சிறார்களுக்கு நம்முன்னோர்கள் சொல்லும் கதைகளில்
முதன்மையானது கஜேந்த்ர மோக்ஷம்.காலையில் கண்விழிக்கும் போது இக்காட்சியை
எண்ணி எழுதல் நலம் பயக்கும் என்பது வழக்கு.
குழந்தைகளுக்கான இக்கதையில் நம் அனைவர்க்கும் வேதம் வேதாந்தம் இரண்டையும் இணைத்து மிகச்சிறந்த சரணாகதி தத்துவத்தை க் காட்டுகின்றான் எம்பெருமான்.
எம்பெருமானுக்கே
மூன்று இக்கட்டான சமயங்கள் நேர்ந்தனவாம். அதில் முதலிடம் பெறுவது கஜேந்த்ர
ரக்ஷணம்."ஆதிமூலமே" என்றலறிய யானையைக் காக்க அரைகுலைய நிலைகுலைய
புள்ளூர்ந்து ஓடி வந்தானே எம்பெருமான்.என்னே அவன் கருணை!! அவன் வந்த
வேகத்துக்குப் பல்லாண்டு பாடியுள்ள அருமைதான் என்னே!!
"எங்கே
உன் ஹரி??" என்று ஆக்ரோஷித்தான் ஹிரண்யகசிபு.தன் பக்தன் ப்ரஹ்லாதன் வாக்கை
மெய்ப்பிக்கச் சட்டென ஓர்அவதாரம்எடுத்து அசேதனமான தூணைத் தாயாக்கியது
இரண்டாவது challenge.
"ஹே க்ருஷ்ணாச்சுத போ க்ருபாஜலநிதே" என்று கைகூப்பிக்கதறிய த்ரௌபதிக்கு அபயகரம்வழியேகூறை சுரந்து ரக்ஷித்தது மூன்றாவது challenge.
இதில் முதலாவதாக அமைந்த கஜேந்த்ர ரக்ஷணத்தை ஆழ்வார்கள் ஒரே வரியிலும் ஒரு
பாசுரமாகவும் அனுபவித்ததை நாமும் அனுபவித்து உய்வு பெறுவோமாக!
"பருந்தாட் களிற்றுக்கு அருள்செய்த பரமன் தன்னை"__என்கிறாள் ஆண்டாள் நாச்சியார் திருமொழியில்
"பதக முதலை வாய்ப் பட்ட களிறு
கதறிக் கைகூப்பி என்கண்ணா கண்ணா என்ன
உதவப் புள்ளூர்ந்து அங்கு உறுதுயர் தீர்த்த
அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் "____என்று
பெரியாழ்வார் தன் மகளின் ஓர்வரியை ப்பாசுரமாக்குகிறார்.
"ஒரு வாரணம் பணி கொண்டவன் பொய்கையில்"--- (4-2-5) என்று திருமாலிருஞ்சோலை அழகனை விளித்து பெரியாழ்வார்
"துப்புடையாரை அடைவதெல்லாம்
சோர்விடத்துத் துணையாவதென்று
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன்
ஆனைக்கு நீ அருள் செய்தமையால்"------என்று(4-10- 1) அரங்கனிடம் அடைக்கலம் கொள்கிறார்..
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதியில்
"குட்டத்துக் கோள்முதலை துஞ்ச குறித்தெறிந்த சக்கரத்தான் தாள் முதலே நங்கட்குச் சார்வு"__என்று செய்யும் சரணாகதியை
"விழுங்கிய முதலையின் பிலம்புறை
பேழ்வாய்வெள் எயிறு உர அதன் விடத்துக்கு அணுகி
அழுங்கிய யானையின் அருந்துயர் கெடுத்த
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே"____என்று தொண்டரடிப்பொடியாழ்வார் பாசுரமாக்கியுள்ளார்.
எம்பெருமான் திருக்கரங்களால்
சக்கரப்
பொறி ஒற்றிக்கொண்ட பெரும் பேற்றைப் பெற்ற வரல்லவா திருமங்கை
மன்னன்!! அதனால்தானோ என்னவோ கஜேந்த்ர ரக்ஷணத்தை பல பாசுரங்களால்
அனுபவித்துள்ளார்.
"தூம்புடைத் திண்கை வன்தாள் களிற்றின் துயர் தீர்த்து"---(2-9-5)
"கைம்மான மதயானை இடர்தீர்த்த கருமுகிலை"(8--9--1). என்று ஒரு வரியில் கோடிட்டுக் காட்டியதை
"கடிகொள் பூம்பொழில் காமரு பொய்கை----(ஸம்ஸாரமாகிய பெரும் குளத்தில்)
வைகு தாமரை வாங்கிய வேழம்------ (ஜீவனாகிய யானையை)
முடியும் வண்ணம் முழுவலி முதலை பற்ற_____(காம க்ரோத லோப மோக மதமாதஸரர்யங்களாகிய முதலை பற்ற)
மற்றது நின்சரண் நினைக்க,___(யானை எம்பெருமானை க்கதறி அழைக்க)
கொடிய வாய் விலங்கு இன்னுயிர் மலங்க______ (முதலையன் உயிரை மாய்க்கும் வண்ணம்)
கொண்ட சீற்றம் ஒன்று உண்டுளதென அறிந்து உன்
அடியனேனும் வந்து அடிஇணை அடைந்தேன் அணிபொழில் திருவரங்கத்தம்மானே"________ (ஓடிவந்து யானையைக் காத்தாயே!
