Wednesday, March 25, 2026

ஸ்வாமி தேஶிகன் (ப்ராக்ருத மொழியில்) அச்யுத ஶதகம் மூலம் அருளும் மோக்ஷ வைபவம்.

ஸ்வாமி தேஶிகன் திருவஹீந்த்ரபுரத்தில், அடியவர்க்கு மெய்யனிடம் (தாஸ ஸத்யன்), கீழ்கண்டபடி தனக்கு மோக்ஷானந்தம் தரவேண்டி ப்ரார்த்திக்கிறார்.

இந்த அனுபவம் நமக்கும் கிடைக்க ப்ரார்த்திக்கிறோம்!






வேதாந்த விஷயங்களை ஸ்தோத்ர  ரூபத்தில் தர வல்லவர் ஸ்வாமி தேஶிகனே!
உபநிஷத்துக்களும், ப்ரம்ஹ ஸுத்ரங்களும் ஒரு ப்ரபன்னன் ஸ்ரீவைகுண்டம் அடையும் வழி விதத்தையும், சென்றபின்  எம்பெருமானது கைங்கர்யத்தில் அவனை ஈடுபடுத்தும் பாங்கினையும், அதனால் இருவரும் அடையும் பரிபூர்ண ப்ரம்ஹானந்தத்தையும் விரிவாக சித்தரிக்கின்றன.

இந்த விரிவை, ஸ்வாமி தேஶிகன், அச்யுத ஶதகம் 83, 84, 85 ஆகிய மூன்றே ஶ்லோகங்களில் சுருக்கி விரித்த பாங்கு வியக்கத்தக்கது!

ஶ்லோகம் 83
ணிய கம்ம ணியள ஜுயளம் அச்சுய காயூண மஹ பியப்பிய வக்₃கே₃ । 
காஹே கோ₄ர களேவர  காராக₄ர குஹர ணிக்₃க₃யம் காஹிஸி மம் ॥

निज कर्म निगळयुगळं अच्युत कृत्वा मम प्रियाप्रिय वर्गे ।
कदा घोर कळेबर कारागृह कुहर निर्गतं करिष्यसि माम् ॥

ஶரீரம் என்னும் சிறைச்சாலையில் புண்யகர்மா என்ற பொன் விலங்காலும், பாபகர்மா என்ற இரும்பு விலங்காலும் பிணைக்கப் பட்டிருக்கிறான் ப்ரபன்னன். மரணத்தருவாயில் புண்யபலன் அவனது நண்பர்களிடமும் பாபபலன் விரோதிகளிடமும் சேர்வதாய் உபநிஷத்துக்களும், ஸாஸ்த்ரங்களும் கூறுகின்றன. ஆக கர்மா விலகி  ஜீவன் வெளியேறத் தயாராகிறது.

ஶ்லோகம் 84
ஹத்₃தே₃ துமம்மி கஇயா  விஸ்ஸமியம் பம்ஹ த₄மணிமக்₃க₃  ணிஹிந்தம் ।
தி₃ணயர தி₃ண்ணக்₃க₃ கரம் அச்சுய த₃ச்சி₂ஹிஸி த₃இய டி₃ம்ப₄ம் வியமம் ॥

हार्दे त्वयि कदा विश्रान्तं ब्रह्म धमनि मार्ग गमिष्यन्तम् ।
दिनकर दत्ताग्र करम् अच्युत द्रक्ष्यसि दयित डिम्भमिव माम् ॥

இத்தருணத்தில் ஜீவனின் இந்த்ரியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக செயலிழந்து மனஸுடன் ஒன்றி, பின் ப்ராணவாயுடன் கூடி, சூக்ஷ்மரூபத்திலான பஞ்சபூதங்களுடன் சேர்ந்து, ஆக எல்லாமாக ஜீவனுடன் சேர்கிறது.
ஆங்கே ஹ்ருதய குஹையில் ஹார்த ரூபமாயிருக்கும் எம்பெருமான் இத்தனை ஶ்ரமப்பட்ட சூக்ஷ்ம ஜீவனின் களைப்பைப் போக்கி ஹ்ருதயத்திலிருந்து கபாலம் வழியே செல்லும் மூர்தன்ய நாடிவழியே வெளியேற்றுகிறான். ஆக ஜீவனின் பரம பத பயணம் துவங்குகிறது.

