Thursday, December 10, 2020

உபகார ஸங்க்ரஹம்!

 Vishnu, Lakshmi & Garuda - Poster in 2020 | Vishnu, Hindu art, Hd nature  wallpapers

ஸ்வாமி தேசிகன் ஸாதித்துள்ள சில்லரை ரஹஸ்யங்களில் முக்யமானது இந்த உபகார ஸங்க்ரஹம்.எம்பெருமான் நமக்குச்செய்துள்ள லௌகீக உபகாரங்களுடன் அவன் செய்துள்ள வைதீக உபகாரங்களின் தொகுப்பே இக்ரந்தம். மணிப்ரவாள நடையிலமைந்த இக்ரந்தம் நம்மாழ்வாரின் "ஒத்தாரை மிக்காரை இலையாய மாமாயா" - என்ற பாசுரத்தின் விளக்கமாக அமைகிறது. எம்பெருமான் பரம க்ருபையுடன் ஜீவர்களுக்கு ஞானமளித்து கர்மாதீனமாய் ஸம்ஸாரத்தில் அழுந்தாவகையில் ஆசார்யன் முன்னிறுத்தி த்வயம் திருமந்திரம் உபதேசம் பெறச்செய்து ஒரு தந்தை தனயனிடம் காட்டும் பரிவுடன் சடகோபன் அருளுடன் அவன்தாள் அடையச் செய்கிறான். பரமபத ஸோபானம் என்ற ப்ரபந்தத்தில் ஸ்வாமி தேசிகன் அந்தமிலா பேரின்பமடைய ஜீவர்களுக்கு 9 படிகளை (நிலைகளை) காட்டுகின்றார் விவேகம், நிர்வேதம், விரக்தி, பீதி, ப்ரஸாதஹேது, உத்க்ரமணம், அர்ச்சிராதிமார்க்கம், திவ்யதேசப்ராப்தி, மோக்ஷானுபவம் என்பவையே அவை. இந்த நிலை ஒவ்வொன்றையும் ஜீவர்கள்கடநது செல்ல பகவான் எப்படி எல்லாம்  உபகாரிக்கிறான் என்பதை இக்ரந்தம் விவரிக்கிறது. நாம் பெருமானுக்கு அளிக்கும் உபகாரத்தில் ஸேஷத்வம்தானுண்டு. ஆத்மாவுக்குத்தான் தாஸத்வம் உண்டு. ஜீவனுக்கு எம்பெருமான் அநாதியாக நான்கு அடிப்படை உபகாரம் செய்கிறான். 

முதல் உபகாரம் - ஸ்வரூப ரக்ஷணம். ப்ரளய காலத்திலும் ஆத்மா அழியாதபடிக்கு தன்வயிற்றுள் வைத்துக்காக்கிறான். ஸ்ருஷ்டியின்போது அந்த ஜீவனுக்கு சக்தி, ஞானம், போக்யங்களை அளிக்கிறான். தன் ஸ்வாபாவிக ஸுஹ்ருதத்தால் ஜீவனை நிறுத்தி வைத்துள்ளான். என்றாவது ஒருநாள் கர்மாதீனமான பிறப்பை விடுத்து தம்மை அடைவித்து அந்த ஜீவனுக்கு தனக்கு ஈடான ஆனந்தத்தை அளிக்கவேணும்என்று. 

இரண்டாவது உபகாரம் - ஸ்வபாவ ரக்ஷணம்.ஆத்மாவின் ஞானத்தைக் காப்பது.ப்ரளய காலத்தில் ஆத்மாவிற்கு ஞான ஸங்கோசம் ஏற்படும்.(தூங்கும்போது நினைவு மங்குவது போல)ஆத்மா---ரத்னம். என்றால் அதன்ஞானம் ரத்னத்தின் ஒளி போன்றது.கர்மா என்ற தூசுமூடியிருப்பதால் ஒளி மங்கி இருக்கும்.ஸ்ருஷ்டி காலத்தில் எம்பெருமான் ஞான விகாஸம் ஏற்படச்செய்கிறான்.

