Monday, February 13, 2023

ந்யாஸ த்ரயீ - Part 6 - ந்யாஸ திலகம்

ந்யாஸ திலகம்

திருமலையப்பன் க்ருபையால் திரு அவதாரம் செய்து பேரருளாளனால் வளர்க்கப்பட்டு திருவரங்கநாதனால் போஷிக்கப்ட்டவர் நம் ஸ்வாமி தேஶிகன். ப்ரதம ஆசார்யனாகிய நம்பெருமாளாலே "வேதாந்தாசார்யன்" என்று பிருதமளிக்கப்பட்டவர். தாம் உருவாக்கிய உபநிஷத் அர்த்தங்களை ப்ரசாரம் செய்ய தக்க பாத்ரமாகத் தேர்ந்தெடுத்த ஸ்வாமி தேஶிகனிடம் தன் பிருதத்தை அளித்துகந்த அரங்கன் இனிவரும் தலைமுறைக்கு அவரையே அவதார புருஷனாக்கினார். வ்யாஸரை "வேதாசார்யன்" என்றழைத்து புராணங்களை உருவாக்கச் செய்ததுபோல வேதாந்த சாஸ்த்ரங்களை அருளச் செய்ய
எம்பெருமான், ஸ்வாமி தேஶிகனை நியமித்தார். பகவத்
ராமானுஜர், ஸ்வாமி தேஶிகன் போன்றோர்களை வளர்த்து நம் ஸம்ப்ரதாயத்தை நிலைப்படுத்திய க்ஷேத்ரம் ஸ்ரீரங்கம். அரங்கன் செய்த லீலைகள் மூலம் விளைந்த ஸ்தோத்ரமே "ந்யாஸ திலகம்". ஸ்ரீபாஷ்யம், ஸ்தோத்ர ரத்னம் ஆகிவற்றுள் அடங்கிய விஷயச் சுருக்கமாக இது அமைந்துள்ளது. 
வரதனைப் போற்றுவது ந்யாஸதஶகம். 
முழுதும் ஶாஸ்த்ரார்த்தமானது ந்யாஸ விம்ஶதி. 
தன்விஷயமாய் ந்யாஸதிலகத்தை உகந்தான் அரங்கன்.

'திலகம்' என்பது வேதத்தில் சொல்லப்பட்ட ஒரு வஶீகரண 'த்ரவ்யம்'. அரங்கனே நம்மை வஶீகரிக்க ஒரு கஸ்தூரி திலகம் சாற்றிக்கொண்டுள்ளான்.
கஸ்தூரி ரங்கனாகிய இவன் தன் பக்தர்களும் இந்த ஸ்தோத்ர திலகத்தால் தன்னை வஶீகரிக்க இந்த ந்யாஸ திலகத்தை எழுதும்படி தன் திருவுள்ளத்தைத் தெரிவித்தான். இத்திலகமிட்டு வருவோர்க்குத் தன் பர்யங்கத்தில் பங்களிக்கிறான் இந்த அரங்கன் என்பது திண்ணம்.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka -1:

गुरुभ्यस्तद्गुरुभ्यश्च नमोवाकमधीमहे । 
वृणीमहे च तत्राद्यौ दम्पती जगतां पती ॥ १॥

குருபரம்பரைக்கு வந்தனம்.
ஆசார்யனை முன்னிட்டுக்கொண்டு செய்வதே ஶரணாகதி.அந்த ஆசார்யனை ஆசார்ய பரம்பரையை நம: என்ற சொல்லால் வேதாத்யேனம் செய்வது போல் பலமுறை சேவிக்க வேண்டும்.ஆசார்ய தனியனைஸேவிப்பது தர்மம். இச்செயல்ஞானத்தைத் தருவதுடன் மோக்ஷம் வரை கொண்டு சேர்க்கும். இத்தனியனை மறக்கலாகாது. உலகுக்கெல்லாம்
ஆதி குருவாயும், தாய் தந்தையராயுமுள்ள ஸ்ரீய:பதியை ஸேவிக்கிறேன் என்கிறார் ஸ்வாமி.
குருப்யஶ்ச...அதீமஹே- நம் ஆசார்யர்களையும், அவரது ஆசார்யர்களையும் வணங்குகிறோம்.
வ்ருணீமஹே....ஜகதாம்பதி- அந்த ஆசார்ய பரம்பரையில் முதல்வர்களாயும், உலகுக்கே தாய் தந்தையராயும் உள்ள திவ்ய தம்பதியை உபாயமாயும், பலனாயும் வரிக்கிறோம்.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka -2:

प्रायः प्रपदने पुंसां पौनःपुन्यं निवारयन् । 
हस्तः श्रीरङ्गभर्तुर्मामव्यादभय मुद्रितः ॥ २॥

திருவரங்கனின் அபய முத்ரையின் அர்த்தம் சொல்லப்படுகிறது.

