ஸ்வாமி தேஶிகன் அருளிச்செய்த ந்யாஸ தஶகம் என்ற ஸ்தோத்ர க்ரந்தத்தின் தமிழ் வடிவமே அடைக்கலப்பத்து. இப்ப்ரபந்தம் மூலம் ஸ்வாமி தேஶிகன் தேவாதிராஜனின் திருவடிகளில் அடைக்கலமாய்ப் புகுகின்றார். மோக்ஷத்துக்கே உரித்தான க்ஷேத்ரம். முக்திமழை பொழியும் முகில் வண்ணர் உறையும் காஞ்சி க்ஷேத்ரம். கர்ம ஞான பக்தி யோகம் வ்யாஸர், பராஶரர், பீஷ்மர் போன்றவர்களுக்கே உரித்தானதாகி இருந்தது. அகிஞ்சனர்களான நமக்கு எம்பெருமான் காட்டிய உபாயமே ஶரணாகதி. வரதனின் நிக்ரஹ அஸ்த்ரத்தை தன் அஞ்சலி அஸ்த்ரத்தைக் காட்டி வெல்கிறார் ஸ்வாமி தேஶிகன். பேரருளாளன் இல்லையானால் ராமானுஜரும், தேஶிகனுமில்லை. இவர்களில்லையனால் பேரருளாளனில்லை.
1. பிராட்டியிடம் அபசாரப்பட்ட காகாசுரன் எல்லா இடங்களும் அலைந்தோடி கடைசியில் ராமபிரான் திருவடியில் வீழ அதற்கு ஒரு கண்பார்வையைப் போக்கி அபயப்ரதானம் அளித்தான் ராமபிரான். அதேபோல முக்தி தரும் நகரேழில் முக்கியமாகிய காஞ்சியில் அயமேத வேள்வியில் தோன்றிய அத்திகிரி அருளாளன்திருவடியில் தேஶிகன் அடைக்கலம் புகுந்தார். திருமலையில் அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பன் திருவடிக்கீழ் அமர்ந்து புகுந்த நம்மாழ்வார் போல அனன்ய கதித்வம் காண்பிக்கப்படுகிறது இப்பாசுரத்தில்.
2. இப்பாசுரம் அனன்ய ப்ரயோஜனத்வம் பற்றி சொல்கிறது. ப்ரும்ஹ, ருத்ர, இந்த்ர பதவிகள் நிலையற்றது. தீர்க்கமாய் புண்யம் தொடர்ந்தால் மட்டுமே இப்பதவிகள் நீடிக்ககும். ப்ரளயத்தில் இவர்களும் அழிந்து புது உற்பத்தி துவங்கும் புண்யபாபங்களுக்கான ப்ராயச்சித்தமே ஶரணாகதி. இந்த ஞானத்தைக்கொண்ட ஸ்வாமி கடிமலராள் பிரியாத அத்திகிரி எம்பெருமானின் போக்யமான, பாவனமான, உபாயமான திருவடிகளைப் பற்றுகிறார்.
3. ஶரணாகதிக்கு அங்கங்களாய் ஏதும் செய்ய வேண்டாம். பக்தியோகம் செய்ய யாகம், தானம், தபஸ், த்யானம் போன்ற அங்கங்கள் உள்ளன. ப்ரபத்திக்கு அவரவர் வர்ணாஶ்ரம தர்மம், நித்யகர்மானுஷ்டானங்ள் உண்டு. வேதத்தையும் ஆசார்யர்களின் அறிவுரைகளையும் கொண்டு இவற்றுக்கிடையே உள்ள வித்யாசத்தைத் தெளிந்து அடிபணிந்தால் சீலம்மிக்க வரதன் அருள் புரிவான் என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.
4. இப்பாசுரத்தில் ஶரணாகதிக்கு ப்ரதானமான ப்ரமாணங்களைக் காட்டுகிறார். பிராட்டியிடம் அபராதப்பட்ட காகம், பெருமானிடம் செய்த ஶரணாகதியால் ஒற்றைக்கண் இழந்து உயிர் பிழைத்தது. விபீஷணன் செய்த ஶரணாகதியால் எம்பெருமானின் துணைவனானான். த்ரௌபதிசெய்த ஶரணாகதியால் மான ஸம்ரக்ஷணம் ஏற்பட்டது. பஞ்சவரைப்பலவகையும் பிரியாதிருந்து காத்தான் எம்பெருமான் மஹாபாபியான க்ஷத்ரபந்து கோவிந்த நாமத்தைச்சொல்லி பரகதி அடைந்தான். அறிவுபூர்வமாய் ஆதிமூலமே என்றலறிய கஜேந்த்ரன் மோக்ஷம் பெற்றது. காளியனின் மனைவிகள் செய்த ஶரணாகதி பலித்தது ஆக இந்த ப்ரமாணங்கள் சுலபமும் மென்மையுமாகிய உன் மலரடிகளைப்பற்றி என்னையும் ஶரணடைய வைத்தது என்கிறார் ஸ்வாமி.
