Wednesday, March 25, 2026

ஸ்வாமி தேஶிகன் (ப்ராக்ருத மொழியில்) அச்யுத ஶதகம் மூலம் அருளும் மோக்ஷ வைபவம்.

ஸ்வாமி தேஶிகன் திருவஹீந்த்ரபுரத்தில், அடியவர்க்கு மெய்யனிடம் (தாஸ ஸத்யன்), கீழ்கண்டபடி தனக்கு மோக்ஷானந்தம் தரவேண்டி ப்ரார்த்திக்கிறார்.

இந்த அனுபவம் நமக்கும் கிடைக்க ப்ரார்த்திக்கிறோம்!






வேதாந்த விஷயங்களை ஸ்தோத்ர  ரூபத்தில் தர வல்லவர் ஸ்வாமி தேஶிகனே!
உபநிஷத்துக்களும், ப்ரம்ஹ ஸுத்ரங்களும் ஒரு ப்ரபன்னன் ஸ்ரீவைகுண்டம் அடையும் வழி விதத்தையும், சென்றபின்  எம்பெருமானது கைங்கர்யத்தில் அவனை ஈடுபடுத்தும் பாங்கினையும், அதனால் இருவரும் அடையும் பரிபூர்ண ப்ரம்ஹானந்தத்தையும் விரிவாக சித்தரிக்கின்றன.

இந்த விரிவை அச்யுத ஶதகம் 83, 84, 85 ஆகிய மூன்றே ஶ்லோகங்களில் சுருக்கி விரித்த பாங்கு வியக்கத்தக்கது!

ஶ்லோகம் 83
णिअकम्मणिअळजुअळम् अच्चुअ काऊण मह पिअप्पिअवग्गे । 
काहे घोरकळेवर काराघरकुहरणिग्गअं काहिसि मम् ॥ 

निज कर्म निगळयुगळं अच्युत कृत्वा मम प्रियाप्रिय वर्गे ।
कदा घोर कळेबर कारागृह कुहर निर्गतं करिष्यसि माम् ॥

ஶரீரம் என்னும் சிறைச்சாலையில் புண்யகர்மா என்ற பொன் விலங்காலும், பாபகர்மா என்ற இரும்பு விலங்காலும் பிணைக்கப் பட்டிருக்கிறான் ப்ரபன்னன். மரணத்தருவாயில் புண்யபலன் அவனது நண்பர்களிடமும் பாபபலன் விரோதிகளிடமும் சேர்வதாய் உபநிஷத்துக்களும், ஸாஸ்த்ரங்களும் கூறுகின்றன. ஆக கர்மா விலகி  ஜீவன் வெளியேறத் தயாராகிறது.

ஶ்லோகம் 84
हद्दे तुमम्मि कइआ विस्समिअं बम्हधमणिमग्गणिहिन्तम् । 
दिणअरदिण्णग्गकरम् अच्चुअ दच्छिहिसि दइअडिम्भं विअ मम् ॥ 

हार्दे त्वयि कदा विश्रान्तं ब्रह्म धमनि मार्ग गमिष्यन्तम् ।
दिनकर दत्ताग्र करम् अच्युत द्रक्ष्यसि दयित डिम्भमिव माम् ॥

இத்தருணத்தில் ஜீவனின் இந்த்ரியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக செயலிழந்து மனஸுடன் ஒன்றி, பின் ப்ராணவாயுடன் கூடி, சூக்ஷ்மரூபத்திலான பஞ்சபூதங்களுடன் சேர்ந்து, ஆக எல்லாமாக ஜீவனுடன் சேர்கிறது.
ஆங்கே ஹ்ருதய குஹையில் ஹார்த ரூபமாயிருக்கும் எம்பெருமான் இத்தனை ஶ்ரமப்பட்ட சூக்ஷ்ம ஜீவனின் களைப்பைப் போக்கி ஹ்ருதயத்திலிருந்து கபாலம் வழியே செல்லும் மூர்தன்ய நாடிவழியே வெளியேற்றுகிறான். ஆக ஜீவனின் பரம பத பயணம் துவங்குகிறது.

"ஹார்த அனுக்ரஹீதய:" என வ்யாஸர் ப்ரம்ஹ சூத்ரத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ப்ரபன்னன் மோக்ஷத்திற்கு இந்த 101வது நாடியில் நுழையும்போது சூர்யன் தன் கிரணங்களை நீட்ட, அவற்றைப் பிடித்துக்கொண்டு ஜீவன் மேலேறுகிறான்.