கத்யத்ரயம், ஸ்தோத்ர ரத்னம் போல, தான் செய்த ஶரணாகதியை ஸ்தோத்ரமாய் அருளியுள்ளார் ஸ்வாமி. நாம் செய்த ஶரணாகதிக்குப் பதில் சொல்லுமாப்போல அரங்கன் தன் அபயமுத்ரையைக்காட்டி மோக்ஷமளிப்பதாய்ச் சொல்கிறான். அபயஹஸ்தம்,
பாதுகையுடன் கூடிய திருவடி இரண்டும் ஶ்ரேஷ்டம்.பரதமுனிவரின் நாட்யஸாஸ்த்ர முத்ரைபோல பாஞ்சராத்ர ஸாஸ்த்ர ஆகமப்படி நம் அஞ்சலிமுத்ரைக்குப் பெருமாளின் அபய முத்ரை பதிலாகிறது.மற்றொரு பதில் "போதும்" என்பதாகும். அதாவது ஒருமுறை செய்த ஶரணாகதி போதும் திரும்பத் திரும்ப செய்ய வேண்டாம் என்பதாகும்.
இந்த தாத்பர்யம் "த்வதா ஶ்ருதானாம்........த்வதீய கம்பீர மனோனு ஸாரிண:" (ஸ்தோத்ரரத்னம் 20)
"உமதடிகள் அடைகின்றேன் என்று ஒருகால்உரைத்தவரை.......அடியிணைகளடைந்தேனே" (அடைக்கலப்பத்து) மூலம் காட்டப்படுகிறது.

திரும்பத் திரும்ப ப்ரபத்திசெய்து 
சேதனனின் ஸேஷத்வ ஸ்வரூபம், எம்பெருமானின் ஔதார்யகுணம், ப்ரபத்தியின் ப்ரபாவம் இவற்றுக்குக் குறைவு ஏற்படுத்தக் கூடாது என்ற விளக்கம் ஸ்வாமியின் திருக்குமாரரின் வ்யாக்யானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ப்ராய: ப்ரபநே..நிவாரயன்--- சேதனர்கள் பலமுறை ப்ரபத்தி
செய்தலை மறுப்பதாய் உள்ள
ஹஸ்தே...அபயமுத்ரிதா---அரங்கனின் அபயஹஸ்தம் அடியேனைக் காக்கவேணும்.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka 3:

अनादेर्निःसीम्नो दुरितजलधेर्यन्निरूपमं 
विदुः प्रायश्चित्तं यदुरघुधुरीणाशयविदः । 
तदारम्भे तस्या गिरमवदधानेन मनसा 
प्रपद्ये तामेकां श्रियमखिलनाथस्य महिषीम् ॥ ३॥

பிராட்டியின் புருஷாகாரம் பற்றியது.

அநாதியாக நாம் தொடரும் இந்த ஸம்ஸாரம் நீங்கச் செய்ய வேண்டிய ப்ராயச்சித்தம் ப்ரபத்தி. இந்த அனுஷ்டானத்தின் முதற்படியாக தாயாரின் திருக்கல்யாண குணங்களை எண்ணி அவளிடம் ஶரணடைய வேணும். யதுகுல திலகனான கண்ணன் தன்னையே ஶரணடையும்படி கட்டளையிட்டுச்சொன்னான்.ரகுகுலதிலகனான ராமன் தன்னை ஶரணடைந்தோரைக் கைவிடேன் என்றான்.ஸீதாபிராட்டியின் கடாக்ஷத்தால் ஸுக்ரீவனுக்கு ராமஸஹ்யம் கிடைத்து ஶரணாகதிபலித்தது ஆனால் வாலிக்கு தாயார் கடாக்ஷம் கிடைக்கவில்லை. மோக்ஷார்த்த ப்ரபத்திக்குத் தாயாரின் புருஷாகாரம் முக்யம்.
  • அநாதேர்...நிருபமம்---அநாதிகாலமாக இந்த ஸம்ஸாரக்கடலைக் கடக்க ஒப்பற்ற
  • விது:ப்ராயச்சித்தம்...வித:----ப்ராயச்சித்தமாக ராமனும் க்ருஷ்ணனும் சொன்னதாக அறிகின்றார்களோ
  • ததாரம்பே...மனஸா---அந்த ப்ரபத்தியைச்செய்ய ஆரம்பிக்கும்போது பிராட்டியின் புருஷாகாரத்தை உள்ளத்தே நினைத்து
  • ப்ரபத்யே...மஹிஷீ----ஸரவேஶ்வரனின் பட்டமஹிஷியான பெரியபிராட்டியை ஶரணடைகிறேன்.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka 4:

