Wednesday, August 25, 2021

ரஹஸ்ய ஶிகாமணி!!
















ஸ்வாமி தேஶிகன் அருளிச் செய்த ரஹஸ்ய க்ரந்தங்களில் ஒன்று "ரஹஸ்ய ஶிகாமணி".

ஶிகாமணி என்றால் தலைசிறந்தது என்று பொருள். பகவான் செய்த விபவாவதாரங்களில், மூன்று அவதாரங்களில் சரம ஶ்லோகங்களை அருளியிருக்கிறார். 

  1. ஶ்ரீவராஹ சரமஶ்லோகம்
  2. ஶ்ரீராம சரமஶ்லோகம்
  3. ஶ்ரீக்ருஷண சரமஶ்லோகம்.

இவை மூன்றுக்கும் ஸ்வாமி தேஶிகன் வ்யாக்யானம் ஸாதித்துள்ளார். இவற்றுள் தனிப்பெருமை வாய்ந்தது வராஹ சரம ஶ்லோகம் எனகிறார் ஸ்வாமி.

யாராக இருந்தாலும் மோக்ஷம் அடைய அந்திம ஸ்ம்ருதி அவஶ்யம். அதாவது உயிர் பிரியும் சமயத்தில் எம்பெருமான் நினைவு இருந்தால் மோக்ஷம் உறுதி. அப்படி இல்லையானால் நாம் எந்த நினைவுடன் முடிகின்றோமோ அந்தப் பிறவியைத் திரும்ப அடைகிறோம். கடைசி தறுவாயில் படும் அவஸ்தையில் எம்பெருமான் நினைவை ஜீவன் பெறுவது சாத்யமா? இந்தக் கவலையை நமக்காகப் பட்டவர் பூமிப்பிராட்டி. 

இந்த நிலைக்கு பரிகாரமாகத் தன் குழந்தைகளின் மேலுள்ள பரிவால் பூமிப்பிராட்டி ஓர் உபாயம் அருளுமாறு கேட்கிறார் வராஹப் பெருமானிடம். "ஜீவன் நல்ல ஸ்திதியில் இருக்கும்போது  ப்ரபத்தி அனுஷ்டித்தால் அவனது தேஹாவஸானத்தில் என் நினைவைக்கொடுத்து என்னிடம் அழைத்துக் கொள்கிறேன்"--என்கிறான் பெருமான். 

இதைத்தான்

"எய்ப்பென்னை வந்து நலியும்போது*
அங்கேதும் நானுன்னை நினைக்கமாட்டேன்*
 அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்" என்கிறார் ஆழ்வார்.

"அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்"-- என்பது வராஹப் பெருமான் வாக்கு. ஜீவன் மோக்ஷம் பெற இதுவே மிக உறுதியான பிடிப்பு.

மனிதப் பிறவி கிடைப்பது துர்லபமானது. கிடைத்தபின் திரும்ப கீழ்ப்பிறவி அடையக் கூடாது. இதனைத் தவிர்க்க எம்பெருமான் அளித்த உபாயமே "ந்யாஸம்" என்ற அனுஷ்டானம். 

வேதம் எல்லோராலும் படித்துப் பொருள் புரிந்து கொள்ள முடியாது. இதிகாச புராணங்கள்தான் வேதத்தின் உண்மைப் பொருளை உணர்த்துகின்றன. இவற்றுள் ராஜஸ, தாமஸ புராணங்களை உரைத்தவர்கள் ஸாமான்யர்கள். ஏனெனில் அவற்றில் தோஷங்கள் இருப்பதுடன் விபரீத ஞானமும் கொடுக்கும் தன்மையன.

