மனித தர்மத்தைக்காட்ட வந்த அவதாரமே ஶ்ரீராமாவதாரம்! வேதம்போல் கட்டளையிடாமல் ஒரு ஸுஹ்ருத் மாதிரி ஸௌலப்யத்துடன் நம்மை நல்வழியில் நடத்தும் காவ்யமே ஶ்ரீமத் ராமாயணம் என்ற ஆதிகாவ்யம். ராமயணத்தில் நிகழ்ந்த ரஹஸ்ய, ப்ரகாச நிழ்வுகள் பொய் மிகை இல்லாமல் ஸத்யமாய்க் கூறப்பட்டுள்ளன என்கிறார் ப்ரம்ஹா. ஆகவே காலத்தால் அழியாத ஶாஸ்வத காவ்யமாய் இன்றளவும் சிறக்கின்றது ஶ்ரீமத் ராமாயணம். இக்காவ்யத்தில் நிகழ்ந்த ஸம்பாஷணைகளை விவரிப்பது என்பது ஓர் அரிய நிகழ்வு.
நாவல்பாக்கம் ஶ்ரீ உ.வே. வாஸுதேவாச்சார் ஸ்வாமி, GSPK மூலம் நிகழ்த்திய "ஶ்ரீமத் ராமாயணத்தில் நிகழ்ந்த ஸம்பாஷணைகள்" என்ற உபந்யாஸத்திலிருந்து அடியேன் க்ரஹித்த விஷயங்களைத் தொகுத்திருக்கிறேன்.
குணானுபவம்
*******************************
தஶரதன் ராஜசபையைக் கூட்டி ராம பட்டாபிஷேகம் குறித்து சம்பாஷிக்கிறார் - அனசூயன், பொறுமையன், மதுரவாக்குள்ளவன், க்ருதஞன், ஸத்யன், வினயன், பராக்ரமன், பண்டிதர்களை உபாஸிப்பவன், ஜெயவான், குஶலப்ரஸ்னன். இத்தகைய ஸர்வ நற்குண ஸம்பன்னனாகிய புத்ரனை ராஜாவாக ஏற்க ஏககுரலில் சபை சம்மதித்தது. இந்த சபைக்கு கேகேய ராஜனும், ஜனகரும் அழைக்கப்படவில்லை.
இன்னும் வினயத்துடனும் காமக்ரோத அடக்கமும் கொண்டு விளங்க வாழ்த்தி, வணங்கிய தனயனை அவன்மாளிகைக்கு அனுப்பினார் தஶரதன்.
அனுப்பிய உடனேய தனையனைத் திரும்ப அழைத்து தன் மனக்கிலேசங்களைச் சொல்கிறார்.
துர் நிமித்தங்கள், துர் ஸ்வப்னங்களால் கவலையுற்ற தந்தை தன் க்ரஹநிலை சரியில்லாததால் ஆபத்து ஏதும் வருமுன் பட்டாபிஷேகம் நடத்த முற்பட்டதைக்கூறினார். கைகேயிக்கப் பிறக்க போகும் பிள்ளைக்கு ராஜ்யமளிப்பதாக கேகேய ராஜனிடம் கூறியது உறுத்துகிறது தஶரதனுக்கு அதனால் அவசரம்.
"லக்ஷ்மணா! எனக்கு ராஜ்யம் என்றால் உனக்கும்தான்" என்னும் ராமன் வார்த்தையில் எதிர்கால நிகழ்வு பொதிந்துள்ளது!!
1. கைகேயி - மந்தரா ஸம்வாதம்
************************************************
பட்டாபிஷேகம் எனக்கேள்விப் பட்டதும் உள்ளே நுழைந்த மந்தரா "ஏமுட்டாளே! உன்சௌபாக்யம் நதி வெள்ளத்தில் அடித்துச்செல்லப்போகிறது" என்கிறாள். மந்தரைக்கு அளிக்கப்பட்டிருந்த செல்வாக்கின் உயரம்தெரிகிறது. யார்யாருக்கு எவ்வளவு மதிப்பு தரவேணும் என்பதில் தெளிவு வேணும்.
ஒரு வேலைக்காரிக்கு கொடுத்த இடம் ராஜ்யதையே புரட்டிப்போட்டது.