महेन्द्राग्नाविष्णुप्रभृतिषु महत्त्वप्रभृतिवत् 
प्रपत्तव्ये तत्त्वे परिणमितवैशिष्ट्यविभवाम् । 
अधृष्यत्वं धूत्वा कमितुरभिगम्यत्वजननीं 
श्रियं शीतापाङ्गामहमशरणो यामि शरणम् ॥ ४॥

தாயார் புருஷாகாரமாயும் உபாயமாயும் இருத்தல்.

தாயார் எம்பெருமானிடம் சேதனர்கள் அணுக உபகரிக்கிறாள். உபாயம், உபேயம், புருஷாகாரம் என்ற மூன்று ஆகாரங்களையும் செய்யும் தாயாரை "ஆகாரத்ரய ஸம்பந்நாம் அரவிந்த நிவாஸினீம்" என்று கொண்டாடுகிறார் ஆளவந்தார்.
பெருமாளும் தாயாருமாகச் சேர்ந்துள்ள நிலையில் அவர்களை ஏகோபாயமாய்க்கொண்டு ப்ரபத்தி செய்கிறேன் என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.
இந்நிலையை விளக்க இரு உதாரணங்கள் தருகிறார். மஹேந்த்ரனைக் குறித்த யாகத்தில் மஹத்வ குணத்துடன் கூடிய இந்த்ரனுக்கு யாகம். 
அதேபோல் அக்னி- விஷ்ணு யாகத்தில் இருவருக்கும் சேர்த்தே ஹவிஸ் அளிக்கப்படுகிறது. தாயார் அத்ருஷ்யத்தைப் போக்கி (not approachable) அபிகம்யத்தை (approachable)அளிக்கிறாள் .
ஆக தன் குளிர்ந்த கடாக்ஷத்தால் எம்பெருமானை அணுகச் சுலபனாக்கி இருவரின் ஸங்கல்பத்தால் மோக்ஷத்தைத் தருகிறார்கள். "எம்பெருமானைச் சொன்ன இடமெல்லாம் பிராட்டியையும் சொல்லியாயிற்று" என்று பாஷ்யகாரரும் குறிப்பிட்டுள்ளார்.

  • மஹேந்த்ராக்னா...ப்ரப்ருதிவது--- பெருமை மிக்க இந்த்ரன், அக்னி விஷ்ணு ஆகியோருக்கு சேர்த்தே ஹவிஸ் அளிக்கப்படுகிறது.
  • ப்ரபத்தவ்யே...விபவாம்--ப்ரபத்திக்கு இலக்கான எம்பெருமானுடன் எப்போதும் கூடியிருப்பவள் பிராட்டி
  • அத்ருஷ்யத்வம்..ஜனனீம்---அணுக முடியாத எம்பெருமானை அணுகும் படி செய்பவளும்
  • ஶ்ரியம்...ஶரணம்---குளிர்ந்த கடாக்ஷமும் உடைய பெரிய பிராட்டியை புகலற்ற நான் பற்றுகின்றேன்.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka 5:

स्वतःसिद्ध श्रीमानमितगुणभूमा करुणया 
विधाय ब्रह्मादीन्वितरति निजादेशमपि यः । 
प्रपत्त्या साक्षाद्वा भजन शिरसा वाऽपि सुलभं 
मुमुक्षुर्देवेशं तमहमधिगच्छामि शरणम् ॥ ५॥

எம்பெருமானைச் சரணடைதல்.