மூன்றாவது உபகாரம் - எம்பெருமான் அவஸர ப்ரதீக்ஷணாக இருக்கிறான். அதாவது ஜீவனை கடைத்தேற்ற தகுந்த காலத்தை எதிர்பார்த்து காத்திருக்கிரறான். தன் அவ்யாஜ க்ருபையினாலே நாம் செய்யும் அபசாரங்களைப்பொறுத்துக்கொள்கிறான். 

நான்காவது உபகாரம் - ஸம்ஸாரச் சக்கரத்ததில் சுழலும் ஜீவனைக் கர்ம ப்ரவாகத்திலிருந்து வெளியே கொண்டுவர இரு உபகாரங்களைக் கையில் வைத்துள்ளான். அவை யாதிர்ச்சிக ஸுஹ்ருதம். அஞ்ஞாத ஸுஹ்ருதம். ஒரு சாக்காக இதனைவைத்துக்கொண்டு தன்கருணையினால் ஜீவனை மோக்ஷத்துக்கு அழைத்துச் செல்கிறான். "ஜீவனின்நீசத்தன்மையைப் பார்க்காமல் அதனுள் அமர்ந்து அதனை அங்கீகரிக்கி‌றான்". கர்ம ஞான பக்தி யோகம் என்ற உபாயம்ஏதும் செய்யாத ஜீவனுக்கு ஏதோ ஒரு சாக்குவைத்து உபகாரம் செய்கிறான் இதற்கு பயனாக எம்பெருமான் திருவுள்ளம் உகக்கும். கைங்கர்யத்தில் ஈடுபடச் செய்ய ப்ரார்த்திக்கவேணும். இதற்கு நிபுண க்ருத்யம்என்று பெயர். மோக்ஷோபாயம் முட்டும்வரை எம்பெருமான் செய்யும் 27 உபகாரங்கள் 

1. நல்ல ஸ்ருஷ்டியில் சேர்த்து வைத்துள்ளான். ஸத் உபதேசங்களைக்கேட்கச்செய்கிறான் 

2. எம்பெருமானைப்புரிந்து கொள்ள வேதங்களைக் கொடுத்துள்ளான். ரிஷிகள்மூலம் ஸாஸ்த்ரங்களைஅளித்துள்ளான் 

3. குரு பரம்பரை தந்து வேத ஸாஸ்த்ரங்ளை ஜீவன்களிடம் கொண்டு சேர்க்கிறான். 

4. வேத தர்மத்தைக்காப்பாற்ற தத்தாத்ரேய அவதாரம் செய்கிறான்.இதன் மறு அவதாரமே ராமானுஜர்,ஸ்வாமி தேசிகன் முதலியோர்.வேதத்தையும் கொடுத்து எம்பெருமான் அதனை ரக்ஷித்தும் கொடுத்துள்ளான். 

5. ஆழ்வார்களை ஸ்ருஷ்டித்து வேத ஸாரத்தை அளித்தான்.ஸமுத்ர ஜலம் மேகமாகி நன்னீரைப் பொழிவது போல வேதத்தின் ஸாரமாக சரணாகதி தத்துவத்தைஆழ்வார்கள் ஆசார்யர்கள்மூலம் ஜீவர்ஙளிடம் சேர்க்கிறான்.

6. பாலின் சாரமாக வெண்ணெய் கிடைப்பதுபோல ஆழ்வார்கள் ஆசார்யர்கள் மூலம் வேதத்தின் ஸாரத்தை ப்ரகாசப்படுத்துகிறான். (திருக்கோவலூரில் ஆழ்வார்களை நெருக்கி இயற்பா பாடவைத்தான்.) 

7. வேத தர்ம ஸ்தாபனார்த்தமாக யுகம்தோறும் அவதாரம்செய்து உபகாரம் செய்கிறான்.பதி பத்நீ தர்மத்தை ராமாவதாரத்தில் அனுஷ்டித்துக்காட்டினான்.

8. தனது வடிவழகாலும் சீலத்தாலும் ரிஷிகளை மோஹித்தான் ராமாவதாரத்தில்.தண்டகாரண்ய ஸஞ்சாரம் 12 வருஷகாலம் ரிஷிகளின் த்யானத்துக்காகவே அமைந்தது. வானரங்களும் மயங்கிய தேக வஸீகரம் ராமபிரானுக்கு. மஹாபலி மயங்கியது வாமன ஸௌந்தர்யத்தில். சபரீ, குஹனிடம் அவன்காட்டிய சீலம் வெளிப்படுகிறது. 

