Tuesday, July 7, 2020

யாம் அனுபவித்து மகிழ்ந்த ஸ்ரீ தேசிக விஜயோத்ஸவம் (10 மே 2018 - 18 மே 2018)


சேதனர்களை உய்விக்க எம்பெருமான் ஆழ்வார் ஆசார்யர்களை அவதரிப்பித்தான். நம்மாழ்வார், நாதமுனிகள், ஆளவந்தார் ஸ்ரீ பாஷ்யகாரர் முதலியோரும் அவர்களது ஸ்ரீஸுக்திகளும் மக்களை நன்னெறிப் படுத்தின.


வேதங்களையும், ஸ்ம்ருதிகளையும் ப்ரமாணமாய்க் கொண்ட விஸிஷ்டாத்வைத ஸித்தாந்த ரஹஸ்யார்த்தங்களை விரிவாய் நாமெல்லாம் தெரிந்து கொள்ள திருவுள்ளம் பற்றினான் எம்பெருமான். அதன் பயனே பொய்கை ஆழ்வார், நடாதூர் ஆம்மாள், அப்புள்ளர், ஸ்ரீபாஷ்யகாரர், திருக்கச்சி நம்பி, கூரத்தாழ்வான் முதலான மகான்கள் நித்ய வாசம் செய்த காஞ்சியம்பதியில், தூப்புல் திவ்ய தேசத்தில், திருமலையப்பனின் `கண்டா` அவதாரமாக ஸ்ரீதேசிகனை அவதரிப்பித்தார். இம்மஹானின் 750வது திருநக்ஷத்ரத்தை ஒட்டி ‘ஸ்ரீ ராமானுஜ தயா’ என்ற அமைப்பு ஜனவரி 2018ல் தொடங்கி ஒரு மாபெரும் விஜயோத்ஸவத்தை ஏற்பாடு செய்து கோலாஹலமாய் நடத்தியது. அதில் பங்கேற்ற அடியேன் அனுபவத்தை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


நாவல்பாக்கம் ஸ்ரீவாஸுதேவாச்சாரியார் ஸ்வாமியின் கருத்தில் விளைந்த `ராமானுஜ தயா` என்ற வ்ருக்ஷம் ஈன்ற கனி ஸ்ரீ தேசிகனின் மங்கள விக்ரஹம். ஸ்ரீபெரும்புத்தூர், தூப்புல் காஞ்சி, திருமலையில் மங்களா ஸாஸனங்களாகி ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் தீர்த்தவாரியாகியது. முன்பு ஜனவரியில் 3 நாட்கள் மஹோத்ஸவமாக‍ அரங்கன் ஸந்நிதியில் வேதாந்த தேசிகன் காட்டிய வாழ்க்கை நெறிகள் (ஸ்வாமி வாஸுதேவாச்சார் எழுதியது) புத்தக வெளியீடு ஆந்திர மாநில ஆளுநர் ஸ்ரீ நரஸிம்மன் தலைமையில், வித்வத்ஸதஸ், யானை மேல் ஸ்ருதப் ப்ரகாசிகா பவனி என்று வைபவமாக நடந்தேறியது. ஸ்வாமி தேசிகனின் 40க்கும் மேற்பட்ட ஸ்ரீஸுக்திகள் பற்றிய வார்த்தா வைபவங்கள் மிகப்பெரிய வித்வான் மணிகளால் நிகழ்த்தப்பட்டு youtube-ல் வெளிவந்தன.


மைசூர் பரகால மடத்தில் (4-5-2018) ஹயக்ரீவன் மங்களாஸாஸனம், கன்னட மொழிபெயர்ப்பு நூல் வெளியிடு, பரகால மட ஜீயர் ஸ்வாமி அனுக்ரஹ பாஷணம் ஆகி பங்களூர் வழியே ஹைதராபாத் சேர்ந்து `வேதாந்த தேசிகனின் வாழ்க்கை நெறிகள்` புத்தகத்தின் தெலுங்கு மொழி பெயர்ப்பு வெளியீடு ஓர் பெரும் கலை விழாவுடன் நடந்தேறியது. பின்பு குருக்ஷேத்ரம் வழியே டெல்லியில் (10-5-2018) ஓர் மாபெரும் கலை விழாவுடன் வாழ்க்கை நெறிகளின் ஆங்கில மொழி பெயர்ப்பு வெளியீடு ஸ்ரீ பராசரர் தலைமையில் நடந்தேறியது.


