Monday, August 31, 2020

அவனி போற்றும் அழகிய சிங்கர்!

246 Srirangam Temple Photos - Free & Royalty-Free Stock Photos from  Dreamstime

ஆசார்யர்களின் அவதாரம் அத்புதமானவை. ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹனே தன் விக்ரஹத்தை அளித்து ஆதிவண்சடகோபனை ஸ்தாபகராக்கி ஆல்போல் தழைத்து வளர்ந்துள்ளதே இந்த அஹோபில மடம். இதனை நிர்வகித்து வரும் அழகிய‌ சிங்கர்கள் அனைவருமே அத்புதமானவர்கள்.

"அங்கண்ஞாலம் அஞ்ச அங்கு ஓர்ஆளரியாய் அவுணன் பொங்க 
ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம் பைங்கணானைக்கொம்பு கொண்டு
பத்திமையால் அடிக்கீழ் செங்கணாளிட்டிறைஞ்சும்
சிங்கவேள் குன்றமே" 

(1-7-1) பெரிய திருமொழியில் கலியன் அருளிய அஹோபிலப் பாசுரம்.
"தந்தையிடம் கோபத்தையும் தனயனிடம் வாத்ஸல்யத்தையும் ஒரேஸமயத்தில் காட்டும்படியாக எம்பெருமான் நரசிங்கமாகத்தோன்றி அரக்கனைஅழித்த இந்த அஹோபில க்ஷேத்ரத்தில் யானைகளைக் கொன்று கொணர்ந்த தந்தங்களை நரசிங்கப் பெருமான்திருவடியில் ஸமர்ப்பித்து சிங்கங்கள்வணங்கும் சிறப்புபெற்றது சிங்கவேள்குன்றமே".
"யானைபோன்ற ஜீவர்களிடம் உள்ள தேவையற்ற அகங்காரம் மமகாரம் போன்ற தீயகுணங்களை அகற்றி ஜீவர்களின் ஆத்மா எனும் தந்தத்தை ந்ருஸிம்ஹனிடம் ஸமர்ப்பிக்கும் கைங்கர்யத்தை வழுவாமல் நடத்திவரும் அழகிய சிங்கர்கள்  உறைகின்ற இடம் சிங்கவேள் குன்ற்மே".
இது ஸ்வாபதேசம்.
இத்தகைய பெருமை வாய்ந்த அஹோபிலமடத்தின் 44ம் பட்டத்தை அலங்கரித்தவர் "முக்கூர் அழகிய சிங்கர்" எனும் மஹான். பாலாற்றங்கரையிலமைந்த அழகிய க்ராமம் முக்கூர். தமது வாழ்க்கையை ப்ரும்ஹ சர்யம், க்ருஹஸ்தம், துரியாஸ்ரமம் என மூன்று பகுதிகளாக்கி ஞானம் செவி கண் கூர்மைஎன மூன்று கூர்மைகளையயும் தன்னகத்தே கொண்டு ப்ரகாசித்த ஆசார்யனே இந்த முக்கூர் அழகிய சிங்கர்.
பாலும்சர்க்கரையும் சேர்ந்தால் எப்படி தித்திக்குமோ அத்தகைய சுவைபடும் அவதாரமான ஸாக்ஷாத் மன்மதனாகிய அழகிய ந்ருஸிம்ஹனை ஆராதிக்க மன்மத வருஷத்தில் உதித்தார் இந்த அழகிய சிங்கர். 
பஞ்சமின்றி படியளந்த ஹஸ்தம்
பயத்தை பஸ்மமாக்கிய ஹஸ்தம்
பரம க்ருபையால் பல்லாயிரவரை ஸ்ரீவைஷ்ணவர்களாக்கித் தனது ஹஸ்தத்தால் மாலோலனின்கராவலம்பத்தில் சேர்த்த ஹஸ்தம். 
அத்திகிரி அருளாளனாகிய வரதனும் ஹஸ்தத்தில் அவதரித்தவர்தானே.
ஆக அழகிய சிங்கர் திரு அவதாரத்தால் மன்மதவருஷம் ஆவணி மாஸம் ஹஸ்த நக்ஷத்ரம் பெருமை பெற்றன என்றால் அது மிகையாகாது!

