சுண்டான் போலக்குலுங்கி அழுதான். பெற்றோர், ஆசார்யன், தெய்வம்
இவர்களை ஒருவன் தூஷிப்பானேயாகில் அவை காதில் விழாவகையில் வெகு தொலைவு சென்று விடவேண்டும்
.
தூஷிப்பவரைத்
தண்டிக்க வேண்டும். என்கிறது ஸனாதன தர்மம் இவ்வகையில் தன் காதுகளைப் பொத்திக்கொண்டு
பேசுகிறான் ஶத்ருக்னன். தந்தை வாக்கைக் காக்க காடு சென்றான் ஒரு தனயன்.
அவனுக்குகைங்கர்யம் செய்யத் தொடர்ந்து சென்றான் ஒரு இளவல். ஜடாமுடிதரித்து சந்யாசி போலிருந்து
தமையன் தந்த பாதுகையாலே அயோத்தி செல்லாமலேயே ராஜ்யம் ஆண்டான் ஒரு
தம்பி. இம்மூவரும் ஏற்காத ராஜ்யத்தை நான் எவ்வாறு ஏற்பேன். நீ இறந்த பின் நான் உயிர்
வாழ்ந்திருந்தேனாகில் கொற்றக்குடைக்கீழிருப்பேன்" என்கிறான் ஶத்ருக்னன். பரதனிடம் கொண்ட இந்த ஆழ்ந்த பக்தியால்
ஆழ்வானாகிறான் ஶத்ருக்னன்.
பாகம் - 2 ரகுவம்சத்தில் காளிதாஸனும், சம்பு ராமாயணத்தில் போஜராஜனும் காட்டாத உயர்வைக் கம்பன் பரதனுக்கு அளித்துள்ளான் தன் "கோமறு மாக்கதை" யாகிய கம்ப ராமாயணத்தில்.
"நடையில் நின்று உயர்ந்த நாயகன்" (ஒழுக்கத்தில் நின்று உயர்ந்தவன்) என்றும், "இருகை வேழத்து இராகவன்" (தடக்கைகள்) என்றும் 1000க்கு மேற்பட்ட அடைமொழிகள் ராமனுக்கும், 500க்குமேற்பட்ட அடைமொழிகள் ஸீதைக்கும் கொடுத்துள்ள கம்பன் 15-20 அடைமொழிகளே கொடுத்துள்ள பரதனைக் கோடி மடங்கு ராமனை விட உயர்ந்தவன் எனக் காட்டுகிறான் என்பது ஆஶ்சர்யமே!
எல்லாத்தகுதியும்
நிறைந்த தமையனிருக்கும்போது தம்பி கல்யாணம் செய்து கொள்வது தர்மமாகாது. அதுபோல
தமையன் ஏற்காத ராஜ்யத்தைத் தான் ஏற்று 'பரிவேத்தன்' என்ற அடைமொழியைப் பெற
விரும்பவில்லை என்கிறான் பரதன்.
தன் கொடிய
மகனால் ராஜ்யத்துக்கே தீங்கு நேரும் என்று அவனைக்கொன்ற நீதிமானாகிய
தந்தை பரதனின் பெயரையே நம் பாரததேசம் பெற்றுள்ளது.
ஜன நீதியை
மீறியதால் கைகேயின் அரண்மனை நரகத்துக்கு ஒப்பானது என்று அதனை விட்டு நீங்கினான் பரதன்
என்கிறார் சொல்விளையாட்டில் சமர்த்தனாகிய போஜன் தன் சம்பு ராமாயணத்தில்.
பாலகாண்டம்
முதல் பட்டாபிஷேகம் வரை 4 பாசுரமே பாடினாலும், பரதனை இக்காவ்யத்தின் நாயகனாய் ஏற்றினான் தன்
சொல்லாற்றலாலே கம்பன்! ராமனுக்குச் சமம் எனத்துவங்கி, ராமனை விட 100மடங்கு, கோடி மடங்கு
உயர்ந்தவன் என முடிக்கிறான்.
"பரத ஸபதம்" என ராமன் காடு செல்ல தான் காரணம் என்றால் அந்தபாவம் தன்னைவந்துசேரட்டும் என்ற
"பாவப்பட்டியலை" ஸேவிக்கும் போது கண்ணீர்
விடாதவர் கல்நெஞ்சக்கார்களே!
எம்பெருமானிடம்
அஸஞ்சலமான பக்தி காரணமாய்த் தீயில் போடப்பட்டவன் ப்ரஹ்லாதாழ்வான். தீயினால்
சுட்ட புண் உள் ஆறும. ஆனால் செய்யாத தவறென்ற பழித்தீயில் போடப்பட்டவன்
பரதாழ்வான். இலக்குவனும் பழியேற்றான் ஓரிடத்தில். இவையிரண்டுமே நாவினால்சுட்டவடு ஆறாதவை.
பாகம் - 3
சமய
இலக்கியங்களில் அடியார் பெருமை ஆண்டவனை விட உயர்ந்ததாய்ப் பேசப்படுகிறது.
சமயக்
கோட்பாட்டுக்கு முரண்படாமையால் இது அங்கீகரிக்கப்படுகிறது.
இதனை
மெய்ப்பிக்கும் வண்ணம் பரதாழ்வானை
உயர்வாகக் காட்டுகிறான் கம்பன்.