ராம பட்டாபிஷேகம் என்று கேட்டதும் தன்கழுத்தில் கிடந்த தஶரதன் அணிவித்த மாலையைக் கழற்றிக் கொடுத்தாள் மந்தரைக்கு!!
கோபத்தில் கொந்தளித்த கூனி "நீ கௌஸல்யாவின் வேலைக்காரியாகி பரதன் வேலைக்காரனாகவும் ஆகப்போகிறீர்கள்" என்று பதறுகிறாள். இதைக்கேட்ட கைகேயி
"ராமனுடைய சுகம் பரதனுடையது. ராமன் என்னிடம் தான்மிகுந்த ப்ரீதியுடன் இருக்கிறான். தனக்குச் சமமாகத் தன் தம்பிகளையும் பார்க்கும் குணம் ராமனுக்கு" என்கிறாள்.
இதைக்கேட்டுப் பெருமூச்சுவிட்ட கூனி "ராமனுக்குப்பின் ராஜ்யம் அவன் புத்ரனிடம் சென்றுவிடும். பரதனுக்கு வராது. ராமன் பதவிக்கு வந்ததும் பரதனை நாடுகடத்துவான். அல்லது உலகத்தை விட்டே அனுப்பி விடுவான். லக்ஷ்மணன்தான் எப்போதும் ராமனுடனிருப்பான். பரதனை நெருங்க விடமாட்டான். அதனால் தான் இப்போது கூட அவன் கேகேய நாட்டிற்கு அனுப்பப் பட்டுள்ளான். தஶரதன் உன் கையில் இருப்பதால் வேலையாள் கூட கௌஸல்யாவை மதிப்பதில்லை. ராம பட்டாபிஷேகமானால் கௌஸல்யா உனக்குத் திருப்பித் தருவாள்" என்றதும் கைகேயி யோசிக்க ஆரம்பித்தாள்.
இந்த சமயம் பார்த்து சம்பராஸுர வதம் சமயத்தில் தஶரதன் தருவதாகச் சொன்ன இரு வரங்களைக்கேட்கும் உபாயத்தைச் சொல்லி கைகேயின் மனத்தைக்
குழப்பிவிட்டாள்.
2. தஶரதன் - கைகேயி ஸம்வாதம்
************************************************
பட்டபிஷேக ஏற்பாடுகளைச் செய்த ஸந்தோஷத்துடன் கைகேயி பவனமடைந்த தஶரதன் கோபாக்ருஹத்தில் அலங்கோலமாய்க் காட்சி அளித்த கைகேயியைக் கண்டு திடுக்கிட்டார்.
கோபாவேசத்துடன் பூமியில் கிடந்தவளைப்பார்த்து "உனக்கு ஆபரணம் வேணுமா. வைத்யம் செய்யணுமா. உனக்கு வேண்டியவர்களுக்கு உயர்பதவி தரணுமா வேண்டாதவர்களைத் தாழ்த்தவும், கொல்லவும், தண்டனையை த்தளர்த்தவும் வேண்டுமா செய்கிறேன்" என்கிறார் காமத்தின் உச்சத்திலிருந்த தர்மாத்மா!!
இந்நிலைக்கு ராஜாவைக் கொண்டுவிட்ட கைகேயி பேசுகிறாள்.
தன்மனக்கருத்தைச் சொல்லி வாக்கினால் கட்டிப் போடுகிறாள்.
ராமன் மீது ஆணையிட்டு 33 கோடி தேவர்களும் ஸாக்ஷி, தஶரதன் தந்த வாக்குக்கு என அவர்கைகளைப் பற்றுகின்றாள்.
இதைக்கேட்ட தஶரதன் மூர்ச்சையாகி "உன்காலில் விழுகிறேன். முடிவை மாற்றிக்கொள். ஸமுத்ரமே வற்றினாலும் என் ராமனைப் பிரியமுடியாது. கௌஸல்யா, ஸுமித்ராவைக்கூட உன்பொருட்டு பிரிகின்றேன். ராமன்மீது இதுவரை ஒருதோஷமும் சொன்னதில்லையே நீ! ஏழைமுதல் எல்லோரையும் கவர்பவன் ராமன். இக்ஷுவாகு வம்ஸத்தில் அதர்மம் ஏற்பட்டுவிடக்கூடாது." என்கிறார் தஶரதன்.
