Saturday, April 17, 2021

ஶ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தின் ரஸங்கள்! - Concluding Part

         

27. மூலமந்த்ராதிகாரம்
28. த்வயாதிகாரம்
29. சரமஶ்லோகாதிகாரம்

********************************************************************************

நம் ஸம்ப்ரதாயத்தின் முக்ய ரஹஸ்ய மந்த்ரங்கள். நான்கு காதுகள் மட்டும் கேட்கும் மந்த்ரங்கள் இவை.

"ஆளும் அடைக்கலம் என்று எம்மை அம்புயத்தாள் கணவன் 
தாளிணைக்கீழ் சேர்த்து எமக்கும் அவைதந்த தகவுடையார்
மூளும் இருட்கள் விள்ள முயன்று ஓதிய மூன்றின் உள்ளம்  
நாளும் உகக்க இங்கே நமக்கு ஒருவிதி வாய்க்கின்றதே"--(அதி 7) 

வேதம் புராண இதிகாசங்கள் இவையனைத்தையும் உள்ளடக்கிய மந்த்ரம் திருமந்த்ரம். இதற்கு "வ்யாபக மந்த்ரம்" என்றும் பெயர். 

"துஞ்சும் போதும், துயர்வரினும் சொல்வீர்"--"மூன்றுமாத்திரை உள்வாங்கி"-- என்று ப்ரணவமின்றி ஆழ்வார்கள் திருமந்த்ரத்தைக் காட்டியுள்ளனர்.

இத்தகைய மந்த்ரத்தை ஆசார்யமுகமாய் உபதேசம் பெற்று மந்த்ர சீர்மையைப் புரிந்து சொல்ல வேணும்.

த்வயம்:  த்வயமந்த்ரத்தின் மேன்மையை ஶ்ரீபாஷ்யகாரர் பங்குனி உத்ரத்தன்று பிராட்டி பெருமாள் சேர்த்தியில் கத்யத்ரயம் ஸேவித்து  எல்லோருக்குமாக ஶரணாகதி அனுஷ்டித்துப்  போற்றி உணர்த்தினார்.

நம்மாழ்வார் திருவேங்கடமுடையான் திருவடியில் ஶரணாகதி அனுஷ்டித்தார்.  

"அகலகில்லேன் இறையுமென்று
அலர்மேல் மங்கை உறைமார்பா
(ஸ்வாமித்வம்)
நிகரில் புகழாய் உலகம் மூன்றுடையாய் (விபூதித்வம்)
என்னை ஆள்வானே (வாத்ஸல்யம்)
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே (அர்ச்சாவதாரம்)
புகலொன்றில்லா அடியேன் (அகிஞ்சனத்வம்)
நின்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே" (அடைக்கலம்)

 
"எனது சொத்தாகிய உங்களை என்னிடம் சேர்க்கும் ஆழ்வார் அமர்ந்துள்ள என் திருவடியைப்பற்ற அந்த ஆசார்யனாகிய ஆழ்வாரைப் பற்றுங்கள்" என்கிறான் எம்பெருமான்.மேற் சொன்ன பாசுரம் த்வய மநத்ரத்தின் விளக்கமே.
தேர்த்தட்டில்அமர்ந்த எம்பெருமான் நெஞ்சைத் தொட்டுக்காட்டிச் சொன்ன வார்த்தைகளே "சரமஶ்லோகம்".
"அஶக்தனாக செய்ய முடியாத கர்ம ஞான பக்தி யோகங்களை விடுத்து அந்த நிலையில் என்னை நிறுத்தி ப்ரபத்தி செய்து என் திருவடிகளைப்பற்றுகிறவர்களின் சகல பாபங்களையும் போக்கி மோக்ஷமளிக்கிறேன். கவலைப்படாதே"--- என்கிறான் எம்பெருமான்.

"உறவினர் இல்லாதவர்க்கு எந்த உறவைச்சொன்னால் பாபம் நேராதோ அந்த உறவாய் நானிருப்பேன்"--என்று துஷ்யந்தன் தன் ராஜ்ய ப்ரஜைகளுக்குப் பாதுகாப்பின் பொருட்டு சட்டம் செய்ததாய் வரலாறு.  

ஆக இந்த மூன்று மந்த்ரங்களின் சீர்மையை உணர்ந்து  ஸதாசார்யனை அணுகி ப்ரபத்தி செய்து  ஆத்மாவையும் அதை ரக்ஷிக்கும் பொறுப்பையும் எம்பெருமானிடம் ஸமர்ப்பித்து நிர்பரனாயும் நிர் பயனாயும்  இருப்போமாக. 

