Saturday, April 17, 2021

ஶ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தின் ரஸங்கள்! - Concluding Part

         

27. மூலமந்த்ராதிகாரம்
28. த்வயாதிகாரம்
29. சரமஶ்லோகாதிகாரம்

********************************************************************************

நம் ஸம்ப்ரதாயத்தின் முக்ய ரஹஸ்ய மந்த்ரங்கள். நான்கு காதுகள் மட்டும் கேட்கும் மந்த்ரங்கள் இவை.

"ஆளும் அடைக்கலம் என்று எம்மை அம்புயத்தாள் கணவன் 
தாளிணைக்கீழ் சேர்த்து எமக்கும் அவைதந்த தகவுடையார்
மூளும் இருட்கள் விள்ள முயன்று ஓதிய மூன்றின் உள்ளம்  
நாளும் உகக்க இங்கே நமக்கு ஒருவிதி வாய்க்கின்றதே"--(அதி 7) 

வேதம் புராண இதிகாசங்கள் இவையனைத்தையும் உள்ளடக்கிய மந்த்ரம் திருமந்த்ரம். இதற்கு "வ்யாபக மந்த்ரம்" என்றும் பெயர். 

"துஞ்சும் போதும், துயர்வரினும் சொல்வீர்"--"மூன்றுமாத்திரை உள்வாங்கி"-- என்று ப்ரணவமின்றி ஆழ்வார்கள் திருமந்த்ரத்தைக் காட்டியுள்ளனர்.

இத்தகைய மந்த்ரத்தை ஆசார்யமுகமாய் உபதேசம் பெற்று மந்த்ர சீர்மையைப் புரிந்து சொல்ல வேணும்.

த்வயம்:  த்வயமந்த்ரத்தின் மேன்மையை ஶ்ரீபாஷ்யகாரர் பங்குனி உத்ரத்தன்று பிராட்டி பெருமாள் சேர்த்தியில் கத்யத்ரயம் ஸேவித்து  எல்லோருக்குமாக ஶரணாகதி அனுஷ்டித்துப்  போற்றி உணர்த்தினார்.

நம்மாழ்வார் திருவேங்கடமுடையான் திருவடியில் ஶரணாகதி அனுஷ்டித்தார்.  

"அகலகில்லேன் இறையுமென்று
அலர்மேல் மங்கை உறைமார்பா
(ஸ்வாமித்வம்)
நிகரில் புகழாய் உலகம் மூன்றுடையாய் (விபூதித்வம்)
என்னை ஆள்வானே (வாத்ஸல்யம்)
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே (அர்ச்சாவதாரம்)
புகலொன்றில்லா அடியேன் (அகிஞ்சனத்வம்)
நின்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே" (அடைக்கலம்)

 
"எனது சொத்தாகிய உங்களை என்னிடம் சேர்க்கும் ஆழ்வார் அமர்ந்துள்ள என் திருவடியைப்பற்ற அந்த ஆசார்யனாகிய ஆழ்வாரைப் பற்றுங்கள்" என்கிறான் எம்பெருமான்.மேற் சொன்ன பாசுரம் த்வய மநத்ரத்தின் விளக்கமே.
தேர்த்தட்டில்அமர்ந்த எம்பெருமான் நெஞ்சைத் தொட்டுக்காட்டிச் சொன்ன வார்த்தைகளே "சரமஶ்லோகம்".
"அஶக்தனாக செய்ய முடியாத கர்ம ஞான பக்தி யோகங்களை விடுத்து அந்த நிலையில் என்னை நிறுத்தி ப்ரபத்தி செய்து என் திருவடிகளைப்பற்றுகிறவர்களின் சகல பாபங்களையும் போக்கி மோக்ஷமளிக்கிறேன். கவலைப்படாதே"--- என்கிறான் எம்பெருமான்.

"உறவினர் இல்லாதவர்க்கு எந்த உறவைச்சொன்னால் பாபம் நேராதோ அந்த உறவாய் நானிருப்பேன்"--என்று துஷ்யந்தன் தன் ராஜ்ய ப்ரஜைகளுக்குப் பாதுகாப்பின் பொருட்டு சட்டம் செய்ததாய் வரலாறு.  

ஆக இந்த மூன்று மந்த்ரங்களின் சீர்மையை உணர்ந்து  ஸதாசார்யனை அணுகி ப்ரபத்தி செய்து  ஆத்மாவையும் அதை ரக்ஷிக்கும் பொறுப்பையும் எம்பெருமானிடம் ஸமர்ப்பித்து நிர்பரனாயும் நிர் பயனாயும்  இருப்போமாக. 

(For 27th Adhikaram)
"உயர்ந்தனன் காவலன் அல்லார்க்கு உரிமை துறந்து உயிராய்
மயர்ந்தமை தீர்ந்து மற்றோர் வழியின்றி அடைக்கலமாய்ப்
பயந்தவன் நாரணன் பாதங்கள் சேர்ந்து பழ அடியார்
நயந்த குற்றேவல் எல்லாம் நாடும் நன் மதி ஓதினமே"--(அதி 34)

 
(For 28th Adhikaram)
"ஓதும் இரண்டை இசைந்து அருளால் உதவும் திருமால்
பாதமிரண்டும் சரண்எனப்பற்றி நம் பங்கயத்தாள் 
நாதனை நண்ணி நலந்திகழ் நாட்டில் அடிமை எல்லாம்
கோதில் உணர்த்தியுடன் கொள்ளுமாறு குறித்தனமே"--(அதி 35).

(For 29th Adhikaram)
"குறிப்புடன்மேவும்தருமங்களின்றி அக்கோவலனார்
வெறித்துளவக்கழல் மெய் அரணென்று விரைந்தடைந்து
பிரித்த வினைத்திரள் பின்தொடரா வகை அப்பெரியோர்
மறிப்புடை மன்னருள் வாசகத்தால் மருளற்றனமே---(அதி 36) 


ஆத்மஞானமும், பணிவும், வைராக்யமும், வேதாந்தத்தில் முழுநம்பிக்கையும் நம்மை இந்த விஸிஷ்டாத்வைத ஸத்ஸம்ப்ரதாயத்தில்  ஈடுபடுத்தியுள்ளது.
ஶ்ரீமன்நாராயணனே நமக்குப் பறை தரும் பரதெய்வம் என்பதை உணர்ந்து ப்ரபத்தி அனுஷ்டித்து பரிபூர்ண ப்ரும்ஹானுபவம் பெறுவோமாக.!!!!.

******************************************************************************
30. ஆசார்ய க்ருத்யாதிகாரம் 
31.  சிஷ்ய க்ருத்யாதிகாரம் 
******************************************************************************

ஆசார்யனுக்கு ஸமமானவரும் அவரைவிட உயர்ந்தவரும் கிடையாது. ஆசார்யானது நாவில் ஹயக்ரீவன் நின்று "ஹல ஹல" சப்தம் செய்கிறான்.

ஸம்ஸாரத்தில் மூழ்கிய நம்மை தூக்கி வெளிக்கொணர சஸ்த்ரபாணியான எம்பெருமான் சாஸ்த்ரபாணியாகச்  செய்த அவதாரமே ஆசார்ய அவதாரம். இத்தகைய ஆசார்யனும் அவர் உபதேசம் கேட்கும் சிஷ்யனும் இந்த ஸத் ஸம்பிரதாயத்தின் அடிப்படை .

வசிஷ்டரும் விஶ்வாமித்திரரும் ஆசார்யனாயினர் ஸ்ரீ ராமனுக்கு. சாந்தீபனி யிடம் பயின்றவன் கீதாசார்யன். இத்தகைய ஆசார்யனுக்கும் சிஷ்யனுக்கும் இருக்கவேண்டிய லக்ஷணங்களை ஸ்வாமி இந்த இரு அதிகாரங்களில் விவரிக்கிறார். 

ஸத்வகுண க்ரந்தங்கள் என்ற "திரியை" ப்ரீதியுடன்  சிஷ்யனுக்கு (எண்ணைய்) கற்பித்து ஸம்ப்ரதாய "தீபச்சுடரை" ஏற்றி ப்ரகாசம் அடையச்செய்பவரே சிறந்த ஆசார்யன். 

திருப்பாற்கடல், ஸ்ரீ வைகுண்டம், சூர்யமண்டலம், இவை எம்பெருமான் உறையும் ஸ்தான விசேஷங்கள். இவற்றுள் மோக்ஷம் என்ற ஸ்ரீ வைகுண்டத்தை நாம் அடைய ஆசார்யன் செய்து வைப்பதே ப்ரபத்தி. இதனை செய்வதற்கு முன் ஆசார்யன் பல க்ரந்தங்களை செய்து ,கற்று அவற்றை சிஷ்யர்களுக்கும் கற்பித்து ,தானும் அனுஷ்டித்து காட்ட வேண்டும். 