ஸாத்விக புராணங்கள் உயர்ந்தவை .அவை வக்த்ரு, (சொல்பவர்) ஶ்ரோதர்,(கேட்பவர்), விஷய (சொல்லும் விஷயம்), வைலக்ஷ்யண்யம் உடையவை. இத்தகைய ஸாத்விக புராணங்களுள் மிகச்சிறந்தது ஶ்ரீ வராஹபுராணம். இதனைச் சொன்னவர் ஸாக்ஷாத் வராஹப்பெருமான். கேட்டவர் பூமிப்பிராட்டியாகிய தாயார். விஷயம் இவ்வுலகிலுள்ள ஜீவராசிகள் கடைத்தேறச் சொன்ன உபாயம். ஆகவே இது ப்ரமம் (மாற்றிச்சொல்லுதல்), ப்ரமாதம் (கவனக்குறைவு), விப்ரலம்பம் (ஏமாற்று புத்தி) ஆகிய எந்த குறைபபாடுகளின்றி ஸர்வஶக்தனாகிய கருணாமூர்த்தி செய்த உபதேசம்.

"பாசுதூர்ந்துக் கிடந்த பார்மகளுக்குப் 
பண்டொருநாள் மாசுடம்பில் நீர்வாரா மானமிலா 
பன்றியாய் தேசுடைத்தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே"
---என்கிறாள் ஆண்டாள் நாச்சியார் திருமொழியிலே.

ஜகத் பிதாவாகிய வராஹப்பெருமான் ஜகன்மாதாவாகிய பூமிப்பிராட்டிக்கு உபதேசித்த வாக்கியங்கள் மறுக்கப்பட மாட்டாதவை.
எம்பெருமான் எடுத்த அவதாரங்களில் உயர்ந்தது வராஹ அவதாரம். ஏனெனில் - 

  • பரவாஸுதேவன் போலன்றி - (ஶ்ரீவைகுண்டம் சேர்ந்தபின் பரவாஸுதேவன் க்ருபை கிடைக்கும்) இந்த ப்ருக்ருதி மண்டலத்திலே வாழும் சராசரங்களுய்ய பூமியைக் கிளர்ந்தெடுத்துக்  க்ருபை செய்கிறான்.
  • வ்யூகரூபம் போலன்றி - (ஆஶ்ருதர்கள்) நம் பக்கத்தில் கருணையுள்ளவன்.
  • விபவத்தில் மத்ஸ்யாவதாரம் போலன்றி (தன் குஞ்சு நினைத்தால் தாய்மீன் அதனைக்காக்கும்)  ஜீவன் நினைக்காதபோதும் தன் நினைவை ஏற்படுத்தி உத்தாரணம் செய்கிறான்.
  • கூர்மாவதாரத்தில் மந்த்ரமலையால் கடைந்தபோது, கடல் அலைந்து பூமியெல்லாம் அலைக்கழிக்கப் பட்டது போலன்றி அழுத்திய பூமியைத் தன் கோரப்பல்லின் நுனியில் ஏழுலுகும், ஏழ்மலையும், ஏழ்கடலும் அவை அவை இருக்குமிடங்களிலிருந்து நகராது அலுங்காது வெளிக் கொணர்ந்து ஏற்றம் பெற்றான்.

"நான்றில ஏழ்மண்ணும் தானத்தவே * பின்னும்
நான்றில ஏழ்மலையும் தானத்தவே *பின்னும்
நான்றில் ஏழ்கடல் தானத்தவே*அப்பன்
ஊன்றியிடந்து எயிற்றில் கொண்ட நாளே"
-- (திருவாய் மொழி7-4-3) 

மேற்சொன்ன ஏற்றத்தை ச்சொல்கிறார் நம்மாழ்வார் இப்பாசுரத்தில். 

