16. புருஷார்த்த காஷ்டாதிகாரம்
*****************************************************************************
"பகவத் கைங்கர்யம்" புருஷார்த்தம் என்பதாகும் இதன் எல்லை நிலமே "பாகவத கைங்கர்யம்" என்பதைக்காட்டும் அதிகாரம் இது.
பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருப்பவர்களே பாகவதர்கள்.
(ததீயர்) எனப்படுவர். இவர்கள் ராஜகுமாரர்கள் போன்றவர்கள். ப்ரபன்னன் இவர்களைக்கொண்டாடினால் ராஜாவாகிய எம்பெருமான் மிக ஸந்தோஷப்படுவான்.
பகவான்
ஸேஷி. அவனே எஜமானன். பாகவதர்களும் ஆசார்யர்களும் ஸேஷபூதர்கள். இவர்களை
ஆராதிப்பது பகவானை ஆராதிப்பதற்கு ஈடாகும். ஆக பாகவத ஸேஷம் பகவத்
ஸேஷத்வத்துக்குத் துல்யம் (சமம்)
ராவணன் போன்றது நம்
மனம். பிறரை வருத்தாமல் நாமும் வருந்தாமல் இருக்க பழக வேணும். ஆசார்ய
அறிவுரைகளும் க்ரந்தங்களும் தளரா மனம் தந்து நம்மைத் தெளிவிக்கும்.
பத்னியின்
கைங்கர்யத்தால் மகிழும் பர்த்தாவைப்போல, தம் குழந்தைக்கு அமுதூட்டி மகிழும்
தாயைப்போல அர்ச்சையில் எழுந்தருளியுள்ள எம்பெருமானுக்குச் செய்யும்
கைங்கர்யத்தால் ப்ரபன்னன் ஸந்தோஷிக்க வேணும்.
மாதா பிதா செய்யும் பாபம் மக்களையும், சிஷ்யனின் பாபம் ஆசார்யனையும் சேருமாப்போல பாகவத தோஷம் ப்ரபன்னனைச்சேரும். ஸம்ப்ரதாயத் தின்
சீர்மையை ஆசார்யனின் காலக்ஷேபங்கள் மூலம் அறிந்து எம்பெருமான்
கைங்கர்யத்தில் ஊற்றம் பெறவேணும். இந்த பகவதநுபவத்தை பாகவதநுபவம் வரை கொண்டு
சேர்க்க வேணும்.
"த்த்" என்ற பகவானை உணர்ந்தவன் "ததீயன்". விஷ்ணு ஆராதனமே உயர்ந்தது. அதைவிட உயர்ந்தது ததீயாராதனம்.
ராஜாவின்
முன் ராஜகுமாரனை உதாஸீனம் செய்தால் ராஜாவுக்குக் கோபம் வருமாப்போல
"பாகவதாபசாரம் பகவானுக்குக் கோபமுண்டாக்கும். என்பக்தனை உணர்ந்தவரே
உயர்குலத்தவர்"-- என்கிறான் பகவான். ஆக பகவத் கைங்கர்யத்தின் எல்லை நிலமாக பாகவத கைங்கர்யம் உள்ளது. இதுவே புருஷார்த்தத்துக்கும் எல்லை.
"வேதமறிந்த பகவர் வியக்க விளங்கிய சீர்
நாதன்வகுத்த நயம் பெருநாம் அவன் நல்லடியார்க்கு
ஆதரமிக்க அடிமை இசைந்து அழியா மறைநூல்
நீதி நிறுத்த நிலை குலையா வகை நின்றனமே" (அதி 23).
*******************************************************************************
17. ஶாஸ்த்ரீய நியமனாதிகாரம்
*******************************************************************************
ஶாஸ்த்ரத்தில் சொல்லியுள்ளபடி ப்ரபன்னன் செய்ய வேண்டிய பகவத்
பாகவத கைங்கர்யங்களைச் சொல்கிறது இவ்வதிகாரம்.
அஞ்ஞானத்தை வளர்க்கும் இவ்வுலகில் சாஸ்த்ரம் தான் கைவிளக்கு. அதனைத்தழுவியே ப்ரபன்னனின் கைங்கர்யம் அமைய வேணும்.