(For 27th Adhikaram)
"உயர்ந்தனன் காவலன் அல்லார்க்கு உரிமை துறந்து உயிராய்
மயர்ந்தமை தீர்ந்து மற்றோர் வழியின்றி அடைக்கலமாய்ப்
பயந்தவன் நாரணன் பாதங்கள் சேர்ந்து பழ அடியார்
நயந்த குற்றேவல் எல்லாம் நாடும் நன் மதி ஓதினமே"--(அதி 34)

 
(For 28th Adhikaram)
"ஓதும் இரண்டை இசைந்து அருளால் உதவும் திருமால்
பாதமிரண்டும் சரண்எனப்பற்றி நம் பங்கயத்தாள் 
நாதனை நண்ணி நலந்திகழ் நாட்டில் அடிமை எல்லாம்
கோதில் உணர்த்தியுடன் கொள்ளுமாறு குறித்தனமே"--(அதி 35).

(For 29th Adhikaram)
"குறிப்புடன்மேவும்தருமங்களின்றி அக்கோவலனார்
வெறித்துளவக்கழல் மெய் அரணென்று விரைந்தடைந்து
பிரித்த வினைத்திரள் பின்தொடரா வகை அப்பெரியோர்
மறிப்புடை மன்னருள் வாசகத்தால் மருளற்றனமே---(அதி 36) 


ஆத்மஞானமும், பணிவும், வைராக்யமும், வேதாந்தத்தில் முழுநம்பிக்கையும் நம்மை இந்த விஸிஷ்டாத்வைத ஸத்ஸம்ப்ரதாயத்தில்  ஈடுபடுத்தியுள்ளது.
ஶ்ரீமன்நாராயணனே நமக்குப் பறை தரும் பரதெய்வம் என்பதை உணர்ந்து ப்ரபத்தி அனுஷ்டித்து பரிபூர்ண ப்ரும்ஹானுபவம் பெறுவோமாக.!!!!.

******************************************************************************
30. ஆசார்ய க்ருத்யாதிகாரம் 
31.  சிஷ்ய க்ருத்யாதிகாரம் 
******************************************************************************

ஆசார்யனுக்கு ஸமமானவரும் அவரைவிட உயர்ந்தவரும் கிடையாது. ஆசார்யானது நாவில் ஹயக்ரீவன் நின்று "ஹல ஹல" சப்தம் செய்கிறான்.

ஸம்ஸாரத்தில் மூழ்கிய நம்மை தூக்கி வெளிக்கொணர சஸ்த்ரபாணியான எம்பெருமான் சாஸ்த்ரபாணியாகச்  செய்த அவதாரமே ஆசார்ய அவதாரம். இத்தகைய ஆசார்யனும் அவர் உபதேசம் கேட்கும் சிஷ்யனும் இந்த ஸத் ஸம்பிரதாயத்தின் அடிப்படை .

வசிஷ்டரும் விஶ்வாமித்திரரும் ஆசார்யனாயினர் ஸ்ரீ ராமனுக்கு. சாந்தீபனி யிடம் பயின்றவன் கீதாசார்யன். இத்தகைய ஆசார்யனுக்கும் சிஷ்யனுக்கும் இருக்கவேண்டிய லக்ஷணங்களை ஸ்வாமி இந்த இரு அதிகாரங்களில் விவரிக்கிறார். 

ஸத்வகுண க்ரந்தங்கள் என்ற "திரியை" ப்ரீதியுடன்  சிஷ்யனுக்கு (எண்ணைய்) கற்பித்து ஸம்ப்ரதாய "தீபச்சுடரை" ஏற்றி ப்ரகாசம் அடையச்செய்பவரே சிறந்த ஆசார்யன். 

திருப்பாற்கடல், ஸ்ரீ வைகுண்டம், சூர்யமண்டலம், இவை எம்பெருமான் உறையும் ஸ்தான விசேஷங்கள். இவற்றுள் மோக்ஷம் என்ற ஸ்ரீ வைகுண்டத்தை நாம் அடைய ஆசார்யன் செய்து வைப்பதே ப்ரபத்தி. இதனை செய்வதற்கு முன் ஆசார்யன் பல க்ரந்தங்களை செய்து ,கற்று அவற்றை சிஷ்யர்களுக்கும் கற்பித்து ,தானும் அனுஷ்டித்து காட்ட வேண்டும். 

"வருவது விசாரியாது இந்திரனுக்கு உபதேசித்து ஞானம் இழந்த ப்ரஹ்மாவின் நிலையை" ஆசார்யன் அடைய கூடாது. நல்ல விளை நிலத்திலிட்ட வித்து பல்கிப் பெருகுவது போல ஸத் சிஷ்யர்கள் ஆசார்யனுடைய புகழை நிலை நிறுத்தி ஸம்ப்ரதாய மேன்மைக்கு காரண கார்யர்களாய் இருப்பர். தகுதி இன்றி ,பக்தியும் விநயமும் இல்லாதவர்கள், தன்னை பண்டிதர்களாய் நினைப்பவர்கள் ஆகியோருக்கு செய்யும் உபதேசம் பயனற்றவையாகும் என்கிறார் தேசிகர்.

