Sunday, May 24, 2020

இப்படி ஒரு ஸம்பாஷணை!!

இடம்                             : ஸ்ரீ வைகுண்டம்
கதா பாத்திரங்கள் : எம்பெருமான், பெரிய பிராட்டி

பிராட்டி: எம்பெருமானே! திமி லோகப்படும் பூலோகம் சில நாட்களாக ஸ்தம்பித்துள்ளதே! தாங்களும் திருக்கண்கள் மூடிய நிலையில் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்துள்ளதன் காரணம் அறிய ஆவல்.

பெருமான்: தேவீ! சொல்கிறேன். வேதங்களை மறைத்து ஒளித்த ஹிரண்யாக்ஷன், பாலகன் பக்த ப்ரஹ்லாதனைப் படுத்திய ஹிரண்யகசிபு, தேவகணத்தை தன்னடிமைப்படுத்திய ராவணாந்தகன், பூலோகமன்னர்களை மண்டியிடவைத்த கம்சன் ஆகிய கொடிய அரக்கர்களை எல்லாம் விஞ்சும் கண்ணுக்குப் புலனாகாத "கொரோனா" என்ற கொடிய அரக்கன் பிடியில் சிக்கியுள்ளது பூலோகம்.

பிராட்டி: ஆகா!அப்படியானால் வழக்கப்படி துஷ்ட்ட நிக்ரஹம் செய்ய நாம் பூலோகம் பயணப்பட வேணுமா ஸ்வாமீ?

பெருமான்: அவசரப்படாதே !பொறு தேவீ. ஜீவன்களின் தாயாகிய உன்தயை புரிகிறது. ராக்ஷஸிகளுக்கும் காக்கைக்கும் பரிந்து உயர்ந்தவளாயிற்றே நீ!! கண்ணுக்குப்புலனாகாத இந்த அரக்கனை வெல்ல "ஆன்மீக அஸ்த்ரத்தை" ஏந்தியுள்ளனர் பூலோகமக்கள்.

பிராட்டி: ஆ! அது என்ன புது அஸ்த்ரம்? இதுவரை தாங்கள் இதனை எந்த அவதாரத்திலும் ப்ரயோகித்ததில்லையே?

ஓஅதுவா என்று தலையசைத்த பெருமான், இதோபார் தேவீ என்று வைகுந்த வாசலைத்திறந்து பூலோகத்தைக்காட்ட,  தன் அகன்ற விழிகளை மலர்த்தி அக்காட்சியைப் பார்த்த பிராட்டி ஆச்சர்யத்தில் உறைந்தாள்!!

அது என்ன தெய்வீகம்!! ஒரு பக்கம் சுந்தரகாண்ட பாராயணம்,
மறுபக்கம் பாகவத ஸப்தாஹம்
இன்னொரு பக்கம் "அஸ்மின் பராத்மன்என்று நாராயணீய பாராயணம், வேறொரு பக்கம்
"இனிஅறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்
இனியறிந்தேன் எம்பெருமானுன்னை
இனியறிநதேன் காரணன்நீ கற்பவைநீ
நற்கிரிசை நாரணன் நீ நன்கறிந்தேன் நான்" என்று நாலாயிர திவ்ய ப்ரபந்தப் பாராயணம்,
தினப்படி அகந்தோறும் ஸஹஸ்ரநாம பாராயணம்,
தேஹ ஆரோக்யமும்  பாதுகாப்பும் வேண்டி ஸுதர்ஸனாஷ்டகம்,
ஸுதர்ஸன ஸதகம்வராஹகவசம்
பீதி அகல அபீதிஸ்தவம்
கூற்றையும்வெல்ல அபாமார்ஜன ஸ்தோத்ரம்
நொடியில் தோன்றி துயரகற்றும் ந்ருஸிம்ஹ ஸ்தோரங்கள்
பாதுகா தேவியைப்ரார்த்தித்து பாதுகா ஸஹஸ்ரம்
என்று ஒரே பகவத்யானம்தான், சிறார்முதல் முதியோர்வரை!

பிராட்டி: ஆஹா!! இவ்வளவு ச்ரத்தையா?

பெருமான்: இது மட்டுமல்ல தேவீ!! அவரவர் அகங்களிலேயே பள்ளிப்படிப்பு, சங்கீதம், நாட்டியம், யோகம் என்று பயிற்சிகளும் பெறுகின்றனர் தற்போது!!

பிராட்டி: அபாரம்! அபாரம்!! மற்றெந்த யுகங்களிலும் காணத புதுமையாயுள்ளதே இது!!