முக்கூர் இந்த அவனிக்கு அளித்த வரப்ரஸாதமே  "வேதாந்த தேசிக யதீந்த்ர மஹாதேசிகன்" என்ற துரியாஸ்ரம திருநாமம் கொண்ட இந்த அழகிய சிங்கராகிய முக்கோல்முனி. "ராமானுஜ தயாபாத்ரம்" விளைந்த ஆவணி ஹஸ்தம் இவரது ஜன்ம மாஸ நக்ஷத்ரத்துடன் ஒத்த காரணத்தால் ஸ்வாமி தேசிகனின் திருநாமம் ஏற்கும் சிறப்பைப்பெற்றவராகிறார்.
முக்கூர் ஸ்ரீரங்கநாதன் ரங்கநாயகி தம்பதியரின் மூத்த குமாரர் இவர்.
பூர்வாஸ்ரமத்தில் ராஜகோபாலனாக இருந்த அழகிய சிங்கர் ஸ்ரீ முஷ்ணம் வேத பாடசாலையில் வேதாத்யயனம் செய்தார்.
ஸாஸ்த்ர அத்யயனத்தில் அதீத ஈடுபாடு அழகிய சிங்கருக்கு.
தில்லையம்பூர் சக்ரவர்த்தியாச்சார் என்ற மஹா பாண்டித்யம் மிக்க ஸாஸ்த்ர ஞானியிடம்  திருக்குடந்தையில் தர்க்க மீமாம்ஸ வ்யாகரண பௌராணிக விஷயங்களனைத்தையும் கற்றுத்தேர்ந்தார்.
காருக்குறிச்சி அழகிய சிங்கரிடம் பஞ்சஸம்ஸ்காரம் இவருக்கு.
1957ல் நைமிஸாரண்யத்தில்தன் 62ம் வயதில் ஸந்யாஸம் ஏற்றார்.
 
40,41,42,43ஆம் பட்ட அழகியசிங்கரகளிடமும் சக்ரவர்த்தி ஸ்வாமியிடமும் காலக்ஷேபங்கள் செய்த பேறு பெற்ற "பஞ்சாசார்யபரர்" இவர்.
இவரைப்போல பலபேரிடம் பலபேருடன் பலதடவை க்ரந்தங்கள் ஸேவித்தவர்கள் இதுவரை இல்லை எனலாம்.
அசாத்யமான நினைவாற்றல் கொண்ட வர் ."புல்மேயும் ஸமயத்தில் அசை போடக்கூடாது" என்பதை வலியுறுத்தும் வகையில்ப்ரம்ஹ சூத்ரங்களை சந்தை சொல்லி மனத்துள் இருத்திக்கொண்டவர்.
வியக்கவைக்கும் பாணடித்யமும் பரீக்ஷிக்கும் பாங்கும் கொண்டவர்.

திருக்குடந்தை ஆண்டவனிடம் அருளிச்செயல்களில் தேர்ச்சி பெற்ற வித்வான் தசாவதார ஸந்நிதியில் தோற்க வாய்ப்புள்ளது என்று ஆண்டவனே கூறி அனுப்பிய தாக விஷயம்.
"உளன்கண்டாய்" பாசுரம் இரண்டாவதாக எந்த திருவந்தாதியில் வருகிறது என்பது கேள்வி. 2ம் திருவந்தாதி என பதில்வர முதலிலும் மூனறிலும்தான் வருகிறது எனக்கூறி ஆண்டவன் கணிப்பை மெய்ப்பித்தார் அ‌ழகியசிங்கர!

கொடைவள்ளலாக சிறுபிராயம்முதலே இருந்தவர். தனக்கில்லாமல் வழங்கிய வள்ளண்மை. குதிரை வண்டிக்காரனுக்கு சவாரி இல்லை நாள் முழுதும் என்றதும் தன்மடியிலிருந்ததைக் கொடுத்து மகிழ்ந்தவர். அத்யயனம் செய்தவரகளுக்கு அள்ளிக்கொடுக்கும் ஔதார்யமுடையவர். வந்தவர்களுக்கெல்லாம் வயிறார அன்னமிட்டவர்.
அலுமினியப்பாத்திரக்காரன் வெயிலில் சுமந்து திரிந்ததைச் சகியாமல் அவனிடம் இருந்த மொத்த பாத்திரத்தையும் வாங்கி அவனது கஷ்டம் தவிர்த்த அழகிய சிங்கரின் இரக்க ஸ்வபாவத்தை என்னென்பது!