தஶரதனின்
தனயர்களுக்கு க்ஷத்ரிய தர்மப்படி 13ம் நாள் நாமகரணம் செய்யப்படுகிறது. குலகுருவாகிய வஸிஷ்டர்
ஒவ்வொரு குழந்தையிடம் சென்று பார்த்து பெயர் சூட்டியதைக் கம்பன் காட்டுகிறான்.
ராமனருகேசென்று
பெயரை "ஈந்தனன்" லக்ஷ்மணனுக்கு பெயரை
"இசைத்தனன்". ஶத்ருக்னனுக்கு பெயரை "சாற்றினன்". என்ற
வினைச்சொற்களைப்பயன்படுத்திய வஸிஷ்டன் பரதன்பெயரைச்சூட்டும் போது அக்குழந்தையை
வெகுநேரம் உற்று நோக்கி பயன்படுத்திய வினைச்சொல் "பன்னினன்" என்பதாம்.
"கரதலம் உற்ற
நெல்லி கடுப்பு விரதமறைப் பொருள் மெய் நெறி
கண்ட வரதன் பரதன் எனப்
பெயர் பன்னினனே".
வரம்
தரக்கூடியவராயிருந்தவர் வஸிஷ்ட பகவான் என்று காளிதாசன் புகழ்ந்துள்ளார் இவரை.
த்ரிகரணமும்
ஒரேகோட்டில் இருக்கை,
செம்மையுடைமை,
உள் வெளி
ஒற்றுமை ஆகிய நற்பண்புகளுடன் பழிச்சொல் ஏற்கப் பிறந்தான் என்பதை
உணர்ந்த வஸிஷ்டன் "பன்னினான்" (திரும்ப திரும்பச் சொல்லுதல்) என்ற வினைச் சொல்லைப்
பயன்படுத்தி திருநாமமிட்டான்.
திலீபன்
தொடங்கி தஶரதன், ராமன் வரை வந்த இக்ஷுவாகு வம்ஶ ராஜாக்களுக்கு வரந்தரும்
குலகுருவாயிருந்த வஸிஷ்டர்
உள்ளங்கை
நெல்லிக்கனி போல வேதமறிந்தவராயிற்றே!
பாலகாண்டத்தில்
பரதனின் செம்மையுடைமையை இரு ரிஷிகள் அடித்தளமிட்டுக் காட்டினர். விஶ்வாமித்ரர்
வாயிலாகவும் பரதன் கீர்த்தி பேசப்படுகிறது. தன்னைச் சரணடைந்த த்ரிசங்குவுக்காக
இந்த்ர லோகத்தையே படைக்கமுற்பட்ட சக்திமான்.
இவரது ப்ரயத்னத்தை
"விஶ்வாமித்ர ப்ரயத்னம்" என்றால் மிகையில்லை. (இவரது அடியொற்றியே பின்னால்
எம்பெருமானார் 18 முறை திருக்கோட்டியூர் சென்றதும், அவர் திருமலைநம்பிகளிடம்
ஒருவருடம் ராமாயண விஸேஷார்தங்களைக் கற்றதும் விடாமுயற்சிக்கு இக்காலத்து
குழந்தைகளுக்கு உதாரணங்களாக்கலாம். தினந்தோறும் திருமலை நம்பிகள்
திருமலையிலிருந்து இறங்கி வந்து காலக்ஷேபம் ஸாதித்து விட்டு பின் மலை ஏறுதல்
என்பது அஸாத்யமான கார்யமே)அன்று வால்மீகி முனிவரைப் தேடி வந்து நாரதமுனி உரைத்த
ராமாயணத்தை பிற்காலத்தில் ராமானுஜரைத்தேடி வந்து உரைத்தார் திருமலை நம்பிகள்.
காமம், வெகுளி என்ற
இருகுணத்தால் (தன்தவவலிமை குறைந்ததைத் தானேதெரிவித்த உயரிய குணம்
படைத்தரிஷி) விஶ்வாமித்ரன் இவ்விரு குணங்களால் தருவனத்தில் (ஸித்தாஶ்ரமம் என்பதன்
தமிழாக்கம்) யாகம் அழியாமல் காக்க கரிய செம்மலைக்கேட்டான் தஶரதனிடம். இத்தனை
சிறப்புமிக்க ரிஷி பரதனைப் புகழ்ந்து பேசுகிறான் .
எம்பெருமான்
ஒருவனே ஹேய குணங்களற்றவன். "படியில் குணத்து பரதநம்பிக்கு அன்று"
(அளப்பரிய
நற்குணங்களை உடைய பரதன்) என
பெரியாழ்வாரும், "நம்பியும் பரதநம்பியும்
என் நாயகனை ஒக்கின்றனர்" என்று குகனும் பரதனின் செம்மைப் பண்பை பறை
சாற்றுகின்றனர். 16 குணங்களின் இருப்பிடமானவன்
ராமன் என்கிறார் வால்மீகி ராமாயணத் துவக்கத்தில். சந்த்ரனின் 16கலைகளைப்ப்போல 16
திருக்கல்யாண
குணங்களினால் ராமசந்த்ரன் எனப்படுபவன் இந்தராமன். உபய லிங்க பாதம் என்ற பகுதியில்
வ்யாசரின் ப்ரும்ஹ சூத்ரம் எம்பெருமானின் கல்யாண குணங்களை விவரிக்கிறது. அவனை
விஞ்சிய குணத்தனாக பரதனை இலக்குவன் வாயிலாகக்காட்டுகிறான் கம்பன்
மெய்ஞானம்
பெறுவதற்கு கர்மானுஷ்டானம் அவசியம். அதனைச்செய்ய ஏற்ற 6 ருதுக்களும் ஒத்த தட்ப
வெப்பநிலையும் கொண்டிருப்பதால் நம் பாரத பூமி புண்ய பூமியாகிறது.