ப்ரும்ஹா முதலானவர்களை ஶ்ருஷ்டித்தவன் எம்பெருமான். ஆனால் அவன் யாராலும் உண்டாக்கப்படாதவன். நித்யமானவன் ஞானமளிப்பவன். எண்ணற்ற கல்யாண குணங்களை யுடையவன். ஸர்வ காரணத்தவன்.
திவ்ய மங்கள விக்ரஹத்துடன் கூடிய அவன் திருவடியில் மோக்ஷவிரும்பியாகிய நான் ஶரணடைகின்றேன் என்கிறார் ஸ்வாமி.
  • ஸ்வதஸ்ஸித்த...கருணயா--- யாராலும் உண்டாக்கப்படாதவனும், எல்லையில்லா கல்யாண குணங்கள் உள்ளவனும், என்றும் பிராட்டியை பிரியாதவனுமாகிய எம்பெருமான் தன் கருணையால்.
  • விதாய...நிஜதேஶாமபிய:---- பிரமன் முதலானோர்களைப் படைத்து தன்கட்டளையால் வேதத்தையும் உபதேசிக்கிறான்.
  • ப்ரபத்யா...ஸுலபம்---பக்தி /ப்ரபத்தி என்ற இருஉபாயங்களால் அடையக்கூடிய வனாக உள்ளான்.
  • முமுக்ஷு...ஶரணம்---அத்தகைய எம்பெருமானை மோக்ஷம் பெற விரும்பும் நான் அடைக்கலமாக அடைகிறேன்.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka 6:

वृन्दानि यः स्ववशयन्व्रजसुन्दरीणाम् 
वृन्दावनान्तरभुवां सुलभो बभूव । 
श्रीमानशेषजनसङ्ग्रहणाय शेते 
रङ्गे भुजङ्गशयने स महाभुजङ्गः ॥ ६॥

கண்ணனே அரங்கனாய் எழுந்தருளியிருத்தல்.

எம்பெருமானின் ஸௌலப்யம், ஸௌஸீல்யம், வாத்ஸல்யம் ஆகிய குணங்களுள் ஸௌலப்யம் மிகப்ரகாசித்தது க்ருஷ்ணாவதாரத்தில்தான். ஆயர்களுடன் தோளொடு தோளிட்டதும், ஆயர்சிறுமியருடன் திருக்குரவை கோத்ததும் அவனது ஸௌலப்யத்தினாலேயே .
பரத்வம்மறைக்கப்பட்டது. அறிவொன்றில்லா ஆய்க்குலத்தைத் தன் ஸௌஸீல்யத்தால் ஆகர்ஷித்தான். 
ப்ருந்தா+வனம் - நெருஞ்சிமுள் காட்டைத் தன் திருவடி ஸ்பர்ஸத்தால் துளஸீ வனமாக்கினான். 
ப்ருந்த+அவனம் - கோபகோபியர் கூட்டங்களை ரக்ஷித்தான். "தோன்றக்கண் காணவந்து" என்கிறார் ஆழ்வார்.
"பரத்வம் தெரிந்து கெட்டானைக்காட்டிலும் (நரதமர்) ஸௌலப்யம் அறிந்து அணுகிய இடைச்சிகள் சிறந்தவர்கள்".

யுகாந்த்ரமாக எத்தனையோ கூட்டங்களை ஸ்வஸமாக்கிய புஜங்கனாகிய எம்பெருமான் மஹாபுஜங்கத்தில் பள்ளிகொண்டுள்ளான், "ஸம்ஸாரக்கிழங்கெடுத்தாரல்லது
எழுந்திரேன்", என்ற பராஸரர் கூற்றுப்படி. எல்லோரையும் வஸீகரிக்கும்படி ஓர் ஸம்ப்ரதாய சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளான் இத் திருவரங்கத்தப்பன்.
  • ப்ருந்தானி...ஸுந்தரீணம், ப்ருந்தாவனாந்தர...பபூவ--- ப்ருந்தாவனத்தில் அழகிய கோபிமார்களைத் தன்வஸமாக்கி எளியனானான்.
  • ஸ்ரீ மான்...ஶேதே, ரங்கே...மஹாபுஜங்க:---அந்த கண்ணனே மக்களை நல்வழிப்படுத்த இந்த அரங்கத்தில் ஆதிசேஷனில் பள்ளி கொண்டுள்ளான்.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka 7:

रङ्गास्तीर्णभुजङ्गपुङ्गववपुःपर्यङ्कवर्यं गतौ 
सर्गस्थित्यवसानकेलिरसिकौ तौ दम्पती नः पती । 
नाभीपङ्कजशायिनः श्रुतिसुखैरन्योन्यबद्धस्मितौ 
डिम्भस्याम्बुजसम्भवस्य वचनैरोन्तत्सदित्यादिभिः ॥ ७॥

எம்பெருமானின் பரத்துவத்தைப் சொல்வது.