"வருவது விசாரியாது இந்திரனுக்கு உபதேசித்து ஞானம் இழந்த ப்ரஹ்மாவின் நிலையை" ஆசார்யன் அடைய கூடாது. நல்ல விளை நிலத்திலிட்ட வித்து பல்கிப் பெருகுவது போல ஸத் சிஷ்யர்கள் ஆசார்யனுடைய புகழை நிலை நிறுத்தி ஸம்ப்ரதாய மேன்மைக்கு காரண கார்யர்களாய் இருப்பர். தகுதி இன்றி ,பக்தியும் விநயமும் இல்லாதவர்கள், தன்னை பண்டிதர்களாய் நினைப்பவர்கள் ஆகியோருக்கு செய்யும் உபதேசம் பயனற்றவையாகும் என்கிறார் தேசிகர்.

இந்த நிலைக்கு "கணிகாலங்காரம் ஆக்குதல்", "விலைச்சாந்தாக்குதல்", "அம்பலத்தில் அவல் பொரியாக்குதல்", "குரங்கு கையில் பூமாலை ஆக்குதல்" -என்ற உதாரணங்களை காட்டுகிறார் ஸ்வாமி.

ப்ரஹ்மவித்தை அறிந்த ஆசார்யன் ஸத் பாத்ர சிஷ்யன் கிடைக்காவிடில் அந்த வித்தையைத் தன்னுடனேயே முடித்துக்கொள்வது உசிதம் என்கிறார். ஒழுக்கமற்றவர்க்குச் செய்யும் உபதேசம் பயனற்றுப் போவதுடன் அதன் பவித்ரத்தையும் இழக்கிறது. 

எப்படியெனில்  - "நாய்த்தோல் பையில் பால் வைக்குமாபோலே"

"ஸ்மஸான அக்னியை ஹோமத்துக்கு கொணருமாப்போலே" என்ற உதாரணங்களால் காட்டுகின்றார்.

சிஷ்ய லக்ஷணத்தையும் விளக்கும் ஸ்வாமி ,ஸம்ப்ரதாயத்தை அறிய முயலும் சிஷ்யனுக்கு பொறுமை, ஆசார்ய ப்ரதி  பக்தி, அவரிடம் அசைக்க முடியாத நம்பிக்கை இம்மூன்றும் மிக அவசியம் என்கிறார்.

மீண்டும் மீண்டும் சென்று கேட்டல், கற்றவைகளை மனதில் அசைபோட்டுக்கொண்டிருத்தல், தன் சுய கௌரவத்தை ஆசார்யன் முன் காண்பிக்காமை ஆகியனவும் சிஷ்ய லக்ஷணங்களாகும். ஆசார்யன் கற்பிப்பதை சிந்தாமல் சிதறாமல் மனதில் தேக்க வேண்டும். சிஷ்ய லக்ஷணமாக "सद्बुद्धिः साधु सेवि समुचित चरितः शुश्रूषुः प्रणिपतप्रश्नः शास्त्र विश्वास शाली"  என்பதாக ந்யாஸ விம்ஶதியில் ஸ்வாமி சாதித்துள்ளார்.

இத்தகைய உயர்ந்த ஸம்ப்ரதாயத்தை பற்றிய ஞானத்தை நமக்களிக்கும் ஆசார்யனை போற்றி உகப்பதை தவிர நாம் எந்த ப்ரதியுபகாரமும் செய்ய முடியாது. ஞான விளக்கேற்றி இருளனைத்தும் மாற்றிய ஆசார்யனுக்கு என்ன கைம்மாறு செய்வதென அந்த எம்பெருமானே திகைக்கிறான்!!

(For 30th Adhikaram)
"மறுளற்ற தேசிகர் வானுகப்பாலிந்த வையமெல்லாம் இருளற்று  
இறைவன் இணையடி பூண்டிட எண்ணுதலால் 
தெருளுற்ற செந்தொழில் செல்வம் பெருகி சிறந்தவர்பால் 
அருளுற்ற சிந்தையினால் அழியா விளக்கு ஏற்றினரே"  - (அதி 37)


(For 31st  Adhikaram)
"ஏற்றி மனத்து எழில் ஞானவிலக்கை இருளனைத்தும் 
மாற்றினவர்க்கு ஒரு கைம்மாறு மாயனும் காண இல்லான் 
போற்றி உகப்பதும் புந்தியில் கொள்வதும் பொங்கு புகழ் 
சாற்றி வளர்ப்பதும் சற்றல்லவோ முன்னம் பெற்றதற்கே" (அதி 38)

*******************************************************************************
32. நிகமனாதிகாரம்
*******************************************************************************

ஸம்ப்ரதாயத்திற்கே ஓர் விலை மதிக்க முடியாத ரத்ன மாலையாக நம் ஆசார்ய ஸார்வபௌமன் ஸ்ரீமத் வேதாந்த தேசிகன் அருளிச்செய்துள்ளதே இந்த ரஹஸ்யத்ரய ஸாரம்  என்ற உன்னத க்ரந்தம்." ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம்"  

இந்த நிகமனஅதிகாரத்தில் ஸ்வாமி இதுவரை சாதித்துள்ள விஷயங்கள் அனைத்தையும் தொகுத்து தம் ஆசார்யர்களின் இஷ்டத்தை பூர்த்தி செய்த த்ருப்தியை வெளிப்படுத்துகிறார்.

ஒன்று முதல் 22 வரையிலான அதிகாரங்கள் அர்தானுஶாஸனம் எனப்படும். ப்ரபத்தி சாஸ்த்ர மேன்மையை இவை கூறுகின்றன. 

23-24  - அதிகாரங்களும் "ஸ்திரீ கரண பாகம்" எனப்படும். இவை ப்ரபத்தியை தெளிவாக நிலைப்படுத்தும் அதிகாரங்கள். 

25-26 - ப்ரபத்தியின் மேன்மையையும் அதை ரக்ஷணம் செய்யும் விதமும் கூறும் அதிகாரம்.

27-29 - "பதவாக்ய யோஜனாதிகாரம்". அஷ்டாக்ஷரம், த்வயம், சரம ஸ்லோகம் ஆகிய மூன்றின்  உயர்வைக் கூறுபவை. 

30-31- ஆசார்ய சிஷ்ய லக்ஷணங்களின் விவரணம்.

32 - நிகமனம்  என்ற க்ரந்த முடிவுரை.

நாம் கற்கும் கல்வி சுமையாக இருக்க கூடாது. வேதாந்தத்தை விட சிறந்த கல்வி இல்லை. ஸ்ரீமன் நாராயணனை விட பரதேவதை இல்லை. ஸ்ரீ வைஷ்ணவர்களை விட புண்யமானவர்கள் இல்லை. பாகவதர்கள் வசிக்கும் இடங்களை விட திவ்ய தேசங்கள் இல்லை. 

ஸத் புத்தி ஸாத்வீகம் இவற்றைத் தருபவரே ஸதாசார்யன். உத்தவர் மைத்ரேயரைத் தேடி வருவதையும், நாரதர் வால்மீகியை நாடி வருவதையும் போல. மேற்சொன்ன எல்லாவற்றாலும் நமக்கு கிடைக்க போகும் பெரும் பலனே மோக்ஷ சாம்ராஜ்யம் 

ஸ்வாமி தேசிகனை விட உயர்ந்த ஆசார்யன் இல்லை. அவரது சிஷ்யர்களை விட சிறந்த பக்தர்கள் இல்லை. அவரது ஸ்ரீ ஸூக்திகளை விட சிறந்த க்ரந்தங்கள் இல்லை. அவரது ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம் என்ற இந்த க்ரந்தம் ஸ்ரீ பாஷ்யகாரரின் ஆறு கட்டளைகளையும் பூர்த்தி செய்கிறது.

மஹாபாரதத்துள் ராமாயணம் அடங்குவது போல ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்துள் இதிகாஸ, புராண, ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகள், பகவத் கீதை, பூர்வாசார்ய க்ரந்தங்கள் அனைத்தும் அடங்குகின்றன.ஆக இதை அறிந்தவன் எல்லாம் தெளிந்தவன் ஆகின்றான்.