"குறுங்குடித்தாத்தா"--என்ற அருளிச்செயல் அதிகாரியாகவும் மடப்பள்ளி நிர்வாகியாயும் இருந்த சமயத்தில் 41ம் பட்ட அழகிய சிங்கர் திருநக்ஷத்ர வைபவத்தில் 1000பேருக்கு மேல் ததீயாராதனை .
கறியமுது திருத்த ஆள்பற்றாக்குறை 150 தோல் சீவிய வாழைக்காய்களை வடிசாக்கில் சுற்றி உருட்டுத்தடியாலடித்து ஒரே சீராக 15 நிமிஷத்தில் தயாரிக்கிக் கொடுத்த ஸமயோஜித்தை எங்ஙனம் பாராட்டுவது!!!

அழகிய சிங்கர் செய்துள்ள கைங்கர்யங்கள் அளப்பறியன.
அரங்கன் ஸ்வப்பனத்தில் அளித்த கட்டளையை சிரமேற்கொண்டு  பூமிபூஜை செய்தது முதல் கோபுர ஸம்ப்ரோக்ஷணம் வரை அவர் எதிர்கொண்ட ப்ரச்சனைகள் சவால்கள் எண்ணிலும் சொல்லிலும் அடங்கா!!
மன்னர்களால் முடிக்க இயலாத இச்சாதனையை வேதாந்த தேசிகயதீந்தர மஹாதேசிகன் எனும் முனியினால் முடிக்கச் செய்தான் அந்த அரங்கன்!
13 தளங்கள் கொண்ட உயர்ந்த ராஜ கோபுர அமைப்பு வேலைகளனைத்தையும் அந்த தள்ளாத வயதில் தளராமல் தவறாது மேற்பார்வைசெய்து செவ்வனே பூர்த்தி செய்த திட சித்தத்தை எப்படிப் பாராட்ட!

இத்தனை அரிய சாதனை புரிந்த மஹான், "எல்லாரும் நிறைய தனம் கொடுத்தார்கள்  நான் என்ன ப்ரயாசை பட்டேன்"--என்றாராம். என்னே தன்னடக்கம்!!

ஆதனூர் கோபுரம் அஹோபில கோபுரம் நிர்மாணித்தவரும் இவரே.
திரு எவ்வுள்ளூர் புஷ்கரணியை புனர்நிர்மாணம் செய்து ஜல ஸம்ருத்தி ஏற்படுத்தினார்.
திருவஹீந்த்ரத்தில் மடம், மேலும் பல இடங்களில் மட நிர்மாணம், வாகனங்கள்,  திருவாபரணங்கள் ஸமர்ப்பித்தல் போன்ற எண்ணற்ற கைங்கர்யங்ளைப் பட்டியலிடலாம்.
"கோதை கட்டிய கோபுரம்"-என்ற நாட்டிய நாடகத்தை  உகந்து கடாக்ஷித்து கலப்படமில்லாத கைங்கர்யம் என்று வாயார வாழ்த்தியது ஸ்வாமியின் கலை ஈடுபாட்டைக் காட்டுகிறது. நலிந்துவந்த தெருக்கூத்துக் கலைஞர்களையும் அழகிய சிங்கர் வெகுமானமளித்து உற்சாகப்படுத்தியாயிற்று.

அழகியசிங்கரின் பாண்டித்யமும் வேதாந்த சர்ச்சையில் ஈடுபாடும் நம் அனுமானத்துக்கு அப்பாற்பட்டது. வேதிக் கணிதத்திலும் சதுரங்க ஆட்டத்திலும் வெகு சமர்த்தர்.
ராஜகோபுரக்கட்டமைப்பு கணக்கு வழக்குகளையும் கட்டிட வரைபடங்களையும் அனாயாஸமாய்ச் செய்த மஹான் இவர்.