  • நரஸிம்ஹாவதாரத்தில் ஹிரண்யகஸிபுவை ஸம்ஹாரம் செய்தார் எம்பெருமான். கோலவராஹன் பூமிக்கு எந்தக் கேடும் வராது தனது பல்லால் தூக்கி நிறுத்திக் காத்தான்.
  • வாமனாவதாரத்தில் பொல்லாக் குறளுருவாய் பொற்கையில் நீரேற்று மூவடி மண்ணை மஹாபலியிடம் யாசித்தான். வராஹனோ ஹிரண்யாக்ஷனை வென்று மீட்டான் பூமியை.
  • பரஸுராமன் மழுவை சாக்ஷியாக ஏந்தினான். வராஹன் சாக்ஷியாக பூமிப்பிராட்டியையே ஏந்தினான்.
  • ராமாவதாரத்தில் அயோத்திராமன் சராசரங்களைத் தன்தாளால் வைகுந்தம் ஏற்ற வராஹனோ தன் தோளால் சராசரங்களைக் கடைத்தேற்றுகிறான்.
  • பலராமனோ பூமியைக் கலப்பையால் தோண்ட வராஹன் பூமிக்கு எந்த கலக்கமும் இன்றித் தன் கோரைப் பல்லால் காத்தான்.
  • க்ருஷ்ணாவதாரத்தில் கர்ம ஞான பக்தி யோகத்தைக்கூறி குழம்பிய அர்ஜுனனுக்கு கடைசியில் ஶரணாகதியைச் சொல்கிறான் கண்ணன். வராஹனோ முதலிலேயே இதனைச் சொல்லி உய்விக்கிறான்.
  • கல்கி அவதாரம் இனிதான். ஆனால் வராஹாவதாரம் பூத காலத்தில் ஏற்பட்ட பரமானுக்ரஹமானது.

சத்ய ஸங்கல்பனாகிய எம்பெருமான் கர்மாதீனமாக பலனை ஜீவன்களுக்கு அளிக்கிறான். ஆனால் ஜீவன் செய்யும் பிழையைப் பொறுத்து உய்யும் உபாயம் கேட்டருள்வதால் பிராட்டி உயர்ந்தவளாகிறாள். புராண தர்மத்தில் மிக உயர்ந்த பகுதி சரமஶ்லோகம். வராஹ புராணம் நாம் அனுஷ்டிக்க வேண்டிய ப்ரபத்தியைச் சொல்வதால் ஶிகாமணியாயிற்று. 

வராஹப் பெருமான் இரண்டு ஶ்லோகம் ஸாதிக்கிறார். இவற்றின் கூடுதல் விஸேஷம் என்னவென்றால் நாம் என்றோ செய்த ப்ரபத்திக்குத் தானேவந்து கைதூக்கி விடுகிறான்.

மோக்ஷம்பெற இரண்டே வழி. ஒன்று -பக்தியோகம். இது மிகக்கடினமானது. தைல  தாரைபோல் அவிச்சின்னமான பக்தி பகவானிடம் (நம் தேகம் விழும் வரை) இருக்க வேண்டும். பரம்பரையான உபாயங்கள் (கோயிலைச் சுத்தம் செய்தல், கோலமிடுதல், மாலை தொடுத்தல், ப்ர்ஸாதம் தயாரித்தல், நாமசங்கீர்த்தனம் செய்தல்) நேரடியாக மோக்ஷம் தராது. தகுந்த ஆசார்யனைக் காட்டித் தந்து நம்மை ப்ரபத்தி வரை கொண்டு சேர்க்கும்.

இதனையே வராஹப் பெருமான் உபதேசிக்கின்றார். வராஹ சரமஶ்லோகம் என்று அதற்குப் பெயர். ஶரணாகதியின் பெருமை அதில் கூறப்பட்டுள்ளது.

"ஸ்திதே மனஸி ஸுஸ்வஸ்த்தே ஶரீரே ஸதியோநர:

தாது ஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஶ்வரூபஞ்ச மாம் அஜம்.