வேதம் கூறும் அனைத்தும் உண்மை என்ற திட நம்பிக்கையுடன் தெளிந்த மனத்துடன் சந்தேகங்களை அகற்றி அற்ப பலன்களை ஒதுக்கி நிலையான மோக்ஷ பலத்தை அடைய பரம க்ருபையுடன் நம் ஸ்வாமி தேசிகன் அளித்துள்ள இந்த க்ரந்தத்தை நாம் ஸதாசார்யன் மூலம்  க்ரஹிப்போமாக!!!

"இந்த கிரந்தத்தை வெள்ளைப்பரிமுக தேசிகர் என் முன்னே தோன்றி என் உள்ளத்தில் எழுதி வைத்தார்" அதனையே நான் ஓலையில் இட்டேன் என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.

ஸ்வாமி தேஶிகன் தம் க்ருதஞையை இப்பாசுரம் மூலம் தெரிவிக்கிறார். 

"எட்டும் இரண்டும் அறியாத எம்மை இவைஅறிவித்து
எட்ட ஒண்ணாத இடம் தரும் எங்கள் அம்மாதவனார்
முட்டவினைத்திரள் மாள முயன்றிடும் அஞ்சல் என்றார்
கட்டெழில் வாசகத்தால் கலங்கா நிலை பெற்றனமே"---(அதி 54)


🙏🙏🌸🌸🌸🌸🌸🌻🌻🌻🌻🌻🌷🌷🌷🌷🌷🌻🌻🌻🌻🌻🌸🌸🌸🌸🌸🙏🙏



Wednesday, April 14, 2021

ஶ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தின் ரஸங்கள்! - Part 5


22. பரிபூர்ண ப்ரும்ஹானந்தாதிகாரம்
******************************************************************************

பரமபதத்தில் பரமபுருஷனை பரிபூர்ணமாய் அனுபவிக்ககும் விதத்தை விவரிக்கும் அதிகாரம் இது.

எம்பெருமானால் வரவேற்கப்பட்ட முக்த ஜீவன் எம்பெருமானுக்கும் பிராட்டிக்கும் ஏற்ற கைங்கர்யங்களை செய்யத்துவங்கி அந்தமில் பேரின்பமடைகின்றான். இதற்கே பரிபூர்ண ப்ரும்ஹானந்தம் என்று பெயர். இவன் திரும்ப இந்த ஸம்ஸார மண்டலத்துக்கு வருவதில்லை.எம் பெருமானுக்கு ஈடான ஞானமும் போகமும் முக்த ஜீவன் பெறுகிறான்.

ஜகத்காரணத்வம், (ஶ்ருஷ்டி) மோக்ஷ ப்ராதாத்வம், (மோக்ஷமளித்தல்) ஸர்வ ஆதாரத்வம், ஸர்வ நியந்த்ருத்வம், ஸர்வ ஸேஷித்வம் ஆகியன எம்பெருமானுக்கே உள்ள அசாதாரண தர்மங்கள். 

ஆதேயத்வம், விதேயத்வம், சேஷத்வம் ஆகியன முக்த ஜீவனுக்கான அசாதாரண தர்மங்கள். இப்படியாக முக்த ஜீவன் பரிபூர்ண ப்ரும்ஹானந்தத்தைப் பெற்று பிறவா நிலை அடைகிறான்.

பிறப்பு-ஸ்திதி-இறப்பு இம்மூன்றும் ஒருஜீவனுக்கு உண்டானநிலை. இவற்றுள் பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை.நம் கவனம் முழுதும் நிலையில்லாத ஸ்திதியிலேயே உள்ளது. பரம க்ருபையுடன் எம்பெருமான் இப்பிறவி நோயைத் தீர்க்க ஶரணாகதி ஶாஸ்த்ரத்தை அளித்து காக்கிறான். 

7 பிறவி சூர்யோபாஸனை, 7 பிறவி ருத்ரோபாஸனை, 7 பிறவி வாஸுதேவோபாஸனை என்று ஒவ்வொன்றினிடமும் பல்லாயிரக்கணக்கான பிறவிகளைக்கடந்து இப்பிறவி கிடைக்கப்பெற்றுள்ளோம். இதில் தேக ஸுத்திக்கு சக்கரப்பொறிஒற்றலும், ஆத்மஸுத்திக்கு ப்ரபத்தியும் ஸாதனமாக்கியள்ளான் அவனை அடைய.இவற்றை அனுஷ்டித்த ஜீவனை பெருமானும் பிராட்டியும் போட்டி போட்டுக்கொண்டு பரிகின்றனர்.

"ஏறி எழில்பதம் எல்லா உயிர்க்கும் இதமுகக்கும் 
நாறுதுழாய்முடி நாதனைநண்ணி அடிமையில்
கூறு கவர்ந்த குருக்கள் குழாங்கள் குரை கழற்கீழ்
மாறுதலின்றிமகிழ்ந்தெழும்போகத்து மன்னுவமே"---(அதி 29)

********************************************************************************
23. ஸித்தோபாய ஸோதனாதிகாரம்
********************************************************************************

ஸித்தோபாயமான எம்பெருமானைப்பற்றிய ஸந்தேகங்களுக்குப் பரிஹாரம் கூறி  உண்மையை விளக்கும் அதிகாரம் இது. இதுவரையிலான 22 அதிகாரங்களின் ஸாரமாகிறது இந்த அதிகாரம்.

எம்பெருமானால் கடாக்ஷிக்கப்படும் ஜீவன் ஆசார்யமுகத்தால் தத்வ த்ரயத்தை அறிந்து ,நிஷ்டை உடையவனாகி ப்ரபத்தி செய்யத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டு ஆறு அங்கங்களுடன் கூடிய ஶரணாகதியைச் செய்து ,நிஷ்பன்ன க்ருத்யனாகி தேவதாந்த்ரம் ,பாகவதாபசாரம் தவிர்த்து ,தன்நிஷ்டைக்குத் தகுந்த பகவத் ,பாகவத கைங்கர்யங்களைச் ஶாஸ்த்ரீய நியமப்படி செய்து, திவ்ய தேசவாஸம் செய்து தேகாவஸான காலத்தில் இந்த ஸ்தூல ஶரீரத்தை விட்டு எம்பெருமானை அடைந்து  பரிபூர்ண ப்ரும்ஹானந்தம் அடைகிறான் . 

இந்த அதிகாரம் ப்ரபன்னனின் மனத்திண்மையைப் பலப்படுத்துவதாய் அமைந்துள்ளது.எம்பெருமான் தன்னைப் பெறுவதற்குத் தானே ஸித்தமியிரருக்கும் கருணை உள்ளவன். ஆக 1.அவனைப்பற்றிய தெளிவு2.செயல் நன்றாகத் திருத்திப் பணிகொள்ளும் ஆசார்ய ஸம்பந்தம், ஆசார்யனிடமிருந்து பெறும்  ஶாஸ்த்ர ஞானம். ஆகிய மூன்றும் எம்பெருமான் நம்மீது கொண்டுள்ள நிக்ரஹ ஸங்கல்பத்தை மாற்ற வல்லவை.

  1. ஆத்மாபஹாரம் செய்யாமை
  2. நாஸ்திகவாதிகளிடமிருந்து நெடுந்தூரம் விலகல்
  3. ப்ரபத்தியை ஒத்திவைத்துக் காலம் தாழ்த்தாமை

இவற்றில் உறுதி கொண்டு லக்ஷ்மீவிஸிஷ்டனாகிய எம்பெருமானை அடைய ப்ரயத்னம் செய்தல் வேண்டும்.

கால விரயத்தினால் ஏற்படும் நஷ்டத்தை ஸ்வாமி கீழ் வரும் உதாரணத்தால் விளக்குகிறார்.

"மதுஅருந்த தாமரையிலமர்ந்த வண்டு இரவாகியும் வெளியேறாமல் காலம்தாழ்த்தியதால் பூ மூடிக்கொள்ள  காலை யில் வண்டுறங்கும் மலரை யானை பறித்து உண்டாற்போல"--என்கிறார்.

ஆக இந்நிலையில்லா ஸ்திதியில் நிலையான ப்ரும்ஹானுபவம் தரவல்ல ஶரணாகதியைக் காலம் கடத்தாமல் செய்வது  மிக அவசியம்."

"மன்னும் அனைத்தும் உறவாய் மருள் மாற்று அருளாழியுமாய்த்
தன் நினைவால் அனைத்தும் தரித்தோங்கும் தனி இறையாய்
இன்னமுதத்தமுதால் இரங்கும் திருநாரணனே
மன்னி அவன்சரண் மற்றோர் பற்றின்றி வரிப்பவர்க்கே"---(அதி 30)

*****************************************************************************
24. ஸாத்யோபாய ஸோதனாதிகாரம்

******************************************************************************

23, 24 - அதிகாரங்களிரண்டும் ஸ்திரீகரணாதிகாரம் எனப்படும். பந்தல்கால் நடும்போது அதனைப்பலப்படுத்துவதுபோல இந்த இரு அதிகாரங்களிலும் ஸ்வாமி தேஶிகன்  ப்ரபன்னனின் மனத்தைப் பலப்படுத்துகிறார்.