5. ஶரணாகதிக்கான ஆறு அங்கங்கள்பற்றியது இப்பாசுரம். எம்பெருமான் உகக்கும் கார்யங்களைச்செய்தல் அவன உகக்காதவைகளை விலக்கல்.
அவனுக்கும் நமக்கும் உள்ள ஒழிக்கமுடியாத பந்தத்தை உணர்ந்து மஹாவிஸ்வாஸம் கொள்ளுதல். நீயே ஆத்மரக்ஷணம் செய்யவேணும் எனப்ரார்த்தித்தல், வேறு உபாயம் ஏதும் அறியேன் என்ற அனன்யகதித்வம் அவன் திருவடியே அடைக்கலம் எனத்தன் ஆத்மாவை சமர்ப்பித்தல் ஆகியன இந்த அங்கங்கள். அஸ்தினாபுரத்திலிருந்த த்ரௌபதியின் ஶரணாகதிக்கு த்வாரகையிலிருந்த க்ருஷ்ணன் கூறை சுரந்து காத்தது அவளது மஹாவிஸ்வாஸத்தாலேயே. ஸ்வாபிகமாகவே கருணையுள்ள எம்பெருமான் நம்பாபக்குவியல்களை பொசுக்கி தரம்பாராதே தாழாதே உயர்ந்த மோக்ஷத்தைக்கொடுப்பான் என்பதில் சந்தேகமே வேண்டாம் என்கிறார் ஸ்வாமி.சேதனர்களுக்கு உரிமையுள்ளதே மோக்ஷம் மாதா பிதா தன் சொத்தை குழந்தைகளுக்குத் தருவதுபோல எம்பெருமான் ப்ரபன்னுக்கு உரிமையுள்ள மோக்ஷத்தைத் தருகிறான். இத்தகைய கருணா நாதனை நான் அடைக்கலமாய் அடைந்தேன் என்கிறார் ஸ்வாமி.
6. நான்குவித நிஷ்டைகளைச்சொல்கிறார் இந்தப் பாசுரத்தில்
- ஸ்வநிஷ்டை - இந்த நிஷ்டை முழு ஸாஸ்த்ர ஞானம்தெரிந்த ப்ரபன்னன் தானே செய்துகொள்வது.
- உத்தி நிஷ்டை - ஆசார்யன் சொல்வதைத் திருப்பிச்சொல்வது. பதவாக்ய வ்ருத்தாந்தமறியாத பாலகன் "பவதி பிக்ஷாந்தேஹி" என்ன, கருணையுள்ளம் கொண்ட மாதா பிக்ஷையளிக்குமாப்போல.
- ஆசார்ய நிஷ்டை - ஆசார்யனே நமக்காகச்செய்யும் ப்ரபத்தி. அரண்மனை ஊழியன் கொண்டுவரும் வஸ்துக்களை அவன் குழந்தை விவரம் அறியாமல் அனுபவிக்குமாப்போல.
- பாகவதநிஷ்டை - ப்ரதிபக்தியினால் நடக்கும் நிஷ்டை. விபீஷணன் தன்னுடன் வந்த ராக்ஷஸர்களுக்குமாக தானே செய்த நிஷ்டை.
இவ்வாறான நிஷ்டையை ஹஸ்திகிரிநாதன் திருவடிகளில் செய்து அடைக்கலமாய் அடைந்தேன் என்கிறார் ஸ்வாமி.
7. நாம் இப்படிச்செய்த பரன்யாசத்தை எம்பெருமான் பரஸ்வீகாரம் செய்கிறான். அபயஹஸ்தம் காட்டி ஒரு முறைசெய்த ப்ரபத்தியே போதும் நான் ஏற்கிறேன் என்கிறான். கைங்கர்யபலனை முழுவதுமாக நமக்குத் தருகிறார். பூர்ணமாகத்தந்தும் குறைவின்றி ப்ரகாசிக்கிறான். இத்தகைய வண்மையுடைய பேரருளாளன் திருவடிகளை நானடைகின்றேன் என்கிறார் ஸ்வாமி.