"ஹார்த அனுக்ரஹீதய:" என வ்யாஸர் ப்ரம்ஹ சூத்ரத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ப்ரபன்னன் மோக்ஷத்திற்கு இந்த 101வது நாடியில் நுழையும்போது சூர்யன் தன் கிரணங்களை நீட்ட, அவற்றைப் பிடித்துக்கொண்டு ஜீவன் மேலேறுகிறான்.

இவ்விதமாக பயணிக்கும் ஜீவனைத் தன்னிடம் ஓடி வரும் குழந்தையை ப்ரீதியுடன் தந்தையானவர் பார்ப்பதுபோல் எம்பெருமான் கடாக்ஷிக்கிறான்.

ஶ்லோகம் 85
காஹே அமாணவந்தா  அக்₃கி₃  முஹா ஆஇவாஹியா துஹ புரிஸா । 
அஇளங்கே₄ ஹிந்தி மிமம்  அச்சுய தம க₃ஹண தியுண மருகந்தாரம்  ॥ 

कदा अमानवान्ताः अग्निमुखा आतिवाहिकास्तव पुरुषाः ।
अतिलङ्घयिष्यन्ति माम् अच्युत तमो गहन त्रिगुण मरु कान्तारम् ॥ 

இப்படி ப்ரபன்னன் பயணிக்கும் மார்கம் "அர்ச்சிராதி மார்கம்" எனப்படும். ஶரணாகதி அனுஷ்டித்து பரமபதமேறும் ப்ரபன்னனை அர்ச்சிராதி மார்கத்தில் வழி நடத்தி ப்ரீதியடன் தத்தம் லோகங்களில் உபஸரித்து அனுப்பி வைக்க எம்பெருமானால் நியமிக்கப் பட்டவர்கள் "ஆதிவாஹிகர்கள்" என்பவர்கள். ஆதிவாஹிகர்கள்  என்றால் எழுந்தருளப் பண்ணுபவர்கள்  என்று பொருள்.

அக்னி, பகல், ஶுக்ல பக்ஷம், உத்தராயணம், வர்ஷ, வாயு, ஸூர்யன், சந்த்ரன், வருணன், இந்த்ரன், ப்ரஜாபதி, அமானவன் என்ற 12 தேவதைகளின் உபசாரங்களை ஏற்றுக்கொண்ட ஜீவன், அதன்பின் அவரவர் எல்லைகளைக்
கடக்கிறான். 

நடைபெறஅங்கிபகலொளிநாள் * உத்தராயணம்ஆண்டு * 
இடைவருகாற்றுஇரவி * இரவின்பதிமின்வருணன் * 
குடையுடைவானவர்கோன் * பிரசாபதிஎன்றிவரால் * 
இடையிடைபோகங்களெய்தி * எழிற்பதம்ஏறுவரே.  
(பாசுரம் 28 அதிகார ஸங்க்ரஹம்)

இவர்களுள் அமானவன் என்ற  "மின்னல் தேவதை" இந்த ப்ரபன்னனை விரஜா நதிக்கரையில் சேர்க்கிறான். ப்ரக்ருதி மண்டலத்தின் எல்லையே விரஜா நதி. தெய்வ ஸங்கல்பத்தால் இதில் அமிழும் ப்ரபன்னன் தன் கர்ம ஶரீரத்தை விட்டு ஶுத்த ஸத்வ திவ்ய ஶரீரத்தைப் பெறுகிறான். அமானவன் இந்த ப்ரபன்னனை பரமபத வாயிலில் சேர்க்கிறான்.
ஆக முட்புதர்கள் நிறைந்த இப்பாலைவனமாகிய  ஸம்ஸார மண்டலத்தில் அல்லல் படும் ஜீவன், குளிர்ந்த சோலைவனமாகிய  பரமபதத்தை அடைய அனுஷ்டிக்க வேண்டிய உபாயம்  - "ஶரணாகதி" ஒன்றே.  