"பருத்தி படாத பன்னிரண்டும் பட்டு" என்பது போலவும் "பஹூனாம் ஜன்மநாமந்தே"-என்பது போவவும் எத்தனையோஆயிரம் பிறவிகளாகிய படு குழிகளைக் கடந்துவர இத்தேகம் பட்ட பாட்டைச் சொல்லி மாளாது!!

விஷம் போன்றது இந்த ஸம்ஸாரம். அந்த விஷத்தை முறிக்க வல்ல சிறந்த மருந்து ஶரணாகதி என்ற ஸாத்யோபாயம். இந்த்ரியஆரோக்யம்,யவௌனம் ஐஶ்வர்யம் ஆகியவை நம்மைத்தடுமாறச்செய்யும்‌.

எம்பெருமான் பெயரை அவனுறையும் ஊரில் சொல்லித் தப்பிக்கவேணும். பகவத், பாகவதாபசாரத்திலிருந்து விடுபட வேணும்.

ராஜா செய்து கொடுத்த சௌகர்யங்களால் கிடைத்த நிறைந்த மகசூலை ஒரு விவசாயி ராஜாவிடம் ஸமர்ப்பிக்கும்போது ராஜா எவ்வளவு ஸந்தோஷமடைவானோ அத்தனை ஸந்தோஷம் அடைவான் எம்பெருமான்  ப்ரபன்னனுடைய ஆத்ம ஸமர்ப்பணத்தால்‌.

ஸித்தோபாயனாகிய எம்பெருமான் ஸாத்யோபாயமாகிய பயிரை ரக்ஷிக்க காவல் காக்கின்றான்.

மோக்ஷம் பெற ஶரணாகதி தவிர வேறு உபாயமில்லை என்ற திடசித்தமும் நமபிக்கையும் நாம் பெறுவதுடன் நம்மைச்  சேரந்தவர்க்கும் எடுத்துச் சொல்லி 

ப்ரபத்தி அனுஷ்டிக்கும்படிச் செய்வதே நம் சாதனையாயிருக்க வேணும்..

"வரிக்கின்றனன் பரன் யாவரை என்னும் மறையதனில்
விரிக்கின்றதும் குறி ஒன்றால் வினையரை ஆதலில்நாம்
உரைக்கின்ற நன்னெறி ஓரும்‌ படிகளில் ஒர்ந்து
உலகம் தரிக்கின்ற தாரகனார் தகவால் தரிக்கின்றனமே"(அதி 31)

*****************************************************************************
25. ப்ரபாவ வ்யவஸ்தாதிகாரம்

26. ப்ரபாவ ரக்ஷாதிகாரம்

******************************************************************************

சிறிதும் மிகையோ, குறைப்போ இன்றி ப்ரபத்தி ஶாஸ்த்ரத்தின் மேன்மையையும் அதன் பரபாவத்தை ரக்ஷிக்க மேற்கொள்ளவேண்டிய முறைகளையும் இவ்வதிகாரங்கள் விளக்குகின்றன.

வேத ஸாஸ்த்ரத்திலிருந்து சிறிதும் விலகாத இந்த ப்ரபத்தி ஶாஸ்த்ரம் மிக உயர்ந்தது.மறைந்துள்ள புதையலைக்காட்டிக் கொடுக்கும் "மை" போல ஸம்ப்ரதாய மேன்மையை நன்கறிந்த ஆசார்யர்களின் உபதேசத்தாலன்றி நமக்குள் உறையும் எம்பெருமானை நாம் அறிய முடியாது.

இப்படி அறிந்த எம்பெருமானுக்கு கடமை என்றில்லாது  ப்ரேமையுடன் கைங்கர்யம் செய்தல் வேணும்.

"ஓட்டத்துக்கு அப்பம் தின்பார் போல" (அப்பத்தை சுவைத்து ரஸித்துச் சாப்பிடாது அடைத்து விழுங்கும் பந்தயக்காரன்போல)

ப்ரேமையில்லாத கைங்கர்யத்தில் எம்பெருமானுக்கு உகப்பிருக்காது. அவரவர் வர்ணாஶ்ரம தர்மத்துக்கேற்ப வரையறைக்குட்பட்ட வாழ்க்கை முறைகளை அனுஷ்டிக்க வேணும்."விதுரநீதி"படைத்த விதுரன் சிறந்த ஞானி. ஆனால் தன் வர்ணாஸஶ்ரம தர்மம் கருதி தன் ஞான சக்தியால் ஸனத்ஸுஜாதரரை ப்ரார்த்தித்து அவர்மூலம்  ப்ரும்ஹ வித்தையை த்ருதராஷ்டிரனுக்கு உபதேசிக்கச் செய்தார்.

இதுவே மஹாபாரதத்தில் "ஸனத் ஸுஜாதீயம்" என்றழைக்கப்படுகிறது. நம்மாழ்வார் வேதத்தைச் சொல்ல வில்லை. வேதத்தின் பொருளைத்தான் சொல்கிறார் திருவாய்மொழி மூலம்.

சரீரத்தில் ஆசைவைத்து ஆத்மாவை இழக்கக்கூடாது. சுற்றியுள்ள பந்தத்தால் பகவதனுபவத்தை இழந்துவிடக்கூடாது. அந்தணர்/அந்தியர் பேதமின்றி எம்பெருமான் மோக்ஷமளிக்கிறான்.

ப்ரபத்தி என்னும் மேன்மைமிக்க கடலின் ஒரு திவிலையைக்கூட  நம்மால் வர்ணிக்க முடியாது ஆக இதன் மகத்துவத்தை நாம் ஓங்கி உரைக்க வேணும்.

"தகவால்தரிக்கின்றதன்னடியார்களைத்தன் திறத்தில்
மிக ஆதரம் செய்யும் மெய்யருள் வித்தகன் மெய்யுரையின்
அகவா யறிந்தவர் ஆரண நீதி நெறி குலைதல்
உகவாரென எங்கள் தேசிகர் உண்மை உரைத்தனரே" (அதி 32)

"உண்மை உரைக்கும்மறைகளில் ஓங்கிய உத்தமனார்
வண்மைஅளப்பரிதாதலின் வந்து கழல் பணிவார்
தண்மை கிடக்கத் தரமளவென்ற வியப்பிலராம்
உண்மை உரைத்தனர்ஓரம்தவிர உயர்ந்தனரே" (அதி 33)

***************************************************************to be contd.*******

Thursday, April 8, 2021

ஶ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தின் ரஸங்கள் - Part 4

                       Ammal and Swami Desikan: - Kudanthai en Kovalan

 16. புருஷார்த்த காஷ்டாதிகாரம்

*****************************************************************************

"பகவத் கைங்கர்யம்" புருஷார்த்தம் என்பதாகும் இதன் எல்லை நிலமே "பாகவத கைங்கர்யம்" என்பதைக்காட்டும் அதிகாரம் இது.
பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருப்பவர்களே பாகவதர்கள்.
(ததீயர்) எனப்படுவர். இவர்கள் ராஜகுமாரர்கள் போன்றவர்கள். ப்ரபன்னன் இவர்களைக்கொண்டாடினால் ராஜாவாகிய எம்பெருமான் மிக ஸந்தோஷப்படுவான்.
பகவான் ஸேஷி. அவனே எஜமானன். பாகவதர்களும் ஆசார்யர்களும் ஸேஷபூதர்கள். இவர்களை ஆராதிப்பது பகவானை ஆராதிப்பதற்கு ஈடாகும். ஆக பாகவத ஸேஷம் பகவத் ஸேஷத்வத்துக்குத் துல்யம் (சமம்)
ராவணன் போன்றது நம் மனம். பிறரை வருத்தாமல் நாமும் வருந்தாமல் இருக்க பழக வேணும். ஆசார்ய அறிவுரைகளும் க்ரந்தங்களும்  தளரா மனம் தந்து நம்மைத் தெளிவிக்கும்.

பத்னியின் கைங்கர்யத்தால் மகிழும் பர்த்தாவைப்போல, தம் குழந்தைக்கு அமுதூட்டி மகிழும் தாயைப்போல அர்ச்சையில் எழுந்தருளியுள்ள எம்பெருமானுக்குச் செய்யும்   கைங்கர்யத்தால் ப்ரபன்னன் ஸந்தோஷிக்க வேணும்.