ததஸ்தம் ப்ரியமாணம் து காஷ்ட்ட பாஷாண ஸந்நிபம்

அஹம் ஸ்மராமி மத்பக்தாம் நயாமி பரமாம் கதிம்"

இதன் திரண்ட பொருள் - 

"எந்த ஒரு ஆத்மா தன் உடம்பும் மனஸும் நல்ல நிலையில் இருக்கையில் உலகத்தையே ஶரீரமாய்க் கொண்ட என்னைச் சரணடைகிறானோ, அவன் உயிர் பிரியும் சமயத்தில் கல், கட்டை போல நினைவின்றி கிடைக்கையில் அவனை மறவாமல் நான் நினைத்து அவன் கைபற்றி பரகதிக்கு  அழைத்துச் செல்கிறேன்"---என்பதாகும். 

இது பெருமானுக்கும் அந்த ஆன்மாவுக்கும் தெரியும். ஸ்தூலத்திலிருந்து சூக்ஷ்ம ஶரீரம் தந்து அழைத்துச் செல்கிறான்.
இப்படி ஞான உபதேசம் செய்து உலகை உய்வித்தபடியால் இவர் "ஞானப்பிரான்" என்று புகழப்படுகிறார்.

ப்ரபத்தியே மோக்ஷத்துக்கு உபாயம் என்பதை ஸ்திரப்படுத்தவே ஸ்வாமி தேஶிகன் இந்த ஶ்லோகத்தின் ஒவ்வொரு பதத்துக்கும் வ்யாக்யானம் அருளியுள்ளார்.

ஸ்திதே மனஸி ஸுஸ்வஸ்தே (स्थिते मनसि सुस्वस्थे)
மனதை ஸ்திரப்படுத்த வேண்டும் ப்ரபத்திக்கு முன்னும் பின்னும். ஸதா சஞ்சரிக்கும்  10 "ம"காரங்களில் முதலிடம் மனஸுக்குத்தான் -

  1. மனஸ் 
  2. மதுக்ஷ (வண்டு)
  3. மேகம்
  4. மானினி (கர்வஸ்த்ரீ)
  5. மகர (மன்மதன்)
  6. மருத்(வாயு)
  7. மா (செல்வம்)
  8. மானமா(மதம்பிடித்தவன்)
  9. மர்க்கடம் (குரங்கு)
  10. மத்ஸ்யம் (மீன்) 

மனதைக் கட்டுப் படுத்துவது காற்றைத் குப்பியில் அடைப்பது போல. அப்யாசமும், வைராக்யமும் அங்குசம் போல மனதை அடக்கும். என்றோ செய்த புண்யவசத்தால் இம்மனிதப்பிறவி கிடைத்துள்ளது. ஸத்வகுணம் கூடினால் இந்த மனக்கட்டுப்பாடு ஏற்படும்‌. ஸதாசார்ய கடாக்ஷம் கிடைத்து ப்ரபத்தியில சேர்த்து விடும். எம்பெருமானே பரதத்வம் ப்ரபத்தியே பரம ஹிதம். மோக்ஷமே பரம புருஷார்த்தம் என்ற தெளிவு பிறக்கும்.

சில கர்மாக்கள் தக்க காலத்தில் தக்க தேசத்தில் செய்தால்தான் தக்க பலனைத்தரும். ப்ரபத்தி செய்ய இதுபோன்ற தடைகள் ஏதும் கிடையாது.

தாது ஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா (धातुसाम्ये स्थिते स्मर्ता)
மனஸும் சரீரமும் ஸ்வஸ்தமாயிருக்க வேணும். தாதுக்கள் ஸாம்யமாயிருக்க வேணும்.

"கிளரொளி இளமை கெடுவதன் முன்னம் மாலிருஞ்சோலை அடைய வேண்டும்" என்கிறார் ஆழ்வார்.

பக்தி யோகனுக்கு யம, நியம, ஆஸனாதிகள் தேவை. ஆனால் ப்ரபத்திக்கு ஆனுகூல்யாதி ஐந்து அங்கங்கள் போதுமானது.

