6. பரதேவதா பாரமார்த்திக அதிகாரம்
***************************************************************************
நம் வாழ்க்கை முறையைச் செப்பனிட்டு இக பர சுகங்களை அளிக்க வல்லது நம்ஸம்ப்ரதாயம்.
கல்யாணம்
முடிந்த கையோடு தன் மனைவியைக்கொல்ல வந்த கம்ஸனுடன் தன் தந்தை வஸுதேவர்
நடத்திய ஸம்பாஷணையை நினைவுகூர்ந்து இக்கட்டான நிலையைச் சமாளிக்கும் வழியை
அர்ச்சுனனுக்கு உபதேசிக்கிறான் க்ருஷ்ண பரமாத்மா. நம் ஸம்ப்ரதாயத்துக்கு
ஏற்பட்ட நெருக்கடிகளைத் தீர்த்துக் காப்பாற்றிய நம் ஆசார்யர்களின் நிலையைச்
சற்றேசிந்தித்தால் "த்யாகம்" என்பதன் அர்த்தம் புரியும்.
"ப்ரமாணம்"
என்ற "ஸ்ருதப்ரகாஸிகையை " ஸ்வாமி தேஶிகனும் "ப்ரமேயம்" என்ற அரங்கனை
ஸூதர்ஶனஸூரியும் காப்பாற்றும் பொருட்டு அடைந்த துயரமும் கஷ்டமும் சொல்லில்
அடங்கா! அழியும் தேகத்தைக்காக்க முற்படும் நாம் அழியாத ஆத்ம பலத்தைத்தரும்
ஸம்ப்ரதாயத்துக்குத் தர முற்படுவதில்லை. புனரபி ஜனனம் புனரபி மரணம் என்பதை
ஆத்மரக்ஷணம் தடுத்து நிறுத்தும்.
இதற்குரிய வழிகள்----
1. பர தெய்வம் (மேலான தெய்வம்) எது என நன்கு தெளிதல் வேண்டும்.
2. கர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்பது பற்றி அறிதல்.
3. கர்ணத்ரய ஸாரூப்யம் (அனுஷ்டானம்) தூமலர் தூவி, வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்தல் இம்மூன்றும் ஸௌக்ய ரஸாயனமாய் செயல்படும் என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.
இம்மூன்றினால் எம்பெருமானுக்கும் நமக்கும் நேரடித்தொடர்பு நேர்ந்தபின்
மற்றைத் தெய்வம் நாடுதல் வேண்டாம் என நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
24 படிகளளாகிய
தத்துவங்களைக் கடந்து 25 படியாகிய ஜீவனைத்தாண்டி 26ம் நிலையாக "நானே
தத்வம்" என அபயஹஸ்தத்துடன் ஓங்கி உயர்ந்து நிற்கும் வரதனே பரதெய்வம்.
அவனைக்கண்டுணர்ந்தபின் "உள் வாங்கிய கைக்கு அவன் நீட்டிய கை
ப்ரத்யுக்தம்" என்பதனைத் தெளிவாக மனதில் கொள்ள வேண்டும்.
வ்யாஸர் செய்த ஸத்ய வாக்கை மானஸீகமாய்க் கொண்டு எம்பெருமானைத் தவிர இதர தேவதைகளைத் தொழேன் "என்று ஸங்கல்பிக்க வேணும்.
அல்ப, அஸாரமான குழப்பங்களை மனத்திலிருந்து வெளியேற்றினால் ஸாரம் தானே உள்ளே புகும் என பரதேவதா நிச்சயத்தை ஸ்வாமி ஸ்தாபிக்கிறார்.