திருவரங்கத்தில் பரந்த ஆதிஸேஷ பர்யங்கத்தில் அமர்ந்து ஸ்ருஷ்ட்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் என்னும் லீலாவினோதங்களைச்
செய்து ரஸிக்கும் திவ்ய தம்பதியரைச் சரணடைகிறார் ஸ்வாமி. எம்பெருமானின் நாபீகமலத்தில் கிடக்கும் ப்ரும்ஹா வாகிய தன் குழந்தையின் "ஓம் தத் ஸத்" என்ற வசனத்தைக் கேட்டுப் புன்னகைத்து ரஸிக்கும் நீரே எனக்கும் ஸ்வாமி என்கிறார்.
  • ரங்காஸ்தீர்ண...கதௌ---திருவரங்கத்தில் ஆதிஸேஷ பர்யங்கத்தில் ஸயனித்தபடி
  • ஸர்க்க..பதீ--ஶ்ருஷ்டி ,ஸ்திதி, லயம் ஆகியவற்றைச் செய்து ரஸிப்பவரும்
  • நாபீபங்கஜ...ஸ்மிதௌ, டிம்பஸ்யாம்புஜ...ஸதித்யாதிபி: ---நாபீகமலத்தில் அமர்ந்துள்ள ப்ரும்ஹாவாகிய தன்குழந்தையின் "ஓம் தத் ஸத்" என்ற இனிய சொற்களைக் கேட்டு புன் சிரிப்புடன்ஆனந்திக்கும் அந்த திவ்ய தம்பதியரே நம் தலைவராவார்.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka 8:

घनकरुणारसौघभरितां परितापहरां 
नयनमहश्छटां मयि तरङ्गय रङ्गपते । 
दुरितहुताशनस्फुरितदुर्दमदुःख मषी- 
मलिनितविश्वसौधदुरपह्नववर्णसुधाम् ॥ ८॥

அரங்கனின் கடாக்ஷத்தை ப்ரார்த்தித்தல்.

ஸ்வாமித்வமும், ஸௌஸீல்யமும் ஒன்றை மற்றொன்று சார்ந்திருக்க வேணும். ஸ்வாமித்வம் மிக்க கௌரவமானது. ஸௌஸீல்யம் சுலபத்வமுடையது. உன் பரத்வம் தான் என்னைக்கடைத்தேற்றும் ஆனால் அதற்கு உன் எல்லையற்ற கருணை (ஸௌஸீல்யம்) துணைநிற்க வேணும்.
இதுகாறும் நான்செய்த அனந்தமான பாபங்களை அனுபவித்தோ,
ப்ராயச்சித்தத்தாலோ போக்க முடியாது. இந்த லோகமாகிய பவனத்தில் அக்னியின் புகையால் படிந்த அழுக்கும் புகையும் போக்கவல்லது கார்மேகம் வர்ஷிக்கும் மழையால் மட்டுமே. அதுபோல இந்தஸம்ஸாரத்தில் உழன்று நான் செய்த பாபங்களை உன் கடாக்ஷம் ஒன்றே போக்கி தூய்மை படுத்தும் வர்ண ஸுதா (வண்ணப்பூச்சு) வாக இருக்கட்டும் என்கிறார்.
இதனையே "போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்" என்கிறாள் ஆண்டாள்.
  • கந கருணா....பரிதாபஹராம்--- உனது கருணா ப்ரவாகம் துன்பங்களைப் போக்குவதாக உள்ளது.
  • துரித ஹுதாஶன...துக்க மஷீ--- பாவங்களாகிய தீயால் தோன்றிய புகையால் மாச டைந்த உலகமாகிய மாடத்தை
  • மலிநித...வர்ணஸுதாம்--- உனது கருணா கடாக்ஷம் என்ற வர்ணப்பூச்சால் மட்டுமே சரிசெய்ய முடியும். அந்த கருணை என்மீதும் விழவேண்டும்.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka 9:

दुर्मोचोद्भटकर्मकोटिनिबिडोऽप्यादेशवश्यः कृतः 
बाह्मैर्नैव विमोहितोऽस्मि कुद्दशां पक्षैर्न विक्षोभितः । 
यो माहानसिको महान्यतिपतेर्नीतश्च तत्पौत्रजान् 
आचार्यानिति रङ्गधुर्य मयि ते स्वल्पावशिष्टो भरः ॥ ९॥

இதுவரை அரங்கன் செய்த உதவிகளின் பட்டியல்.