அயோத்தியிலிருந்து ஸ்ருங்க பேரியில் குஹஸஹாயத்தைப் பெற்றபின் ஸீதா ராம லக்ஷ்மண ஸந்நிவேசம் சித்ர கூடத்தில். அநசூயை முப்பெரும் கடவுளரைக் குழவிகளாக்கி மடியில் கிடத்தி மகிழ்ந்தது, பரதன் பாதுகை பெற்றது, ஜெயந்தன் கண்ணை இழந்தது - ஆகியன இவ்விடத்தே நிகழ்ந்த வ்ருத்தாந்தங்கள்.



சித்திரக் கூடத்திருப்ப சிறுகாக்கை முலைதீண்ட

அத்திரமே கொண்டெறிய அனைத்துலரும் திரிந்தோடி

வித்தகனே ராமா ஓ நின்னபயம் என்றழைப்ப

அத்திரமே அதன் கண்ணை அறுத்ததுமோர் அடையாளம் (பெரியாழ்வார் திருமொழி)


இதனை விளக்குமுகமாக மந்தாகினி நதி தீரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சோலையருகே அமைந்த பாறை உளது. இந்த மந்தாகினி நதிக் கரையில் நிகழ்ந்த காகாஸுர வ்ருத்தாந்தத்தை ஸ்வாமி தேசிகன்

“சோகம் தவிர்க்கும் சுருதிப் பொருள் ஒன்று சொல்லுகின்றோம்

நாகம் தனக்கும் இராக்க‍தற்கும் நமக்கும் சரணாம்

ஆகண்டலன் மகனாகிய ஆவலிப்பு ஏறிய - ஓர்

காகம் பிழைத்திடக் கண் அழிவே செய்த காகுத்தனே” - என்று அம்ருத ஸ்வாதினியில் சித்தரிக்கிறார்.

கோதாவரி குகை வழியே நெளிந்து வளைந்து செல்லும் `குப்த கோதாவரி`, ஆஸ்சர்யமான ஒரு தோற்றம்.


இங்கு `ராமாயண் குடி` என்ற இடத்தில் ஸ்ரீதேசிகன் எழுந்தருளி வித்வத்ஸதஸ் முடிந்து மாலை 6 மணி அளவில் (12-5-2018) `காமதகிரி வலம்`. சுமார் 6 கி.மீ-க்கு 2 குடை மங்கள வாத்யத்துடன் ஆஸ்திக அன்பர்கள் புடை சூழ ஸ்தோத்ர பாராயணாதிகளுடன் சென்று பரதனுக்கு பாதுகை ஈந்த இடத்தில் ஸ்ரீதேசிகன் ஏள்ள பாதுகாஸஹஸ்ர பாராயணமாகியது. நாம் நினைத்ததை தரும் காமதேனுவாம் இம்மலை. அயோத்யாவில் ராம ப்ரதிஷ்டை ஆகி சர்ச்சை தீர்ந்து ராம ஜன்ம பூமியில் அவனுக்குக் கோயில் அமைய ப்ரார்த்தித்தோம்.


13-5-2018 அதிகாலை 4 மணிக்குக் கிளம்பி அலஹாபாத் த்ரிவேணி சங்கமத்தில் 9 மணியளவில் விதானம் அமைத்து கைத்தலத்தில் ஸ்ரீதேசிகன் எழுந்திருளி வாத்ய முழக்கத்துடன் திருமஞ்சனம் கண்டருளி தீர்த்தவாரி ஆகியது. வார்த்தைகளால் இதனை வர்ணிக்க இயலாது!! இங்கிருந்து அயோத்தி புறப்பாடு மதியம் 1 மணியாகியது. மாலை 6 மணிக்கு நந்திக்கிராமத்தில் பரதனின் பாதுகா ராஜ்யத்தில் ஒரு சிறிய பாதுகா ஸஹஸ்ர பாராயணம் முடிந்து 9 மணியளவில் அயோத்தி சேர்ந்தோம். ராம ஜன்ம பூமியில் தேசிகன் எழுந்தருளியதும் வருணன் மகிழ்ந்து பூமி குளிர்ந்தது.


