ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தை எம்பெருமானார் காட்டிய வழியிலே சற்றும் மாறாமல் காப்பாற்றித் தந்த வள்ளல் ஸ்வாமி தேஶிகன்.
இவரது அருமை பெருமைகளை அனைவரும் அறிந்து போற்றி உகக்கும் வகையில் ஓர் சிறந்த வாழி திருநாமம் ஸாதித்தள்ளார் அவரது ப்ரதம ஸிஷ்யர் ப்ரம்ஹ தந்த்ர ஸ்வதந்த்ரர்.
"வஞ்சப் பரசமயம் மாற்ற வந்தோன் வாழியே!
மன்னு புகழ் பூதூரான் மனமுகப்போன் வாழியே!
கஞ்சத் திருமங்கை உகக்க வந்தோன் வாழியே!
கலியனுரை குடிகொண்ட கருத்துடையோன் வாழியே!
செஞ்சொல் தமிழ் மறைகள் தெளிந்துரைப்போன் வாழியே!
திருமலைமால் திருமணியாய் சிறக்க வந்தோன் வாழியே!
தஞ்சப்பர கதியைத் தந்தளிப்போன் வாழியே!
செந்தமிழ் தூப்புல் திருவேங்கடவன் வாழியே!"
சுருக்கமாக இத்திரு நாமங்களுள் பொதிக்கப்பட்டுள்ள அர்த்த விஸேஷங்களை ஆராய்ந்து அனுபவிப்வோம்.
- வஞ்சப் பரஸமயம் மாற்ற வந்தோன் வாழியே!!
5 வயது பாலனாய் நடாதூர் அம்மாளின் க்ருபைக்குப் பாத்ரமானவர் ஸ்வாமி தேஶிகன் தன்
மாதுலர் கிடாம்பி அப்புள்ளாரிடம் அனைத்து ஸாஸ்த்ரங்களையும் தம்
21 வயதுக்குள் கற்றுத்தேர்ந்தார் அப்போதிருந்து துவங்கியது அவரது ஸம்ப்ரதாய
ஸம்ரக்ஷண கைங்கர்யம்.
வஞ்சம் செய்து மக்கள் மனதை திசை திருப்ப முயன்ற
பௌத்தம் ஜைனம் ஸார்வாகம் போன்ற பல மதங்கள் உலா வந்த காலம் அது.
அனுஷ்டானங்கள் நிறைந்த வைதீக மதத்தை விடுத்துத் தங்கள் மதத்துக்கு மாற
அறைகூவினர்.
"பொங்கு போதியும் பிண்டியுமுடைப்புத்தர் நோன்பியர் பள்ளியுள்ளுறை"-(2--1--5)
"துவரி ஆடையர் மட்டையர் கமண் தொண்டர்கள் மண்டியுண்ட பின்னரும்"-(2-1-6)
"தருக்கினால் சமண் செய்து சோறுதண்தயிரினால் திரளை மிடற்றிடை நெருக்குவார் (2-1-7)
மேற்கூறிய கலியன் பாசுரங்கள் பிற மதங்கள் வேதமதத்துக்குத் தந்த தாக்கத்தைக் காட்டுகின்றன.
வேத மதத்தை அழிக்க வந்தவர்களை வாழையை அழிக்கும் வாரணம் போல மாய்த்துக்காத்த ராமானுசமுனியின் இன்னுரையினால்தெளிந்த சிந்தைக்கு இனித்தீங்கில்லை என்கிறார்.
ஸ்வாமி அதிகார ஸங்க்ரஹத்தில் இத்தகைய வஞ்சப்பர சமயத்தவர்களை பரமதபங்கம், ஶததூஷணீ என்ற க்ரந்தங்கள் மூலம் வாதிட்டு மாற்றினார்.
நம்மாழ்வார், நாதமுனிகள், ஆளவந்தார், எம்பெருமானார், பிள்ளான், எங்களாழ்வான் வழியாக வந்த ஸம்ப்ரதாயத்தை நமக்கு பரமத தாக்கத்திலிருந்து மீட்டுத் தந்தவர் ஸ்வாமி தேஶிகன்.