Thursday, October 15, 2020

திருமணியாழ்வானுக்கு வாழி திருநாமம்!!

Swami Vedanta Desika #750thBirthday #JanmaNakshatra | 

ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தை எம்பெருமானார் காட்டிய வழியிலே சற்றும் மாறாமல் காப்பாற்றித் தந்த வள்ளல் ஸ்வாமி தேஶிகன்.

இவரது அருமை பெருமைகளை அனைவரும் அறிந்து போற்றி உகக்கும் வகையில் ஓர் சிறந்த  வாழி திருநாமம் ஸாதித்தள்ளார் அவரது ப்ரதம ஸிஷ்யர் ப்ரம்ஹ தந்த்ர ஸ்வதந்த்ரர்.

"வஞ்சப் பரசமயம் மாற்ற வந்தோன் வாழியே!
மன்னு புகழ் பூதூரான் மனமுகப்போன் வாழியே!
கஞ்சத் திருமங்கை உகக்க வந்தோன் வாழியே!
கலியனுரை குடிகொண்ட கருத்துடையோன் வாழியே!
செஞ்சொல் தமிழ் மறைகள் தெளிந்துரைப்போன் வாழியே!
திருமலைமால் திருமணியாய் சிறக்க வந்தோன் வாழியே!
தஞ்சப்பர கதியைத் தந்தளிப்போன் வாழியே!
செந்தமிழ் தூப்புல் திருவேங்கடவன் வாழியே!"


சுருக்கமாக இத்திரு நாமங்களுள் பொதிக்கப்பட்டுள்ள அர்த்த விஸேஷங்களை ஆராய்ந்து அனுபவிப்வோம்.

  • வஞ்சப் பரஸமயம் மாற்ற வந்தோன் வாழியே!!

5 வயது பாலனாய் நடாதூர் அம்மாளின் க்ருபைக்குப் பாத்ரமானவர் ஸ்வாமி தேஶிகன் தன் மாதுலர் கிடாம்பி அப்புள்ளாரிடம் அனைத்து ஸாஸ்த்ரங்களையும் தம் 21 வயதுக்குள் கற்றுத்தேர்ந்தார் அப்போதிருந்து துவங்கியது அவரது ஸம்ப்ரதாய  ஸம்ரக்ஷண கைங்கர்யம்.
வஞ்சம் செய்து மக்கள் மனதை திசை திருப்ப முயன்ற பௌத்தம் ஜைனம் ஸார்வாகம் போன்ற பல மதங்கள் உலா வந்த காலம் அது. அனுஷ்டானங்கள் நிறைந்த வைதீக மதத்தை விடுத்துத் தங்கள் மதத்துக்கு மாற அறைகூவினர்.
"பொங்கு போதியும் பிண்டியுமுடைப்புத்தர் நோன்பியர் பள்ளியுள்ளுறை"-(2--1--5)
"துவரி ஆடையர் மட்டையர் கமண் தொண்டர்கள் மண்டியுண்ட பின்னரும்"-(2-1-6)
"தருக்கினால் சமண் செய்து சோறுதண்தயிரினால் திரளை மிடற்றிடை நெருக்குவார் (2-1-7)

மேற்கூறிய கலியன் பாசுரங்கள் பிற மதங்கள் வேதமதத்துக்குத் தந்த தாக்கத்தைக் காட்டுகின்றன.
வேத மதத்தை அழிக்க வந்தவர்களை வாழையை அழிக்கும் வாரணம் போல மாய்த்துக்காத்த ராமானுசமுனியின் இன்னுரையினால்தெளிந்த சிந்தைக்கு இனித்தீங்கில்லை என்கிறார்.
ஸ்வாமி அதிகார ஸங்க்ரஹத்தில் இத்தகைய வஞ்சப்பர சமயத்தவர்களை  பரமதபங்கம், ஶததூஷணீ என்ற க்ரந்தங்கள் மூலம் வாதிட்டு மாற்றினார்.
நம்மாழ்வார், நாதமுனிகள், ஆளவந்தார், எம்பெருமானார், பிள்ளான், எங்களாழ்வான் வழியாக வந்த ஸம்ப்ரதாயத்தை நமக்கு பரமத தாக்கத்திலிருந்து மீட்டுத் தந்தவர் ஸ்வாமி தேஶிகன்.