அழகியசிங்கர் 16க்ரந்தங்கள், 150 வ்யாஸங்கள் ஸாதித்துள்ளார்.
இவற்றிற்குச்சிகரம் வைத்தாற்போல் அமைந்ததுள்ளது ஸ்ரீபாஷ்யம் விஷயமாய் அமைத்த ஸ்லோக க்ரந்தம்.
32 எழுத்து, 8 அடிகள் கொண்ட ஸ்லோகம் அதிகரணத்தின் பெயர்,
அதன்முக்கிய பதம், முன்பின் அதிகரணத் தொடர்பு இத்யாதிகளை
உள்ளடக்கி  "கடுகைத் துளைத்து ஏழ்கடலைப்புகுத்தி குறுகத்தறித்த"
ஸ்லோகம் என்னுமளவுக்கு ப்ரஸித்தி பெற்றது.

இடையறா ந்ருஸிம்ஹ ஆராதனத்தின் தேஜஸ் அவரது திருமுகத்தில் பொலிந்தது .டோலைக் கண்ணனின் கருணை அவரது திரு உள்ளத்தில் நிறைந்திருந்தது. மதம்பிடித்த கோவிந்தன் என்ற யானையைக் காப்பாற்றியது இக்கருணை உள்ளமே!
மனம் வாக்கு செயல் மூன்றிலும் நேர்மையும் உறுதியும் உடையவர்.
ஆகமம் படித்த எந்த வர்கத்தவரும் அர்ச்சகராகலாம் என்ற கோரிக்கயை மறுத்து அதற்குரிய வழித்தோன்றல்களே  அர்ச்சகராக ஏற்புடையவர்கள் என்பதனை அப்போதைய அமைச்சரிடமே பளிச்சென்று உரைத்தவர்.

ஸ்வாமி தேசிகன் அருளிச்செய்த "மஹாவீர வைபவத்தில்" ராமபிரானை விளிக்கும் பதங்கள் அழகிய சிங்கருக்கு மிகப்பொருந்தும்.
"நிஷ்பன்ன க்ருத்யா"--வாக்கைக் காத்தவன்ராமன். தண்டகாரண்யத்தில் ராக்ஷஸாதிகளிடமிருந்து ரிஷிகளைக்காத்தான். விபீஷண சரணாகதியை ஏற்று அவனுக்கு முடிசூட்டினான். அழகியசிங்கரோ அரங்கனுக்களித்த வாக்கையும் ஆக்ஷேபித்தவர்கள் வாக்கையும் காப்பாற்றினார.

"அஸஹாய ஸூரா"--மன்னர்களால் முடிக்க முடியாத சாதனையை இம்மாமுனிவர் முடித்து மக்களாலும் ராஜாங்கத்தாலும் எழுந்த சவால்களை அரங்கன் துணை மட்டுமே கொண்டு சமாளித்தது அஸஹாய ஸூரத்தனம்தானே!!

"வீரா"--திருவஹீந்த்ர புரம் மடம் ஜீரணோத்தாரணம் செய்யயுங்கால் மடத்தின்வாயலில் வெகுகாலமாய் ஆக்ரமித்திருந்த டீ கடைக்காரனிடம் நயமும ந்யாமும் பலிக்காமல்போக யானையைக் கொண்டு இடிக்க வீர முழக்கமிட்டதும் சாதுவாய் நகர்ந்தான் டீ கடைக்காரன்.!!

"அநந்ய ஸாஸனீயா"---உத்தரவுக்குப் பணியாதவர். ராஜ கோபுர ஸம்ப்ரோக்ஷண நாள் மாற்றப்படக்கொணர்ந்த உத்தரவை ஆக்ஷேபித்து மாலோலன் நியமனப்படியே நடத்திக காட்டியவர்.

ஏழை ஏத லன் கீழ்மகன்என்னாது இறங்கித்தன் வாத்ஸல்யத்தையும் ஸௌலப்யத்தையும்  குஹன் ஸூக்ரீவன், ஸபரீ, குசேலன், குப்ஜா  முதலானோரிடம் காட்டிய ராம க்ருஷ்ணாதிகளையொத்தது  நம் அழகிய சிங்கர் ஸ்ரீரங்கம் ஜவளிக்கடை நாச்சிமுத்து, தஸாவதாரஸந்நிதி பாதுகாவலர்கள் ஜயராமன், பச்சையம்மா, படக்கடை அமீர்பாய் ஆகியோரிடம் காட்டிய பரிவும் ஸௌலப்யமும்!