 9. அனுஷ்டானத்தாலும் உப தேசத்தாலும் தர்மப்ரவர்த்தனம் பண்ணிய உபகாரம். ராமாவதாரமே அனுஷ்டானத்திற்காக உண்டானது. ஸத்யம் என்றும் மாறாது எனக்காட்டுவதே ராமாவதார அனுஷ்டானங்கள். க்ருஷ்ணாவதாரத்தில் பகவான் தானே உபதேசம் செய்து அனுஷ்டித்தும் காட்டி உபகாரம் செய்கிறான். ஸாந்தீபினியிடம் கற்கிறான். உத்தவருக்கும் அர்ஜுனனுக்கும் உபதேசிக்கிறான் (7,8,9 அவதார அனுஷ்டான உபகாரம்)

10. "நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அச்சாணிச் சேவகமும் கையடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும் மெய்யிடை நல்லதோர் சாந்தமும் தந்துஎன்னை வெள்ளுயிராக்க வல்ல"-- என்ற பெரியாழ்வார் சொல்படி கட்டுப்பாட்டுடன் அனுஷ்டானத்தை ஆதரிக்கும் குடும்பத்தில் பிறப்பித்து மனசு, சொல், செயல், உணவு எல்லாவற்றிலும் ஸாத்வீகமாயிருக்கும்படிக்கு உபகாரம் செய்துள்ளான். 

11. ஜைனம்,பௌத்தம்,சார்வாகர்,ஸாங்க்ய,வைசேஷிக மதங்களின் போதனைகளைக் கேட்க நேர்ந்தாலும் கலங்காத மனத்துடன் இருக்கப்பண்ணிய உபகாரம்.பெருமாளை நன்கு புரிந்துகொண்ட மனம் எதனாலும் கலக்கமடையாது. 

12. ஆசார்ய கடாக்ஷத்துக்குப் பாத்ரமாகும்படி உபகாரம் செய்கிறான்.பகவான் பக்கமே மனம் திரும்புமாறு செய்கிறான். (ஆபி முக்யம் கோடிதனம் உள்ளதற்குச் சமானம்) 

13. ஸாத்வீக அனுஷ்டானபரர்களின் ஸத்ஸங்கத்தில் நம்மைச் சேர்க்கிறான்.பாபங்கள் ஆபத்தானவை என்பதை உணரும் ஞானம் கிடைக்கச்செய்கிறான். ஆசார்யனைஅண்டி பகவத்ஞானம் ரொம்ப சீர்மைபெற்றது என்பதை உணர்ந்து ஸம்ஸார ஸாகரத்தைக் கடக்கச் செய்கிறான். 

14. வேதாந்த ஞானம் என்பது சிறந்த ஐஶ்வர்யம். இந்த ஶரீரமாகிய ஓடம் கரைசேர ஓடக்காரராக ஆசார்யனை அடைய வேணும் என்கிறான் (ப்ரஹ்லாதன் தன் அசுர தந்தையிடம்.ஆசார்ய கடாக்ஷத்துக்கு இலக்காகி ஸதாசார்யரிடம் மோக்ஷோபதேசம் பெறவேண்டுகிறான்). 

15.ஆசார்யர்கள் அவதார புருஷர்கள் "பீதக ஆடைப் பிரானார் பிரம குருவாக வந்து"--என்பதற்கேற்ப க்ருஷ்ணாவதாரத்தின் உத்தேஸ்யமே கீதோபதேசமாக்கி அர்ஜுனனை முன்னிட்டு ஶரணாகதி தத்துவத்தை உபதேசிக்கிறான் பகவான். "பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாக திருத்திப் பணிகொள்வான்"---என்பதுபோல் ஆசார்யனை உபதேஸம் செய்யும்படியும் நம்மைக் கேட்கும்படியும் உபகாரம் செய்கிறான். "அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய நெறிஎல்லாம் எடுத்துரைத்த நிறை ஞானத்தொரு மூர்த்தி"---என்னும்படியாக. 