 

 

  • மன்னு புகழ் பூதுரான் மனமுகப்போன்வாழியே!

நிலைத்த புகழ்கொண்ட பாஷ்ய காரரின் மனதுக்குகந்தவரானார் ஸ்வாமி தேஶிகன். வேதத்தில் ஏற்பட்ட சிக்கல்களை அகற்றி அவற்றை நிலை நிறுத்திய யதிராசரே பிற்காலத்தில் க்ருஹஸ்தராய் அவதரித்துள்ளார்.
எங்கும் பரவிய கடல் போன்ற புகழ்நிறைந்த எதிராசரை யதிரா‌ஜ ஸப்ததி ஸ்தோத்ரத்தால் பாடிப்பரவி  அவர் திருவுள்ளம் உகக்கச்செய்தார்.
எம்பெருமானாரின் திவ்ய ஸுக்திகளனைத்திற்கும் வ்யாக்யானம் அருளியுள்ளார்.

 

  • கஞ்சத் திருமங்கை உகக்க வந்தோன் வாழியே!

தாமரையில் உறையும் பிராட்டியின் மனமுகந்தவர் ஸ்வாமி தேஶிகன்.
எம்பெருமானும் பிராட்டியும் ஸ்வாமிக்கு மனமுவந்து அளித்த பிருதங்கள் "வேதாந்தாசார்யன்", "ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரன்" என்பன. பாகவதர்கள் அளித்தது "கவிதார்கிக ஸிம்ஹம்" என்பது. இந்த பிருதங்கள் அளிக்கப்பட்டதற்கான அகச்சான்றும் புறச்சான்றும் காட்டப்பட்டுள்ளன  ஸங்கல்ப ஸுர்யோதயம் போன்ற க்ரந்தங்களிலும் அப்பைய்ய தீக்ஷிதர் குறிப்புகளிலும்.
ஜகத்காரணத்துக்கு பெருமானோடு  பிராட்டியும் காரணமாகிறாள் என்பதை பலவாரான நிரூபணங்கள் மூலம் ஸ்தாபிக்கிறார் ஸ்வாமி. ஸ்ரீஸுக்தம், ப்ரும்ஹ சூத்ரம் தனி ஶ்லோகங்கள், பாஞ்சராத்ர ஆகமங்கள், இதிகாஸ புராணங்கள், ஆழ்வார்களின் ஸ்ரீஸுக்திகள் சதுஶ்லோகி வ்யாக்யானம், ஸ்ரீபாஷ்யத்தின் சில அதிகரணங்கள் ஆகியவற்றின் சாரமே  "ஸ்ரீஸ்துதி"

மேலே குறிப்பிட்ட க்ரந்தங்கள் மூலம் பிராட்டிக்கும் பெருமானை ஒத்த ஸாம்யம் (தத்வம் ஹிதம் புருஷார்த்தம்) உள்ளதையும் அவளது ஈஶ்வரத்வத்தையும்  நிலை நாட்டிள்ளார். ஸ்ரீஸ்துதியின் ஏழாம் ஶ்லோகத்தில் ஸ்வாமி தேஶிகன் இதனை அத்புதமாய்க் காட்டியுள்ளார்.
"பஶ்யந்தீஷு ஶ்ருதீஷு பரித: ஸுரிப்ருந்தேன ஸார்த்தம்
மத்யே க்ருத்ய த்ரிகுண பலகம் நிர்மித ஸ்தான பேதம்
விஶ்வாதீஶ ப்ரணயிநி ஸதா விப்ரம த்யூத வ்ருத்தௌ
ப்ரஹ்மேஶாத்யா தததியுவயோ: அக்ஷஶார ப்ரசாரம்"

பெருந்தேவி பிராட்டியும் வரதனும் ஆடும் லீலா கைவல்ய விளையாட்டு பற்றிய விளக்கம் இதில் தரப்படுகிறது.
உலகங்களாகிய பலகையில் ஸத்வம், ரஜஸ்,  தமஸ் என்ற நிறங்களாலான லோகங்களான கட்டங்களில் தேவதைகளான காய்களை நகர்த்தி விளையாடும் சொக்கட்டான் ஆட்டத்தை ப்பார்த்து ஸந்தோஷிப்பவர்கள் வேதங்களும் நித்யஸுரிகளும் என்பதே. 