இந்த நிலைக்கு "கணிகாலங்காரம் ஆக்குதல்", "விலைச்சாந்தாக்குதல்", "அம்பலத்தில் அவல் பொரியாக்குதல்", "குரங்கு கையில் பூமாலை ஆக்குதல்" -என்ற உதாரணங்களை காட்டுகிறார் ஸ்வாமி.

ப்ரஹ்மவித்தை அறிந்த ஆசார்யன் ஸத் பாத்ர சிஷ்யன் கிடைக்காவிடில் அந்த வித்தையைத் தன்னுடனேயே முடித்துக்கொள்வது உசிதம் என்கிறார். ஒழுக்கமற்றவர்க்குச் செய்யும் உபதேசம் பயனற்றுப் போவதுடன் அதன் பவித்ரத்தையும் இழக்கிறது. 

எப்படியெனில்  - "நாய்த்தோல் பையில் பால் வைக்குமாபோலே"

"ஸ்மஸான அக்னியை ஹோமத்துக்கு கொணருமாப்போலே" என்ற உதாரணங்களால் காட்டுகின்றார்.

சிஷ்ய லக்ஷணத்தையும் விளக்கும் ஸ்வாமி ,ஸம்ப்ரதாயத்தை அறிய முயலும் சிஷ்யனுக்கு பொறுமை, ஆசார்ய ப்ரதி  பக்தி, அவரிடம் அசைக்க முடியாத நம்பிக்கை இம்மூன்றும் மிக அவசியம் என்கிறார்.

மீண்டும் மீண்டும் சென்று கேட்டல், கற்றவைகளை மனதில் அசைபோட்டுக்கொண்டிருத்தல், தன் சுய கௌரவத்தை ஆசார்யன் முன் காண்பிக்காமை ஆகியனவும் சிஷ்ய லக்ஷணங்களாகும். ஆசார்யன் கற்பிப்பதை சிந்தாமல் சிதறாமல் மனதில் தேக்க வேண்டும். சிஷ்ய லக்ஷணமாக "सद्बुद्धिः साधु सेवि समुचित चरितः शुश्रूषुः प्रणिपतप्रश्नः शास्त्र विश्वास शाली"  என்பதாக ந்யாஸ விம்ஶதியில் ஸ்வாமி சாதித்துள்ளார்.

இத்தகைய உயர்ந்த ஸம்ப்ரதாயத்தை பற்றிய ஞானத்தை நமக்களிக்கும் ஆசார்யனை போற்றி உகப்பதை தவிர நாம் எந்த ப்ரதியுபகாரமும் செய்ய முடியாது. ஞான விளக்கேற்றி இருளனைத்தும் மாற்றிய ஆசார்யனுக்கு என்ன கைம்மாறு செய்வதென அந்த எம்பெருமானே திகைக்கிறான்!!

(For 30th Adhikaram)
"மறுளற்ற தேசிகர் வானுகப்பாலிந்த வையமெல்லாம் இருளற்று  
இறைவன் இணையடி பூண்டிட எண்ணுதலால் 
தெருளுற்ற செந்தொழில் செல்வம் பெருகி சிறந்தவர்பால் 
அருளுற்ற சிந்தையினால் அழியா விளக்கு ஏற்றினரே"  - (அதி 37)


(For 31st  Adhikaram)
"ஏற்றி மனத்து எழில் ஞானவிலக்கை இருளனைத்தும் 
மாற்றினவர்க்கு ஒரு கைம்மாறு மாயனும் காண இல்லான் 
போற்றி உகப்பதும் புந்தியில் கொள்வதும் பொங்கு புகழ் 
சாற்றி வளர்ப்பதும் சற்றல்லவோ முன்னம் பெற்றதற்கே" (அதி 38)

*******************************************************************************
32. நிகமனாதிகாரம்
*******************************************************************************

ஸம்ப்ரதாயத்திற்கே ஓர் விலை மதிக்க முடியாத ரத்ன மாலையாக நம் ஆசார்ய ஸார்வபௌமன் ஸ்ரீமத் வேதாந்த தேசிகன் அருளிச்செய்துள்ளதே இந்த ரஹஸ்யத்ரய ஸாரம்  என்ற உன்னத க்ரந்தம்." ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம்"  

இந்த நிகமனஅதிகாரத்தில் ஸ்வாமி இதுவரை சாதித்துள்ள விஷயங்கள் அனைத்தையும் தொகுத்து தம் ஆசார்யர்களின் இஷ்டத்தை பூர்த்தி செய்த த்ருப்தியை வெளிப்படுத்துகிறார்.