பஞ்சவடியில்
முகாமிட்டுள்ளனர் ராமன், ஸீதா, இளவல் மூவரும். கோதாவரிக்கு நீராடச் சென்று திரும்பும்
இலக்குவனின் நினைவில் பரதன் தோன்றுகிறான். இக்குளிரில் சரயூவில் நீராடி
த்திரும்பும் பழியுடன் ராஜ்ய பாரத்தையும் சுமக்கும் பரதனை நினைத்து வருந்துகிறான்.
அவனது குணக்கடலில் ஆழ்கிறான்.
"தள்ளறிய
பெருநீதி தனியாறு புக மண்டும்
பள்ளம் எனும் தனியானை எள்ளறிய குணத்தாலும் எழிலாலும் இவ்விருந்த வள்ளலையே
அனையானை கேகேயர்கோன் மகள் பயந்தாள்"
( "வள்ளலையே
அனையானை" என்பதற்கு ராமனை ஒத்த என்று பொருள்) பரதன்
"அழகன், தர்மிஷ்டன், சுகுமாரன், சுகோசிதன், தர்மத்தை உடையவன், தீய செயல்களைக்கண்டு வெட்கப்படுப வன்,தாமரை இதழ்
போன்ற கண்களையுடைய வன், தர்மத்துக்காக எதையும் விடுபவன், மெதுவாக பேசுபவன் மென்னடையன், அறிவுடையன்,
சத்யவ்ரதன், அயல் பெண்ணை
நோக்காதவன், ஆர்யன்,மேகநிறத்தன், மஹாத்மா, இனியன், நீண்டதோளன்
என்று 16க்கும்
மேற்பட்ட குணங்களைச்சித்தரிக்கிறான் இலக்குவன்.
வில்முறித்தும்
ராம், லக்ஷ்மணர்களை
ஜனகனிடம் சுகுமாரர்கள், தேவர்களை ஒத்த பராக்ரமசாலிகளான தஶரத குமாரர்கள் என
அறிமுகப்படுத்தினார் விஶ்வாமித்ரன். ஆனால் இலக்குவன்மூலம் பரதனுக்கு
கம்பன்கொடுக்கும் அறிமுகம் மிகப்பலமானது. இலக்குவனின் இச்சிந்தனை
நடுவே நுழைந்தது கைகேயி பற்றிய எண்ணம். உலக வழக்கில்
தாயின் குணங்களை மகனும் தந்தையின் குணங்களை மகளும் ஏறிட்டுப் கொள்வது இயல்பு.இந்த
இயல்பைப் பொய்த்து விட்டான் பரதன்தன் குண விஸேஷத்தால். மந்தரை என்ற யானை கலங்கிய
குளமாகினாள் அவனதுஅன்னை எனத் தூற்றத்தொடங்கின இலக்குவனை ராமன் நெறிப்படுத்தியதைக்
கம்பன் அழகுறக் காட்டுகிறான்.
"ராமனைப் பெற்ற
எனக்கு இடருண்டோ" என்கிறாளாம் கைகேயி. மந்தரையால் புத்தி கலங்கும்
முன்பு.அதாவது உலகத்தாருக்கு மட்டுமே கைகேயி ராமனுக்கு வளர்ப்புத் தாய் ஆனால்
உண்மையில் அவளே பெற்ற தாய்" எனச்சொல்லிக்கொள்கிறாள். இத்தகைய மாண்புடைய கைகேயி
பெற்ற மஹாத்மா வைப் பற்றிப் பேசும் படியும்,அவனைப்பெற்ற தாயை அவதூறு
சொல்லாதிருக்கும்படியும் வேண்டினான் ராமன்.
இந்நிலையில்
தாயைப்பழித்த பரதன் "குணவான்" என்றழைக்கப்படுவது எவ்விதம் பொருந்தும்
என்பதன் விளக்கம் கம்பன் காதையில் பின்வருமாறு பரத்வாஜ
முனியின் ஆஶ்ரமம் அடைந்த பரதன் முனிவரை வணங்கி குசலம் விசாரிக்கிறான்.
"முனிவர்,
தேவிகள்
க்ஷேமம், சிஷ்ய
ஸம்ருத்தி பற்றி விசாரித்ததோடின்றி, மான் முதலான
ப்ராணிகள் சுற்றியுள்ளமரம் செடி கொடி செழிப்பு பற்றியும் கேட்டறியும் இனியன்" என்கிறான்.
தாய், தந்தை, ஆசான் ஆகியோர்
பெரும் தவறு செய்ய நேர்ந்தால் தனயன்/ சிஷ்யன் அவர்களைத் தனிமையில், ஆழமாய்
உணரும்படி உபதேசம் செய்யலாம் என சாஸ்த்ரம் சொல்கிறது. ஸ்வாமி தேஶிகனும் இதனை ஒரு
கைங்கர்யமாய் செய்ய வேண்டும் என்கிறார். அந்த ரீதியில் தான் பரதன் தன்
தாயிடம் பேசுகிறான் "ரகு வம்சம்/கேகேயவம்சம் எதுவாகிலும் மூத்தவனுக்கே
அரசுரிமை. புத்ர பாசத்தால் அதனை நீ புறக்கணித்தாலும் இரண்டாம் வரமான ராமன் காடு
சேர்தல் மிக் கொடியது. தன் அங்கங்கள் எல்லாவற்றுடன சம்பந்தப் பட்டதால்
ஒருதாய்க்கு (மற்றபந்துக்களைவிட) புத்ர பாசம்
அதிகம். வான் வழிச் சென்ற காமதேனு பூமியில் உச்சிவெய்யிலில் பசிதாகத்துடன்
தளர்ந்து உழவன்விரட்ட உழுது கொண்டிருந்த எருதுகளைக் கண்டு கண்ணீர்
உகுத்ததாம்.