இதனை விளக்கும் அதிகார ஸங்க்ரஹ பாஸுரம்.(13)
வாதியர் மன்னும் தருக்கின் மறை குலையச்
சாது சனங்கள் அடங்க நடுங்கத் தனித்தனியே
ஆதி எனாவகை ஆரணதேஶிகர் சாற்றினர்---நம்
போதமரும் திருமாதுடன் நின்ற புராணனையே
***********************************************************************
7. முமுக்ஷூத்வாதிகாரம்
***********************************************************************
சிந்தனை
மனதில் தெளிவைத் தரும். அப்யாஸம் கார்யத்தில் தெளிவைத்தரும். "ஸ்தன்யப்ரஜை
முலையிலே வாய் வைக்குமாப்போல" என்கிறார் ஸ்வாமி. "ராவண்டி மாடு வண்டிக்காரன்
ஓட்டாமலேயே அவன் தூங்கினாலும் பழக்க தோஷத்தில் போகவேண்டிய இடத்துக்குச்
சென்று சேர்வதுபோல" என்கிறார். பாதை பழகிவிட்டால் பயணம் தொடர்வதில்
கஷ்டம் இருக்காது. அவித்யா, கர்மா, வாஸனா இவை வஸ்து இல்லாவிடினும்
தொடரும். ஆக இந்த அழியும் தேகத்தை பகவத் கைங்கர்யம் செய்ய அப்யாஸப்படுத்த
வேணும். "என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக்கொண்டு" என்கிறார் ஆழ்வார்.
இந்த ப்ருக்ருதி மண்டலத்தில் உலகியல் இன்ப துன்பங்களை அனுபவிப்பவர்கள் "பத்தர்" எனப்படுவர்.
இவர்கள் இருவகைப்படுவர் -
1. புபுக்ஷூ --( உலக இன்பத்தில் ஆசை உள்ளவர்)
2. முமுக்ஷூ ---(மோக்ஷத்தில் ஆசை உள்ளவர்)
இந்த முமுக்ஷூ இருவகைப்படுவர் -
1. பக்தர் ---பக்தி யோகம் செய்பவர்
2. ப்ரபன்னன் ---ஶரணாகதி செய்தவன்.
ஸமாஸ்ரயைணம் என்ற ஸம்ஸ்காரத்தால் ஒருவன் ஶ்ரீவைஷ்ணவனாகின்றான். ஆனால் அவன் குலமோ ஜாதியோ மாறுவதில்லை.(பசுபுனிதமானது. கோ யில் பசு இன்னும் புனிதமானது. ஆனால் பசு ஒன்றுதானே அதுபோல)
பக்தி
யோகம் தற்போது வழக்கில் இல்லை. ஆளவந்தாருக்கே இது ப்ராப்தமாக வில்லை. மிக்
கடினமானது. கர்மயோக (இந்த்ரியங்களை அடக்குதல் (ஞானயோக வேதாத்யேனம் செய்வது)
உபநிஷத்தில்
கூறிய 32 வித்தைகளில் ஒன்றை அதன் அங்கங்ளுடன் செய்வது பகதியோகம். கர்ம ஞான
யோகத்தின் முதிர்ச்சியே பக்தி யோகம். தைல தாரைபோல இடைவிடாது இது தொடர
வேணும். இதனால் மோக்ஷமடைய பல பிறவிகளாகலாம்.
3 ஜன்மாக்களுக்கு ப்பின்தான்
ஜடபரதர் மோக்ஷம் பெற்றார். ஶபரீ மோக்ஷம் பெற்றது ராம தர்ஶனத்தாலே என்பது "ஶபரீ
மோக்ஷ ஶாக்ஷீ பூத" என்ற ரகுவீரகத்ய வரிகளில் தெரிகிறது.
இந்த ப்ரபத்தி ஸாஸ்த்ரத்தை நம்மாழ்வார் நாதமுனிகளுக்கு உபதேசித்தார். ப்ரபத்தி இருவகைப்படும்.
1. ஆர்த்த ப்ரபத்தி (இப்போதே மோக்ஷத்தை வேண்டுவது)
2. தேஹாவஸானகாலத்தில் மோக்ஷத்தை ப்ரார்த்தித்து ஶரணாகதி செய்வது. இவர்கள் "த்ருப்தர்" எனப்படுவர்.