ஶ்ரீபாஷ்யகாரரின் அறிவுரையால் இதனைத்தெளியலாம். ப்ரபன்னன்
இச்சரீரம் அழியும்வரை செய்ய வேண்டிய கைங்கர்யங்கள்
ஐந்து.
- ஶ்ரீபாஷ்யத்தைஸேவித்து பிறர்க்கு உபதேசித்தல்.
- அதற்குத் தகுதி இல்லையேல் ஆழ்வார் ஸுக்திகளை அத்யயநம் செய்து பிறருக்கு உபதேசித்தல்.
- அது முடியாவிடில் திவ்ய தேசங்களில் எம்பெருமானுக்கு சந்தனம் மாலை ஸமர்ப்பிக்கும் கைங்கர்யம் செய்தல்.
- இதுவும் முடியவில்லை எனில் த்வயத்தை அநுஸந்தானம் செய்திருத்தல்
- இதுவும் முடியாவிடில் ஒரு ஶ்ரீவைஷ்ணவனைஅண்டி அவன் நிழலில் ஒதுங்குதல்.
ஶ்ரீபாஷ்யகாரர் கூறிய இவற்றுள் ஏதேனும் ஒன்றையாவது செய்தல் வேண்டும்.
ப்ரபன்னன் ஶாஸ்த்ரத்தை மீறாமல் நடந்து
எம்பெருமான் உகப்பை பெற முயலவேணும்.
ஆக்ஞா கைங்கரயம்--(ஸந்த்யாவந்தனம்
முதலியன) இதனைச்செய்யாவிடில் பகவானின் நிக்ரஹம் ஏற்படும்.
அநுக்ஞா கைங்கரயம்
--(சந்தன,புஷ்ப கைங்கர்யம்) இதனால் பலனுண்டு. செய்யாவிடில் பாபமில்லை.
"நின்றனர் அன்புடை வானோர் நிலையில் நிலமளந்தான்
நன்றிது தீயிதென்று நடத்திய நான்மறையால்
இன்று நமக்கு இரவாதலில் இம்மதியின் நிலவே
அன்றி அடிக்கடி ஆரிருள் தீர்க்க அடியளதே" (அதி 24)
****************************************************************************
18. அபராத பரிஹாராதிகாரம்
****************************************************************************
ப்ரபத்திக்குப்பின் ப்ரபன்னன் செய்யும் பாபங்களைப் போக்கிக்கொள்ளும்
வழிகளைக் கூறும் அதிகாரம் இது.
ஆசார்ய
க்ருபையால் மட்டுமே ஶாஸ்த்ரார்த்தங்களைத் தெரிந்து கொள்ள முடியும். ஶாஸ்த்ரங்களை உணர்ந்து அதன் போக்கில் நாம் அவற்றைபுரிந்து கொள்ளவேணும்.
நம் புரிதலுக்கேற்ப அவை மாறாது. ப்ரபன்னன் எம்பெருமான் கட்டளைகளை ஏற்று நடக்கவேணும்.
ப்ரபத்திக்குப்பின் பாபம் செய்யாதிருக்க வேணுமே என்ற பயம் ஞாயமனதே.
ப்ரபத்திக்குப்பின் தெரியாமல் செய்தபாபம் ஒட்டாது. புத்தி பூர்வமாய் செய்த பாபங்களுக்கு வருந்தி ப்ராயச்சித்தம் செய்ய வேண்டும். இதனைச்
செய்யாதவர்கள் பகவானளிக்கும் சிறு தண்டனைகளை அனுபவிக்கிறார்கள். விபரீத
அனுஷ்டானங்களில் ஈடுபடாதிருக்க வேணும். ப்ராயச்சித்த ப்ரபத்திக்கு
"புனப்ரபாதானம்" என்று பெயர். இதனால் அனுஷ்டித்த ப்ரபத்திக்கு எந்தக்
குறையும் ஏற்படாது.
தேகாத்ம ப்ரமை, ஸ்வாத்ம ஸ்வதந்த்ரம், பாகவதாபசாரம் ஆகிய புத்திபூர்வ பாபங்களை ப்ரபன்னன் இந்த தேஹாவஸானம் வரை எக்காரணத்தாலும் செய்யக்கூடாது.