14-5-2018 காலை ஸரயூ நதி தீரத்தில்,

`கற்பார் ராமனை அல்லால் மற்றும் கற்பரோ

புற்பா முதலா புல்லெறும்பு ஆதி ஒன்றின்றியே

நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்

நற்பாலுக் குய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே`

(திருவாய்மொழி)


என்று ஸ்ரீராம பிரானின் குணாதிசயத்தை விளக்கினார் நாவல்பாக்கம் ஸ்வாமி. இங்கு ஆனந்தமாய் தீர்த்தவாரி கண்டருளிய தேசிகன் ரங்கநாதஸ்வாமி கோயிலுக்கு எழுந்தருளி ஆங்கே ஸந்த் கோஷ்டியில் அபீதி ஸ்தவ, ஸ்ரீரகுவீரகத்ய பாராயணம் கோஷம் விண்ணை எட்டியது என்றால் மிகையாகாது. எதிரே வால்மீகி ராமாயணம் 24000 ஸ்லோகங்களும் கல்வெட்டில் பொறித்தமைந்த வால்மீகி பவனம்.
“இனி உன்னை உன் ஜென்ம பூமியில் எழுந்தருளப்பண்ணி திருக்கோயில் நிர்மாணிப்பது என் பொறுப்பு” - என்கிறார் போல் ஸ்ரீதேசிகன் குடை வாத்தியம் புடை சூழ ஓர் அற்புதமான வீதி புறப்பாட்டுடன் `ஸ்ரீஸுக்ரீவ கிலா` ஸ்ரீபட்டாபிராமன் ஸந்நிதியில் (இது ராமபட்டாபிஷேக ஸமயத்தில் ஸூக்ரீவன் தங்கிய மாளிகையாம்) எழுந்தருளப்பண்ணப்பட்டார். ஆஹா என்ன ஸந்நிவேஸம்!

“ஒரு மகள் தன்னை யுடையேன்

உலகம் நிறைந்த புகழால்

திருமகள் போல் வளர்த்தேன்

செங்கல்மான் தான் கொண்டு போனான்”
- என்றார் அன்று பெரியாழ்வார்.


“ஒரு மகன் தன்னை யுடையேன்

உலகம் நிறைந்த புகழால்

திருமகன் போல் வளர்த்தேன்

திரு அயோத்தி ராமன் கொண்டு வைத்தான்”
- என்பது நாவல்பாக்கம் ஸ்வாமி வாக்கு. இத்துனை நாளாய் நம்மோடு இருந்த தேசிகனை இன்று இங்கு விட்டுச் செல்கிறோம். பெண்ணை புக்ககம் அனுப்புமு பெற்றோர் போன்ற நிலையை அவர் விவரித்த விதம் எல்லோர் கண்களையும் குளமாக்கியது. ~ஸ்ரீராமா, உன் பொருட்டு எங்கள் தேசிகனை விட்டுச் செல்கிறோம். நீ உன் நீண்ட கால ப்ரயாசையைப் பூர்த்தி செய்து கொள்~ - என்று ப்ரார்த்தித்தோம்.


அன்று மாலை அங்கு நடந்த வித்வத்ஸதஸில் பேசிய மஹனீயர்கள் தேசிகன் பால் கொண்ட பக்தியும், அவரது ஸ்ரீஸூக்திகளில் கொண்ட ஆழ்ந்த ஞானமும் பிரம்மிப்பூட்டுவதாயிருந்தது. ந்யாச தசகம், ந்யாச விம்சதி, தயாசதகம், வைராக்ய பஞ்சகம், ஹயக்ரீவ ஸ்தோத்ரம், வரதராஜ பஞ்சாஸத் - என்று அவர்கள் காட்டிய மேற்கோள்கள் மெய்சிலிர்க்க வைத்தன.