மாதா பிதா செய்யும்  பாபம் மக்களையும், சிஷ்யனின் பாபம் ஆசார்யனையும் சேருமாப்போல பாகவத தோஷம் ப்ரபன்னனைச்சேரும். ஸம்ப்ரதாயத்தின் சீர்மையை ஆசார்யனின் காலக்ஷேபங்கள் மூலம் அறிந்து எம்பெருமான் கைங்கர்யத்தில் ஊற்றம் பெறவேணும். இந்த பகவதநுபவத்தை பாகவதநுபவம் வரை கொண்டு சேர்க்க வேணும்.
"த்த்" என்ற பகவானை  உணர்ந்தவன் "ததீயன்". விஷ்ணு ஆராதனமே உயர்ந்தது. அதைவிட உயர்ந்தது ததீயாராதனம்.
ராஜாவின் முன் ராஜகுமாரனை உதாஸீனம் செய்தால் ராஜாவுக்குக் கோபம் வருமாப்போல "பாகவதாபசாரம் பகவானுக்குக் கோபமுண்டாக்கும். என்பக்தனை உணர்ந்தவரே உயர்குலத்தவர்"-- என்கிறான் பகவான். ஆக பகவத் கைங்கர்யத்தின் எல்லை நிலமாக பாகவத கைங்கர்யம் உள்ளது. இதுவே புருஷார்த்தத்துக்கும் எல்லை. 
 
"வேதமறிந்த பகவர் வியக்க விளங்கிய சீர்
நாதன்வகுத்த நயம் பெருநாம் அவன் நல்லடியார்க்கு
ஆதரமிக்க அடிமை இசைந்து அழியா மறைநூல்
நீதி நிறுத்த நிலை குலையா வகை நின்றனமே" (அதி 23).
 
 
*******************************************************************************
17. ஶாஸ்த்ரீய நியமனாதிகாரம்
*******************************************************************************
ஶாஸ்த்ரத்தில் சொல்லியுள்ளபடி ப்ரபன்னன் செய்ய வேண்டிய பகவத்
பாகவத கைங்கர்யங்களைச் சொல்கிறது இவ்வதிகாரம்.
அஞ்ஞானத்தை வளர்க்கும்  இவ்வுலகில் சாஸ்த்ரம் தான் கைவிளக்கு. அதனைத்தழுவியே ப்ரபன்னனின் கைங்கர்யம் அமைய வேணும். 

ஶ்ரீபாஷ்யகாரரின் அறிவுரையால் இதனைத்தெளியலாம். ப்ரபன்னன் 
இச்சரீரம் அழியும்வரை செய்ய வேண்டிய கைங்கர்யங்கள் 
ஐந்து.
  1. ஶ்ரீபாஷ்யத்தைஸேவித்து பிறர்க்கு உபதேசித்தல்.
  2. அதற்குத் தகுதி இல்லையேல் ஆழ்வார் ஸுக்திகளை அத்யயநம் செய்து பிறருக்கு உபதேசித்தல்.
  3. அது முடியாவிடில் திவ்ய தேசங்களில் எம்பெருமானுக்கு சந்தனம் மாலை ஸமர்ப்பிக்கும் கைங்கர்யம் செய்தல்.
  4. இதுவும் முடியவில்லை எனில் த்வயத்தை அநுஸந்தானம் செய்திருத்தல்
  5. இதுவும் முடியாவிடில் ஒரு ஶ்ரீவைஷ்ணவனைஅண்டி அவன் நிழலில் ஒதுங்குதல். 
 
ஶ்ரீபாஷ்யகாரர் கூறிய இவற்றுள் ஏதேனும் ஒன்றையாவது செய்தல் வேண்டும்.
ப்ரபன்னன் ஶாஸ்த்ரத்தை மீறாமல் நடந்து எம்பெருமான் உகப்பை பெற முயலவேணும். 
ஆக்ஞா கைங்கரயம்--(ஸந்த்யாவந்தனம் முதலியன) இதனைச்செய்யாவிடில் பகவானின் நிக்ரஹம் ஏற்படும். 
அநுக்ஞா கைங்கரயம் --(சந்தன,புஷ்ப கைங்கர்யம்) இதனால் பலனுண்டு. செய்யாவிடில் பாபமில்லை.
 
"நின்றனர் அன்புடை வானோர் நிலையில் நிலமளந்தான்
நன்றிது தீயிதென்று நடத்திய நான்மறையால்
இன்று நமக்கு இரவாதலில் இம்மதியின் நிலவே
அன்றி அடிக்கடி ஆரிருள் தீர்க்க அடியளதே" (அதி 24)
 
 
****************************************************************************
18. அபராத பரிஹாராதிகாரம்
****************************************************************************
ப்ரபத்திக்குப்பின்  ப்ரபன்னன் செய்யும் பாபங்களைப் போக்கிக்கொள்ளும்
வழிகளைக் கூறும் அதிகாரம் இது.
ஆசார்ய க்ருபையால் மட்டுமே ஶாஸ்த்ரார்த்தங்களைத் தெரிந்து கொள்ள முடியும். ஶாஸ்த்ரங்களை உணர்ந்து அதன் போக்கில் நாம் அவற்றைபுரிந்து கொள்ளவேணும்.
நம் புரிதலுக்கேற்ப அவை மாறாது. ப்ரபன்னன் எம்பெருமான் கட்டளைகளை ஏற்று நடக்கவேணும்.
ப்ரபத்திக்குப்பின் பாபம் செய்யாதிருக்க வேணுமே என்ற பயம் ஞாயமனதே.
ப்ரபத்திக்குப்பின் தெரியாமல் செய்தபாபம் ஒட்டாது. புத்தி பூர்வமாய் செய்த பாபங்களுக்கு வருந்தி ப்ராயச்சித்தம் செய்ய வேண்டும். இதனைச் செய்யாதவர்கள் பகவானளிக்கும் சிறு தண்டனைகளை அனுபவிக்கிறார்கள். விபரீத அனுஷ்டானங்களில் ஈடுபடாதிருக்க வேணும். ப்ராயச்சித்த ப்ரபத்திக்கு "புனப்ரபாதானம்" என்று பெயர். இதனால் அனுஷ்டித்த ப்ரபத்திக்கு எந்தக் குறையும் ஏற்படாது.
தேகாத்ம ப்ரமை, ஸ்வாத்ம ஸ்வதந்த்ரம், பாகவதாபசாரம் ஆகிய புத்திபூர்வ பாபங்களை ப்ரபன்னன் இந்த தேஹாவஸானம் வரை எக்காரணத்தாலும் செய்யக்கூடாது.
 
ஆறறிவு படைத்த மனிதனால் தத்துவங்களை அறிந்து தவறுகளையும் பாபங்களையும் தவிர்க்க முடியும். அதற்கு திடமான வைராக்யமும் அப்யாசமும் தேவை.
இதனால் மோக்ஷம் தாமதிக்குமே தவிர இல்லாமல் போகாது. பெருமான் செய்த ஸங்கல்பம் பொய்க்காது. சிக்ஷித்து நம் பாபங்களைத் தொலைக்க வைப்பான்.
த்ரிஜடை சொல் கேளாத ராக்ஷஸிகளுக்கு ஹனுமானால் ப்ராணபயம் ஏற்பட்டு பிராட்டி க்ருபையால் விலகினாற்போல சிக்ஷை அளித்து நம்மை தடுத்தாட்கொள்வான் எம்பெருமான்.
 
"உளதான வல்வினைக்கு உள்ளம் வெருவி உலகளந்த
வளர் தாமரை இணை வன்சரணாக வரித்தவர்தம்
களைதான் என எழும் கன்மம் துறப்பார் துறந்திடிலும்.
இளைதாநிலைசெக எங்கள் பிரான் அருள் தேன் எழுமே" (அதி 25)
 
******************************************************************************
19. ஸ்தானவிஸேஷாதிகாரம்
******************************************************************************
ப்ரபன்னன் வஸிக்கத்தக்க இடங்களைப்பற்றிக் கூறும்  அதிகாரம் இது.
எம்பெருமானின் திருவடிஸேவையுடன் திருவாராதனம்
முதலியவற்றாலும்,காலக்ஷேபங்களாலும் பக்தி ப்ரவாகம்நிறைந்த ஸ்தலங்கள் வைகுந்தத்துக்குச் சமானமாகிறதாம்.
"கருந்தடமுகில் வண்ணனைக் கடைக்கொண்டு கைதொழும் பக்தர்கள் இருந்த ஊரில் இருக்கும் மானிடர் எத்தவங்கள் செய்தார் கொலோ" (4-4-7) பெரியாழ்வர் திருமொழி என்பதற்கிணங்க திவ்யதேசங்கள் ப்ரபன்னன்  வாழச்சிறந்தவை. சாது ஜனங்கள் நிறைந்ததுவும் ஆசார்யர்கள் வழிபட்டதாயுமுள்ள இடங்கள் நாம் சென்று வாழத்தகுந்தவை என்கிறது
மகாபாரதம்.
எங்கு மன ஶாந்தி கிடைத்து, ஹ்ருதய கமலத்துள் எழுந்தருளியுள்ள எம்பெருமானை ஆராதிக்க முடிகிறதோ அதுவே காஞ்சி, திருப்பதி, நைமிசாரண்யம் எனலாம். இதனை விளக்க ஸ்வாமி உதாகரிக்கும் கதை இது.
 
காலவர் என்பவர் கருடனின் மாமா.
விஶ்வாமித்ரரின் சீடர். குரு தக்ஷிணையாக ஒரு காதுமட்டும் பச்சையாக இருக்கும் 1000 குதிரைகளைக் கேட்க கருடன் அவருடன் வருணலோகம் செல்லும் வழியில் சமுத்ரத்தின் நடுவே உள்ள தீவில் இளைப்பாற நேர்தந்தது. சாண்டிலீ என்ற வேட்டுவச்சேரியில் தன் ஆசாரம் குறையாமல் வாழ்ந்து வந்த அவளது உபஸரிப்பில் திளைத்து எழ முயன்ற கருடன் சர்வசக்தியும் ஒடுங்க இறக்கைகளும் உதிர்ந்தன. காரணம் அறியாது விழித்த கருடனிடம் "பாகவதாபசாரம்" தான் இந்நிலைக்குக் காரணம் ஏனக் காலவர் கூறினார். "இந்த சிறந்த தபஸ்வினி  இவ்வேட்டுவச்சேரியில் வசிக்கும் நிர்பந்தம் ஏன்" என்ற நினைப்பே பாகவதாபசாரமாகியது. என்றறிந்து கருடன் தபஸ்வினியிடம் மன்னிப்பு கேட்க இழந்த சக்தியும் இறக்கைகளும் மீண்டும் பெற்றான் கருடன். பாகவதாபசார தீவ்ரத்தை விளக்கும் கதை இது. ஆக இந்ரியங்களை அடக்கிய ப்ரபன்னனுக்கு எந்த இடமும்திவ்ய தேசமாகும்.
"ஆராத அருளமுதம் பொதிந்த கோயில்"--
"கண்ணன் அடி இணை எமக்குக்காட்டும் வெற்பு" (அதி42,43)

"தேனார்கமலத் திருமகள் நாதன் திகழ்ந்துறையும்
வாநாடுகந்தவர் வையத்--திருப்பிடம்
வன்தருமக் கானார் இமயமும் கங்கையும் காவிரியும் கடலும்
நானா நகரமும் நாகமும் கூடிய நன்னிலமே"--(அதி 26)
 
*********************************************************************************
20. நிர்யாணாதிகாரம்
*********************************************************************************
இந்த ஶரீரத்திலிருந்து ஜீவன் வெளியேறும் முறையை விவரிக்கும் அதிகாரம் இது.
தேச, கால, நியம, சூழ்நிலை ஆகிய தடைகளைக் கடந்தது ப்ரபத்தி. இது மற்றைய உபாயங்களால் அடைய முடியாத பலன்களைத்தரவல்லது.
ஒரே ஒருமுறைதான் இதனை அனுஷ்டிக்க முடியும்.
"கடற்கரையை நினை. கடற்கரையில் ராமபிரான் சொன்ன வார்த்தையை நினை"-- என்கிறார் பராஸரபட்டர். 
ஒருவன் என்று ப்ரபத்தி அனுஷ்டிக்கிறானோ அதுவே அவனுக்கும் எம்பெருமானுக்கும் நடக்கும் ஆத்ம விவாஹ தினம்.
ப்ரபத்தியே ஶக்தி மிக்கது. அதைப் பலப்படுத்த வேறேதும் தேவையில்லை. இதற்கு "ப்ரும்ஹாஸ்த்ர ந்யாயம்" என்று பெயர். ப்ரும்ஹாஸ்த்ரம் ஒருமுறைதான் ப்ரயோகிக்க முடியும். 2ம் முறை ப்ரயோகித்தால் பயன்தராது. இந்த்ரஜித் தொடுத்த ப்ரும்ஹாஸ்த்ரத்தால் கட்டுண்ட ஹனுமனை ராக்ஷஸர்கள் கயிற்றால் கட்டியதால் ப்ரும்ஹாஸ்த்ரம் பலன் தராது போயிற்று. அதேபோல ப்ரபத்தி பிற சம்பந்தத்தை ஏற்காது.
நாம் நம்மை பக்தனாக உணர வேணும். 
ப்ரபத்தி பலிதமாக ப்ரபன்னனுக்குத்தடையாக உள்ளவை.
  1. அகங்கார மமகாரம்
  2. பாகவதாபசாரம்
  3. தேவதாந்தரம்
  4. புத்தி துர்லபம்(குறைவு)
இவற்றைத்தவிர்க்க பகவான் செய்யும் உபகாரங்கள் பல.
ஸதாசார்ய ஸத்ஸங்கத்தை ஏற்படுத்தி, ப்ரபன்னனின் மகாவிஶ்வாஸத்தைக்கூட்டி, சிறு சிக்ஷைகளை அளித்து அவனை மோக்ஷத்துக்குத் தயார்படுத்துகிறான் எம்பெருமான்.
"அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள் தன் அருள் நினைந்தே அழும் குழவி"--போலவும்
"த்வயி ரக்ஷதி ரக்ஷகை: கிமன்யை: த்வயி  சாரக்ஷதி ரக்ஷகை: கிமன்யை:"---என்பதையும் உணர்ந்த ப்ரபன்னனை பெருமான் கைவிடான்.
சிறையிருந்த ராஜகுமாரனை விலங்கறுத்து அரண்மனை அழைத்துச்செல்லும் ராஜனைப்போல ப்ரபன்னனின் ஜீவனை  மூர்தன்யநாடி வழியே வெளிக்கொணர்ந்து  சூக்ஷ்மஶரீரமளித்து அர்ச்சிராதி மார்க்கம் வழியே அழைத்துச் செல்ல ஸித்தமாயுள்ளான்.
 
"நன்னிலமாம் அது நற்கலமாம் அது நன்னிமித்தம் என்னலுமாம் அது
யாதானுமாம் அங்கடியவர்க்கு மின்னிலை 
மேனி விடும் பயணத்து விலக்கு இலதோர் 
நன்னிலையாம் நடுநாடி வழிக்கு நடைபெறவே" (அதி 27)
 
*****************************************************************************
21. கதி விஶேஷாதிகாரம்
*****************************************************************************
பரமபதம் செல்லும் ப்ரபன்னனின் ஜீவயாத்ரையின் விளக்கமே இவ்வதிகாரம்.
கருணாமூர்த்தியான எம்பெருமான் ஶரணாகதியின் மூலம் ப்ரபன்னனைத் தன்னிடம் அழைத்துக் கொண்டு ரக்ஷிக்கிறான் ஒரு ஶ்ரீ வைஷ்ணவனைச் சார்ந்ததால் பசு, யானை, வௌவால் இவற்றுக்கும் ப்ரபத்தி கிடைத்ததை அறிகிறோம்.
எம்பெருமான் ஸர்வக்ஞன். ஸர்வ ஶக்தன். பரமகாருணிகன். ஆனாலும் ஶரணாகதி மூலமே அவனை அடையமுடியும். 
ஸுகரமான வராஹம் ஸுகரமான சுலப ஶரணாகதி வழியைக்காட்டி மகத்தான பெரும் பலனாகிய மோக்ஷத்தை அளிக்கிறான். ஸௌபரீ போன்ற பெரிய தபஸ்விகளே இந்த ஸம்ஸார பந்தத்தில் வீழ்ந்து "பழுதே போக்கினர் பல காலங்கள்".
இந்த ஶரீரத்திலிருந்து ஜீவனை எம்பெருமான் ப்ரும்ஹநாடிக்குள் 
புகச்செய்து அதன் பயணத்தை அர்ச்சிராதி மார்க்கத்தை நோக்கி அமைத்துக் கொடுக்கிறான். இந்த ஒளிப்பாதையில் செல்லும் ஜீவனுக்கு
அக்னி, சுக்லபக்ஷ, உத்ராயண தேவதைகள், ஸம்வத்ஸர, வாயு, ஆதித்யன்,சந்த்ரன், வருணன், இந்த்ரன், ப்ரஜாபதி ஆகிய தேவதைகள் அந்தந்த இடங்களில்  உபசாரங்கள் செய்கின்றனர். 
இவ்வாறு ஜீவன் விரஜா நதியை அடைந்து நீராடி ஸூக்ஷ்ம ஶரீரம் விடுத்து அப்ராக்ருத ஶரீரம் பெற்று ஶ்ரீவைகுண்டம் புகத் தயாராகின்றான். ஆங்கே முக்தர், நித்யஸூரிகள் அளிக்கும் ப்ரும்ஹாலங்கார மரியாதைகளைப் பெறுகிறான்.
ஆங்கே புகும் முக்தாத்மா எம்பெருமான் அமர்ந்துள்ள மணிமண்டபத்தை அடைந்து அவனது திருவடித் தாமரைகளில் பணிந்து 
பற்றுகிறான் .முக்தாத்மாவாகிய  இவனுக்கு மோக்ஷானுபவமளித்து
கைங்கர்ய ஸாம்ராஜயத்தில் பரிபூர்ண ப்ரும்ஹானந்தம் அனுபவிக்கச் செய்கிறான் அவன் திருவடிநிழலில்.

 "நடைபெற அங்கிப்பகல் ஒளிநாள் உத்தராயணம் ஆண்டு
 இடைவருகாற்று இரவி இரவின் பதி மின் வருணன்
 குடையுடைவானவர்கோன் பிரஜாபதி என்று இவரால்
 இடையிடை போகங்கள் எய்தி எழிற்பதம் ஏறுவரே"---(அதி 28)
 
*************************************************************to be contd.********

Friday, April 2, 2021

ஶ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தின் ரஸங்கள் - Part 3

                    

 11. பரிகர விபாகாதிகாரம்

***************************************************************************
(ப்ரபத்தியின் அங்கங்களை விளக்கும் அதிகாரம்)
ப்ரபத்திக்கு 5 அங்கங்கள் உள்ளன-
1. அனுகூல்ய ஸங்கல்பம் --எம்பெருமான்திருவுள்ளம் உஹக்கும் கார்யங்களை மட்டுமே செய்தல்.
2. ப்ராதிகூல்ய வர்ஜனம்  --எம்பெருமான் திருவுள்ளம் உகக்காத செயல்களை விடுதல்
3. மஹாவிஶ்வாஸம் --ப்ரபன்னனைக் காக்கும் சக்தி எம்பெருமான் ஒருவனுக்கே உண்டு என்ற திடநம்பிக்கை.
4. ‌கார்ப்பண்யம் --பரம புருஷார்த்தமாகிய  மோக்ஷத்தை தன்னாலேயே அடையமுடியாது என்பதை முழுதுமாய் உணர்தல்
5. கோப்த்ருத்வ வர்ணம் --ப்ரபன்னின் ரக்ஷகனாக எம்பெருமானை வரித்து ப்ரார்த்தித்தல்
 
இந்த 5 அங்கங்களையும் ப்ரபன்னன் ப்ரபத்தி செய்யும்போது கொஞ்சமும் குறையாமல் அனுஷ்டிக்க வேணும்.
த்ரிஜடை ஸீதாபிராட்டியிடமும், விபீஷணன் ராமபிரானிடமும்  மஹாவிஶ்வாஸத்துடன் ப்ரபத்தி அனுஷ்டித்தார்கள்.
 
அறிவித்தனர்அன்பர்ஐயம் பறையும் உபாயமில்லாத்
துறவித்துணியில் துணையாம் பரனை வரிக்கும் வகை
உறவு இத்தனையின்றி ஒத்தாரென நின்ற உம்பரை நாம்
பிறவித்துயரா செகுப்பீர் என்றிரக்கும் பிழையறவே (அதி 18)
 
 
**************************************************************************
12. ஸாங்கப்ரபாதானாதிகாரம்
**************************************************************************
ப்ரபன்னன் ப்ரபத்திசெய்யும் போது கடைபிடிக்கவேண்டிய அங்கிகளின் முக்யத்துவத்தை விளக்கும் அதிகாரம் இது. 
ப்ரபன்னன் 4 வித த்யாகங்களும் செய்ய வேணும். ஆசார்யனை முன்னிட்டுக்கொண்டு இவற்றை ப்ரபன்னன் செய்ய வேணும்‌. த்வய மந்த்ரம் ஸாதனமாகிறது. இவற்றுடன் ப்ரபன்னன் ஸ்வரூப, பல, ஆத்ம ஸமர்ப்பணம் செய்கிறான். இவற்றுள் பர ஸமர்ப்பணம் (ஆத்ம) மிக முக்யமாகிறது.
5 அங்கங்களுடன் ப்ரபத்தி செய்யும் ப்ரபன்னன் கைகொள்ளவேண்டிய படிகள் -
  • அனுஷ்டான ஸங்கல்பம்,
  • ஸாத்விக த்யாகம்,
  • குருபரம்பரா த்யானம்,
  • தாயார் திருவடிகளில் புருஷகார ப்ரபத்தி, 
  • த்வய மந்த்ர உச்சாடணம் ஆகியவை‌

1. க்ருத்ருத்வ த்யாகம்  ------எம்பெருமானின் கருணையே  ப்ரபத்திக்குக் காரணம்.
2. மமதா த்யாகம்  -------பலனை எதிர்பார்த்து இதனை அனுஷ்டிக்கவில்லை என்ற ஞானம்.
3. பலத்யாகம்  ----ப்ரபத்தியின் பலன் முழுதுமாய் எம்பெருமானுடையது என்று புரிதல்.
4. பலபலோ த்யாகம்  ---எம்பெருமான் ஒருவனே அடையத்தக்க பலன்.
 
குழந்தையின் ஆரோகயத்துக்கு தாய் பத்யம் இருக்குமாப்போல நமக்காக ஆசார்யன் ப்ரபத்தி செய்யும் போது நாம் பாபம் செய்யாதிருக்கவேணும். அரண்மனையில் திருடிய நகையை அரசனிடம் திருப்பித்தரும் திருடன் போல நம்பரத்தை  நாமும் உரியவனிடம் சேர்க்க முயல வேணும். இதனால் நாமும் எம்பெருமானும் ஸந்தோஷிக்கலாம்.
"மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்" உபாய அனுஷ்டானம் செய்யும் வரை ஸோகம் இருக்கவேணும்‌ செய்தபின் ஸோகம் தவிர்க்க வேணும்.

அறவே பரமென்று அடைக்கலம் வைத்தனர் அன்று நம்மை
பெறவே கருதிப் பெரும் தகவுற்ற பிரான் அடிக்கீழ்
உறவேய் இவனுயிர் காக்கின்ற ஓருயிர் உண்மையை நீ
மறவேல் என நம் மறைமுடி சூடிய மன்னவரே" ---(அதி 19)