மேற்கூறிய விஷயங்கள் ஸ்ரீமத் ரஹஸ்யத்ய ஸாரத்தில் (கதி விஸேஷாதிகாரம்) ஸ்வாமி விளக்கியுள்ளார்.

ப்ரபத்தியை அனுஷ்டித்த சேதனன் இங்கு ஜீவிக்கும் வரை மனம் வாக்கு காய ஶுத்தியுடன் க்ருத க்ருத்யனாக கதி-சிந்தனையுடன் எம்பெருமானை அடையும் நாளை எதிர் பார்த்திருக்க வேண்டும்.

The above gist is the essence of Sri U. Ve. Vasudevachar Swami's upanyasam on Achutha Shathakam 

Sunday, February 15, 2026

பகர்வதற்கரிய பாதுகா ப்ரபாவம்


सन्तः श्रीरङ्गपृथ्वीश चरणत्राणशेखराः।

जयन्ति भुवनत्राण पदपङ्कजरेणवः॥ 

भरताय परं नमोस्तु तस्मै प्रथमोदाहरणाय भक्तिभाजाम् ।

 यदुपज्ञमशेषतः पृथिव्यां प्रथितो राघवपादुकाप्रभावः ।।


பாதுகா பரபாவத்தைப் பாரோர் அறிய பறைசாற்றிய பெருமை பரதாழ்வானுக்கே பொருந்தும்.

    
உலகிலேயே மிகச்சிறந்த ஸ்தோத்ர க்ரந்தபடைப்பு நம் ஆசார்ய ஸார்வபௌமன் ஸ்வாமி தேசிகன் அருளிய பாதுகா ஸஹஸ்ரம் என்றால் அது மிகையில்லை.

அந்த பாதுகா ப்ரபாவத்திலிருந்து சிலவற்றை இங்கே அனுபவிப்போம்.

சிலை அணங்குமிழ்ந்தது ராமன்பாத தூளியால்!








வாலில் வைத்த அக்னி குளிர்ந்தது பிராட்டியின் க்ருபையால் ஹனுமனுக்கு!
புல் அஸ்த்ரமாகி கண்ணழிவு செய்தது காக்கைக்கு!
பாதுகாதேவி ராம ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்து பதிநான்காண்டுகள் சீரிய  ராஜ்ய பரிபாலனம் செய்த மகத்துவம் முன்னே மொழிந்தவற்றைவிட வியப்பும் ஏற்றமும் பெற்றதன்றோ!


சத்ரம்,சாமரம், பாதுகை  ஆகியன எம்பெருமானுக்கு உபகரணங்களாகின்றன. 
இவற்றுள்  பாதுகா ஸிம்ஹாஸனத்தில் அமரவும் அவருக்கு சத்ர சாமரம் உபகரணங்களாயின. இது பாதுகாவின் ஓர் அஸாத்ய ப்ரபாவமன்றோ!!

ராமபிரானை அயோத்திக்குத் திரும்ப அழைத்துச் செல்வதில் மிக்க உறுதியுடன் இருந்தான் பரதன். ஆனால் அவன் முயற்சி பலிக்கவில்லை. தன்னை அரசனாக்க  ராமன் உள்பட  அனைவரின் வேண்டுகோளையும் புறந்தள்ளிய பரதாழ்வான் பாதுகை அரசாள்வதை சிரமேற்கொண்டது  பாதுகாவின் சிறப்பினாலன்றோ!!!


வானோர் வாழ மரவடியைத் தம்பிக்கு
வான் பணயம் வைத்தான் ராமபிரான்.

பணயமாகிய பாதுகை மாட்சி மிக்க ஆட்சி செய்த சீர்மைதான் என்னே!!!!
திருவடியைக்காட்டிலும் பரதநம்பிக்கு அவனீந்த அடிநிலை மிக்க மதிப்புடையதாகியது ஆச்சர்யமல்லவோ !