அப்படியிருக்க
தன் மகனைக் காட்டிற்கு அனுப்பும் கட்டாயத்தில் அன்னை கௌஸல்யாவின் மனம் படும்
பாட்டை என்சொல்வது"! எனக்கேட்கிறான். படுகுழியில் விழுந்த தன் தாயைத் தூக்கும்
முயற்சியில் இனிமையாக பரதன் பேசிய பேச்சு மந்தரையின் உரையால் தீண்டப்பட்ட தாயின்
மனதை மாற்றியது. ராமனைத் திரும்ப அழைத்து வரத் தயாராக நின்ற தேரில் பெருமகிழ்ச்சியுடன்
முதலில் ஏறியவள் கைகேயி. பரதனின் இனிய ஆழமான பேச்சு கைகேயின் இச்செயலினைத்தூண்டி
அவள் செய்த தவறுக்கு ப்ராயச்சித்தமாக்கியது.
பாகம் - 4மகா கவிகளின் காவ்யங்களின் சொல் /பொருள் ஆட்சி அவர்களின் இதிகாச /புராணங்களின் ஆழ்ந்த ஞானத்தின் ப்ரதிபலிப்பாக இருக்கும். கம்பன் ஆழ்ந்த வடமொழிப் புலமை பெற்றவன்.
வால்மீகியையும், காளிதாஸனையும் ஆழ்வார்களையும், திருவள்ளுவனையும் ஆழமாய் ஆராய்ந்துள்ளான் என்பது தன் காவ்யத்தில் அவனது சொல் ப்ரயோகத்திலிருந்து புலனாகும்.
மேலும் அவன் ப்ரயோகத்தில் அச்சொற்களும்,அவற்றின் பொருளும்உயர்ந்த மதிப்பும், மெருகும் பெற்றன (value addition) என்றால் அது மிகையில்லை. இவ்வகையில் "மகாகவி" என்று மணவாள மாமுனிகள் கம்பனுக்கு அடைமொழி இட்டது சாலப் பொருந்தும். விசால மான நோக்குடையவன் இக் கம்பனாட்டாழ்வான்.
காளிதாஸன் தன் ரகு வம்ஶம் என்ற காவ்யத்தில் ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் இருந்து "கர்ணமூலமாகத்ய" என்ற வரியை எடுத்துள்ளான். காதோரம் தெரிந்த நரைமுடி தஶரதனின் வயோதிகத்தை உணர்த்தி ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்யத் தூண்டியது என காளிதாஸன் விளக்குகிறான். (ஸ்ரீவைஷ்ணவர்களின் பெருமையைக் கூறுமுகத்தான் யமன் யமபடர்களின் காதோரத்தில் அவர்களிடம் செல்லவேண்டாம் என ரகஸ்யமாய்ச் சொன்னான் என்பது விஷ்ணுபுராண வாக்யத்தின் பொருள்.
இதனைக் கம்பன் தன் காவ்யத்தில் சித்தரிக்கும் பாங்கு
பாராட்டுக்குரியது.
"மன்னனே! அவனியைமகனுக்கு ஈந்து நீ பன்னரும் தவம் புரி பருவமும் ஈதென கன்னமூலத்தில்(கர்ண)கழற வந்தன மின்னெனக் கருமைபோல வெளுத்ததோர் நரைமயிர்".
கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்ட தஶரதனுக்கு காதோரத்தில் (கர்ணமூலம்) தெரிந்த நரைமுடி சொன்ன ரகஸ்யமே ராமனுக்கு பட்டாபிஷேகம் செய் என்பதும், அவனை வெண்கொற்றக் குடைவிடுத்து காடு சென்று (வானப்ரஸ்தம்) மெய்ஞானம் பெறும் தருணம் வந்ததை உணர்த்துவதையும் ஏற்றிச் சொல்கிறான். ஆக ராவணனின் பாவம் கூனியாகவும், நரைமுடி யாகவும் வடிவெடுத்ததாக கம்பன் கூறுகிறான்.
வால்மீகி ராமாயணப்படி தஶரதன் அரசவையைக்கூட்டுகிறான். பலம், செல்வம், புகழ் இவற்றால் முதுமையை வெல்ல முடியாது என விளக்கி ராமபட்டாபிஷேகத்தை முடிவு செய்கிறான். ராமனும் தந்தைசொல் மீறாத தனயனாக சமமான மனநிலையுடன் (காதல் உற்றிலன் இகழ்விலன்) ஏற்கிறான் அரசன் முடிவை.
சற்று நேரம் கழித்து திரும்ப ராமனை அந்தப்புரத்துக்கு அழைத்த தந்தை தனயனின் "விலங்கலன்ன தோளையும் மெய்திருக்கும் அலங்கலன்ன மார்பையும் தன்தாள் மார்பு கொண்டளந்தான்" என்று அவனைஅணைக்கும் முகமாய் ராமனின் திறலை அளந்ததைச் சித்தரிக்கிறான் கம்பன்.