"இன்றே இசையில் இணையடி சேர்ப்பர் இனிப்பிறவோம்
நன்றே வருவதெல்லாம் நமக்குபரம் ஒன்றினதே"----என்கிறார் ஸ்வாமி.
ஆக
வைராக்யத்துடன் மோக்ஷத்துக்கு ஆசைப்படுபவன் முமுக்ஷூ என்பதை ஸ்வாமி தெளிவு
படுத்துகிறார்.ஸ்வாமியின் "ஸம்ப்ரதாய பரிஸுத்தி" என்ற க்ரந்தம் நம்
ஸம்ப்ரதாய அடிப்படை விஷயங்களைத் தெளிவுபடுத்துகிறது.
நின்ற புராணன் அடியிணை ஏந்தும் நெடும்பயனும்
பொன்றுதலே நிலை என்றிட பொங்கும் பவக்கடலும்
நன்றிது தீயது இதென்று நவின்றவர் நல்லருளால்
வென்று புலன்களை வீடினை வேண்டும் பெரும் பயனே--(அதி 14)
*************************************************************************
8. அதிகாரி அதிகார விபாக அதிகாரம்
*************************************************************************
மோக்ஷோபாயம் அனுஷ்டிக்கும் அதிகாரிக்கு இரு வழிகள் உள்ளன.
1. பக்தி யோகம் - இது பற்றி முன்பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளது.
2. ப்ரபத்தி---
ஆத்ம ஸமர்ப்பணம்.
உடையவன் பரமாத்மா. அவனது உடைமை ஜீவாத்மா. இந்த ஜீவனுக்கு
மோக்ஷமளித்துத் தன்னுடன் சேர்த்துக்கொள்ள எம்பெருமான் பெரும் ப்ரயத்னம்
செய்கின்றான்.
கை விரலில் அணிந்த மோதிரத்தை மறதியால்
கழற்றிவைத்தோ அல்லது தொலைத்து விட்டோ ஒருவன் படும் கஷ்டத்தை அந்த அசேதனமான
மோதிரம் படுவதில்லை.அதேபோல எம்பெருமானை இழந்த ஜீவன் ஏக்கமடைவதில்லை. மாறாக
எம்பெருமான்தான் ஏங்குகிறான்.
திருமஞ்சனம் கண்டருளி ஈர ஆடையுடனிருக்கும் அரங்கன் கற்பூரம்காட்டும் ஸமயத்தில் "நீ ஸ்வதந்த்ரனில்லை எனக்குரியவன்"- -எனஸத்யம் செய்வதாய் பராஸரபட்டர் கூறுகிறார். இதனை பட்டருக்கும் அரங்கனுக்கும் இடையே நடக்கும் உரையாடலாக ஸ்வாமி காட்டுகிறார்.
பக்தியோகம் செய்யும் சாமர்த்யமிருந்த போதும் ப்ரபத்தியைத் தானே
அனுஷ்டித்துக்காட்டினார் ஶ்ரீபாஷ்யகாரர். முறைவேறாயினும் அடையும் பலன்
ஒன்றே.
ப்ரபத்தி 4 வகைப்படும்-
1. உத்தி
நிஷ்டை------ஆசார்யன் சொல்வதைத் திருப்பிச் சொல்வது. (மடத்து
ஸம்ப்ரதாயம்) "பதவாக்யார்த்தம் தெரியாமல் தாதிமார் சொன்ன வார்த்தையைச்
சொல்லி ஸார்வபௌம ஶரணாகதி அடைந்த ராஜகுமாரன் போல"--ஆசார்யன் சொல்வதை அப்படியே
திருப்பிச் சொல்லி அனுஷ்டிப்பதுவே உத்தி நிஷ்டை.
2. ஆசார்ய
நிஷ்டை---நமக்காக ஆசார்யனே செய்யும் ப்ரபத்தி (முனித்ரய
ஸம்ப்ரதாயம்) "ஒருமலை முகட்டிலிருந்து மறுமுகடு தாவும் சிங்கத்தின் உடம்பில்
ஒட்டிய பூச்சிகள் எந்த முயற்சியும் சக்தியுமின்றி மறுமுகடு
செல்வதுபோல"--ஆசார்ய நிஷ்டை.