பெருமான்: "கொடியவினையாதுமிலனே என்னும்
கொடியவினையாவேனும்யானே  என்னும்
கொடியவினை செய்வேனும்யானே என்னும் கொடியவினைதீர்ப்பேனேயானே என்னும்"
என்று குருகூர்சடகோபன் பாடியபாசுரம் மக்கள் மனதில் நன்குபதிந்துவிட்டது தேவீ!
ஆக இந்த கதியில் இன்னும் கொஞ்ச நாள் நகர்ந்தால் மனித மனம் பதப்பட்டு இறையுணர்வு ஏற்படுத்தும்அதிர்வுகளால் நற்பயனில் திளைக்க முடியும் அவர்களால்!!

பிராட்டி: ஆமாம் பெருமானே! ஜீவன்களின் உள்ளே மறைந்துள்ள அறிவாற்றலையும் துருபிடிக்காமல் தற்போது பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர் அன்றோ? ஆனால் எனக்கு ஒரு சிறுசஞ்சலம் பெருமானே!
தற்போதைய சூழ்நிலையால் ஸ்தம்பித்த செல்வ நிலையை நம் குழந்தைகள் எப்படி சரிக்கட்டுவார்கள்?

பெருமான்: இதென்ன பெரிய கார்யம் தேவீ!!

"यस्यां यस्यां दिशि विहरते देवि दृष्टिस्त्वदीया 
तस्यां तस्यामहमहमिकां तन्वते सम्पदोघाः "
"யஸ்யாம் யஸ்யாம் திஸி  விஹரதே  தேவி த்ருஷ்டிஸ்த்வதீயா
 தஸ்யாம் தஸ்யாம் அஹமஹமிகாம் தந்வதே ஸம்பதோகா:" என்ற நம் வேதாந்த தேசிகனின் வாக்கை மெய்ப்பிக்க உன் கடாக்ஷத்தை சற்றே அளித்தால் போதுமே! நொடியில் தனம் தளிர்க்குமே!!
சரிதேவீ! அவர்களது பாராயணம் தொடரட்டும். காலம் இந்நிலையை கூடிய சீக்கிரம் மாற்றும். நம் குழந்தைகளை நாமே ரக்ஷிப்போம் என்று கூறிபெருமான் யோகநித்ரையிலாழ்ந்துவிட தாயாரும் அவருக்கு பணிவிடைசெய்ய விரைகிறாள்......

வாருங்கள்!நாமும் நம் முன்னோர்கள் காட்டிய ஆசார அனுஷ்டானங்களுடன் பகவத் பாகவத பக்தி உணர்வை வளர்த்து நாமும் உய்ந்து நம் சந்ததியையும் உய்விப்போமாக!!!!

ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணமஸ்து!!!!

🙏🙏🌱🌷🌸🌻🌹🌷 🌱🌷🌸🌻🌹🌷 🌱🌷🌸🌻🌹🌷 🌱🌷🌸🌻🌹🌷 🙏🙏

5 comments:

  1. ஆஹா அருமையான அருமை.

    ஒரு விதத்தில் உண்மையும் கூட. இந்த ஆன்மிக அரக்கன் நாம் மறந்துபோன, புறம் தள்ளிய பல நல்லவைகளை வெளிக்கொண்டு வருகிறான். இறைவனை தூற்றிய நாவெல்லாம் இன்று நாராயணா என்று நிமிடம் தோரும் அழைப்பதை காண முடிகிறது.

    ReplyDelete
  2. அருமையான கற்பனை. நிஜமாகவே அண்ணலும் பிராட்டியும் இப்படி தான் பேசி இருப்பார்களோ என்று தோன்றுகிறது. இந்த அனாமிக அரக்கன் மக்கள் மனதில் இருக்கும் பக்தியை சற்றே மிகைப்படுத்தி தான் விட்டான். பக்தியை மேலும் மேலும் அதிகமாக்கி நாராயணனை இனியும் வைகுண்டத்தில் இருப்பது தர்மம் ஆகாது என்று பறந்தோடி வர செய்யும் அளவுக்கு நம் பக்தியை பெருக்க வேண்டும்.

    ReplyDelete
  3. சிந்தனையைத்தவநெறியை திருமாலை
    பிரியாது வந்துஎனதுமனத்துஇருந்த.......

    தெரித்தெழுதி வாசித்தும்கேட்டும்
    வணங்கிவழிபட்டும் பூசித்தும் போக்கினேன்போது.

    ReplyDelete