Wednesday, April 14, 2021

ஶ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தின் ரஸங்கள்! - Part 5


22. பரிபூர்ண ப்ரும்ஹானந்தாதிகாரம்
******************************************************************************

பரமபதத்தில் பரமபுருஷனை பரிபூர்ணமாய் அனுபவிக்ககும் விதத்தை விவரிக்கும் அதிகாரம் இது.

எம்பெருமானால் வரவேற்கப்பட்ட முக்த ஜீவன் எம்பெருமானுக்கும் பிராட்டிக்கும் ஏற்ற கைங்கர்யங்களை செய்யத்துவங்கி அந்தமில் பேரின்பமடைகின்றான். இதற்கே பரிபூர்ண ப்ரும்ஹானந்தம் என்று பெயர். இவன் திரும்ப இந்த ஸம்ஸார மண்டலத்துக்கு வருவதில்லை.எம் பெருமானுக்கு ஈடான ஞானமும் போகமும் முக்த ஜீவன் பெறுகிறான்.

ஜகத்காரணத்வம், (ஶ்ருஷ்டி) மோக்ஷ ப்ராதாத்வம், (மோக்ஷமளித்தல்) ஸர்வ ஆதாரத்வம், ஸர்வ நியந்த்ருத்வம், ஸர்வ ஸேஷித்வம் ஆகியன எம்பெருமானுக்கே உள்ள அசாதாரண தர்மங்கள். 

ஆதேயத்வம், விதேயத்வம், சேஷத்வம் ஆகியன முக்த ஜீவனுக்கான அசாதாரண தர்மங்கள். இப்படியாக முக்த ஜீவன் பரிபூர்ண ப்ரும்ஹானந்தத்தைப் பெற்று பிறவா நிலை அடைகிறான்.

பிறப்பு-ஸ்திதி-இறப்பு இம்மூன்றும் ஒருஜீவனுக்கு உண்டானநிலை. இவற்றுள் பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை.நம் கவனம் முழுதும் நிலையில்லாத ஸ்திதியிலேயே உள்ளது. பரம க்ருபையுடன் எம்பெருமான் இப்பிறவி நோயைத் தீர்க்க ஶரணாகதி ஶாஸ்த்ரத்தை அளித்து காக்கிறான். 

7 பிறவி சூர்யோபாஸனை, 7 பிறவி ருத்ரோபாஸனை, 7 பிறவி வாஸுதேவோபாஸனை என்று ஒவ்வொன்றினிடமும் பல்லாயிரக்கணக்கான பிறவிகளைக்கடந்து இப்பிறவி கிடைக்கப்பெற்றுள்ளோம். இதில் தேக ஸுத்திக்கு சக்கரப்பொறிஒற்றலும், ஆத்மஸுத்திக்கு ப்ரபத்தியும் ஸாதனமாக்கியள்ளான் அவனை அடைய.இவற்றை அனுஷ்டித்த ஜீவனை பெருமானும் பிராட்டியும் போட்டி போட்டுக்கொண்டு பரிகின்றனர்.

"ஏறி எழில்பதம் எல்லா உயிர்க்கும் இதமுகக்கும் 
நாறுதுழாய்முடி நாதனைநண்ணி அடிமையில்
கூறு கவர்ந்த குருக்கள் குழாங்கள் குரை கழற்கீழ்
மாறுதலின்றிமகிழ்ந்தெழும்போகத்து மன்னுவமே"---(அதி 29)

********************************************************************************
23. ஸித்தோபாய ஸோதனாதிகாரம்
********************************************************************************

ஸித்தோபாயமான எம்பெருமானைப்பற்றிய ஸந்தேகங்களுக்குப் பரிஹாரம் கூறி  உண்மையை விளக்கும் அதிகாரம் இது. இதுவரையிலான 22 அதிகாரங்களின் ஸாரமாகிறது இந்த அதிகாரம்.

எம்பெருமானால் கடாக்ஷிக்கப்படும் ஜீவன் ஆசார்யமுகத்தால் தத்வ த்ரயத்தை அறிந்து ,நிஷ்டை உடையவனாகி ப்ரபத்தி செய்யத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டு ஆறு அங்கங்களுடன் கூடிய ஶரணாகதியைச் செய்து ,நிஷ்பன்ன க்ருத்யனாகி தேவதாந்த்ரம் ,பாகவதாபசாரம் தவிர்த்து ,தன்நிஷ்டைக்குத் தகுந்த பகவத் ,பாகவத கைங்கர்யங்களைச் ஶாஸ்த்ரீய நியமப்படி செய்து, திவ்ய தேசவாஸம் செய்து தேகாவஸான காலத்தில் இந்த ஸ்தூல ஶரீரத்தை விட்டு எம்பெருமானை அடைந்து  பரிபூர்ண ப்ரும்ஹானந்தம் அடைகிறான் . 