16. நம்மை அர்ஜுனனாக ஆக்கி பகவான் எடுத்த அவதாரமே ஆசார்ய அவதாரம். லோக ஹிதத்துக்காக பகவான் இப்படி அவதாரம் செய்கிறான். எந்த தகுதியும் இல்லாத நமக்கு ஆசார்யனைக்காட்டி சிஷ்யனாக ஆக்கி பாகவதர்களுடன் கூடும் தகுதியைத்தந்து உபதேசம் பெற்று உஜ்ஜீவிக்கச்செய்கிறான். 

17. அசுர ப்ரக்ருதியாக இருந்ததால் தன் மேன்மையை எண்ணிப் பெருமை கொள்ளும் (ராவணனுக்கு எந்த உபதேசமும் காதில் ஏறாததுபோல) தெய்வ ப்ரக்ருதி வினயத்துடன் எதனையும் பகவதர்ப்பணமாக எண்ணும். ஆசார்யனிடம் வினயத்துடன் தெண்டனிட்டு கைங்கர்யம் செய்து உபதேசம் கேட்க வேணும். 

18. ஶரீரமாகிய போகஸ்தானத்தில் அந்தந்த ஶரீரத்துக்கு ஏற்ப இந்த்ரியங்கள் என்ற போக உபகரணங்களை ஒட்டவைக்கிறான் எம்பெருமான். இதில் மனஸு ரொம்ப முக்யமானது. உபதேச காலத்தில் மனஸு காதுடன் இணைய வேணும்.அப்போதுதான் ஸத் விஷயங்களை க்ரஹிக்கமுடியும்."சிக்"-என மனதைப்பிடித்து நிலைநிறுத்திச் செய்யும் உபகாரம் இது. 

19. ஆசார்யன் செய்யும் மந்த்ரோப தேசங்களைச் சிந்தாமல் சிதறாமல் மனதில் கொள்ளும்படி உபகாரம் செய்கிறான். ("யான் முகமாய் அந்தாதி மேலிட்டு அறிவித்தேன். ஆழ்பொருளை சிந்தாமல் கொள்மினீர் தேர்ந்து"---என்கிறார் திருமழிசை பிரான் நான்முகன் திருவந்தாதியில்) 

20.ஆசார்யன் மூலமாய் ரஹஸ்யத்ரயம் எனும் சீரிய பொக்கிஷத்தைத் திறந்து காட்டுகிறான். பரத்வம் (விஷ்ணு) பரமஹிதம் (ஶரணாகதி) பரம புருஷார்த்தம் (கைங்கர்யம்) பரத்வத்தை உணர்ந்து பகவானிடம் ஶரணாகதி செய்து அடையவேண்டியது கைங்கர்ய பலன் என்பதை ஆசார்யன் மூலமாய் புரிய வைத்து உபகாரம் செய்கிறான். (நாராயணனுக்கு நாராயணன் பொருட்டு நாராயணனுக்கே உரித்தான கைங்கர்யத்தில் ஈடுபடச்செய்வதே பரம பருஷார்த்தம்) 

21.ஶரணாகதி என்பது மிகப்பெரிய ஸாஸ்த்ரம். இதில் நமக்கு மஹா விஶ்வாஸம் வரும்படி உபகாரம் செய்கிறான்.பகவத் பக்தியும் ஆசார்ய பக்தியும் சேர்ந்தால் ஆசார்யன் சொன்னவிஷயங்களுடன் சொல்லாத விஷயங்களையும் க்ரஹிக்க முடியும். 

22. இப்படிப் பெற்ற விஶ்வாஸம் கலங்குவதற்கும் வாய்ப்பு வரலாம். பகவான்மீது நம்பிக்கையும் வேதமே ப்ரமாணம் என்று தத்வ ஞானத்தில்திடமாயிருப்பவன் தான் ஆஸ்திகன். மறை உரைக்கும் பொருளை மெய் என நம்புகிறவன் பிற வாதங்களைக் கேட்க நேரிட்டாலும் அதில் புகாமலிருக்கும்படிக்கு எம்பெருமான் சிஷ்ய லக்ஷண பூர்த்தி அளிப்பான். 

23."அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்"-- என்ற ஆழ்வார் சொல்படி ஆசார்யன் அளித்த ஞானம் விஶேஷ ஞானமாக வேணும். ஆசார்ய உபதேசம் பெறுவதற்கு முன்பு ஞானப்பிறப்பு இல்லை. ஞானம் பிறந்த பின் எம்பெருமானை மறக்கவில்லை. "இன்றும் எப்போதும் இனிச்சிறி; தே நின்றாலும் எப்போதும் ஈதேசொல் என் நெஞ்சே! என்றும் கை கழலா நேமியான் நம்மேல் வினைகடிவான் மொய்கழலே ஏத்த முயல்"--- என்னும்படி விவேக விசேஷ முயற்சி மூலம் எம்பெருமான் அனுக்ரஹம் கிடைக்கும். சப்ப 

24. பகவத்கைங்கர்யம் என்ற பலனை ப்ரார்த்திக்கும் மனதைத் தந்து உபகரிக்கினறான்.கோனேரிக் கரையில் குருகாய்பிறக்க ஆழ்வார் ப்ரார்த்திப்பதுபோல. 

25. "துணிமின் இனி நின்னருள் அல்லது எனக்கு"---"நின்னிலங்கு பாதமன்றி மற்றோர் பற்றிலேன்" என்னும் படியான விஸேஷ ஞானம் அருளி உன்னையன்றி யாராலும் எனக்கு குறை நிவர்த்தி வரவேண்டாம் என்ற துணிவைத் தந்து உபகரிக்கிறான். 

26. தன் ப்ரயத்தனமின்றி ஆசார்ய முகத்தான் எம்பெருமானையே பரிசாகப்பெற்ற ஆணடாள் நாச்சசியாரைப்போல ஆசார்ய க்ருபையால் ஶரணாகதி செய்து அவனைஅடைய உபகரிக்கிறான். 

27. ஏதோ ஒரு புண்ய விஸேஷத்தால் நம்மை ஶரணாகதி செய்யும்வரை கொண்டுவிட்டு உபகாரம் செய்துள்ளான். எம்பெருமான் இத்தருணத்தில் ஶரணாகதன் மோக்ஷானுபவ ஸந்தோஷத்தை அடைகிறான். 

ஶரணாகதி நடந்தபின் உள்ள காலத்தில் நிகழ்பவை. 