ஒன்று முதல் 22 வரையிலான அதிகாரங்கள் அர்தானுஶாஸனம் எனப்படும். ப்ரபத்தி சாஸ்த்ர மேன்மையை இவை கூறுகின்றன. 

23-24  - அதிகாரங்களும் "ஸ்திரீ கரண பாகம்" எனப்படும். இவை ப்ரபத்தியை தெளிவாக நிலைப்படுத்தும் அதிகாரங்கள். 

25-26 - ப்ரபத்தியின் மேன்மையையும் அதை ரக்ஷணம் செய்யும் விதமும் கூறும் அதிகாரம்.

27-29 - "பதவாக்ய யோஜனாதிகாரம்". அஷ்டாக்ஷரம், த்வயம், சரம ஸ்லோகம் ஆகிய மூன்றின்  உயர்வைக் கூறுபவை. 

30-31- ஆசார்ய சிஷ்ய லக்ஷணங்களின் விவரணம்.

32 - நிகமனம்  என்ற க்ரந்த முடிவுரை.

நாம் கற்கும் கல்வி சுமையாக இருக்க கூடாது. வேதாந்தத்தை விட சிறந்த கல்வி இல்லை. ஸ்ரீமன் நாராயணனை விட பரதேவதை இல்லை. ஸ்ரீ வைஷ்ணவர்களை விட புண்யமானவர்கள் இல்லை. பாகவதர்கள் வசிக்கும் இடங்களை விட திவ்ய தேசங்கள் இல்லை. 

ஸத் புத்தி ஸாத்வீகம் இவற்றைத் தருபவரே ஸதாசார்யன். உத்தவர் மைத்ரேயரைத் தேடி வருவதையும், நாரதர் வால்மீகியை நாடி வருவதையும் போல. மேற்சொன்ன எல்லாவற்றாலும் நமக்கு கிடைக்க போகும் பெரும் பலனே மோக்ஷ சாம்ராஜ்யம் 

ஸ்வாமி தேசிகனை விட உயர்ந்த ஆசார்யன் இல்லை. அவரது சிஷ்யர்களை விட சிறந்த பக்தர்கள் இல்லை. அவரது ஸ்ரீ ஸூக்திகளை விட சிறந்த க்ரந்தங்கள் இல்லை. அவரது ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம் என்ற இந்த க்ரந்தம் ஸ்ரீ பாஷ்யகாரரின் ஆறு கட்டளைகளையும் பூர்த்தி செய்கிறது.

மஹாபாரதத்துள் ராமாயணம் அடங்குவது போல ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்துள் இதிகாஸ, புராண, ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகள், பகவத் கீதை, பூர்வாசார்ய க்ரந்தங்கள் அனைத்தும் அடங்குகின்றன.ஆக இதை அறிந்தவன் எல்லாம் தெளிந்தவன் ஆகின்றான்.

வேதம் கூறும் அனைத்தும் உண்மை என்ற திட நம்பிக்கையுடன் தெளிந்த மனத்துடன் சந்தேகங்களை அகற்றி அற்ப பலன்களை ஒதுக்கி நிலையான மோக்ஷ பலத்தை அடைய பரம க்ருபையுடன் நம் ஸ்வாமி தேசிகன் அளித்துள்ள இந்த க்ரந்தத்தை நாம் ஸதாசார்யன் மூலம்  க்ரஹிப்போமாக!!!

"இந்த கிரந்தத்தை வெள்ளைப்பரிமுக தேசிகர் என் முன்னே தோன்றி என் உள்ளத்தில் எழுதி வைத்தார்" அதனையே நான் ஓலையில் இட்டேன் என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.

ஸ்வாமி தேஶிகன் தம் க்ருதஞையை இப்பாசுரம் மூலம் தெரிவிக்கிறார். 

"எட்டும் இரண்டும் அறியாத எம்மை இவைஅறிவித்து
எட்ட ஒண்ணாத இடம் தரும் எங்கள் அம்மாதவனார்
முட்டவினைத்திரள் மாள முயன்றிடும் அஞ்சல் என்றார்
கட்டெழில் வாசகத்தால் கலங்கா நிலை பெற்றனமே"---(அதி 54)


🙏🙏🌸🌸🌸🌸🌸🌻🌻🌻🌻🌻🌷🌷🌷🌷🌷🌻🌻🌻🌻🌻🌸🌸🌸🌸🌸🙏🙏



1 comment: