Saturday, May 23, 2020

பாருய்ய பாஸுரப்படி பரமனைப் பணிந்தேன்!

பன்னிரு ஆழ்வார்களின் பாசுரங்கள அனைத்துள்ளிருந்தும் ஓரொன்றெடுத்தமைத்த வாசக மாலை.
அவனுள்ளம் உகந்து நம்மைக் காக்க வேணும்🙏

🌷வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெருந்துயர் இடும்பையில் அகப்பட்டு ஓடினேன் ஓடி உய்ய உன்பதம்நாடினேன் நாடி பெற்றதாயினும் ஆயின செய்யும் நாராயணா என்னும் நாமம் கண்டு கொண்டேன்.இனி என்ன கவலைஎனக்கு!!

🌷மங்கிய வல்வினை நோய்காள் உமக்கும்ஓர் வல்வினை கண்டீர் 
சிங்கப் பிரான் உறையும்  நெஞ்சகம்பால் எளிதன்று நீவிர் புக!!

🌷நம்மன் போலே வீழ்த்தமுக்கும் நாட்டிலுள்ள பாவமெல்லாம் சும்மனாதே கைவிட்டோட சீரியசிங்கமென நீ மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்படும் நாள்என்றுகொலோ!!!

🌷செய்யச் சுடராழியானே! இவ்விடராழி நீங்கநின்னை இறைஞ்சுவதன்றி ஏதுமறியேன். மருந்தும் பொருளும் அமுதமுமாய் நின்ற எம் செங்கண்மாலே!அன்று அரியுருவாகி இரணியனது ஆகம் தெரியுகிரால் கீண்ட உனக்கு இக்கலிதோற்றிய இம்மி அளவேயான தொற்று ஒரு பொருட்டா?

🌷கதையும் பெரும் பொருளும் கண்ணா நின்பேரே இதயம் இருந்து அவையே ஏத்த எம்மைப் பணிக்கும் வழிஇதுவோ! 

🌷அன்று நீ அன்னையிடம் கொண்ட ஆதங்கத்தால் கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்டாய்!இன்று பேராசை உந்திய விஷத் தொற்றால் ஞாலமே கட்டுண்டுளது!

🌷ஆழி எழச் சங்கும் வில்லும்எழ திசை வாழி எழத்தண்டும் வாளும் எழ அண்டம் மோழை எழ முடிபாதம்எழ அப்பன் ஊழிஎழ உலகம் கொண்டவாற்றை ஒரு கோடியிட்டுக் காட்டினீரோ இன்று!!

🌷அரிசினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன் அருள் நினைந்தே அழும் குழவிகளானோமே!அன்னையாகி அத்தனாகி எம்மையாளும் எம்பிரானே!!மாயா வாமனனே மதுசூதா!
நீ இன்றிஎமைக் காப்பார்யார்?
இன்னும் எத்துணை நாள்இவ் இடர் கடலில் உழல வைப்பாய்?

🌷குரங்குகள்மலையை நூக்க குளித்துத் தாம் புரண்டிட்டோடி தரங்க நீர்அடைக்கலுற்ற சலமிலா அணில் போல உன்னைத் தொழுவதன்றி வேறொன்றறியேன்.

🌷செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!நெடியானே வேங்கடவா!நின்கோயிலின் வாசல் என்று திறக்கும்?அடியோமோடும்நின்னோடும் பிரிவின்றி ஆயிரமாயிரம் ஆண்டு பல்லாண்டுபாட எம்மை விரைந்தழைப்பாயா!

🌷உயர்வற உயர்நலம் உடையாய் நீ! மயர்வற மதிநலம் பெற்று மாநிலத்தில் மன்னுயிர்கள் மன்னி வாழ  குட்டத்துக் கோள்முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரம் ஏந்தி விரைந்தோடி  வரவேணும்.
நின்தாள் முதலே நங்கட்குச்  சார்வு.... 

🌻🌺🌷🌸🌹  🌻🌺🌷🌸🌹  🌻🌺🌷🌸🌹  🌻🌺🌷🌸🌹  🌻🌺🌷🌸🌹


No comments:

Post a Comment