கைகேயி பேசுகிறாள் -
"வரம் தந்து பின்வாங்குவது தர்மமாகுமா? உங்கள் உயிரைக் காப்பாற்றிய என்னைக் கைவிட்டு முடிவை மாற்றினால் நான் விஷம் அருந்தி மாய்வேன். கௌஸல்யாவிடம் ஒருநாளும் கையேந்த மாட்டேன்" என்கிறாள்.
இதைக்கேட்ட தஶரதன் தீனமாய்ப்புலம்புகிறார் - "எப்படி நான் இதைஎல்லோரிடமும் சொல்வேன். என்னிடம்மிக ஹிதமாயிருந்த கௌஸல்யாவை உன் பொருட்டு மதியாதிருந்தேன். உன் ப்ரீதிக்காக அவளை அலக்ஷியம் செய்தேன். அபத்யத்தை உண்டவன் படும் அவஸ்தை நிலை எனக்கு இப்போது! போதை தரும் கள்ளைப் பக்கத்தில் வைத்திருக்கும் நிலை! வேடனிடம் பிடிபட்ட பறவைகள் போல உன்னிடம் நான் ஏமாந்தேன். நெறிகெட்ட நான் இனி எங்கும் தலை காட்ட முடியாது. அக்ரஹாரத்தில் வீழ்ந்து கிடந்து இழிவு படும் ப்ராம்ஹணன் நிலை எனக்கு. காடு செல் என்றால் மறுத்துப்பேச மாட்டானே ராமன்! பரதன் பட்டமேற்றால் எனக்கு ஸம்ஸ்காரம் செய்ய வேண்டாம். உன்னைப்போல் எந்தப் பெண்ணும் இருக்கக்கூடாது ராமனைப்பார்த்துக்கொண்டிருந்தால் நான் இளைஞனாக இருக்கின்றேன். அவனைக்காணாவிடில் என் உயிர் தரிக்காது"--என அவள் காலைத்தேடுகிறார் மன்றாட.
"லோகம் ஸத்யத்தில்தான் நிற்க்கும். ராமனை அழைத்து விஷயத்தைச் சொல்லுங்கள்"-- என்கிறாள் கைகேயி.
3. ராம - கைகேயி ஸம்வாதம்
***********************************************
தஶரதனின் நிலையைக் கண்டு கலங்கிய ராமன் தந்தையின் ஸுகக்கேட்டுக்கு என்ன காரணம் எனக்கேட்க "உன்னிடமுள்ள பயத்தினால் விஷயம் ஒன்றை அவரால் சொல்ல முடியவில்லை" என்கிறாள் கைகேயி."அக்னிப்ரவேசம் செய்ய வேண்டுமானாலும்தயாராக இருக்கிறேன். ராமனிடம் இரு வார்த்தைகள் என்றும் இல்லை."--என்கிறார்.
"நீ 14 வருஷம் காடு செல்ல வேணும். பரதன் நாடாள வேணும் அப்பாவின் ஆக்ஞையைப் பரிபாலனம் செய்யும் வாய்ப்பாகக் கொண்டு செல்" - என்கிறாள்.
இதைக்கேட்ட ராமன் பதில் சொல்கிறார்- "இக்கட்டளையை அவரே சொன்னால் சந்தோஷமாய் ஏற்றிருப்பேன். எனது ராஜ்யம், உயிர், ஸீதாவையும் இழக்க சித்தமாயுள்ளேன். ராமனுக்குத் துக்கம் சிறிதும் இல்லை என்று சொல்லவும். ராஜகுமாரனாகிய நான் ரிஷிகுமாரனாகிறேன். பிதாவுக்கு பணிவிடை செய்வதும், அவர் கட்டளையை ஏற்பதும் என் கடமை. பிதா கட்டளையை நீரும் நேரே சொல்ல வில்லை. என்னை குணமற்றவன் என நீங்கள் நினைத்து விட்டீர்கள். அதுதான் வருத்தம். அம்மாவை வணங்கி, ஸீதையை ஆஸ்வாஸப்படுத்திவிட்டுப் புறப்படுகிறேன்"- எனக்கூறிப் புறப்பட்டார்.