அடுத்து 15-5-2018 அமாவாசை தர்ப்பணாதிகளை ஸரயூவில் முடித்துக் கொண்டு மதியம் 1 மணியளவில் புறப்பட்டு இரவு 11 மணியளவில் ப்ருந்தாவனம் சேர்ந்தோம். ப்ராசீனமான கேசிககாட் - ஸ்ரீவேதாந்த தேசிகாஸ்ரமத்தில் ஸ்வாமி தேசிகன் விலக்ஷணமாக எழுந்தருளியுள்ளார் இங்கு.


16-5-18 காலை 8 மணிக்கு க்ருஷ்ண ஜன்ம ஸ்தலத்தில் ஸ்வாமி தேசிகனை எழுந்தருளப்பண்ணி பக்தர்குழாம் கோபால விம்ஸதி, பெரியாழ்வாரின் முதல் திருமொழி “வண்ண மாடங்கள் சூழ்” விண்ணதிர அநுசந்தித்தது கண் கொள்ளாக் காட்சி. அகிலாண்ட கோடி ப்ரம்ஹாண்ட நாயகன் ஓர் சிறிய காராக்ருஹத்தில் அவதரித்த எளிமை நம்பொருட்டே! அங்கிருந்த பெரிய அரங்கில் மகனீயர்கள், ஆஸ்ரம அத்யகர் ஸ்ரீஅநிருத்தாச்சார் ஸ்வாமி உள்பட ஸ்ரீதேசிகனின் பெருமையைப் பறக்கப் பேசினர்.


கிருஷ்ண ஜன்ம பூமியில் மங்களாசாஸனம் நடந்த அன்று ரோஹிணி நக்ஷத்திரம் என்பது ஆச்சர்யப்பட வேண்டிய விஷயமாகும்.


அன்று மாலை மதுராவில் நடந்த ஸ்வாமி தேசிகன் வீதி புறப்பாட்டின் சீர்மை சொல்லில் அடங்காது. ஸர்வாலங்கார பூஷிதராக ஸ்வாமி தேசிகன் இரட்டைக் குடையுடன் மங்கள மல்லாரி வாத்தியம் முழங்க வேத கோஷமும் தேசிக ப்ரபந்தமும், தேசிக ஸ்தோத்ர பாராயணமும் பின் தொடர இரு புறமும் பளீர் என்ற விளக்கொளியுடன் வழி நெடுக மதுரா மக்கள் மலர் மாரி பொழிய ராஜ நடையுடன் வலம் வ‍ந்த அழகு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.


யமுனா தீரத்தில் கண்ணன் பலராமன் யசோதை நந்தகோபருடன் வீற்றிருக்கும் கோவிலில் ஸ்வாமி தேசிகனை ஏள்ள பண்ணி பெரியாழ்வார் திருமொழி, யாதவாப்யுதயம் ஸேவித்தோம். கண்ணன் கோபஸ்த்ரீகளின் வஸ்த்ரம் ஒளித்ததும், யசோதைக்கு வாயுள்ளே வையம் காட்டியதும் இங்கேதான்.


“விபுலோலூகல கர்ஷகம் குமாரம்” - என்று கண்ணன் உரலோடு கட்டுண்டு மருதம் சாய்த்த இடத்தில் ஸ்வாமி தேசிகன் எழுந்தருள, “கண்ணி நுண் சிறுத்தாம்பு” 11 பாசுரமும், “பத்துடை அடியவர்க்கு எளியவன்” பாசுரமும் ஸேவித்து, கண்ணன் அக்ரூரரைச் சந்தித்து மணலில் புரண்டு விளையாடிய `ரமண் ரேடி` என்ற இடம், குன்று குடையாய் எடுத்த கோவர்த்தனத்தில் மங்களா ஸாஸனம் முடிந்து திரும்பினோம். விழுந்து ஸேவித்துக் கொண்டே கோவர்த்தன பரிக்ரமா 32கி.மீ. செய்யும் ஜனங்களின் பக்தி வியக்கத்தக்கதாயிருந்தது.