பின் தந்தை தன் மனப்போராட்டத்தை தனயனிடம் புலம்புகிறான். பரதனின் பண்புகள் தஶரதன் வாயிலாக இங்கே.
"ராமா! பரதன் வெகு தொலைவில் உள்ள இத்தருணமே உனக்கு
பட்டாபிஷேகம் செய்யத் தகுந்த காலம். பரதன் தர்மாத்மா. தூயவன். முன்னோர் வழி
நடப்பவன். தமையனைத் தாதைக்கு ஒப்பாக நினைப்பவன். தயை உடையவன். ஜிதேந்த்ரியன். உன்னை
ஒத்தவன் "---எனப் புகழ் மாலை சூட்டினார் ஏதோ புரியாத உள்ளுணர்வு பரதனால்
இப்பட்டாபிஷேகம் தடைப்படும் என்று தோன்றுவதை வெளியிடுகிறான் தஶரதன். அதேசமயம்
"பரதன் க்ருதஶோபி"--என்கிறான். நல்லது நடந்தால் ஸந்தோஷிப்பவன்என்று
பொருள்.இந்த நல்லவர்கள் மனநிலையை வள்ளுவன் "உடுக்கை
இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண்
களைவதாம் நட்பு" என்கிறான்.
ராமனுக்கு
ஏதாவது தீமை நேர்ந்திருந்தால் ஏன் தெரிவிக்கவில்லை என்று கேட்பானே ஒழிய தான்
இல்லாதபோது பட்டாபிஷேகம் நடந்ததற்கு வருந்த மாட்டான் என்ற பரதனின் பண்பை "க்ருத
ஶோபி" என்ற சொல் ப்ரயோகத்தால் தஶரதன் வாயிலாக க் கம்பன்
காட்டுகிறான்.மேலும் தனக்கு அடிக்கடி ஏற்படும் துர்ஸ்வப்பனங்களையும் ,கோள்களின்
நிலையை வைத்து பேரரசர்களின் இழப்பு ஏற்படும் வாய்ப்பையும் பற்றி ராமனிடம்
கூறுகிறான்தஶரதன். அவனது உள்ளுணர்வை "நின்பற்றா நின்
மகன் மேல் பழி
விளைத்திட்டு என்னையும் நீள்வானில்போக்க என்பெற்றாய் கைகேசீ இருநிலத்தில் இனிதாக
இருக்கின்றாயே" என்பது தஶரதன் புலம்பல். (குலசேகர ஆழ்வார்-பெருமாள் திருமொழி)
ஆக
பரதன்நற்பண்பாளனாயினும் அவனால் நஷ்டம் விளையப் போவதை
உணர்த்துகிறான்.மனிதமனம்எப்போதும் ஒரேநிலையில் இருக்காது என்றான்.
இவ்விதம்
உள்ளுணர்வினால் தஶரதனுக்கு ஏற்பட்ட படபடப்பை வால்மீகி காட்டுவதைக் கம்பன் கௌஸல்யாவிடமும்
இத்தகைய படபடப்பு ஏற்பட்டதை (பதிவ்ரதா லக்ஷணமாக) விவரிக்கிறான்.
ராமனுக்குப்
பட்டாபிஷேகம் என்று அறிந்ததுமே அந்நிகழ்வின் கற்பனையில்ஆழ்ந்தாள் அன்னை கோசலை.தம்
குலதெய்வமாகிய அரங்கனை வணங்கி பூஜித்தாள்.தானங்கள் செய்து மகிழ்ந்தாள். ஆனால் வஸிஷ்டர்
தன்கையில் ஏந்திய மகுடத்தை ராமன் தலையில் புனையவில்லை.!!
"சிறப்பும்
செல்வமும் மகட்கு என்ற சிந்தையில் பிறக்கும் பேருவகைக் கடல்
பெற்பற வறக்குமா படவைக்கனல் ஆனதால்
துறக்கும்
மன்னவன் என்னும் துணுக்கமே"--கோசலையின் மனத்தில்
பொங்கியபேருவகைக்கடல்
கைகேயின் வரமாகிய வடவாக்னியால் வற்றிப் போயிற்று.எனக் கவிநயம் பொங்க
சித்தரிக்கிறான் கம்பன்.
(கடலின் நடுவே
கண்ணுக்குப் புலனாகாது இருக்கும் இந்த "படபாக்னி" (this latent heat is responsible for maintaining
the sea level by evaporating the excess water), கடல்மட்டத்தையும், சீதோஷ்ணத்தையும் சமமாக
வைக்க எம்பெருமான் செய்த ஏற்பாடு.)
க்ஷத்ரியனைவிட
அந்தணனுக்கு அரசாளும் தகுதி குறைவு .
அந்தணனுக்கு
தேக, மனோவலிமை
குறைவு. என்கிறான்காளிதாஸன். க்ஷத்ரியனுக்கு ஆழ்ந்து யோசித்துச் செயல்படும்
நுண்ணறிவு அதிகம்.மிகுந்த யோசனைக்குப் பின்பே பரதனில்லாத சமயத்தில் ராமனுக்கு
முடிசூட்ட தஶரதன் தீர்மானித்தான் என்பதை ஈடு முப்பத்து ஆறாயிரப்படி அறிவிக்கிறது.