  • ஶரணாகதி நடந்தபின் ப்ரபன்னன் செய்யும் கைங்கர்யத்துக்கு கால தேச தோஷத்தால் வரும் பாதிப்புகளைத்தடுக்கிறான் எம்பெருமான். ஸஞ்சித பாபம் அழிகின்றது. ப்ராரப்தம் தேகம் இருக்கும்வரை அனுபவிக்கப் படுகிறது. ஶரணாகதிக்குப்பின்அறியாமல்/அறிந்து செய்யும் பாபத்துக்கு ப்ராயச்சித்தம் செய்யவேணும்/தண்டனை அனுபவிக்கவேணும்.
  • கோவிந்தன்ஹ்ருதயத்திலிருந்தால் கலியுகமும் க்ருதயுகமாகும் "இட்டபடை கல்படையாக்கி"--என்பது போல பலமடங்கு பெரியபலனாகக் கிடைக்கும்படிச் செய்வான். 
  • மோக்ஷத்தில் ஆசைப்படும் முமுக்ஷூவுக்கு தேச கால நிமித்த்தால் ஏற்படும் உயர்வு தாழ்வு இன்றி மோக்ஷம் தருகிறான். 
  • ஜீவன் பிரியும் ஸமயம் எம்பெருமான் பற்றிய சிந்தனை வரவேணும் என்பது நியதி. பக்தியோகம் செய்வோர்க்கு இந்த அந்திம ஸ்ம்ருதி அவஶ்யம். யோகிகள் மிகுந்த ப்ரயாசையுடன் இதனை ஸாதிக்கிறார்கள். பீஷமரின் கடைசி தருணத்தில் கண்ணன் நேரே வந்து நிற்கிறான். நம்மைப்போன்றவர்கள் சாதக பக்ஷிபோல் பகவதனுக்ரஹத்தை எதிர்நோக்கி இருக்கவேணும். பகவான் தன்கருணையாலே அந்திம ஸ்ம்ருதியை அளிக்கிறான். "தான் எனக்காய் நினைந்து அருள் செய்யும் அப்பன்"--என்கிறார் ஆழ்வார். நாம் நன்கிருக்கும்போது ஶரணாகதி செய்யவைத்து அந்திம காலத்தில் அவனே ஸ்ம்ருதி கொடுத்துஅனுக்ரஹிப்பது அவன் செய்யும் பரம உபகாரமே.
  • ஹ்ருதயத்திலிருந்து செல்லும் 101 நாடிகளுள் இந்த 101வதுநாடி மூர்தந்ய நாடி. நடுமண்டை வழியேசெல்லும் இந்த நாடிமூலம் ஜீவன் வெளியேறி சூர்ய ரஶ்மியைப்பிடித்துக்கொண்டு மேலே செல்லும். ஹ்ருதயத்தில் உள்ள ஹார்தரூபமான பெருமாள்பரம கருணையால் இதைச் செய்கிறான். மீளா அடிமை கொள்ள ஶ்ரேஷ்டமான மார்க்கத்தில் பயணிக்கிறது ஜீவன்
  • "சேற்றில் விழுந்த சிறுமக்களை பிதா அழுக்குடனே தூக்கிக்கொண்டு கரையேறுமாப்போலே" ஸ்தூல ஶரீரத்தை விட்டு சூக்ஷ்ம ஶரீரத்துடன் ஆத்மா வெளியேறுகிறான். இவை உதக்ரமணகாலத்தில் (ஶரீரத்திலிருந்து ஜீவன் வெளியேறும் காலம்)முமுக்ஷுவுக்கு. பகவான் செய்யும் பேருபகாரம். . 
  • மனுஷ ஹ்ருதயம் மிக நுட்பமானது. அதனுள் அதைவிட நுட்பமாக அந்தர்யாமியாக பகவான் எழுந்தருளியுள்ளான். இதுவும் ஒரு அவதாரத் திருமேனியே. அகிலாண்ட கோடி ப்ரும்ஹாண்ட நாயகனாகிய எம்பெருமான் ஶரணாகதி செய்த ப்ரபன்னனுடைய ஹ்ருதய குஹைக்குள் ஸித்தமாய் வந்து அமர்ந்துவிடுகின்றான். 