இத்தனை ப்ரபாவங்களை நிலை நிறுத்திய தாமரையாள் மனம் உகப்போன் வாழியே!


 

  • கலியன் உரை குடிகொண்ட கருத்துடையோன் வாழியே!!

ஸ்வாமி தேஶிகன் திருவுள்ளத்தில் கலியனின் சொல்லும், கருத்தும் எப்போதும்
வாஸம் செய்யும். ஸ்வாமியின் ரஹஸ்யத்ரஸாரத்தில் கலியனின் ஸ்ரீஸுக்திகளை  பல இடங்களில் மேற்கோள்களாகக் காட்டியுள்ளார். ஸ்வாமியின் ஸ்தோத்ர பாடங்களிலும் கலியனின் தாக்கம் அதிகம்.
திருவஹீந்த்ரபுர ப்பெருமான் தேவநாதனை "அடியவர்க்கு மெய்யனே" என்று திருமங்கையாழ்வார் விளிப்பதை 'தேவநாயக பஞ்சாஶத்தில்' "தாஸேஷு  ஸத்ய இதி தாரய நாம தேயம்" (ஸ்லோகம் 6 ) என்று குறிப்பிடுகிறார்.
"வல்லாளரக்கர் குலப்பாவை வாட முனிதன் வேள்வியை
கல்விச்சிலையால் காத்தானூர் கண்ணபுரம் தொழுமினே- "(8-6-3) 

பால்ய வில்பயிற்சியில் உபயோகித்த வில்லால் 1000 யானைகளின் பலம் கொண்ட தாடகையை விஶ்வாமித்ரரின் யாகரக்ஷணம் பொருட்டு வீழ்த்திய ராமபிரான் என்ற பொருள்கொண்ட  கலியன் உரையை "கௌமார கேளி கோபாயித கௌஶிகாத்வரா" என்ற ரகுவீரகத்ய வரிகளில் காணமுடிகிறது.

"வ்ரீடாவித்த வதான்ய தானவயஶோ நாஸீர தாடீபட:
த்ரையக்ஷம் மகுடம்  புனன்னவதுன: த்ரைவிக்ரமோ விக்ரம:
யத்ப்ரஸ்தாவ ஸமுச்ருத த்வஜபடீ வ்ருத்தாந்த ஸித்தாந்திபி:
ஸரோதோபிஸ்ஸுரஸிந்து: அஷ்டஸுதிஶா ஸௌதேஷூ தோதூயதே"
(தஶாவதார ஸ்தோத்ரம் 6)
 

வாமனன் யாசித்த மூவடிமண்ணால் வெள்கிய மஹாபலியின் வதான்ய புகழ் மூவுலகங்களுக்கும் செல்ல திரிவிக்ரமன் திருவடி அதற்கு கட்டியம் சொல்லும் ஸேவகன் போல் முன்னே சென்றதாம் அங்கே மேருவின் உச்சியில் தோன்றிய தேவகங்கை விக்ரமன் திருவடியில்பட்டு வீழ அந்நீர் முக்கண்ணன் சிரத்தைத் தூய்மை படுத்தி மேருவைச்சுற்றியுள்ள எட்டு மாடங்களில் வீழ்ந்து பெருகுவது  ஆகாயத்திலிருந்து தொங்கும் வெண்துகிற் கொடிபோன்றுள்ளது - என்பது ஶ்லோகத்தின் அர்த்தம்.
"விலங்கலில் உறிஞ்சி மேல்நின்ற விசும்பில் வெண்துகில் கொடியென விரிந்து வலம் தருமணிநீர்க் கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே"
என்ற கலியனின் பாசுரச் சொற் பொருளை ஸ்வாமி மேற்காட்டிய ஶ்லோகத்தில் கையாண்டுள்ளார்.
ஆக மங்கை, மங்கையர்கோன்  இருவரின் உகப்புக்கும் பாத்ரமாகிறார் ஸ்வாமி தேஶிகன்.