4. ராமன் - கௌஸல்யா ஸம்வாதம்
***************************************************
ராமனை ராஜரிஷியாக இருக்க ஆசீர்வதிக்கிறாள் கௌஸல்யா. "ரத்னாஸனத்தை விடுத்து தர்பாஸனத்தில் இருக்கப்போவதைச் சொல்லவா என் வயிற்றில் வந்து பிறந்தாய்!! இதுநாள் வரை எனக்குப் பெரிய சுகம் ஏதுமில்லை. உன்னால் நான் உயிரைத் தரித்திருக்கிறேன் .நீ இல்லையேல் என்னை யார் மதிப்பார்? கைகேயியின் உதாஸீனம் இன்னும் மிகும். எனக்கு மரணம் ஸம்பவிக்க வில்லையே இன்னும்" என வருத்தப் படுகிறாள்.
கோபத்தில் கொந்தளித்த இளையாழ்வான் "தந்தையே ஆனாலும் தவறுக்குத் தண்டனை உண்டு. நான் முன்னின்று ராம பட்டாபிஷேகம் செய்வேன்" -என்கிறார்.
இதைக்கேட்ட ராமன் "தந்தை சொல் மீறாது இத்தர்மத்தை நடத்த அனுமதிக்க ப்ரார்த்திக்கிறான். தந்தை அதர்மமாய் ஏதும் சொல்ல மாட்டார். நாம் மூவரும் தர்மத்தை மதிக்கிறோம். எந்த தர்மத்தைக் காக்க நீ புறப்படுகிறாயோ அத்தர்மம் உன்னைக் காக்கட்டும்". வினதை கருடனுக்கு ஆசி அளித்தது போல கௌஸல்யா ராமனை அனுப்பினாள்.
5. ராம ஸீதா ஸம்வாதம்
********************************************
ராமன் ஸீதாவிடம் சொல்கிறார் - "என் வனவாச காலத்தில் பரதனிடம் என் பெருமை பேசாதே. தந்தை தாய்க்கு பணிவிடை செய்வதில் குறைவு ஏற்படாது பார்த்துக்கொள்"இதைக்கேட்ட ஸீதா பேசுகிறாள் - "ப்ரணய கோபத்தில் உம்மைப் போகச்சொன்னால் என்னையும் போகச்சொன்னதாகிறது. கணவன் சுக துக்கத்தில் மனைவிக்கும் பங்குண்டு. பர்தாவின் நிழலாய் பத்னி இருக்க வேணும்"
ராமன் சொல்லும் பதில் - "வனவாசம் துக்கமானது. தரையில் உறங்குதல், கிடைத்த பழம்முலான வைதான் உணவு, அதிதி ஸத்காரம், வனவிலங்குகளால் பயம், ராக்ஷஸர்களினால் ஏற்படும் கஷ்டம், மூன்று வேளை ஸ்நானம் இவையெல்லாம் ராஜகுமாரிக்கு எப்படி ஸாத்யம்? என்ற ராமனுக்கு ஸீதை அளிக்கும் பதில்---
"ராமனின் பக்கத்தில் இருக்கும்போது தோஷங்களனைத்தும் குணமாகிவிடும். பயமும் இல்லை. ராமனிருக்குமிடம்தான் உன் இருப்பிடம் என என் பெற்றோர்கள் சொல்லியுள்ளனர். என்வாழ்க்கையில் வனவாஸம் உள்ளது என ஜோதிடம் சொல்லியுள்ளது. அந்த தருணம் இதுதான் போலும். எனக்குத் தனிப்பட்ட சுகம் என்று ஏதுமில்லை. உத்தம வீரபுருஷனாகிய நீர் இப்படிப் பேசலாமா? உங்களுடன் நடக்கும்போது கல் முள் எல்லாம் பஞ்சாகிவிடும். தாமரை இலை நீர் பாயசமாகிவிடும். நீங்களில்லாத அயோத்தியே எனக்கு வனவாசம். உம்மோடு வந்தால் வனமே அயோத்தியாவாகும்" -என்று கூற ஸீதையின் உள்ளத்தை அறிந்து கொண்ட ராமன் தன்னுடன் ஸீதையும் வரச் சம்மதித்தார்.
6. ஸுமந்த்ர ஸம்வாதம்
********************************************
ராமாவதாரத்தில் காட்டிற்கு ரதத்தைச் செலுத்தி வருந்திய ஸுமந்த்ரருக்கு க்ருஷ்ணாவதாரத்தில் அக்ரூரராக க்ருஷ்ணனைச் சந்தோஷத்துடன் ஸாரத்ய கைங்கர்யம் செய்து அழைத்து வர ஸங்கல்பித்தார் எம்பெருமான்.