மொய்த்த வல்வினையுள் நின்ற என்னை எத்தனையோ ஜென்மங்களைத் தாண்டச் செய்து இம்மனிதப்பிறவி தந்தாய் அஞாத ஸுஹ்ருதத்தாலே.
இப்பிறவியில் நாஸ்திக மயக்கம் ஏற்பட்டு பிற மதங்களினால் மோஹிக்காது காப்பாற்றினாய்.
குத்ருஷ்ட்டி பக்ஷத்தால் கலக்கம் வராமல் தடுத்தாட்கொண்டாய். அனைத்துக்கும் மேலாக எதிராஜரின் மடைப்பள்ளி ஆச்சானின் பௌத்ரனின் புத்ரனாகிய அப்புள்ளார் என்ற ஆசார்ய சம்பத்தத்தை எனக்களித்து ஶரணாகதி செய்யவைத்த ரங்கபதே! இத்தனை பாடுபட்டு இதுவரை கொண்டு நிறுத்திய பின் மோக்ஷமளிப்பது உனக்கு சுலபமே என்று கார்பண்யத்தை முன்னிட்டுக்கொண்டு சொல்கிறார் ஸ்வாமி.

  • துர்மோச்சோத்பட...க்ருத:----தீர்க்கமுடியாத எண்ணற்ற கர்ம வினைகளால் பீடித்திருந்தாலும் உன் கட்டளைக்குப் பணிந்திருந்தேன்.
  • பாஹ்யைர்....விக்ஷோபித:----வேதத்துக்கு மாறான மதங்களால் கவரப்டாதவனாயும், குத்ருஷ்டிகளினால் பாதிக்கப்படாதவனாயுமிருந்தேன்.
  • யோமாநாஹஸிகோ...பௌத்ரஜான்----- ஸ்ரீராமானுஜருக்கு மடப்பள்ளி கைங்கர்யம் செய்தவரின் கொள்ளுப்பேரனாகிய
  • ஆசார்யா....பர---அப்புள்ளார் என்ற ஆசார்யனிடம் சேர்க்கப்பட்டதால் என்விஷயத்தில் உன் பொறுப்பு சிறிதே உள்ளது.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka 10:

आर्तेष्वाशुफला तदन्यविषयेऽप्युच्छिन्नदेहान्तरा 
वह्न्यादेरनपेक्षणात्तनुभृतां सत्यादिवद्व्यापिनी । 
श्रीरङ्गेश्वर यावदात्मनियतत्वत्पारतन्त्रयोचिता 
त्वय्येव त्वदुपायधीरपिहितस्वोपायभावाऽस्तु मे ॥ १०॥

அதற்கே யுள்ள விஸேஷத்தால் ப்ரபத்தியே மோக்ஷ உபாயமாய் அமையவேணும் என்கிறார் ஸ்வாமி தேஶிகன் இந்த ஶ்லோகத்தில்.

ப்ரபத்தி எல்லா காலத்துக்கும் பொருந்திய ப்ரபாவம் நிறைந்த அனுஷ்டானமாகும். பகவானை அடைய அவனே உபாயம் என்பதே இப்ரபத்தியின் பெருமை. இது மோக்ஷத்துக்கு ஓர் வ்யாஜமாயிருந்துகொண்டு உபாயத் தன்மையை மறைத்து வைத்துள்ளது. இதனுள்ளடங்கிய ப்ரபாவங்களாவன.
  1. ஆர்த்தேஷு ஆஶுபலா --ஆர்த்தர்களுக்கு உடனே பலன் தர வல்லது.
  2. ததன்ய....தேஹாந்தர---வைராக்யம் குறைந்த த்ருப்தர்களுக்கு அடுத்தபிறவி இல்லாது செய்கிறது.
  3. வஹ்ந்யதேரனபேக்ஷணாத்---பக்தியோகத்துக்கு அங்கமாய்ச் செய்வது போல் யாகம்,தானம் முதலியனசெய்ய வேண்டாம்.
  4. ஸத்யாதி வத் வ்யாபிநீம்---அந்தணர் முதல் அந்தியர் வரையுள்ள யாரும் இதை அனுஷ்டிக்கலாம்.

"ஸத்யம் வத" என்று வேதம் சொல்லும் பொது தர்மம் போல இதுவும் வேதமே சொல்லும் பொதுதர்மம். பக்தி யோகம் வைதிக தர்மம்.
ஆக ரங்கனே! உனக்கு பரதந்த்ரன் என்று சொல்லும்
எனக்கு இந்த ஶரணாகதி ஏற்றது என்கிறார் ஸ்வாமி.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
 (to be continued...)

No comments:

Post a Comment