பங்களூரில் நிர்மாணித்த மடத்தின் ஸம்ப்ரோக்ஷணத்தன்று அதில்அன்வஹிக்க வந்திருந்த அவரது பூர்வாஸ்ரம திருக்குமாரர் திடீரென பரமபதிக்க, சற்றும் ஸஞ்சலமற்றவராய் அன்று நடக்க வேண்டிய ஸுப காரியங்களை மேற்கொண்டு நடத்திய அவரது ஸந்யாஸ மனத்திண்மையை விவரிக்கத்தான் இயலுமோ!!

இத்தகைய 44ம் பட்ட அழகியசிங்கராகிய ஆசார்ய ஸார்வபௌமன் 36 ஸம்வத்ஸரங்கள் சாதுர்மாஸ்ய ஸங்கல்பம் அனுஷ்டித்த பெருமை பெற்றவர்.

அவரது திருவடிவாரத்தில் அடியோங்கள் பஞ்சஸம்ஸ்காரம் பெற்றுக்கொண்ட
பாக்யஸாலிகள் என்னும்போது பெருமிதம்கொள்ளும் அதே நேரத்தில் இப்பேர்பட்ட மஹானை  பலமுறை சென்று ஸேவித்து அவரது திவ்ய கடாக்ஷத்துக்குப்பாத்ரமாகாமல் இருந்து விட்டோமே என்ற ஏக்கமும் ஆதங்கமும் மேலோங்கி இருப்பது நிதர்ஸனம். 

"ஸ்ரீரங்கநாத சடகோப யதீந்த்ர த்ருஷ்டம்
லக்ஷ்மீந்ருஸிம்ஹ ஸட‌ஜித் கருணைக பாத்ரம்
ஸ்ரீரங்க வீரரகுராட் ஸடகோப ஹ்ருத்யம்
வேதாந்த தேஸிக யதீந்த்ரமஹம் ப்ரபத்யே"

ஸ்ரீமதே ஸ்ரீவண்சடகோப ஸ்ரீவேதாந்த தேசிக யதீந்த்ர மஹாதேஸிகாய நம:

இந்த ஆசார்ய தனியன்  நம் குறைகளனைத்தையம் அகற்றி நிறைவளிக்க வல்லது.
ஆசார்யன் திருவடிகளே சரணம்🙏🙏
ஸர்வம் ஸ்ரீக்ருஷ்ணார்ப்பணமஸ்து! 🙏🙏

(அழகியசிங்கர் திருநக்ஷத்ரதன்று Global Stotra Paaraayana Kainkaryam (GSPK) மூலம் நிகழ்ந்த நாவல்பாக்கம் ஸ்ரீவாஸுதேவாச்சார் ஸ்வாமி, பழவேரி ஸ்ரீ பாலாஜி ஸ்வாமி, ஸ்ரீ APN ஸ்வாமி, ஆசுரி ஸ்ரீ மாதவாச்சார் ஸ்வாமி ஆகியோரின் உபந்யாசங்களிலிருந்து க்ரஹித்த விஷயங்களின் தொகுப்பு இது.)
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

Friday, August 14, 2020

காரானை இடர் கடிந்த கற்பகமே!


சிறார்களுக்கு நம்முன்னோர்கள் சொல்லும் கதைகளில் முதன்மையானது கஜேந்த்ர மோக்ஷம்.காலையில் கண்விழிக்கும் போது இக்காட்சியை எண்ணி எழுதல் நலம் பயக்கும் என்பது வழக்கு.

குழந்தைகளுக்கான இக்கதையில் நம் அனைவர்க்கும் வேதம் வேதாந்தம் இரண்டையும்  இணைத்து மிகச்சிறந்த சரணாகதி தத்துவத்தை க் காட்டுகின்றான் எம்பெருமான்.

எம்பெருமானுக்கே மூன்று இக்கட்டான சமயங்கள் நேர்ந்தனவாம். அதில் முதலிடம் பெறுவது கஜேந்த்ர ரக்ஷணம்."ஆதிமூலமே" என்றலறிய யானையைக் காக்க அரைகுலைய நிலைகுலைய புள்ளூர்ந்து ஓடி வந்தானே எம்பெருமான்.என்னே அவன் கருணை!! அவன் வந்த வேகத்துக்குப் பல்லாண்டு பாடியுள்ள அருமைதான் என்னே!!