ராமனின் பிரிவைத் தாளாத அயோத்தி ஜனங்கள் உறங்கிய சமயம், தமஸா நதியைக்கடந்து சிங்கபேரிபுரம் சேர்த்தார் ஸுமந்த்ரர்.
ஸீதா ராமனை சயனம் செய்த பின் இளையபெருமாள் காவலாய் விழித்திருக்க குகன் பேசுகிறார் -
"இந்தக்காட்டின் நுணுக்கங்களை நான் நன்கறிவேன். நான் காவலிருக்கிறேன். நீங்கள் கவலையின்றி உறங்கச் செல்லுங்கள்" என்று.
பிசிறில்லாத கைங்கர்யம் கொண்ட லக்ஷ்மணன் பேசுகிறார் - "ராஜாதிராஜன் தரையில் உறங்கும்போது எனக்கு எப்படி உறக்கம் வரும்? என் தாய், தந்தை, அயோத்தி மக்கள் யாரும் உறங்க மாட்டார்கள்". அன்று முதல், 14 வருடம் ஜாகரண வ்ரதம்மிருந்தவர் இளையபெருமாள் .
அதேபோல சஞ்சாரமின்றி 14 வருடங்கள் ஸிம்ஹாஸனத்திலிருந்து இறங்காமல் "ஏகாஸிகா" வ்ரதம் இருந்தாள் பாதுகா தேவி. இந்த இருவருக்கும் சமானம் யாரும் இருக்க முடியாது. காட்டில் படுக்கையை பெருமான் விட்டதில் படுக்கைக்கு (ஆதிசேஷன்) மனதில் கஷ்டம்!
இவற்றை எல்லாம் கைகட்டிக் கேட்டுக்கொண்டிருந்தார் ஸுமந்த்ரர். அடுத்த நாள் ராமன் பயணப்படுகிறார். அப்போது ஸுமந்த்ரர் "உமது பத்னிக்கும், தம்பிக்கும் செய்த அனுக்ரஹம் எனக்கு இல்லையா?" என்கிறார் ராமனிடம்.
ராமன் சொல்கிறார் - "உம்மைப் போல் ஒரு மந்திரி கிடைப்பதரிது. உபசார வார்த்தை இல்லை. நீர் அயோத்தி திரும்பி என் தந்தையின் சோகத்தை மாற்ற வேணும்"-என்று சொல்ல, ஸுமந்த்ரர் "உம் பெற்றோர் போல நானும் சோகப்படுகிறேன். இந்த குதிரைகள் கூட உங்கள் வியோகத்தை ஏற்காது. வெறும் ரதத்துடன் நான் எப்படி அயோத்தி திரும்புவேன். ப்ருத்ய வத்ஸலனாகிய நீர் எனக்கு க்ருபை செய்ய வேணும்" என வேண்டுகிறார்.
ராமன் தன் பரிவாரர்களிடம் காட்டும் ஆதரவும் பரிவும் ப்ரஸித்தமானதாகையால் தன்னையும் உடன் வர சம்மதிக்க வேண்டுகிறார். ஸுமந்த்ரின் எஜமான பக்தியைப்புகழ்ந்து ராமனும் "பர்த்ரு (எஜமான்) வத்ஸலனாகிய நீர் எனக்காக அயோத்திக்குத் திரும்பி நான் கூறும் விஷயங்களைச் சக்ரவர்த்தியிடம் தெரிவித்து அவரை சமாதானப்படுத்துங்கள். ராமனைக்காட்டில் விட்டேன் என்று நீர் சென்று சொன்னால் கைகேயி நிம்மதி அடைவார். பரதனிடம் எல்லா மாதாக்களையும் ஸமமாக பாவிக்கச் சொல்லவும். பெரியோர் வாக்கை உதாசீனப்படுத்தாதிருக்கச் சொல்லவும். கௌஸல்யா மாதாவிடம் அக்னி, புத்ரனுக்குச் சமம் அதனால் ராமனில்லையே என வருந்தாதிருக்கச் சொல்லவும்." என்கிறார்
"என்ன காரணத்திற்காக ராமன் காடடைந்தார் என நானறிய வேணும். எனக்கு மாதா பிதா பந்து ஸகா எல்லாம் ராமனே" என பெருமூச்சடன் லக்ஷ்மணன் சொன்னார் .
அடுத்து ஸீதாபிராட்டி ராமனைப்பார்த்து துக்கத்தால் வார்த்தைகள் வராமல், துளிர்த்த கண்ணீரே வார்த்தைகளாயின (இவை
தஶரதருக்கு ஸுமநத்ரர் தெரிவித்த விஷயங்கள்.)
மூவரும் கங்கையைத் தாண்டும் வரை பார்த்துக்கொண்டிருந்த குகனும் ஸுமந்த்ரரும் தம்மையும் கூட வரும்படி அழைக்கமாட்டார்களா என்று ஏங்கினர். குதிரைகள் அழுது திரும்ப மறுத்தன. ராமனின் பிரிவால் நதி ஜலம் குறைந்தது அயோத்தியில். தாவரங்கள் புஷ்பிக்க மறுத்தன. வெகுநாட்களாய் பிள்ளைப் பேறில்லா தாய் பெற்ற பிள்ளையைக்கண்டு ஸந்தோஷிக்கவில்லை. இவற்றை எல்லாம் கேட்ட தஶரதர்
"கைகேயி குழப்பியபின் நான் ஒரு மந்த்ராலோசனை செய்திருக்க வேணும். ஸத்யத்தை பெரிதும் மதித்து விட்டேன்" - என்று புலம்ப அவரை சமாதானம் செய்யும் வகையில்
"தர்மபரிபாலனம் செய்த ஸந்தோஷம் ராமனுக்கு. கைங்கர்யம் கிடைத்த ஸந்தோஷம் இளையவனுக்கு. ராமனை மனதிலேயே தரித்த ஸந்தோஷம் ஸீதைக்கு" - என எல்லோரும் ஸந்துஷ்டியுடனிருக்கின்றனர் என்கிறார் ஸுமந்த்ரர்.
7. மாரீச ஸம்வாதம்
********************************************
இயற்கையிலேயே நல்லியல்பு படைத்திருப்பதில் ஆச்சர்யமில்லை.ஆனால் துர்குண ராக்ஷஸ குணத்தவன் தபஸ்வியாவது ஆச்சர்யமான விஷயம். அத்தகைய ஸத்பாத்ரனே மாரீசன். தண்டகாரண்யத்தில் ரிஷிகளை ரக்ஷிப்பதாக ராமன் செய்த ப்ரதிஞையின் விளைவே கரதூஷண வதம் . ஹிம்ஸா ருசி படைத்த கர தூஷணர்கள், அகம்பனன், சூர்ப்பனகா ஆகியோர் ரிஷிகளைக் கொன்று சொல்லொணாத் துயரளித்து வந்தனர். ஶரணாகதி செய்த ரிஷிகளைக் காக்கும் பொருட்டு தான் ஒருவனாகவே ஜனஸ்தானத்தில் கர தூஷணர்கள் உள்பட 14,000 ராக்ஷஸர்களைக் கொன்றான். அதில் தப்பிய அகம்பனன் என்பவன் ராவணனிடம் அபயம் வேண்டிச் சென்று பேசுகிறான்.
"அதிமானுஷமும், அதிதைவதத்தையும் கடந்த ஓர் தேஜஸ்வீயின் பராக்ரமத்தை ஜனஸ்தானத்தில் கண்டேன். அஸாத்யமான தோள் வலிமை கொண்ட தீர்க்க பாஹுவானவர் ராமன்"- என அவர் ஸௌந்தர்யத்தை வர்ணிக்கிறான்.
"அப்படியானால் அவன் என் ஶத்ரு" என க்கிளம்பிய ராவணனிடம் "லோக ஶ்ருஷ்டி, ஸம்ஹாரம் செய்யும் பரமன் போல் காட்சியளிக்கும் அவரை உம்மால் வெல்ல முடியாது அதற்கு பதில் ஓர் உபாயம் சொல்கிறேன். சூர்யனின் தேஜஸ் மாதிரி உள்ள அவரது பத்னி ஸீதையைக் கவர்ந்து வந்தால் அந்தப் பிரிவுத் துயர் அவரது வசீகரத்தைக்குறைக்கும்" என்றான்.