  • விரஜாநதி வரை செல்ல உபகாரம்

  • இவ்விதமாய்க் கிளம்பிய ஜீவன் ரஜஸ் இல்லாத ஸத்வமே நிறைந்த விரஜாநதியை அடைகிறான். ஆதிவாஹிகர்கள் என்ற அர்ச்சிராதி தேவர்கள் இந்த ஜீவனுக்கு உபசரணைகள் செய்து விரஜையின் எல்லையில் சேர்க்கிறார்கள். "வேட்டையில் வழிதவறிய ராஜகுமாரனை ரிஷிகள் கண்டு எடுத்து ராஜனிடம் மீட்டுக் கொடுக்க உற்சாகமாக அவனை ராஜன் உபசரிக்குமாபோலே" இந்த ஸம்ஸாரத்தில் வீழ்ந்து உழன்ற ஜீவனை அர்ச்சிராதி தேவர்கள் உபசரித்து அழைத்து செல்கின்றனர். இவ்விதம் சூழ்ந்தகன்று ஆழ்ந்துயர்ந்த ப்ருக்ருதி மண்டலத்தை ஜீவன் தாண்டி பிறவி என்ற சிறையைக் கழித்து விடுகிறான். வித்யுத் புருஷன் விரஜா நதியில்விட விரஜா ஸ்நானம் முடிந்ததும் ப்ராக்ருத ஶரீரம் கழற்றப்படுகிறது. ஜீவன் ஒளிக்கொண்ட சோதியாகிறது. இதனை "களிப்பும் கவர்வுமற்று பிறப்புப் பிணிமூப்பிறப்பற்று ஒளிக்கொண்ட சோதியாய் உடன்கூடுவது என்றுகொலோ"---- என்கிறார் நம்மாழ்வார். விரஜையைக்கடந்தபின் ஜீவன் கொள்ளும் அனுபவத்தை திருவாய்மொழியின் கடைசி பத்து பாசுரங்கள் ("சூழ்விசும்பணிமுகில்") ஆழ்வாரின் அனுபவமாய் விவரிக்கின்றன. ஆக விரஜையைத்தாண்டும் ஜீவன் ஸ்ரீவைகுண்டத்தில் நுழைகிறான். அந்த திவ்ய லோகத்தில் ஸத்கார பரம்பரையாக திவ்ய நகரத்தில் திவ்யவிமானத்துடன் திவ்ய ஆஸ்தானத்தில் திவ்யபர்யங்கத்தில் எம்பெருமான் வீற்றிருக்கிறான். "இருளகற்றும் எறிகதிரோன் மண்டலத்தூடு ஏற்றி வைத்த ஏணிவாங்கி அருள்கொடுத்திட்டு அடியவரைஆட்கொள்வான்"-----(4-9-3) என்ற பெரியாழ்வார் வாக்குப்படி ஜீவனை கடைத்தேற்றி "தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்" கொள்கிறான் எம்பெருமான். ஶ்ரீவைகுண்ட அநுபவம். 
  • "அடியார் குழாங்களுடன் கூடுவது என்றுகொலோ"---என்னும்படி நித்ய சூரிகளுக்குச்சமமான அந்தஸ்தை ஜீவன் அடைகிறான். மனஸாலும் வாக்காலும் ஶரீரத்தாலும் பகவத் விஷயத்தை வெளிப்படுத்தும்படி போட்டியின்றி வைகுண்டவாஸிகளுக்கும் தாஸனாகையால் விபரீத ஆசைகள வராதபடிக்கு அபிமத அநுரூப கைங்கர்ய விஸேஷங்களை அளிக்கிறான் எம்பெருமான். ஜீவன் செய்யும் கைங்கர்யத்தை ஏற்று எம்பெருமான் திருவுள்ளம் உகப்பான். பகவானுகப்ப்பே ஜீவன் அடையும் ஸந்தோஷம். "எல்லா முனிவும் தீர்ந்து சிறைக்கூடத்திலிருந்து புறப்பட்ட ராஜகுமாரனுக்கு ஸ்திரமான யுவ ராஜ்யம் கொடுக்குமாப்போலே"---- ஸத்யஸங்கல்பனான எம்பெருமான் ஶ்ரீவைகுண்டத்தில் ஜுவனுக்கு கைங்கர்ய சாமராஜ்யத்தைக் கொடுத்து ஸந்தோஷிக்கிறான். எம்பெருமான் செய்த இத்துணை அளப்பரிய உபகாரங்ளை ஸ்வாமி தேஶிகன் தன் "அம்ருத ஸ்வாதினி" ப்ரபந்த பாசுரம் மூலம் தொகுத்தளிக்கிறார். "அந்தமிலா பேரின்பம் அருந்த ஏற்கும் அடியோமை அறிவுடனே என்றும் காத்து முந்தைவினை நிரைவழியில் ஒழுகாத எம்மை முன்நிலையாம் தேசிகர் தம் (ஆசார்யன்) முன்னே சேர்த்து மந்திரமும் மந்திரத்தின் வழியும் காட்டி வழிப்படுத்தி வானேற்றி அடிமை கொள்ளத் தந்தை என நின்ற தனித் திருமால் தாளில் தலைவைத்தோம் சடகோபன் அருளினாலே"(.28) 