தஶரதன்
அரசவையில் அறிவித்தபோதும், அந்தப்புரத்தில் அந்தரங்கமாகத்தன் மனத்தை வெளிப்படுத்திய
போதும் மௌனம் ஸாதித்த ராமன் பரதன் தன்னைத் திரும்ப அழைக்க வந்தபோது
வெளிப்படுத்துகிறான்.
"பரதா! நீ
அரசாள்வதே தகும். ஏனெனில் நம் அப்பா உன் அம்மாவை மணமுடிக்கும்போது உன் தாத்தாவுக்கு
தந்த வாக்குறுதிப்படி கைகேயின் மகன் அரசனாக வேண்டும் என்பது.
(இந்த கன்யா
ஸுல்கம் பற்றி அறிந்தவர்கள் வஸிஷ்டரும், ஸுமந்திரரும் மட்டுமே)
ஆக ஒரேநிகழ்வு
பலரால் பலகோணங்களில் கவித் திறத்தாலே சித்தரிக்கப்படுகிறது.
பாகம் - 5
ஞானயோகத்துக்கு அதிகாரியான ஜனகமஹாராஜன்
கர்ம யோகியாக இருந்தான் .தன் முந்தைய அவதார மாமனாரின்
குணவிஸேஷத்தை க்ருஷ்ணன் கீதையில் புகழ்ந்து பேசுகிறான்
கைகேயியின் தந்தை நல்ல அறவானாகவும்,ஆத்ம ஞானமுள்ளவனாயுமிருந்தான்.அவனது மகன் யுகாஜித்தும் அப்படியே.பரதனின் குணநலன் சொல்லி மாளாது.
ஆக எல்லோரும் நல்லவர்களாயிருந்தும் ஏதோவொரு
பயம் தஶரதனைப்பீடித்திருந்தது.
இந்த பயமே பரதன் இல்லாத சமயமாக ராம பட்டாபிஷேகத்தைச் செய்யத்தூண்டியது.கேகேய ராஜனுக்கும்,ஜனகராஜனுக்கும் அழைப்பு விடத் தடுத்தது.
பட்டாபிஷேகம் என்றதும், அடுத்து காடு செல் என்றதும் தலையசைத்தது மட்டுமே பெருமாள் செய்த செயலாயிற்று.
பரசுராம படலத்தில் கம்பன் மட்டுமே கூனி வாயிலாக பரதனை கேகேய நாட்டுக்கு வேண்டுமென்றே அனுப்பியதாக கைகேயிடம் கூறுகிறான்.வால்மீகிராமாயணத்தில் இவ்விஷயம் இல்லை.
கைகேயிக்கு ஒரு சாபம் உண்டு என்ற விஷயம் பாத்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
கைகேயி மஹாலக்ஷ்மி போல மிகுந்த அழகி.பிடிவாதம்மிக்க க்ஷத்ரிய பண்புடையவள்.
வயதான தஶரதன் இந்த இளைய கைகேயியை அளப்பரிய காமத்தால் கைபிடித்தான்.உயர்குடி, செல்வம், கல்வி இவற்றுடன் அழகும் சேர்ந்து மகா கர்விஆயினாள் கைகேயி. அவளது அழகே அவளுக்கு பாகவதாபசாரத்தை ஏற்படுத்தியது.ஒரு வித்வத்தில் சிறந்த ஆனால் மகா குரூபியான உஞ்சிவிருத்தி ப்ராமணரை உதாசீனம் செய்த கைகேயியை
"உன் அழகே உனக்கு விபரீதத்தை உண்டாக்கும்" என்று அவர் சபிக்கும்படி ஆயிற்று.
(இந்திய மக்கள் தொகையில் ராமாயணத்துடன் இணைந்த பெயர்கள் ஏராளம். ஆனால் யாரும் கைகேயின் பெயர் கொண்டவரில்லை. பாகவதாபசாரம் பொய்க்காது.)
அவளிடமிருந்த அன்பின் மிகுதியாலும், பழக்க தோஷத்தாலும் முதலில் பட்டாபிஷேகச் செய்தியை கைகேயிக்கு சொல்லப் செல்கிறான் தஶரதன், கௌஸல்யாவை விடுத்து. அங்கே சென்றவருக்கு கைகேயியின் அலங்கோலம் அதிர்ச்சி அளித்தது.
சம்பராஸுர வதத்தில்
இருமுறை மூர்ச்சித்து விழுந்த தஶரதனைக் காப்பாற்றிய வீராங்கனை கைகேயி. அந்த
விஸ்வாசத்தில் அவனளித்த வரங்களிரண்டைத்தான்ராம பட்டாபிஷேகத்தை நிறுத்தும் உபாயமாக கூனி
நினைவுறுத்துகிறாள். அதன் விளைவே இக்கோலம். ஆக தஶரதன் வாய்மை காக்க அளித்த
முக்கியத்துவமே அவன் வானேறவும் ராமன் கானேகவும் காரணமாகியது.
பரதனே
நாடாளவேண்டும் என கைகேயி சொல்வக்கேட்ட ராமனின் மனோநிலையைக் கம்பன் சித்தரிக்கும்
பாங்கு வெகுநேர்த்தி.