மாயா வித்தை நிபுணனாயிருந்த மாரீசனின் நினைவு வந்தது ராவணனுக்கு.
ரிஷியைப்போல் ஆஶ்ரமம் ஒன்றில் தவமியற்றிக் காலம் கழித்து வந்த நிலையில், ராவணன் வந்து அகம்பனன் கூறியவற்றைக்கூறி மாரீசனிடம் உதவ வேண்டுகிறான். மாரீசன் சொல்கிறான் - "உன் குல நாசத்தை உத்தேசித்து யார் இந்த உபாயத்தைச் சொன்னது? குகையில் உறங்கும் சிம்ஹத்தை சீண்ட முயலாதே" எனக்கூறத் தன் இருப்பிடம் திரும்பினான் ராவணன்.
திரும்பிய கையோடு காது மூக்கறுபட்ட கோலத்துடன் சபை
நடுவே வந்து கதறி ராவணனை வசைபாடி உசுப்பி விட்டாள் சூர்ப்பனகா. ராமனின் ஸௌந்தர்யத்தைக் கொண்டாடினாள்.
"தீர்க பாஹு விஶாலாக்ஷ ரூப ஸம்பன்னர்களான ராம லக்ஷ்மணர் கடின ம்ருதுவானவர்கள். மன்மதனை ஒத்த அழகன் அந்த ராமன், தான் ஒருவனாய் 1 1/2 முஹூர்த்த காலத்தில் 14,000
ராக்ஷஸர்களைக்கொன்று மகரிஷிகளூக்கு ஸௌக்யத்தை அளித்திருக்கிறான்."
ஸ்த்ரீகளை ஏறிட்டும் பார்க்காத ராமனிடமிருந்து அகம்பனன் தப்பியது ஸ்த்ரீ வேஷமிட்டதால். சுபாஹுவைக்
கொன்ற ராமன் மாரீசனை வாயுவாஸ்த்ரத்தால் தண்டகாரண்யத்தில் வீழச்செய்தார்.
யக்ஷவம்ஸத்தில் வந்தவன் மாரீசன். அவன் சொன்ன தத்வங்கள் மகரிஷிகள் கூடச் சொல்ல மாட்டார்கள் என்கிறார் வால்மீகி.
மாரீசன் பேசுகிறான் - "ராவணா உனக்கு நல்லதைச் சொல்ல ஆளில்லை. உன்னை ஸ்தோத்ரம் பண்ணி கெடுப்பவர்களே உனைச்சுற்றி உள்ளனர். உனக்கு ஹிதம் சொல்கிறேன் நான். ராமோ விக்ரஹவான் ஸத்யவான். ராமனும் ஸீதையும் அப்ரமேயர்கள். எண்ணற்ற கல்யாண குணங்களைக் கொண்டவர்கள். முதலில் விஶ்வாமித்ர யாக ஸம்ரக்ஷணத்தின்போது அந்த பால சந்த்ரனைக் கொஞ்ச நினைத்தேன். அன்று பார்த்த ரூபம் என் மனத்தை
விட்டகலவில்லை. தண்டகாரண்யத்தில் ரிஷி போலிருந்த ராமனிடம் மான்போல் நெருங்கிய நான் ஓர் அஸ்த்ரத்தில் தப்பினேன். அன்று முதல் எங்கும் ராமனே தெரிகிறான். "ர"என்ற சப்தமே மனப்பயம் ஏற்படச் செய்கிறது" என்றான்.
"நீ ஸீதையை அபஹரிக்க உதவினால் பாதி ராஜ்யம் தருகிறேன். மறுத்தால் உன்னைக்கொன்று விடுவேன்"- என்கிறான் ராவணன்.
"நானே இல்லாதபோது எனக்கு ராஜ்யம் எதற்கு? ராமன்கையால் எனக்கு முடிவு ஏற்படுவதை நான் விரும்புகிறேன். என் போதாத வேளை. அதனால் உன்குலம் நிர்மூலமாகும்" - என்கிறான் மாரீசன்.
ஆக மாரீச மான் தோல் ஆசனத்ததை ராமன் கடைசிவரை உபயோகித்ததை ஸ்வாமி தேஶிகன் - "மாரீச மாயா ம்ருக
சர்ம பரிகர்மித நிர்பர தர்பாஸ்தரணா" - என்கிறார்.
*********************************************to be cont.d*****