  • ஶரணாகதிக்கு முன்னும் பின்னும் ஜீவனின் நிலையை நம்மாழ்வார் அருளிச்செய்த பாசுரத்தின் மூலம் ஸ்வாமி விவரிக்கிறார். "பொய்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும் இன்னின்ற நீர்மை இனியாமுறாமை- உயிரளிப்பான் என்னின்ற யோனியுமாய்ப்பிறந்தாய் இமையோர் தலைவா! மெய் நின்று கேட்டரூளாய் அடியேன் செய்யும்விண்ணப்பமே."                  --(திருவிருத்தம் )
  • ஆழ்வார் தன் தீவிர மோக்ஷ ஆசையை இப்பாசுரத்தின்மூலம் வெளிப்படுத்துகிறார். முன்னிரண்டு அடிகளால் பூர்வ உபகாரமமும் பின்னிரண்டு வரிகளால் உத்தர உபகாரமும் காட்டுகிறார். மிக மோசமானநிலையிலிருந்த என்னை இந்த நல்ல நிலைக்குக் கொண்டு நிறுத்திய உன்னிடம் அடியேன் செய்யும் விண்ணப்பம் இது. இதனை ரக்ஷ்கனாகிய நீ எங்களாசை தீர்ந்து முடியும் வரை எங்கள் முன் நின்று கேட்க வேண்டும் என்கிறார் ஆழ்வார். ஶரீரமும் ஆத்மாவும் ஒன்றே என்ற தப்பான ஞானமும், இந்த ஞானத்தால் வந்த ப்ரதிகூலஅனுஷ்டானமும், ரஜஸ் தமஸ்கூடிய அழுக்குடம்பு ஆகியன இது வரையிலானபிறவிகளில் விஞ்சி நின்றது. 
  • இதிலிருந்து எம்மைக்கடைத்தேற்றி நித்யஸுரிகளுக்குச்சமமாக ஆக்க வாத்ஸல்யத்தால் இஙகே வந்து நீ எடுத்த அவதாரங்கள்தான் எத்தனை! நீதான் எங்கள் கதி என உணர்ந்த எங்களுக்கு இனி இந்நிலை வரக்கூடாது.. எங்களை மேலேற்ற நீ கீழே இறங்கி வருகிறாய். இதுவே அவதார ரஹஸ்யம் பரத்வமும் ஸௌலப்யமும் நிறைந்த வன் நீ எனபதை உணர்த்தி எம்மை ஶரணாகதி செய்யச்செய்து நித்ய கைங்கர்ய த்தில் ஈடுபடுத்திப் பேருபகாரம்செய்கிறான் எம்பெருமான். ஆக அவன் செய்த அளவற்ற உபகாரங்களை உலகமறிய என்னைக் கொண்டு "உபகார ஸங்க்ரஹம்" என்ற க்ரந்த்தம் செய்யச் செய்துள்ளான் என்கிறார் ஸ்வாமி. "கழியாத கடுவினையில் படிந்த நம்மை காலமிது என்றொருகால் காவல் செய்து பழியாத நல்வினையில் படிந்தார் தாளில் பணிவித்துப் பாசங்கள் அடைய நீக்கி சுழியாத செவ்வழியில் (திரும்பாத அர்ச்சிராதி மார்க்கம்) துணைவரோடே (ஆதிவாஹர்கள்) தொலையாத பேரின்பம் தர மேல் ஏற்றி அழியாத அருளாழிப்பெருமான்(வரதன்) செய்யும் அந்தமிலா உதவி எல்லாம் அளப்பார் ஆரே" என்ற பாசுரத்தாலே ஸ்வாமி இக்ரந்தத்தைத் தலைக்கட்டுகிறார். 
  • இதுவரை நாமிருந்த நிலையைமாற்றி அளவில்லா உபகாரங்கள் செய்து நம்மை ரக்ஷ்ணம் செய்து வைத்துள்ள எம்பெருமானின் பேருபகாரத்தை நினைந்துருகி நம்பரத்தை அவன்திருவடியில் ஸமர்ப்பித்து அவனுகப்புக்குப் பாத்ரமாகுவோமாக!! 

("GSPK மூலம் நாவல்பாக்கம் ஶ்ரீ.உ.வே.வாஸுதேவாச்சார் ஸ்வாமியின் காலக்ஷேபத் தொகுப்பு)

🙏🙏🌺🌸🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌸🌺🙏🙏

3 comments:

  1. Very well explained in simple words. I listened to the GSPK upanyasam but the essence of it I was unable to understand in detail. After reading this able to understand.

    ReplyDelete
  2. Very well explained in simple words. I listened to the GSPK upanyasam but the essence of it I was unable to understand in detail. After reading this able to understand.

    ReplyDelete