 
******************************************************************************
13. க்ருத க்ருத்யாதிகாரம்
******************************************************************************
ப்ரபத்தி அனுஷ்டித்தபின் சேதனன் மனநிலையையும் அனுஷ்டானங்களையும் விவரிக்கும் அதிகாரம் இது.
தன் ஆத்ம ரக்ஷணத்தை எம்பெருமானிடம் ஒப்படைத்தபின் வேறெந்த பாதுகாப்பையும் சேதனன் நாட வேண்டாம்.
ப்ரபத்தி அனுஷ்டித்த சேதனன் தன் நித்ய நைமித்திக கர்மாக்கள், பகவத் பாகவத , ஆசார்ய கைங்கர்யங்களைச்செய்தல் வேண்டும். 
பயத்தையும், சந்தேகத்தையும் விட்டு பாபங்களைச்செய்யாதிருக்க வேண்டும். ப்ரபத்திக்கு முன்னிருந்த நிலையில் நிர்வேதம் கொண்டு, ப்ரபத்திக்குப்பின் ஒரு நிறைவை அடைகிறான். "பொறுப்புத் துறப்பே" ஶரணாகதி. ஆசார்யன் மூலம் எம்பெருமான் திருவடிகளில் ஆத்மாவை அடைவித்த நிலை இது. தன் பொறுப்புக்களிலிருந்து விடுபட்டு சேதனன் "க்ருத க்ருத்யனாகின்றான்".
பரன்யாஸம் அனுஷ்டித்த க்ருதக்ருத்யன் ஸம்ஸாரத்தைக் கடக்க எம்பெருமான் திருவடிகளைப் பற்றியுள்ளான். எம்பெருமானின் ஸங்கல்பமாகிய சூர்யோதயம் சேதனனை ஸம்ஸாரம் என்ற இருட்டிலிருந்து வெளியேற்றுகிறது.
பரன்யாசத்ததுக்குப்பின் வாய்க்கும்போதெல்லாம் ஆசார்யனை அணுகி  பகவத்விஷயங்களை க்ரஹிக்கவேணும். 
"போரடிக்கும் மாடு வாய்க்குப்போட்ட பூட்டின் வழியே வைக்கோலை உண்ணுமாப்போல" படகு நீரில் மிதக்கும் வஸ்து. நீர் அதனுள் புகுந்தால் அதன் நிலை என்னவாகும்!
அதுபோல சுக துக்கங்களைத்தள்ளிவைத்து வாழப்பழகி ஆசார்ய உபதேசங்களால் தெளிய வேணும்.
"மாஸுச:" என்ற எம்பெருமான் வாக்கில் மஹாவிஸ்வாஸம் கொட்டு வேறு உபாயத்தை நாடாது யாருக்கும் இனி ப்ரபன்னன் கடன் பட்டவனல்ல என்பதை உணரவேணும். இதுவரை பல பிறவிகளில் சேர்த்த பாவங்கள்  ப்ரபத்தியில் அழிகிறது. வரப்போகும் பாபம் ஒட்டாது. ப்ராரப்தம் அனுபவித்து இப்பிறவியில் முடியும் இதனையே ஆண்டாள் "போயபிழையும், புகுதருவான், நன்றனவும் தீயினில் தூசாகும் "--என எளிமையாய் ச்சொல்கிறாள்.

"மன்னவர் விண்ணவர் வானோர் இறை ஒன்றும் வான் கருத்தோர்
அன்னவர் வேள்விஅனைத்தும்முடித்தனர் அன்புடையார்க்கு
என்ன வரம் தர என்ற நம் அத்திகிரி த்திருமால்
முன்னம் வருந்தி அடைக்கலம் கொண்ட நம் முக்கியரே" (அதி20)

************************************************************************
14. ஸ்வநிஷ்ட அபிஞானாதிகாரம்
************************************************************************
ப்ரபத்திக்குப்பின் ப்ரபன்னனிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் பற்றி  விவரிக்கும் அதிகாரம் இது.
ப்ரபத்தியின் அடிப்படை நியதிகளைத் தெரிந்து ப்ரபத்தி செய்த  சேதனனின் மனத்தளவிலும் நடவடிக்கைகளிலும் ஏற்படும் படிப்படியான முதிர்ச்சி முன்னேற்ற நிலைகளை ஸ்வாமி கூறுகிறார்.
ப்ரபத்தி ஸாஸ்த்ர ஞானமும், அதனை அடையும் மனோபாவமும் அனுஷ்டான க்ரமமும் இதிலடங்கும்.
தன்னைப்பற்றிய இந்த ஸ்வரூப நிஷ்டை நிலையை அடைந்த சேதனன் கீழ்வரும் லக்ஷணங்களைக்கொண்டவனாயிருப்பான்.

1. பிறரின் எதிர்மறைப்பேச்சுக்களால் பாதிப்படையாமை.
2. தன் பாபங்களை/குற்றங்களைச்சுட்டும் போது நன்றியுடன் ஏற்றல்‌
3. தவறுகள்/பாபங்கள் குறைவதில் ஸந்தோஷமடைதல்

உபாய நிஷ்டை செய்தவரின் லக்ஷணம்:
1. மரணத்தைக்கண்டு பயப்படாது அதனை ஓர் அதிதியைப்போல ஏற்றல்.
2. எம்பெருமான் ஒருவனே அடைக்கலம் என்பதில் உறுதி.
3. எந்த இக்கட்டிலும் பெருமான் ஒருவனே காப்பவன் என்ற ஞானம் மிகுதல்.
4. ப்ரபத்திக்குப்பின் வேறு உபாயத்தை நாடாமை.
5. நல்லதும் தீயதும் அவன் ஸங்கல்பம் என நம்புதல்

பல நிஷ்டையின் லக்ஷணங்கள்:
1. ப்ரபன்னன் தன் ஜீவதசையில் கிடைக்கும் போகங்களை அனுபவித்தல்
2. பகவத் கைங்கர்யத்தில் ருசியை அபிவிருத்தி செய்தல்.
3. பகவதநுபவம் பெற ஆர்வமடைதல்.

"முக்கிய மந்திரம் காட்டிய மூன்றில் நிலை உடையார்
தக்கவை அன்றித் தகாதவை ஒன்றும் தமக்கிசையார்
இக்கருமங்கள் எமக்கு உள எனும் இலக்கணத்தால்
மிக்க உணர்த்தியர் மேதினி மேவிய விண்ணவரே."(அதி21)


*******************************************************************************
15. உத்தர க்ருத்யாதி காரம்
*******************************************************************************
ப்ரபத்தி செய்துமுடித்த சேதனன் தன் ஜீவதசை முடியும்வரை கடைபிடிக்கவேண்டிய விதிகளை இந்த அதிகாரம் விவரிக்கிறது.
இந்த்ரியங்களை அடக்குதல், அவற்றை பகவத் ஸாஸ்த்ரங்களை அறிவதில் திருப்புதல், பாகவதாபசாரம் படாதிருத்தல், பரமைகாந்திகளுடன் ஸத்ஸங்கம் செய்தல்.
ஆகியவற்றைக்கடைபிடிப்பதால் ப்ரபன்னன் எம்பெருமானின் கட்டளைகளை மீறாமல் ஒரு ஆஸ்திக ப்ரபன்னனாக, உதாரண புருஷனாக விளங்குவான்.
இதுவரை தனக்கு தகுதி இல்லாமலிருந்ததை நினைந்து ஒதுங்காமல் எம்பெருமானின் எல்லையற்ற கருணையால் தான் ஶரணாகதி செய்யமுடிந்திருக்கும் தகுதியை நினைந்து அவனது ஆக்ஞா, அனுஞா கைங்கர்யங்களை விடாது செய்யவேணும்.
ஸாத்விக ஆகாரத்தை உட்கொண்டு இந்த்ரியங்களை வசப்படுத்தித் தகாத விஷயங்களில் ஈடுபடாமல் கட்டுப்படுத்த வேண்டும். 
ப்ரபன்னன் வாழவேண்டிய வழிமுறைகளை ஆசார்யர்களை  அண்டி அறியவேணும். கேள்வி கேட்பதை விடுத்து அடுத்து செய்ய வேண்டிய கைங்கர்யங்களைப்பற்றி சிந்திக்கவேணும்.
"சீர்கலந்த சொல் நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ்துயரை என்நினைந்து போக்குவரோ இன்று"---என ஆழ்வார் ஸாதிப்பதுபோல பகவத் சிந்தனை மிக முக்யம். எம்பெருமானின் திருக்கல்யாணகுணங்கள், அவன் அடியார்க்கு வசப்பட்டிருக்கும் தன்மை
இவற்றை அறிந்து அனுபவிக்கப் பழகவேணும்.

"உனக்கு எந்த இடம் சௌகர்யமாயுள்ளதோ அங்கே பர்ணசாலையை அமை"--என்றபோது கட்டளை இடாது இவ்வாறு சொல்வது  வருத்தமளிக்கிறது என்கிறார் ராமனிடம் இளையபெருமாள். ப்ரபன்னின் கைங்கர்ய ஆசை இப்படி இருக்க வேணும். தேத்தாங்கொட்டையால் கலங்கிய நீர் தெளியுமாப்போல ஆசார்யர்களின் உபதேசங்களால் ப்ரபன்னனின் மனம் தெளிவடையவேணும்.
இதைப்போல பாகவத கைங்கர்யமும் செய்தல் வேண்டும். அவர்களின் அருட்பார்வைக்கு இலக்காக வேணும். மேடு பள்ளங்களைத்தவிர்த்து சாலையில் நடந்து முன்னேறுவது போல ப்ரபத்திக்குப்பின் உள்ள ஜீவதசையை மிகுந்த கவனத்துடன் கடக்கவேண்டும்.

"விண்ணவர் வேண்டி விலக்கின்றி மேவும் அடிமை
எல்லாம் மண்ணுலகத்தில் மகிழ்ந்தடைகின்றனர்
வண்துவரைக் கண்ணன் அடைக்கலம் கொள்ளக்கடன்கள் கழற்றிய
நம் பண்ணமரும் தமிழ் வேதமறிந்த பகவர்களே" (அதி22)

**********************************************************to be contd.************