8. ஶரணாகதி ஆனபின் நாமிருக்கவேண்டிய நிலையைச்சொல்கிறது இப்பாசுரம் ஶரணாகதன் நல்ல திண்மையான மனோபாவத்திலும் செயலிலும் ஈடுபடவேணும். வராஹப்பெருமான், ஶ்ரீராமன், க்ருஷ்ணன் அருளிய பரபத்தியின் மேன்மை பொருந்திய வாக்யங்களை நினைவில் நிறைக்கவேணும். வேறு உபாயமும் நாஸ்திக வாத அபாயமும் ப்ரபத்திக்குப்பின் ப்ரபன்னனுக்கு ஏற்படக்கடாது. ப்ரபத்திக்குப்பின் ஶரீரத்தைப்பற்றிக் கவலைப்படுபவன் நாஸ்திகன். ஆத்மாவை பற்றிக்கவலைப்படுபவன் ஶ்ரீவைஷ்ணவனல்லன் என்கிறார் ராமானுஜர். பூரணத்வமடையவும் ப்ரபத்தியின் மேன்மையை மறவாமலிருக்கவும் பகவத் விஷயங்களில் ஈடுபடுவதும், உள்ளத்துள் ப்ரபத்தி அனுஷ்டித்ததில் ஸந்தோஷிப்பதும், நீசனான தன் ஆகிஞ்சன்யத்தை எம்பெருமான் ஏற்ற கருணையைக் கொண்டாடுவதும், ப்ரபத்தியை நன்கு மனத்தில் ஸ்திரப்படுத்திக்கொள்வதும் ஆகிய இவை ஶரணாகதன் ப்ரபத்தி அனுஷ்டித்தபின் தன்னுள்ளே மேற்கொள்ள வேண்டிய ஸ்திதிகள். ஸம்ஸார தாபாங்களை வெல்ல வண்மையுடைய பேரரருளாளனின் கட்டெழில் வார்த்தைகளால் கலங்கா நிலைஅடைய வேணும் என்கிறார்.
9. வேதம், ஸ்ம்ருதி, இதிகாசம், புராணங்கள், ஆழ்வார்களின் திவ்ய ஸூக்திகள், ஶ்ரீபாஷ்யம் போன்ற க்ரந்தங்களின் அரிய அர்த்தகணங்களை மனஸில் தேக்கினால் அவையே வாள்போல நமக்கேற்படும் கலக்கங்களை அறுத்து பரிதி மதி நயனமுடைய பரமனடியில் சேர்க்கும்.
10. பிராட்டி எம்பெருமான் இவர்களின் க்ருபையும், ஸங்கல்பமும், அவர்களின் கடினமில்லா ஸௌலப்யமும், ஜீவனுக்கும் பரமாத்மாவவுக்கும் உள்ள பந்தமும், கைங்கர்யமும், ஸ்ருஷ்டி ஸ்திதி, லயம் இவற்றை உள்ளடக்கிய ஈஶ்வரத்வமும் கொண்டு கலங்காது நிற்கும் அருள்வரதர் திருவடியாகிய லக்ஷியத்தில் பொருந்திய அம்பென என் பரத்தை வைத்து நான் அமிழ்ந்தேன் என்கிறார் ஸ்வாமி.
11. உபாயமும் பலனும் எம்பெருமானைத்தவிர வேறில்லை. இதனை ஒருமுறை செய்தால் வரக்கூடிய கைங்கர்யம் தொடர்ந்து அனைவர்க்கும் கிடைக்கும் எனக்கண்டு உபாயமும், புருஷார்த்தமும் அவனே என்பதை அறிந்து அருளாளர் திருவடிகளில் ஸமர்ப்பித்த இந்த உரைகள் பத்தும் கோதிலா நல்ல உரைகளே.
[Compiled from the Upanyaasam series of Navalapakkam U.Ve. Vasudevachariar Swami for GSPK during Margazhi (2020)]
ரொம்ப புரியும் படி நன்னா எழுதரேள். வளர்க உங்கள் தொண்டு.
ReplyDeleteSooper. ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறது. மிகவும் ஈசியாக புரியும் படியாக எழுதியதிற்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏
ReplyDelete