"பன்றியாய் அன்று பாரகம் கீண்ட
பாழியான்ஆழியானருளே*
நன்று நானுய்ய நான் கண்டு 
கொண்டேன் நாராயணா என்னும் நாமம்"--- என்று வராஹன் புகழ் பேசுகிறார் கலியன்.

மனிதப்பிறவி மகத்தான புண்யத்தால் கிடைப்பது. இந்த ஸம்சாரம் என்ற கடலைக் கடக்க உதவும் படகு இந்த ஶரீரம். அது உடையும் முன் இந்த பவக்கடலைக் கடக்க வழிதேட வேணும்.

ஸதியோ நர: (सति यो नरः)
இந்த ப்ரபத்தியை யார் வேண்டுமானாலும் அனுஷ்டிக்க லாம். ஸர்வ அதிகாரத்வம் உள்ளது.
மனுஷ்யர்களுக்கு சரீரத்தையும் தந்து அதனோடு சம்பந்திக்க இந்த்ரியங்களையும் கொடுத்து புத்தியும் அளித்துள்ளான்.
(ப்ரும்ஹராக்ஷஸ்ஸுக்கும், ஸர்ப்பத்துக்கும் ப்ரபத்தி செய்த ஆசார்ய சரித்ரங்கள் உண்டு)


விஶ்வரூபஞ்ச மாமஜம் (विश्वरूपम् च मामजम्)
விஶ்வத்தையே சரீரமாய்க்கொண்ட என்னைச் சேர் என்று அருளி மோக்ஷத்தை கேட்பவர்களுக்கு உடனே தருகிறான்.


காஷ்ட பாஷாண ஸந்நிபம் அஹம் ஸ்மராமி மத்பக்தம் (काष्ठ पाषाण सन्निभं अहं स्मरामि मद्भक्तं)
கல்லையும், கட்டையையும் போல நினைவிழந்து கிடக்கும் என் பக்தனை (க்ருத க்ருத்யனை) நான் நினைத்து பரமாங்கதிக்கு அழைத்துச் செல்கிறேன் என்கிறான்.

"மலையும் குலையும் என்று எண்ணியும் வன் பெரும் புண்திரங்கித்.*   தலையும் வெளுத்த பின் தானே அழிய இசைகின்றிலீர்*                               அலையும் கடல் கொண்ட வையம் அளித்தவன் மெய்யருளே*                         நிலை என்று நாடி நிலை நின்ற பொய்மதி நீக்குமினே" (அம்ருதாஸ்வாதினி-23) 

இதன் பொருள் -
நிலையான மலையும் ப்ரளய காலத்தில் அழியும். என்ற நிலையில் நோயுடன் தலையும் வெளுத்தபின்னும் இவ்வுலக வாழ்வை நீக்க நாம் இசைவதில்லை. அலைகின்ற கடலுள் அழுந்தியிருந்த பூமியை மீட்டளித்த வராஹப் பெருமானின் க்ருபையே ஸ்திரமானது என்று உணர்ந்து அஞானத்தைப் போக்குவோமாக.

ஸ்வயம் வ்யக்தக்ஷோத்ரமான ஶ்ரீமுஷ்ணத்தில் சாளக்ராமத் திருமேனியுடன் எழுந்தருளியுள்ள ஶ்ரீபூவராகனையும் திரு இடவெந்தை திருவலவெந்தைப் பிரானையும், திருமலையில் எழுந்தருளியுள்ள ஶ்ரீ லக்ஷ்மீவராஹனையும் நாம் வாழும்போது நினைவில் கொண்டால், நம்மை அவன் நினைவில் கொண்டு நற்கதி அளிப்பான் என்பது திண்ணம்.

🙏🙏🙏🙏🌷🌷🌸🌸🍁🍁🙏🙏🙏🙏🌷🌷🌸🌸🍁🍁🙏🙏🙏🙏

(Reference - From the Upanyasam series held during Swami Desikan's 750th year celebrations by Uzhappakkam Sri U.Ve. Vijayaraghavachariar Swami)



1 comment: