Friday, July 30, 2021

ரத்னத்தில் ஒளிந்த ரஹஸ்யம்!!

                                                      
ஆடி உத்ராடம் ஆளவந்தார் திருநக்ஷத்ரம். 
இந்த ஆசார்யன் அருளிய ஸ்தோத்ர ரத்னம் என்ற உயர்ந்த க்ரந்தத்தின் ஒரு ஶ்லோகம் மற்றொரு க்ரந்தம் உருவாகக் காரணமாகியது!
ஸ்வாமி தேஶிகன் அருளிச்செய்த சில்லரை ரஹஸ்யங்கள் 32.
அவற்றுள் "கைகூப்புதலின்" சிறப்பைக் கூறும் ரஹஸ்ய க்ரந்தமே 
"அஞ்சலி வைபவம்".
பகவானைக்குறித்து தபஸ், தானம், யாகம் என்றெல்லாம் செய்யலாம். இவற்றைச் செய்ய திரவியங்கள் சேகரித்து கால அவகாசமும் குறிக்க வேண்டும்.
ஆனால் கை கூப்பிச் செய்யும் அஞ்சலிக்கு நம் இரு கைகள் மட்டுமே
போதும். அவை  எம்பெருமான் திருவடி நோக்கி குவிய வேணும். மேற் சொன்ன தர்மங்களுக்கு உருகாத எம்பெருமான் ஆஶ்ருதனின் அஞ்சலிக்கு உருகி உவக்கின்றான். 

மணிப்ரவாள நடையிலமைந்த இக்ரந்தம் பல விஷயங்களை உள்ளடக்கியுள்ளது.
ஆளவந்தார் அருளிய "ஸ்தோத்ர ரத்னம்" என்ற க்ரந்தத்தின் 28ம் ஶ்லோகத்தின் வ்யாக்யானமே இந்த "அஞ்சலி வைபவம்"
இதற்கான தனியனும் தனியாக உள்ளது‌.

"த்வதங்ரி முத்திஸ்ய கதாபி கேனசிது
யதா ததாவாபி ஸக்ருத் க்ரதோஞ்சலி:
ததைவ முஷ்ணாத் யஸுபான்யஸேஷத்
ஶூபானி புஷ்ணாதி நஜாது ஹீயதே"

त्वदङ्घ्रिमुद्दिश्य कदापि केनचित्
यथा तथा वापि सकृत्कृतोञ्जलिः ।
तदैव मुष्णात्यशुभान्यशेषतः
शुभानि पुष्णाति न जातु हीयते ॥

இதுவே ஆளவந்தார் அருளிய ஸ்தோத்ர ரத்னத்தின் 28ம் ஶ்லோகம்.
  • த்வதங்க்ரிம் - உன் திருவடியைப் பற்றி யார், எப்படி, எப்போது அஞ்சலி செய்திருந்தாலும் அது அவர்களது ஐஶ்வர்யத்தைப் பலமுறைப் பெருக்கும். கை கூப்புதலுக்குரியவன் எம்பெருமான் ஒருவனே. ப்ரம்ஹா உள்ளிட்ட அனைவரும் ஒரு வரம்புக்குட்பட்டவர்கள். இவர்கள் பகவானிடமிருந்து வந்தவர்கள்‌. அவன் கட்டளைப்படி ஸ்ருஷ்டி, ஸம்ஹாராதிகளைச் செய்பவர்கள். எம்பெருமான் திருவடியை உத்தேசித்து அஞ்சலி செய்வதற்கு கால நியமம் கிடையாது. கிழமை, மாதம், அயனம், பக்ஷம், நக்ஷத்ரம் ஆகியன சில பல காரியங்களைச் செய்ய வரம்பிடுகின்றன. அஞ்சலி எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

  • கேனசித் - அஞ்சலி செய்ய க்ருஹஸ்தன், ஸந்யாசி, ஶரணாகதி செய்தவர் என்ற வேறுபாடு கிடையாது. யாரும் செய்யலாம். யாகம் முதலியவை தக்ஷிணை தந்தபின்தான் பூர்த்தி யாகும். பலன் தரும். ஆனால் அஞ்சலி என்ற கார்யத்துக்கு ஏதும் தேவையில்லை. 