"எங்கே உன் ஹரி??" என்று ஆக்ரோஷித்தான் ஹிரண்யகசிபு.தன் பக்தன் ப்ரஹ்லாதன் வாக்கை மெய்ப்பிக்கச் சட்டென ஓர்அவதாரம்எடுத்து அசேதனமான தூணைத்  தாயாக்கியது இரண்டாவது challenge.

"ஹே க்ருஷ்ணாச்சுத போ க்ருபாஜலநிதே" என்று கைகூப்பிக்கதறிய த்ரௌபதிக்கு அபயகரம்வழியேகூறை சுரந்து ரக்ஷித்தது மூன்றாவது challenge.

இதில் முதலாவதாக அமைந்த கஜேந்த்ர ரக்ஷணத்தை ஆழ்வார்கள் ஒரே வரியிலும் ஒரு பாசுரமாகவும் அனுபவித்ததை நாமும் அனுபவித்து உய்வு பெறுவோமாக!

"பருந்தாட் களிற்றுக்கு அருள்செய்த பரமன் தன்னை"__என்கிறாள் ஆண்டாள் நாச்சியார் திருமொழியில்

"பதக முதலை வாய்ப் பட்ட களிறு
கதறிக் கைகூப்பி என்கண்ணா கண்ணா என்ன
உதவப் புள்ளூர்ந்து அங்கு உறுதுயர் தீர்த்த
அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் "____என்று 
பெரியாழ்வார் தன் மகளின் ஓர்வரியை ப்பாசுரமாக்குகிறார்.

"ஒரு வாரணம் பணி கொண்டவன் பொய்கையில்"---  (4-2-5) என்று திருமாலிருஞ்சோலை அழகனை விளித்து பெரியாழ்வார்

"துப்புடையாரை அடைவதெல்லாம்
சோர்விடத்துத் துணையாவதென்று
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் 
ஆனைக்கு நீ அருள் செய்தமையால்"------என்று(4-10-1) அரங்கனிடம் அடைக்கலம் கொள்கிறார்..

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதியில்
"குட்டத்துக் கோள்முதலை துஞ்ச குறித்தெறிந்த சக்கரத்தான் தாள் முதலே நங்கட்குச் சார்வு"__என்று செய்யும் சரணாகதியை

"விழுங்கிய முதலையின் பிலம்புறை
பேழ்வாய்வெள் எயிறு உர அதன் விடத்துக்கு அணுகி
அழுங்கிய யானையின் அருந்துயர் கெடுத்த
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே"____என்று தொண்டரடிப்பொடியாழ்வார் பாசுரமாக்கியுள்ளார்.


எம்பெருமான் திருக்கரங்களால் 
சக்கரப் பொறி ஒற்றிக்கொண்ட பெரும் பேற்றைப் பெற்ற வரல்லவா திருமங்கை மன்னன்!! அதனால்தானோ என்னவோ கஜேந்த்ர ரக்ஷணத்தை பல பாசுரங்களால் அனுபவித்துள்ளார்.

"தூம்புடைத் திண்கை வன்தாள் களிற்றின் துயர் தீர்த்து"---(2-9-5)
"கைம்மான மதயானை இடர்தீர்த்த கருமுகிலை"(8--9--1).  என்று ஒரு வரியில் கோடிட்டுக் காட்டியதை
"கடிகொள் பூம்பொழில் காமரு பொய்கை----(ஸம்ஸாரமாகிய பெரும் குளத்தில்)
வைகு தாமரை வாங்கிய வேழம்------ (ஜீவனாகிய யானையை)
முடியும் வண்ணம் முழுவலி முதலை பற்ற_____(காம க்ரோத லோப மோக மதமாதஸரர்யங்களாகிய முதலை பற்ற)
மற்றது நின்சரண் நினைக்க,___(யானை  எம்பெருமானை க்கதறி அழைக்க)
கொடிய வாய் விலங்கு இன்னுயிர் மலங்க______ (முதலையன் உயிரை மாய்க்கும் வண்ணம்)
கொண்ட சீற்றம் ஒன்று உண்டுளதென அறிந்து உன்
அடியனேனும் வந்து அடிஇணை அடைந்தேன் அணிபொழில் திருவரங்கத்தம்மானே"________ (ஓடிவந்து யானையைக் காத்தாயே!
உன்னை நானும் சரணடைகின்றேன்) என விரிவான பாசுரமாக்கியள்ளார்(5-8-3)

நாங்கூர் திருப்பதியில் ஒன்றாகிய
மணிமாடக்கோயில் பாசுரத்தில் 
"முதலைத் தனிமா முரண் தீர அன்று
முதுநீர்தடத்துச் செங்கண் வேழம்உய்ய
விதலைத்தலைச் சென்று அதற்கே உதவி
வினை தீர்த்த  அம்மானிடம்"______. சென்று வணங்கும்படி தன் மனத்தைப் பணிக்கிறார் கலியன்.