ஆறறிவு படைத்த மனிதனால் தத்துவங்களை அறிந்து தவறுகளையும் பாபங்களையும் தவிர்க்க முடியும். அதற்கு திடமான வைராக்யமும் அப்யாசமும் தேவை.
இதனால்
மோக்ஷம் தாமதிக்குமே தவிர இல்லாமல் போகாது. பெருமான் செய்த ஸங்கல்பம்
பொய்க்காது. சிக்ஷித்து நம் பாபங்களைத் தொலைக்க வைப்பான்.
த்ரிஜடை
சொல் கேளாத ராக்ஷஸிகளுக்கு ஹனுமானால் ப்ராணபயம் ஏற்பட்டு பிராட்டி
க்ருபையால் விலகினாற்போல சிக்ஷை அளித்து நம்மை தடுத்தாட்கொள்வான்
எம்பெருமான்.
"உளதான வல்வினைக்கு உள்ளம் வெருவி உலகளந்த
வளர் தாமரை இணை வன்சரணாக வரித்தவர்தம்
களைதான் என எழும் கன்மம் துறப்பார் துறந்திடிலும்.
இளைதாநிலைசெக எங்கள் பிரான் அருள் தேன் எழுமே" (அதி 25)
******************************************************************************
19. ஸ்தானவிஸேஷாதிகாரம்
******************************************************************************
ப்ரபன்னன் வஸிக்கத்தக்க இடங்களைப்பற்றிக் கூறும் அதிகாரம் இது.
எம்பெருமானின் திருவடிஸேவையுடன் திருவாராதனம்
முதலியவற்றாலும்,காலக்ஷேபங்களா லும் பக்தி ப்ரவாகம்நிறைந்த ஸ்தலங்கள் வைகுந்தத்துக்குச் சமானமாகிறதாம்.
"கருந்தடமுகில் வண்ணனைக் கடைக்கொண்டு கைதொழும் பக்தர்கள் இருந்த ஊரில் இருக்கும் மானிடர்
எத்தவங்கள் செய்தார் கொலோ" (4-4-7) பெரியாழ்வர் திருமொழி என்பதற்கிணங்க
திவ்யதேசங்கள் ப்ரபன்னன் வாழச்சிறந்தவை. சாது ஜனங்கள் நிறைந்ததுவும்
ஆசார்யர்கள் வழிபட்டதாயுமுள்ள இடங்கள் நாம் சென்று வாழத்தகுந்தவை என்கிறது
மகாபாரதம்.
எங்கு
மன ஶாந்தி கிடைத்து, ஹ்ருதய கமலத்துள் எழுந்தருளியுள்ள எம்பெருமானை
ஆராதிக்க முடிகிறதோ அதுவே காஞ்சி, திருப்பதி, நைமிசாரண்யம் எனலாம். இதனை
விளக்க ஸ்வாமி உதாகரிக்கும் கதை இது.
காலவர் என்பவர் கருடனின் மாமா.
விஶ்வாமித்ரரின்
சீடர். குரு தக்ஷிணையாக ஒரு காதுமட்டும் பச்சையாக இருக்கும் 1000 குதிரைகளைக்
கேட்க கருடன் அவருடன் வருணலோகம் செல்லும் வழியில் சமுத்ரத்தின் நடுவே உள்ள
தீவில் இளைப்பாற நேர்தந்தது. சாண்டிலீ என்ற வேட்டுவச்சேரியில் தன் ஆசாரம்
குறையாமல் வாழ்ந்து வந்த அவளது உபஸரிப்பில் திளைத்து எழ முயன்ற கருடன்
சர்வசக்தியும் ஒடுங்க இறக்கைகளும் உதிர்ந்தன. காரணம் அறியாது விழித்த
கருடனிடம் "பாகவதாபசாரம்" தான் இந்நிலைக்குக் காரணம் ஏனக் காலவர்
கூறினார். "இந்த சிறந்த தபஸ்வினி இவ்வேட்டுவச்சேரியில் வசிக்கும்
நிர்பந்தம் ஏன்" என்ற நினைப்பே பாகவதாபசாரமாகியது. என்றறிந்து கருடன்
தபஸ்வினியிடம் மன்னிப்பு கேட்க இழந்த சக்தியும்
இறக்கைகளும் மீண்டும் பெற்றான் கருடன். பாகவதாபசார தீவ்ரத்தை விளக்கும் கதை
இது. ஆக இந்ரியங்களை அடக்கிய ப்ரபன்னனுக்கு எந்த இடமும்திவ்ய தேசமாகும்.