  • யதா ததாவாபி - மேலும் அஞ்சலியைத் தலைக்க்கு மேலேயோ, ஹ்ருதயத்தருகேயோ செய்யலாம். மானஸீகமாவும் செய்யலாம்.(கையில்லாதவன் இம்முறையில்தான் அஞ்சலி பண்ணமுடியும்)

  • ஸக்ருத் - ஒரு முறை செய்தாலே போதும். பலமுறையும் செய்யலாம். எல்லா தர்மங்களிலும் சிறந்தது விஷ்ணு தர்மம். அதில் கோவிலைச் சுத்தம் செய்வது, கோலமிடுவது, மாலை தொடுத்தல், திருவிளக்கேற்றல், நாம ஸங்கீர்த்தனம் செய்தல் என்ற கைங்கர்யங்களைச் சொல்லும் போது மிக உயர்ந்ததாக அஞ்சலி முத்ரையைக் குறிப்பிடுகிறது. இதை நாம் செய்யும்போது உவந்த எம்பெருமான் "அபயமுத்ரையைத்" நமக்குத் திருப்பித் தருகிறான்.

  • ததைவ முஷ்ணாதி அஶுபான்ய ஶேஷத: - ஶரணாகதி தேஹாவஸானத்தில் பலன் தரக்கூடியது. ஆனால் அஞ்சலி, செய்ததும் பலன் தரக்கூடியது. எப்படி எனில் கைகூப்பும் செய்கை அஶுபங்களை எல்லாம் மீதமின்றித் திருடி விடுகிறது. மருந்து சாப்பிடும் குழந்தைக்கு விளையாட்டுக் காட்டும் அம்மா போல நாம் செய்யும் அஞ்சலி எம்பெருமானைச் சதிர் பண்ண வைக்கிறது.

  • ஶுபானி புஷ்ணாதி - அஞ்சலி ஶுபங்களைப் பெருகச்செய்யும். நாம் செய்யும் அஞ்சலியால் உகந்த பெருமான் நமக்கு ஆசார்ய ஸம்பந்தத்தை ஏற்படுத்தி ஶரணாகதி செய்யவைத்து மோக்ஷம் பெற எதிர்ப்படும் தடைகளைப் போக்கி கைங்கர்ய பலனைப்பெறத் தகுதி ஏற்படுத்தித் தருகிறான்.

  • நஜாது ஹீயதே: - ஆக அஞ்சலியின் பலன் குறையாது. நமக்கு மட்டுமன்றி நம்மைச் சேர்ந்தவர்களுக்கும் தாற்காலிகமின்றி நிரந்தரமான நித்ய பலனை அளிக்க வல்லது. ப்ரபத்தியின் போது செய்யும் அஞ்சலி மோக்ஷமளிக்கவல்லது (ப்ரசாதம்). மற்ற ஸமயங்களில் செய்யும் அஞ்சலி (க்ருபை) அஶுபங்களைப் போக்கும்.  ஶரணம் அடைந்தோர்க்கு ப்ரசாதமும் க்ருபையும் ஒன்றையொன்று சார்ந்தவையே.

அஞ்சலி வைபவத்தை கீழ்க்காணும் அம்ருதாஸ்வாதினி 24th பாசுரம் மூலம் தொகுத்துத் தலைக் கட்டுகிறார் ஸ்வாமி.

"கண்ணன் கைதொழக் கூப்பிய கையின் பெருமைதனை
எண்ணம் கடக்க யமுனைத் துறைவர் இயம்புதலால்
திண்ணம் இதென்று தேறித் தெளிந்தபின் சின்மதியோர்
பண்ணும் பணிதிகள் பாற்றிப் பழந்தொழில் பற்றினமே"

யாமுனமுனி காட்டிய வழியில் ஶ்ரீதரனின் திருவடியில் அஞ்சலி செய்வதன் பெருமையை ஸ்வாமி தேஶிகன் அழகுற இவ்வாறு அனுக்ரஹித்துள்ளார்.

(This is an extract from the Varthaa Vaibhavam by U.Ve.Navalpakkam Yagnam Swami during the 750th year celebrations of Swami Desikan in 2018) 

************🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌷🌷🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏*****************

No comments:

Post a Comment