"உறுவுடை சகடம்
பூண்ட
உடையவன் உய்த்த
காரேறு
அறிவுடை ஒருவன்
நீக்க
அப்பிணியவிழ்த்தது
ஒத்தான்"
(அளவுக்குமீறி
ஏற்றிய பாரத்தை இழுக்கமுடியாது இழுக்கும் காளையினைஅவ்வண்டியிலிருந்து அவிழ்த்து
விடுவித்துதுயர் துடைக்குமாப்போல இருந்ததாம் ராஜபாரம் தவிர்ந்த ராமனுக்கு)
கைகேயியிடம்
ஆவலுடன் சென்ற தஶரதனுக்குக் கிடைத்தது அலங்கோல வரவேற்பு.
ஆனால் ராமனை
அழைத்துவரச் சென்ற ஸுமந்திரர்க்கு அலங்கார ராமன் காட்சி கொடுக்க ராமனை பகவானாகப்
பார்த்த ஸுமந்திரர் விழுந்து ஸேவிக்கிறார்.
(அக்ரூரர்க்கு
க்ருஷ்ணன் காட்சியளித்ததுபோல)
பாகம் - 6
ராஜாக்கள்
இங்கிதம் அறிந்து ரகஸ்யங்களைக் காப்பாற்றுவார்கள் என்று கீதையில்
சொல்லப்பட்டுள்ளது.
"ராஜவித்யா
ராஜகுஹ்யம்"
ராஜாக்கள்
அகன்ற ஆழமான மனமுடையவர்களாகையால் ரஹஸ்யங்களைப் பாதுகாப்பவர்களாய் உள்ளனர்
எனராமானுஜர் கீதாபாஷ்யத்தில் சொல்கிறார். (இதுவே ரஹஸ்ய காப்பு ப்ரமாணம்என
இன்றளவும் நம் அரசியலில் காணப்படுகிறது)
ரகுவம்ஸத்தில்
வந்த ராஜாக்களின் குலப்பெருமையாக தேச நலன்பொருட்டு மறைக்க வேண்டியவற்றை
மறைப்பார்கள் என்று காளிதாசன் குறிப்பிடுகிறான்.
இத்தகைய
மதிப்பு பெற்ற வராயிருந்த ஸுமந்திரரிடம் முடிவுகள் எடுக்கும் உரிமையையும்
ஒப்படைத்திருந்தான் தஶரதன்.
அதனால்
ஸுமந்திரரோ/தஶரதனோ கன்யா ஸுல்கம் பற்றி ராமனிடம் தெரிவித்திருக்க
வேண்டும்.
கைகேயி
நால்வரையும் சமமாக பாவித்தாலும் ராமனையே அதிகம் நேசித்தாள் கோசலையும் நால்வரையும்
சமமாக பாவித்தாலும் பரதனிடம் அதிக பற்று வைத்திருந்தாள்.
"நிறைகுணத்தவன்
நின்னிலும்நல்லவன்" என்று கோசலை புகழ்கிறாள் பரதனை.
ராமனும்
பரதனும் சமம் என்கிறார் விஶ்வாமித்ரர்.
உன்னிலும்
மூன்று பங்கு உயர்ந்தவன் பரதன் என்கிறாள் கோசலை மற்றோர் தருணத்தில் ஆயிரம் மடங்கு
உயர்ந்தவன் பரதன் என்கிறான் குஹன்.
"கோடி ராமன்
உனக்குச் சமமாக மாட்டான்" என்கிறாள் கோசலை மீட்சிபடலத்திலே.
"என் சிறுவர்
செவ்வியர்" என்றும் "அவ்வவர் துறைதொறும் அறத்தொடு ஒழுகுபவர்" என்றும் "ராமனைப் பயந்த
எனக்கு இடருண்டோ" என்றும் கூறிய கைகேயியின் மனத்தை
இருவரங்களைக் கேட்க வைத்து க்கலக்கிய திறத்தினள் கூனி.
"பங்கமில்
குணத்து எம்பி பரதனே மாமுடி சூடு
வான்" என்று கோசலை இடம் ராமன் கூறும்போது
"முறைமையில் லது
என்பதொன்றுண்டல்லது" வேறு வருத்தமில்லை என்கிறாள் கோசலை. (திறம்படைத்த
மூத்தவன் இருக்க இளையவன் பட்டமேற்பது அறம் ஆகாது.)
பரதனின்
உயர்வைக் கம்பன் கோசலை வாயிலாக க்காட்டும் விதம் ப்ரமிப்பூட்டுவதாயுள்ளது.
பரதனின்
ப்ரதிஞயை 4 ஶ்லோகங்களில் காட்டிய வால்மீகையை விஞ்சி 30 பாசுரம்
பாடியுள்ளான் கம்பன்.
விரக்தி என்பது
ஒருவனுக்கு வருவது கடினம்.வந்தாலும் நிலைப்பது அதைவிடக்கடினம்.
14 வருடம்
ராஜபோகம் அனுபவித்தவன் அத்தனை எளிதாய் அதனைத் துறக்க முற்பட மாட்டான்.அதனால்
வனவாசம் முடிந்து வந்த ராமன் பரதனின் மனோநிலையையும், இங்கிதத்தையும் நிதானமாய்
அறிந்து வர அனுமனை அனுப்புகிறான்.
சொன்ன சொற்படி
ராமன் வரவில்லை என்றால் அகனிப்ரவேசம் செய்வதாக பரதன் ஶத்ருக்னனிடம் கூறிய
செய்தியறிந்து அயோத்தியில் இருந்து நந்திக்ராமத்துக்கு விரைந்த
கோசலையின் நிலையைச் சித்தரிக்கிறான் கம்பன். "வயிறு புடைத்து அலமந்து ஏங்கி
......இப்போது கடிதோடிவிலக்க வந்தாள்".