"ஆராத அருளமுதம் பொதிந்த கோயில்"--
"கண்ணன் அடி இணை எமக்குக்காட்டும் வெற்பு" (அதி42,43)
"தேனார்கமலத் திருமகள் நாதன் திகழ்ந்துறையும்
வாநாடுகந்தவர் வையத்--திருப்பிடம்
வன்தருமக் கானார் இமயமும் கங்கையும் காவிரியும் கடலும்
நானா நகரமும் நாகமும் கூடிய நன்னிலமே"--(அதி 26)
*********************************************************************************
20. நிர்யாணாதிகாரம்
*********************************************************************************
இந்த ஶரீரத்திலிருந்து ஜீவன் வெளியேறும் முறையை விவரிக்கும் அதிகாரம் இது.
தேச, கால, நியம, சூழ்நிலை ஆகிய தடைகளைக் கடந்தது ப்ரபத்தி. இது மற்றைய உபாயங்களால் அடைய முடியாத பலன்களைத்தரவல்லது.
ஒரே ஒருமுறைதான் இதனை அனுஷ்டிக்க முடியும்.
"கடற்கரையை
நினை. கடற்கரையில் ராமபிரான் சொன்ன வார்த்தையை நினை"-- என்கிறார்
பராஸரபட்டர்.
ஒருவன் என்று ப்ரபத்தி அனுஷ்டிக்கிறானோ அதுவே அவனுக்கும்
எம்பெருமானுக்கும் நடக்கும் ஆத்ம விவாஹ தினம்.
ப்ரபத்தியே
ஶக்தி மிக்கது. அதைப் பலப்படுத்த வேறேதும் தேவையில்லை. இதற்கு
"ப்ரும்ஹாஸ்த்ர ந்யாயம்" என்று பெயர். ப்ரும்ஹாஸ்த்ரம் ஒருமுறைதான்
ப்ரயோகிக்க முடியும். 2ம் முறை ப்ரயோகித்தால் பயன்தராது. இந்த்ரஜித் தொடுத்த
ப்ரும்ஹாஸ்த்ரத்தால் கட்டுண்ட ஹனுமனை ராக்ஷஸர்கள் கயிற்றால் கட்டியதால்
ப்ரும்ஹாஸ்த்ரம் பலன் தராது போயிற்று. அதேபோல ப்ரபத்தி பிற சம்பந்தத்தை
ஏற்காது.
நாம் நம்மை பக்தனாக உணர வேணும்.
ப்ரபத்தி பலிதமாக ப்ரபன்னனுக்குத்தடையாக உள்ளவை.
- அகங்கார மமகாரம்
- பாகவதாபசாரம்
- தேவதாந்தரம்
- புத்தி துர்லபம்(குறைவு)
இவற்றைத்தவிர்க்க பகவான் செய்யும் உபகாரங்கள் பல.
ஸதாசார்ய
ஸத்ஸங்கத்தை ஏற்படுத்தி, ப்ரபன்னனின் மகாவிஶ்வாஸத்தைக்கூட்டி, சிறு சிக்ஷைகளை
அளித்து அவனை மோக்ஷத்துக்குத் தயார்படுத்துகிறான் எம்பெருமான்.
"அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள் தன் அருள் நினைந்தே அழும் குழவி"--போலவும்
"த்வயி ரக்ஷதி ரக்ஷகை: கிமன்யை: த்வயி சாரக்ஷதி ரக்ஷகை: கிமன்யை:"---என்பதையும் உணர்ந்த ப்ரபன்னனை பெருமான் கைவிடான்.