செல்வச் செழிப்பு, கல்வி, கலை, ப்ரஜைகளின் மகிழ்ச்சி, ஆசார்யாராதனை ஆகிய அனைத்திலும் சிறப்புற்றிருந்தது பாதுகாராஜ்யமே!!!!!

தந்தை சொற்கேட்டு வனம் சேர்ந்து தசரதன் சத்யம் காத்தான் ராமபிரான்.
அந்த எம்பெருமான் வாக்கைக் காப்பாற்றத் தானே அவனது ப்ரதிநிதியாக பரதனுடன் சென்று செயற்கரிய செயலைச் செய்தது பாதுகையன்றோ!!!!!!



ஸேஷத்வத்தில் சிறந்தவன் லக்ஷ்மணன். தமையனுக்கு கைங்கர்யம் செய்யவே பிறந்தவன் அவன். பாரதந்த்ரனாகிய பரதன் ராமன் இட்ட வழக்காயிருந்தவன். ஆனால் அண்ணல் நாடாளச்சொன்னதை மறுத்தான். ஆக  பரதனின் பாரதந்த்ரயத்தில் சற்றே குறை ஏற்பட்டதெனத் தோன்றலாம். ஆனால் காட்டுக்குப்போ என்றதும் போகி பின் ஸிம்ஹாஸனத்தில் ஏறு என்றதும் ஏறி  ராமபட்டாபிஷேகமான பின் திரும்ப பெருமான் திருவடிகீழ் தஞ்சம் புகுந்த பாதுகாஸ்ரீயின் பாரதந்த்ர்ய நிலை  எல்லோரினும் மேம்பட்டதன்றோ!!!!!!!


கஜேந்த்ரன் கதறலுக்கு அன்று கனிந்த ஆதிமூலம் இன்று பரதன் கண்ணீருக்கு இரங்கவில்லையே!
கன்றின் குரலுக்கு ஓடிவரும் தாய்பசுப்போல திருவடியை விட்டு தனயனுக்குத்  தஞ்சமளித்து அனுக்ரஹித்த அன்னை பாதுகா தேவி சுயநலத்தைவிட தேசநலம் காக்கப்புறப்பட்டநிலை மிக உயர்ந்ததன்றோ!!!!!!!!

நாவினால் சுட்டவடு ஆறுமோ?ஆற்றிக்காட்டியவர் பாதுகா தேவி.
செய்யாத தவறுக்காகப் பழியைச்சுமந்தவன் பரதன். கௌஸல்யா,
தசரதன், லக்ஷ்மணன், குஹன், பரத்வாஜமுனி, அயோத்தி மக்கள் வரை பேசிய இழிச்சொற்கள் அனைத்தையும் சுமந்தான். என்னே அதிசயம்! பாதுககையைத் தரித்த அக்கணத்திலிருந்து இகழ்ச்சியனைத்தும்  புகழ்ச்சியாயின.

தலை எழுத்தையே மாற்றிக்காட்டும்  ஆற்றல் உடைவராயிற்றே பாதுகாதேவி!!!!!!!!!
அந்தணர் அந்தியர் எல்லையில் நின்ற அனைவரையும் எம்பெருமான் திருவடிகளுடன் சேர்க்கும் சடகோபமாகிய  பாதுகா தேவியின் பெருமைகள் பேசி மாளாது என்பதே நிதர்ஸனமாகிறது.

இத்தகைய ப்ரபாவங்களடங்கிய பாதுகா ஸஹஸ்ரம் என்ற நிதியாகிய க்ரந்த்தத்தை  நாமனைவரும் பாராயணம் செய்து இந்த பவக் கடலைக் கடக்க முயல்வோமாக.




(ஸ்ரீ.உ.வே. நாவல்பாக்கம் வாஸுதேவாச்சார்யாரின் ஸமீபத்திய உத்தமூர் ஸ்வாமி திருநக்ஷத்ரத்தை ஒட்டிய உபன்யாஸத்திலிருந்து தொகுத்தது)