3. ஸ்வனிஷ்டை---தனக்குத் தானே செய்து கொள்ளும் ஶரணாகதி (தற்போது வழக்கிலில்லை)
4. பாகவத நிஷ்டை----விபீஷணன் தனக்கும் தன்னுடன் வந்த நால்வருக்குமாகச் செய்த ப்ரபத்தி.
ஶ்ரீபாஷ்யகாரர்
தன் சிஷ்யர்களனைவர்க்கும் சேர்த்து பங்குனி உத்தரத்தன்று ஶரணாகதி
அனுஷ்டித்தார்.
"குருடன் கண்ணுடையவனின்
கோலைப்பிடித்துக்கொண்டு
நடக்குமாப்போல"
"முடவன் ஓடக்காரன் துணைகொண்டு
படகேறி அக்கரை சேருமாப்போல"
"ராஜஸேவகர்கள்
கொணர்ந்த போகங்களை அனுபவிக்கும் அவர்களது குழந்தைகள் அவை எங்கிருந்துவந்தன
என்று அறியாததுபோல"---ஆசார்யன் நமக்காக ப்ரபத்தி செய்கிறார்.
'ஶரணாகதி' எனறால் எனக்கு அர்த்தம் தெரியாது. ஆனால் உனக்குத்தெரியுமே வரதா! நீ உன்திருவடிகளை எனக்குகீகொடு"
என்கிறார் கூரத்தாழ்வான்..
வேண்டும் பெரும்பயன் வீடென்று அறிந்து விதிவகையால்
நீண்டும் குறுகியும் நிற்கும் நிலைகளுக்கு ஏற்கும் அன்பர்
மூண்டொன்றில் மூல வினை மாற்றுதலில் முகுந்தனடி
பூண்டன்றி மற்றோர் புகல்ஒன்றிலை என நின்றனரே--(அதி 15.)
*********************************************************************
9. உபாய விபாக அதிகாரம்
*********************************************************************
ஶரணாகதி ஶாஸ்த்ரம் உலகிலுள்ள எல்லா ஜீவன்களுக்கும் பொது என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.
இஞ்சிமேட்டழகியசிங்கரின் ஆசார்யன் ஶ்ரீமுஷ்ணம் ஸ்வர்ணம்
ஸ்வாமி வஸ்த்ரம் உலர்த்தும் போது அந்த கொம்புபட்டுக்கீழே விழுந்த வௌவ்வாலுக்கு ப்ரபத்தி செய்ததும் ப்ருக்ருதம் அழகியசிங்கர் சில தினங்களுக்குமுன் பசு ஒன்றினுக்கு ப்ரபத்தி செய்ததும் மேற்சொன்ன கருத்தை மெய்ப்பிக்கின்றன.
கர்மயோகமும்
ஞானயோகமும் பக்தியோகத்தின் வழியாகப் பலனைக்கொடுக்கும். பக்தியோகம் நேரே
பலனுக்குச் சாதனமாகும். அதனை அறிந்து அனுஷ்டிக்கும் நிலை தற்போது
இல்லையாகிவிட்டது. அதனால் அந்த பக்தியோக ஸ்தானத்தில் பகவானைப்ரார்த்தித்து
ப்ரபத்தி செய்கிறோம்.
அவரவர் வர்ணாஶ்ரம தர்மத்தை அனுஷ்டித்து பகவத்ப்ரீதியுடன் எம்பெருமானுக்கு உகப்பவைகளைச்செய்து அவனுக்கு உகப்பில்லாததை விடுத்து அவனே ரக்ஷகன் என்ற மஹாவிஶ்வாஸத்துடன்
ஆகிஞ்சன்யத்துடன்
அவன் கைங்கர்யத்தை ப்ரார்த்திப்பதே ஶரணாகதி. இப்படியாக தர்மத்தை
அனுஷ்டிப்பவன் தாழ்ந்த குலத்தவனாயினும் உயர்குலத்தவனாய் மதிக்கப்படுவான்.