சிறையிருந்த
ராஜகுமாரனை விலங்கறுத்து அரண்மனை அழைத்துச்செல்லும் ராஜனைப்போல
ப்ரபன்னனின் ஜீவனை மூர்தன்யநாடி வழியே வெளிக்கொணர்ந்து சூக்ஷ்மஶரீரமளித்து அர்ச்சிராதி மார்க்கம் வழியே அழைத்துச் செல்ல ஸித்தமாயுள்ளான்.
"நன்னிலமாம் அது நற்கலமாம் அது நன்னிமித்தம் என்னலுமாம் அது
யாதானுமாம் அங்கடியவர்க்கு மின்னிலை
மேனி விடும் பயணத்து விலக்கு இலதோர்
நன்னிலையாம் நடுநாடி வழிக்கு நடைபெறவே" (அதி 27)
*****************************************************************************
21. கதி விஶேஷாதிகாரம்
*****************************************************************************
கருணாமூர்த்தியான எம்பெருமான் ஶரணாகதியின் மூலம் ப்ரபன்னனைத் தன்னிடம் அழைத்துக் கொண்டு ரக்ஷிக்கிறான் ஒரு ஶ்ரீ வைஷ்ணவனைச் சார்ந்ததால் பசு, யானை, வௌவால் இவற்றுக்கும் ப்ரபத்தி கிடைத்ததை அறிகிறோம்.
எம்பெருமான் ஸர்வக்ஞன். ஸர்வ ஶக்தன். பரமகாருணிகன். ஆனாலும் ஶரணாகதி மூலமே அவனை அடையமுடியும்.
ஸுகரமான வராஹம் ஸுகரமான
சுலப ஶரணாகதி வழியைக்காட்டி மகத்தான பெரும் பலனாகிய மோக்ஷத்தை
அளிக்கிறான். ஸௌபரீ போன்ற பெரிய தபஸ்விகளே இந்த ஸம்ஸார பந்தத்தில்
வீழ்ந்து "பழுதே போக்கினர் பல காலங்கள்".
இந்த ஶரீரத்திலிருந்து ஜீவனை எம்பெருமான் ப்ரும்ஹநாடிக்குள்
புகச்செய்து அதன் பயணத்தை அர்ச்சிராதி மார்க்கத்தை நோக்கி அமைத்துக் கொடுக்கிறான். இந்த ஒளிப்பாதையில் செல்லும் ஜீவனுக்கு
அக்னி, சுக்லபக்ஷ, உத்ராயண தேவதை கள், ஸம்வத்ஸர, வாயு, ஆதித்யன், சந்த்ரன், வருணன், இந்த்ரன், ப்ரஜாபதி
ஆகிய தேவதைகள் அந்தந்த இடங்களில் உபசாரங்கள்
செய்கின்றனர்.
இவ்வாறு ஜீவன் விரஜா நதியை அடைந்து நீராடி ஸூக்ஷ்ம ஶரீரம்
விடுத்து அப்ராக்ருத ஶரீரம் பெற்று ஶ்ரீவைகுண்டம் புகத் தயாராகின்றான். ஆங்கே
முக்தர், நித்யஸூரிகள் அளிக்கும் ப்ரும்ஹாலங்கார மரியாதைகளைப் பெறுகிறான்.
ஆங்கே புகும் முக்தாத்மா எம்பெருமான் அமர்ந்துள்ள மணிமண்டபத்தை அடைந்து அவனது திருவடித் தாமரைகளில் பணிந்து
பற்றுகிறான் .முக்தாத்மாவாகிய இவனுக்கு மோக்ஷானுபவமளித்து
கைங்கர்ய ஸாம்ராஜயத்தில் பரிபூர்ண ப்ரும்ஹானந்தம் அனுபவிக்கச் செய்கிறான் அவன் திருவடிநிழலில்.
"நடைபெற அங்கிப்பகல் ஒளிநாள் உத்தராயணம் ஆண்டு
இடைவருகாற்று இரவி இரவின் பதி மின் வருணன்
குடையுடைவானவர்கோன் பிரஜாபதி என்று இவரால்
இடையிடை போகங்கள் எய்தி எழிற்பதம் ஏறுவரே"---(அதி 28)
*************************************************************to be contd.********
dhanyosmi! adiyen dasan!🙏🙏🙏🙏
ReplyDelete