நாயகி பாவத்தில் மடலூர்ந்த அருள்மாரி பரகாலன் எம்பெருமானின் சாமர்த்தியங்களைப் பட்டியலிடும்போது 
"போரானைப் பொய்கைவாய்க் கோட்பட்டு நின்றலறி
நீரார் நெடுங்கமலம்கொண்டோர் நெடுங்கையால்
நாராயணா ஓ மணிவண்ணா நாகணையாய் வாராய்
என் ஆரிடரை நீக்காய் என வெகுண்டு
தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறாக ஈரா அதனை இடர் கடிந்தான் எம்பெருமான்"______என்று கஜேந்த்ர ரக்ஷணத்தை  மேற்கோளிட்டு சிறப்பிக்கிறார்.

ஸ்ரீவைகுண்டத்திலிருந்து யானைபூட்டிய தேரில் திருக்குடந்தையில் வந்திடம் கொண்ட ஆரா அமுதனுக்கு திருத்தேர் வடிவிலேயே வடிவமைத்த
பாசுரம்திரு எழு கூற்றிருக்கை.
ஒன்று முதல் ஏழு வரையலான எண்களால் உரிய சொற்களை அடுக்கி எம்பெருமானின் திரு அவதாரச் சிறப்புக்களை உள்ளடக்கி 
பரகாலன் வரைந்த பாசுரத்தேர் இது.
இச்சித்திரத் தேரினில் 
"நால் திசை நடுங்க அஞ்சிறைப் பறவை ஏறி
நால்வாய மும்மதத்து இருசெவி
ஒரு தனி வேழத்து அரந்தையை
ஒரு நாள் இருநீர் மடுவுள் தீர்த்தனை"
____என்று கஜேந்த்ர ரக்ஷணம் வெளிப்படுகிறது.

வேங்கட க்ருஷ்ணனாக வும் அரங்கனாகவும் ஆளரியாகவும் திரு அல்லிக்கேணியில் எழுந்தருளியுள்ள எம்பெருமான் கருடாரூடனாக பறந்து வரும் கஜேந்த்ர வரதனை
"மீனமர் பொய்கை நாள்மலர் கொய்வான்
வேட்கையினோடு சென்றிழிந்த
கானமர் வேழம் கைஎடுத்து அலற
கரா அதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப்புள்ளூர்ந்து
சென்று நின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாடமாமயிலைத்
திருவல்லிக் கேணிக் கண்டேனே"____
என்று படம்பிடித்துக் காட்டுகின்றார் மானவேல் கலியன்.

அருமறைகளை அந்தாதியாகச் செய்து அவனியோர் உய்வடைய அருளிய திகழ் வகுளத்தாரான் நம்மாழ்வார்.
"கைம்மா துன்பம் கடிந்த பிரானே" (2-9-1) என்று எம்பெருமானை அழைத்து நின்தாள் யான் எய்த ஞானக்கைதா காலக்கழிவு செய்யேலே என்கிறார்.
"மொய்மாம் பூம்பொழில் பொய்கை
முதலைச் சிறைப் பட்டு நின்ற
கைம்மாவுக்கருள் செய்த
கார்முகில்போல் வண்ணன் கண்ணன்"_____(3-5-1)எனப்போற்றிப் பாடிப் பணிவோம் வாரீர் என்றழைக்கிறார் இன்பமாரி சடகோபன்.

பரம க்ருபாளுவாகிய  பரம்பொருளின் ரக்ஷண லக்ஷணத்தை ஆழ்வார்கள் வித விதமாக அரங்கேற்றியுள்ளதனை மனத்தால் நினைத்து வாயால் பாடி மகிழ்வோமாக!!!!
🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 🙏🙏