ஞான யோகம் ஆத்ம ஸ்வரூபத்தைக் காட்டித்தரும், பகதியோகம் அந்த ஆத்மாவுக்குள் உறையும் எம்பெருமானைக்காட்டித்தரும்.
விலை உயர்ந்த
ரத்னம் வைத்துள்ள பேழையைத் தொலைத்த ஒருவன் பேழையைக் கண்டுபிடித்ததும்
த்ருப்திஅடைந்து அதனுள்இருக்கும் ரத்னத்தை மறந்தாற் போன்றது பகதி யோகம்
செய்யாத ஞானயோகம்.
ஆத்மானுபவம் செய்துவிட்டு அதனுள்ளுறையும் அந்தர்யாமியை அறியாதவனை அறிவிலி என்கிறார் ஸ்வாமி.
"உள்ளிருக்கும் ரத்னம் காண்கைக்கு
கிழிச்சீரை பார்த்தாரபோல"
ஆக இவற்றின் அடிப்படையில் செய்யக்கூடியதே ப்ரபத்தி.
இதனைச்செய்யாது மோக்ஷமடைய வழியில்லை என ஆணித்திறமாக ஸ்வாமி ஸாதிக்கிறார். பெருமானே அவனை அடையும் வழியாகவும் (உபாயம்)
அடையும் பலனாகவும் (உபேயம்) இருக்கிறான். தன்னை
ஜீவன் வந்தடையத் தானே ஸாதனமாயிருக்கும் எம்பெருமானின் மேன்மையை உபநிஷத்துக்கள் உத்கோஷிக்கின்றன.
ஆக கர்ம, ஞான, பக்தி யோகங்களைவிட ப்ரபத்தியே மேலானது எம்பெருமானை அடைய எனத் தெளிவு படுத்துகிறார் ஸ்வாமி.
"நின்ற நிலைக்குற நிற்கும் கருமும் நேர்மதியால்
நன்று என நாடிய ஞானமும் நல்கும் உட்கண் உடையார்
ஒன்றிய பக்தியும் ஒன்றிலா விரைவார்க்கு அருளால்
அன்று பயன்தரும் ஆறும்அறிந்தவர் அந்தணரே"---(அதி 16)
*****************************************************************************
10. ப்ரபத்தி யோக்யாதிகாரம்
*****************************************************************************
ப்ரபத்தி அனுஷ்டிக்கத் தேவையான தகுதிகளை விவரிக்கிறது இவ்வதிகாரம். ப்ரபத்திக்குப் பொதுவான தகுதிகள்.
1. பலனில் ஆசை
2. சாஸ்த்ரங்களை நன்கறிதல்
3. அறிந்தபடி அனுஷ்டானம் செய்யும் வல்லமை.
4. சாஸ்த்ரங்கள் அனுமதித்த ஜாதி முதலிய தகுதி
இவற்றுள் ப்ரபத்தி அனுஷ்டிக்க மிக முக்யமான தேவைகள்
1. அகிஞ்சனத்வம் - வேறெந்தகைமுதலும் இல்லாமை
2. அனன்ய கதித்வம் - வேறு காப்பாற்றுவாரில்லை என்ற உணர்வு
இவையிரண்டும் முன்னின்று விபீஷண ஶரணாகதியை பலிதமாக்கியது.
பாகவதாபசாரப்பட்ட துர்வாசர் அம்பரீஷனிடமே ஶரணாகதி செய்கிறார்.
அந்தணர் அந்தியர் எல்லையில் நின்ற அனைத்துலகும்
நொந்தவரே முதலாக நுடங்கி அனன்னியராய்
வந்தடையும் வகை வன்தகவேந்தி வருந்திய நம்
அந்தமில் ஆதியை அன்பர் அறிந்து அறிவித்தனரே---(அதி 17)
**********************************************************to be cont.d************
Explained nicely
ReplyDelete