 

  • செஞ்சொல் தமிழ் மறைகள் தெளிந்துரைப்போன் வாழியே

ஆழ்வார்களின் திவ்யப்ரபந்தங்களை நன்கறிந்து உரைப்பவர்.
மேகங்கள் ஸமுத்ரஜலத்தை வாங்கி சுத்த நீராகத் தருவதுபோல வேதத்திலிருந்து நமக்குத்தேவையான புருஷார்த்தங்களை  எடுத்துத் தருபவர்கள் ஆழ்வார்கள். இதிகாச புராணங்களுக்கு மேம்பட்ட உயர்வு திவ்யப்ரபந்தங்களுக்கு. ஸ்வாமி இப்ரபந்தங்களாகிய கடலை ஞானம் என்ற மத்தைக்கொண்டு ஸம்ப்ரதாயம் என்ற கயிற்றறால் கடைந்தளித்த வ்யாக்யானங்கள் பல.
தாத்பர்ய ரத்னாவளி, த்ரமிடோபநிஷத் ஸாரம், முனிவாஹனபோகம் முதலியன ரத்னம் போல் மதிப்புடையன. இவற்றில் திவ்யப்ரபந்தங்களில் பொதிந்துள்ள அர்த்த விஸேஷங்களைச் சிறிதும் கலக்கமின்றி தெளிந்துரைத்திருக்கும் பாங்கு வியக்கத்தக்கது.
பெரியாழ்வார் பாடிய பல்லாண்டில் வரும் "தொண்டக்குலத்துள்ளீர்
வந்தடி தொழுது ஆயிர நாமம் சொல்லி பணடைக் குலத்தைத் தவிர்ந்து
"-என்பதில் எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடுவதற்கு பாகவதத்வம்தான் முக்யம் என்று ஸ்தாபிக்கிறார்.
திருமழிசை பிரான்கூறும் "நாயினேன் செய்த குற்றம் நற்றமாகவே கொள்
ஞால நாதனே"-
என்பதற்கு அபராதத்தை க்ஷமிக்கவேணும் என்பதே தாத்பர்யம் என்கிறார். 

 

  • திருமலை மால் திருமணியாய் சிறக்க வந்தோன் வாழியே!

ஸ்வாமி தேஶிகன் திருமணியாழ்வானின் அவதாரம் கலியுக தெய்வமாகிய ஸ்ரீநிவாஸன் வேத தர்மத்தைக் காக்கும் பொருட்டு. 12 வருடங்கள் தோதாரம்மாவின் கர்பவாஸத்திலிருந்து வந்த சிறப்பு! மணியின் நாதம் ஒலிக்கும் இடமெல்லாம் ஜெய முழக்கம்தான். மணியின் நா வன்மை கொண்ட நம் தேஶிகன் தம் வாதத் திறத்தால் வாதியர்களை வெற்றி கொண்டார். ஸதா ஸத்விஷயங்களைச் சொல்லுதலே இத்திருமணி அவதரச்சிறப்பு. 
50க்கும் மேற்பட்ட ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபங்கள், க்ரந்த காலக்ஷேபங்கள், ஸ்தோத்ரபாடங்கள் என்று எல்லா வாத்யங்களும் செய்யும் கார்யங்களை இத்திருமணி ஒன்றே ஸாதித்தது. வேதாந்த ஸாஸ்த்ரத்துக்கு ஏற்பட்ட தொய்வை சரிசெய்ய நாவன்மை படைத்த நித்யஸூரியான திருமணியாழ்வானுடன் சேர்ந்து எம்பெருமான் எடுத்த அவதாரமே ஸ்வாமி தேஶிகன். வேத தர்மத்தைக்காக்கும் பொறுப்பு எம்பெருமானுடையது என்ற பாஷ்யகாரின் பரிபூரண நம்பிக்கையின் வெளிப்பாடே ஸ்வாமி தேஶிகன்
"பொன்னை மாமணியை அணியார்ந்ததோர் மின்னை வேங்கடத்துச்சியில் கண்டுபோய் என்னையாளுடை ஈசனை எம்பிரான் தன்னை யாம் சென்று
காண்டும் தண்காவிலே"-(10-1-2)
என்ற இக்கலியன் பாசுரம் வேங்கடத்துச்சியில் நிற்கும் திருமலையப்பனே தண்கா என்ற தூப்புல் திவ்ய தேசத்தில் தேஶிகனாக அவதாரம் செய்துள்ளார் எனக்காட்டுகிறது.