உன்னை நானும் சரணடைகின்றேன்) என விரிவான பாசுரமாக்கியள்ளார்(5-8-3)
நாங்கூர் திருப்பதியில் ஒன்றாகிய
மணிமாடக்கோயில் பாசுரத்தில்
"முதலைத் தனிமா முரண் தீர அன்று
முதுநீர்தடத்துச் செங்கண் வேழம்உய்ய
விதலைத்தலைச் சென்று அதற்கே உதவி
வினை தீர்த்த அம்மானிடம்"______. சென்று வணங்கும்படி தன் மனத்தைப் பணிக்கிறார் கலியன்.
நாயகி பாவத்தில் மடலூர்ந்த அருள்மாரி பரகாலன் எம்பெருமானின் சாமர்த்தியங்களைப் பட்டியலிடும்போது
"போரானைப் பொய்கைவாய்க் கோட்பட்டு நின்றலறி
நீரார் நெடுங்கமலம்கொண்டோர் நெடுங்கையால்
நாராயணா ஓ மணிவண்ணா நாகணையாய் வாராய்
என் ஆரிடரை நீக்காய் என வெகுண்டு
தீராத
சீற்றத்தால் சென்று இரண்டு கூறாக ஈரா அதனை இடர் கடிந்தான்
எம்பெருமான்"______என்று கஜேந்த்ர ரக்ஷணத்தை மேற்கோளிட்டு
சிறப்பிக்கிறார்.
ஸ்ரீவைகுண்டத்திலிருந்து யானைபூட்டிய தேரில் திருக்குடந்தையில் வந்திடம் கொண்ட ஆரா அமுதனுக்கு திருத்தேர் வடிவிலேயே வடிவமைத்த
பாசுரம்திரு எழு கூற்றிருக்கை.
ஒன்று முதல் ஏழு வரையலான எண்களால் உரிய சொற்களை அடுக்கி எம்பெருமானின் திரு அவதாரச் சிறப்புக்களை உள்ளடக்கி
பரகாலன் வரைந்த பாசுரத்தேர் இது.
இச்சித்திரத் தேரினில்
"நால் திசை நடுங்க அஞ்சிறைப் பறவை ஏறி
நால்வாய மும்மதத்து இருசெவி
ஒரு தனி வேழத்து அரந்தையை
ஒரு நாள் இருநீர் மடுவுள் தீர்த்தனை"
____என்று கஜேந்த்ர ரக்ஷணம் வெளிப்படுகிறது.
வேங்கட
க்ருஷ்ணனாக வும் அரங்கனாகவும் ஆளரியாகவும் திரு அல்லிக்கேணியில்
எழுந்தருளியுள்ள எம்பெருமான் கருடாரூடனாக பறந்து வரும் கஜேந்த்ர வரதனை
"மீனமர் பொய்கை நாள்மலர் கொய்வான்
வேட்கையினோடு சென்றிழிந்த
கானமர் வேழம் கைஎடுத்து அலற
கரா அதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப்புள்ளூர்ந்து
சென்று நின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாடமாமயிலைத்
திருவல்லிக் கேணிக் கண்டேனே"____
என்று படம்பிடித்துக் காட்டுகின்றார் மானவேல் கலியன்.
அருமறைகளை அந்தாதியாகச் செய்து அவனியோர் உய்வடைய அருளிய திகழ் வகுளத்தாரான் நம்மாழ்வார்.
"கைம்மா துன்பம் கடிந்த பிரானே" (2-9-1) என்று எம்பெருமானை அழைத்து நின்தாள் யான் எய்த ஞானக்கைதா காலக்கழிவு செய்யேலே என்கிறார்.
"மொய்மாம் பூம்பொழில் பொய்கை
முதலைச் சிறைப் பட்டு நின்ற
கைம்மாவுக்கருள் செய்த
கார்முகில்போல் வண்ணன் கண்ணன்"_____(3-5-1)எனப்போற்றி ப் பாடிப் பணிவோம் வாரீர் என்றழைக்கிறார் இன்பமாரி சடகோபன்.
பரம க்ருபாளுவாகிய பரம்பொருளின் ரக்ஷண லக்ஷணத்தை ஆழ்வார்கள் வித விதமாக அரங்கேற்றியுள்ளதனை மனத்தால் நினைத்து வாயால் பாடி மகிழ்வோமாக!!!!
🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 🙏🙏
🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 🙏🙏
bhUtam sarasca mahadAhvaya bhattanAtha shrIbhaktisAra kulashekhara yogivAhAn |
ReplyDeletebhaktAngrireNu parakAla yatIndramishrAn shrImatparAngushamunim praNatosmi nityam ||
bhUtam sarasca mahadAhvaya bhattanAtha shrIbhaktisAra kulashekhara yogivAhAn |
ReplyDeletebhaktAngrireNu parakAla yatIndramishrAn shrImatparAngushamunim praNatosmi nityam ||