"என்னில்
கோடிராமர்கள் எண்ணிலும் அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ" -என்று
புலம்புகிறாள்.
"புண்ணியம்
என்று நின்னுயிர் போயினால் அறத்தின் மேல் மக்களுக்கு வெறுப்பு
உண்டாகிவிடும்" என்கிறாள்.
ஆக பரதனின்
உயர்வைக் கம்பன் முதல் படல த்திலிருந்து இறுதிவரை நிறைவாய்க் காட்டுகிறான்.
பாகம் - 7
ராவணவதம் முடிந்து பரத்வாஜர் ஆஶ்ரமம் அடைந்த ராமனிடம்
பரதனின் நிலையை பரத்வாஜமுனிவர் விளக்குகிறார் இப்படி."அலங்காரமின்றி ஜடாமுடியுடன் அயோத்தி செல்லாமல் நந்திக்ராமத்தில் இருந்து கொண்டு பாதுகாராதனம் செய்து கொண்டிருக்கிறான் பரதன்" என்கிறார்.
அவர்முகமாய் பரதனின் நிலை விளக்கும் கம்பனின் பாடல்
இது.
"வியர்த்த
மேனியன்விழிபொழி மழையினன்
இருங்கனிகாய்
நுகர்ந்து இகுளிபந்தி வந்தபுல் பாயினன்
பழம்பதி புகாது
நந்தியம்பதியிருந்தனன் பரதன் நின்நாமம் அந்தியும்
பகலும் மறந்திலன்"- என்று பரத்வாஜர் ஸீதாராமனிடம் பர்ணசாலையில்
கூறுகிறார். வியர்த்தமேனியன் என்னும் பதம் அவன் மனவேதனையை
வெளிப்படுத்துகிறது. குதிரைதின்னும் புல் படுக்கையில் உறங்குகிறான் என்பது அவனது
விரக்தி நிலையைச் சித்தரிக்கிறது. ராமன் துறந்த ராஜபோகத்தை அவனும் துறந்து
அண்ணலின் வருகைக்காகவே உயிர்தரித்திருக்கும் பரதனின் நிலையை எத்தனை துல்யமாய் படம்
பிடித்துக் காட்டுகிறான் கம்பன்!!
இதனையடுத்து
ராமன் அனுமனிடம் பரதன் நிலையைக் கண்டு வரச் சொல்கிறான்.
"இளையோன் நின்ற
நீர்மையும்நினைவும்நீதேர்ந்து"-
என நன்கு
அறிந்து வந்து சொன்னபின்பே, தான் நந்திக்ராமம் புறப்படப் போவதாய்ச் சொல்கிறான். அடுத்து
அனுமன் செல்லும் வேகத்தை "தந்தை வேகமும் தனது நாயகன் தனிச்சிலையின் முந்து
சாயகக் கடுமையும்
பிற்பட போயினான்"-
என வாயுவேகத்தையும்
ராமன் எய்யும் அம்பு வேகத்தையும் முந்திக்கொண்டு வேகமாய்ச் சென்றதாகக்
கூறுகிறான்.
(அனுமன் தூது செல்லும்போது தன் உருவை இடம், பொருள், ஏவல் இவற்றுக்குத்
தக்க மாற்றிக்கொண்டது குறிப்பிடத்தக்கது. கடலைத் தாண்டும்போது பெரிய
உருவம். ராவணனின் அரண்மனையில் ஸீதையைத் தேடும்போது பூனையளவு சிறிய உருவம். ராம
லக்ஷ்மணர்களை முதன்முதலில் காணச்செல்லும்போது பிக்ஷு ரூபம். இங்கு பரதனைக்காண மனித
ரூபம்)
பரத்வாஜர்
பரதனின் நிலையை விளக்கிய பின்பும் ராமன் பரதனிடம் அனுப்பிய காரணம்.
- பரதன்
உணர்ச்சி வசப்படும் இயல்பினன். ராமன் வரவை அனுமன் கூறியதும் மூர்ச்சித்து
வீழ்ந்தான்.
- அனுமன் கூறிய
விவரத்தால் மகிழ்ந்த பரதன் அவனை வெகுநேரம் ஆலிங்கனம் செய்தான். (ஆக பகவத்,
பாகவத ஸ்பர்ஶம் நிரம்பப்பபெற்றவன் அனுமன்) இத்தகைய
பரதன் பெருமையை உலகம் அறிய வேணும்.
- பரதனின்
ஶரணாகதி பொய்க்கவில்லை என்பதை உலகுக்கும் காட்டவே இந்த தூது. ("பரத
மனோரத ஸம்ஹித ஸிம்ஹாஸனாதி ரூடா") என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.
பாகம் - 8
"நிலையில் பிரியாது அடங்கியான் தோற்றம் மலையினின் மாணப் பெரிது" என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க அபவாதங்களை ஏற்றுத் தன் நிலையினின்று மாறாது பாதுகா ராஜ்யத்தைச் செவ்வனே செய்து தமையனிடம் அயோத்ய ராஜ்ய பாரத்தை இறக்கிய இளவல் "படியில் குணத்து பரத நம்பி".
ப்ரதமோதாஹரணாய பக்தி பாஜாம்
யத் உபஞ்ஞம் அசேஷ த: ப்ருதிவ்யாம்
ப்ரதிதோ ராகவ பாதுகா ப்ரபாவ
படியில் குணத்து பரத
நம்பியைப் பாடிப் பரவுவோமாக!!