 
  • தஞ்சப் பரகதியைத் தந்தருள்வோன் வாழியே!

ஶரணாகதி என்ற உயர்ந்த உபாயத்தை நமக்குத் தந்தருளியவர் ஸ்வாமி தேஶிகன். இதுவே எல்லா தபஸ்களைவிட மிக ஶ்ரேஷ்டமானது என வேதம் கூறுகிறது. ப்ரஜாபதியிடம் அவரது புத்ரன் உயர்ந்த தர்மம் எது என்று கேட்க ஸத்யம், தபஸ், யக்ஞம், தானம், அக்னிஹோத்ரம் என்று அடுக்கிக்கொண்டேபோய் கடைசியில் மிக உயர்ந்த தர்மம் "ந்யாஸம்" என்கிறார். இதற்கு  "ஒப்படைத்தல்" என்று அர்த்தம். ஆத்மாவை அதற்குச்சொந்தமான எம்பெருமானிடம் ஒப்படைத்தல் தான் ஶரணாகதி. இத்தத்துவத்தை "ந்யாஸ தஶகம்", "ந்யாஸ திலகம்", "ந்யாஸ விம்ஶதி" என்ற ஸ்தோத்ர க்ரந்தங்கள் மூலமும்,"ரஹஸ்யத்ரய ஸாரம்" என்ற மஹா ரஹஸ்ய க்ரந்தம் மூலமும் ப்ரவாஹமாக ஸாதிக்கிறார். 

நம்மாழ்வார், நாதமுனிகள், எம்பெருமானார் காட்டித்தந்த இந்த உயர்ந்த உபாயத்தை நாம் இழக்காமல் காத்தளித்தவர் ஸ்வாமி
தேஶிகன். "நிக்ஷேபரக்ஷா"--என்ற க்ரந்தம் இவ்வுயர்ந்த உபாயத்தைக் காத்தளித்த ஸாதனையைக்காட்டுகிறது. வேதம்  என்ற மலை உச்சியில்  இருந்த ஶரணாகதி என்ற புதையலை பூர்வாசார்யர்கள் காட்டிய பாதையில் சென்று எடுத்து வந்து கீழே நிற்கும் நம்மிடம் பரம கருணையுடன் கொடுத்தருளியவர் ஸ்வாமி தேஶிகன். எம்பெருமான் திருவுள்ளம் உகந்த இவ்வுபாயத்தை ப்ரகாசிக்கச்செய்தவர் ஸ்வாமி தேஶிகன்.