17-5-18 காலை யமுனா தீரத்தில் ஸ்வாமி தேசிகனுக்கு விலக்ஷணமான திருமஞ்சனம் செய்வித்து தீர்த்தவாரி ஆகியது. தொடர்ந்து நாச்சியார் திருமொழி பாராயணம், கண்ணன் விளையாடி மகிழ்ந்த ப்ருந்தாவனத்தில், ஆசார்யனை முன்னிறுத்தி, பெரியாழ்வாரின் திருமகள் ஆண்டாள் பாடிய “ப்ருந்தாவனத்தே கண்டோமே” 10 பாசுரங்களும் ஸேவித்த பாங்கையும், அந்த அனுபவத்தையும் சொல்லீ மாளாது!


ப்ருந்தாவனத்தில் ரங்க‍ஜி மந்திர், கண்ணாடியிலேயே ஜொலிக்கும் ஸீஷ்மஹால், “நிதி வன்” என்னும் ராசக்ரீடை ஸ்தலம் (இது முழுவதும் மல்லிகை கொடி கொத்தாக குழுமியிருக்கும்) மல்லிகை புஷ்பாலங்காரத் தோரணங்கள் விதவிதமான வடிவமைப்புகளில் அழகுற தொங்கவிடப்பட்டு விளங்கும் வசீகரமான மாளிகையில் ராதே க்ருஷ்ண தரிசனம் தரும் “பைங்க் பிஹார்” என்ற கோவில் சொல்லொணா அழகுடன் திகழ்ந்தது. அன்று 6 மணியளவில் தொடங்கிய ஸத்ஸங்க சொற்பொழிவுகள் முடிந்து தேசிகாஸ்ரமத்தில் “கோபால விம்ஸதி” கல்வெட்டில் பொறித்து திறக்கப் பட்டது. இத்துடன் ஸ்ரீதேசிக விஜய யாத்ரோத்ஸவம் நிறைவ‍டைந்தது.


ஸ்வாமி தேசிகனின் அவதார காலத்தில் நாம் எப்படி இருந்தோமோ தெரியாது. அவரது 750வது திரு நக்ஷத்ரத்தில் அவரது அர்ச்சா விக்ரஹத்துடன் அவர் மங்களாஸாஸனம் செய்த திவ்ய தேசங்களுக்குச் சென்று, அவருடன் தீர்த்தவாரி ஆகி, அவரது ஸ்ரீஸூக்திகளை ஸேவிக்கும் பாக்யம் நமக்குக கிட்டியது, நம் சந்ததியினர், நண்பர்கள் அனைவர்க்கும் போய்ச் சேரும். அவரது ஸஹஸ்ராப்தியை நம் சந்ததிகள் கண்டு களிக்கும் போது நாம் ஸ்வாமி தேசிகனுடன் விண்ணுலகில் களிக்கப்போவது உறுதி.


ஸ்ரீநிகமாந்த மகா தேசிகனின் இந்த 750வது திரு நக்ஷத்ர வைபவ விஜயோத்ஸவம் நாவல்பாக்கம் ஸ்ரீயக்ஞம் ஸ்வாமி, ஸ்ரீவாஸூதேவாச்சார் ஸ்வாமி, ஸ்ரீ அனந்த பத்மநாப ஸ்வாமி, கூத்தப்பாக்கம் ஸ்ரீ ரங்கநாதன் ஸ்வாமி, ஹைதராபாத் ஸ்ரீ முகுந்தன் ஸ்வாமி, பெங்களூர் ஸ்ரீ பத்ரீ ஸ்வாமி, ஸ்ரீ சுந்தர வரதன் ஸ்வாமி ஆகியோரின் அரும்பெரும் முயற்சியினால் சாத்தியம் ஆகியது என்றால் அது மிகையாகாது. அவர்கள் அனைவருக்கும் எமது க்ருதஞைகளைத் தெரிவிப்பதுடன், எம்பெருமான், ஆழ்வார் ஆசார்யர்களின் பரிபூர்ண கடாக்ஷம் என்றென்றும் கிடைக்க வேணுமாய் மனதாரப் ப்ரார்த்திக்கிறோம்.


“சீர் தூப்புல் குலமணியே வாழி நின் வடிவே”

No comments:

Post a Comment