இவ்விதமாக பயணிக்கும் ஜீவனைத் தன்னிடம் ஓடி வரும் குழந்தையை ப்ரீதியுடன் தந்தையானவர் பார்ப்பதுபோல் எம்பெருமான் கடாக்ஷிக்கிறான்.

ஶ்லோகம் 85
काहे अमाणवन्ता अग्गिमुहा आइवाहिआ तुह पुरिसा । 
अइळङ्घेहिन्ति मिमम् अच्चुअ तमगहणतिउणमरुकन्तारम् ॥ (85)  

कदा अमानवान्ताः अग्निमुखा आतिवाहिकास्तव पुरुषाः ।
अतिलङ्घयिष्यन्ति माम् अच्युत तमो गहन त्रिगुण मरु कान्तारम् ॥ 

இப்படி ப்ரபன்னன் பயணிக்கும் மார்கம் "அர்ச்சிராதி மார்கம்" எனப்படும். ஶரணாகதி அனுஷ்டித்து பரமபதமேறும் ப்ரபன்னனை அர்ச்சிராதி மார்கத்தில் வழி நடத்தி ப்ரீதியடன் தத்தம் லோகங்களில் உபஸரித்து அனுப்பி வைக்க எம்பெருமானால் நியமிக்கப் பட்டவர்கள் "ஆதிவாஹிகர்கள்" என்பவர்கள். ஆதிவாஹிகர்கள்  என்றால் எழுந்தருளப் பண்ணுபவர்கள்  என்று பொருள்.

அக்னி, பகல், ஶுக்ல பக்ஷம், உத்தராயணம், வர்ஷ, வாயு, ஸூர்யன், சந்த்ரன், வருணன், இந்த்ரன், ப்ரஜாபதி, அமானவன் என்ற 12 தேவதைகளின் உபசாரங்களை ஏற்றுக்கொண்டபின் அவரவர் எல்லைகளைக்
கடக்கிறான். 

நடைபெறஅங்கிபகலொளிநாள் * உத்தராயணம்ஆண்டு * 
இடைவருகாற்றுஇரவி * இரவின்பதிமின்வருணன் * 
குடையுடைவானவர்2கோன் * பிரசாபதிஎன்றிவரால் * 
இடையிடைபோகங்களெய்தி * எழிற்பதம்ஏறுவரே.  
(பாசுரம் 28 அதிகார ஸங்க்ரஹம்)

இவர்களுள் அமானவன் என்ற  "மின்னல் தேவதை" இந்த ப்ரபன்னனை விரஜா நதிக்கரையில் சேர்க்கிறான். ப்ரக்ருதி மண்டலத்தின் எல்லையே விரஜா நதி. தெய்வ ஸங்கல்பத்தால் இதில் அமிழும் ப்ரபன்னன் தன் கர்ம ஶரீரத்தை விட்டு ஶுத்த ஸத்வ திவ்ய ஶரீரத்தைப் பெறுகிறான். அமானவன் இந்த ப்ரபன்னனை பரமபத வாயிலில் சேர்க்கிறான்.
ஆக முட்புதர்கள் நிறைந்த இப்பாலைவனமாகிய  ஸம்ஸார மண்டலத்தில் அல்லல் படும் ஜீவன், குளிர்ந்த சோலைவனமாகிய  பரமபதத்தை அடைய அனுஷ்டிக்க வேண்டிய உபாயம்  - "ஶரணாகதி" ஒன்றே.  

மேற்கூறிய விஷயங்கள் ஸ்ரீமத் ரஹஸ்யத்ய ஸாரத்தில் (கதி விஸேஷாதிகாரம்) ஸ்வாமி விளக்கியுள்ளார்.

ப்ரபத்தியை அனுஷ்டித்த சேதனன் இங்கு ஜீவிக்கும் வரை மனம் வாக்கு காய ஶுத்தியுடன் க்ருத க்ருத்யனாக கதி-சிந்தனையுடன் எம்பெருமானை அடையும் நாளை எதிர் பார்த்திருக்க வேண்டும்.

The above gist is the essence of Sri U. Ve. Vasudevachar Swami's upanyasam on Achutha Shathakam 

No comments:

Post a Comment