 

  • செந்தமிழ் தூப்புல் திருவேங்கடவன் வாழியே

இதுவரை பட்டியலிடப்பட்ட வாழி திருநாமத்துக்கெல்லாம் உரியவர் தூப்புல் திருவேங்கடநாதனே! தமிழுக்கு செந்தமிழ் என்ற உயர்ந்த ஸ்தானத்தை ஸ்வாமி தேஶிகனே அளித்தார் என்றால் அது மிகை இல்லை. ஆதி மொழியான ஸம்ஸ்க்ருதம் பகவானால் தோற்றறுவிக்கப்பட்டது ஏனெனில் வேதம் தோன்றியது பகவானிடமிருந்து. உலகில் வழங்கும் பலமொழிகளின் மூலம் ஸம்ஸ்க்ருதம்தான். ஆனால் தமிழ் ஸம்ஸ்க்ருதத்திலிருந்து தோன்றியதல்ல. அகத்தியர் தன் தபோ பலத்தால் உண்டாக்கிக்கொடுத்ததே தமிழ் மொழி. பின்னால் ஆழ்வார்கள் தென்நாட்டில் தோன்றி வேதத்தைத் தமிழில் திவ்ய ப்ரபந்தங்களாக அளிக்க முன்னோடியாகியது. ஆசார்ய பரம்பரையில் முதலில் தமிழ் க்ரந்தம் ஸாதித்தவர் ஸ்வாமி தேஶிகனே! அதி ஆஶ்சர்யமாக 32 சில்லரை ரஹஸ்ய க்ரந்தங்களை மணிப்ரவாளத்தில் ஸாதித்துள்ளார். ஸம்ப்ரதாய ரக்ஷணத்திற்காகவே இக்ரந்தங்களைச்செய்தார். ஆழ்வார்களைப்போல 24 தமிழ் ப்ரபந்தங்கள், நாயிகா பாவம், திவ்ய தேச மங்களாசாஸனம் ஆகியன ஸ்வாமியின் தமிழ் சீர்மையை பறைசாற்றுகின்றன. இவர் அனுக்ரஹித்துள்ள "ப்ரபந்த சாரம்" என்ற தேஶிக ப்ரபந்தம் ஒன்றே இவருக்கு "செந்தமிழ் தூப்புல் திருவேங்கடவன் வாழி" என்று பல்லாண்டு பாடப் போதுமானது. ஆழ்வார்களின் பெயர், ஊர், திருநக்ஷத்ரம், பாடிய ப்ரபந்தத்தின் பெயர், அதன்சிறப்பு , எண்ணிக்கை ஆகிய வற்றைச் சுருங்கச் சொல்லி சாரம் நிறைந்த அனுபவத்தைத்தந்துள்ள பாங்கை வர்ணிக்க வார்த்தைகளில்லை.
"சந்தமிகு தமிழ் மறையோன் தூப்புல் தோன்றும் வேதாந்த குரு மொழிந்த
ப்ரபந்தசாரம்
"- என்ற வரிகள் தமிழுக்கு அவரளித்த ஏற்றத்துக்குச்சான்று
ஸம்ப்ரதாயத்துக்கும் திவ்யப்ரபந்தங்களுக்கும் ஏற்பட்ட பேரிடர்களைத் தகர்த்து ஆழ்வார் ஆசார்யர்களின் ஸ்ரீஸுக்திகளைக் காப்பாற்றி ஸாஸனமிட்டு நமக்குத் தந்த வள்ளல் ஸ்வாமி தேஶிகன்.
"நானிலமும் தான்வாழ நான்மறைகள்தாம்வாழ மாநகரின் மாறன் மறை வாழ ஞானியர்கள் சென்னி அணிசேர் தூப்புல் வேதாந்த தேஶிகனே இன்னுமொரு நூற்றாண்டிரும்"
என்று பல்லாண்டு பாடி ஸ்வாமிதேஶிகன் காட்டிய வழி நடப்பதே அவருக்கு நாம் செய்யும் பேருபகாரம்.


ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேஶிகாய நம:

This is a compilation of a series of Upanyasams delivered by U.Ve Karunakarachariar Swami, U.Ve Pazhaveri Balaji Swami, U.Ve Navalpakkam Vasudevachariar Swami for the GSPK group during the Desika Tirunakshatra Utsavam Oct 2020.  

2 comments:

  1. Like clouds take water from sea and gives sweet water to all you have take
    n the important points from all the acharyas and given DESHIKA SHIKAMANI--RAMA

    ReplyDelete