இந்த அதிகாரம் ப்ரபன்னனின் மனத்திண்மையைப் பலப்படுத்துவதாய் அமைந்துள்ளது.எம்பெருமான் தன்னைப் பெறுவதற்குத் தானே ஸித்தமியிரருக்கும் கருணை உள்ளவன். ஆக 1.அவனைப்பற்றிய தெளிவு2.செயல் நன்றாகத் திருத்திப் பணிகொள்ளும் ஆசார்ய ஸம்பந்தம், ஆசார்யனிடமிருந்து பெறும்  ஶாஸ்த்ர ஞானம். ஆகிய மூன்றும் எம்பெருமான் நம்மீது கொண்டுள்ள நிக்ரஹ ஸங்கல்பத்தை மாற்ற வல்லவை.

  1. ஆத்மாபஹாரம் செய்யாமை
  2. நாஸ்திகவாதிகளிடமிருந்து நெடுந்தூரம் விலகல்
  3. ப்ரபத்தியை ஒத்திவைத்துக் காலம் தாழ்த்தாமை

இவற்றில் உறுதி கொண்டு லக்ஷ்மீவிஸிஷ்டனாகிய எம்பெருமானை அடைய ப்ரயத்னம் செய்தல் வேண்டும்.

கால விரயத்தினால் ஏற்படும் நஷ்டத்தை ஸ்வாமி கீழ் வரும் உதாரணத்தால் விளக்குகிறார்.

"மதுஅருந்த தாமரையிலமர்ந்த வண்டு இரவாகியும் வெளியேறாமல் காலம்தாழ்த்தியதால் பூ மூடிக்கொள்ள  காலை யில் வண்டுறங்கும் மலரை யானை பறித்து உண்டாற்போல"--என்கிறார்.

ஆக இந்நிலையில்லா ஸ்திதியில் நிலையான ப்ரும்ஹானுபவம் தரவல்ல ஶரணாகதியைக் காலம் கடத்தாமல் செய்வது  மிக அவசியம்."

"மன்னும் அனைத்தும் உறவாய் மருள் மாற்று அருளாழியுமாய்த்
தன் நினைவால் அனைத்தும் தரித்தோங்கும் தனி இறையாய்
இன்னமுதத்தமுதால் இரங்கும் திருநாரணனே
மன்னி அவன்சரண் மற்றோர் பற்றின்றி வரிப்பவர்க்கே"---(அதி 30)

*****************************************************************************
24. ஸாத்யோபாய ஸோதனாதிகாரம்

******************************************************************************

23, 24 - அதிகாரங்களிரண்டும் ஸ்திரீகரணாதிகாரம் எனப்படும். பந்தல்கால் நடும்போது அதனைப்பலப்படுத்துவதுபோல இந்த இரு அதிகாரங்களிலும் ஸ்வாமி தேஶிகன்  ப்ரபன்னனின் மனத்தைப் பலப்படுத்துகிறார்.

"பருத்தி படாத பன்னிரண்டும் பட்டு" என்பது போலவும் "பஹூனாம் ஜன்மநாமந்தே"-என்பது போவவும் எத்தனையோஆயிரம் பிறவிகளாகிய படு குழிகளைக் கடந்துவர இத்தேகம் பட்ட பாட்டைச் சொல்லி மாளாது!!

விஷம் போன்றது இந்த ஸம்ஸாரம். அந்த விஷத்தை முறிக்க வல்ல சிறந்த மருந்து ஶரணாகதி என்ற ஸாத்யோபாயம். இந்த்ரியஆரோக்யம்,யவௌனம் ஐஶ்வர்யம் ஆகியவை நம்மைத்தடுமாறச்செய்யும்‌.

எம்பெருமான் பெயரை அவனுறையும் ஊரில் சொல்லித் தப்பிக்கவேணும். பகவத், பாகவதாபசாரத்திலிருந்து விடுபட வேணும்.

ராஜா செய்து கொடுத்த சௌகர்யங்களால் கிடைத்த நிறைந்த மகசூலை ஒரு விவசாயி ராஜாவிடம் ஸமர்ப்பிக்கும்போது ராஜா எவ்வளவு ஸந்தோஷமடைவானோ அத்தனை ஸந்தோஷம் அடைவான் எம்பெருமான்  ப்ரபன்னனுடைய ஆத்ம ஸமர்ப்பணத்தால்‌.

ஸித்தோபாயனாகிய எம்பெருமான் ஸாத்யோபாயமாகிய பயிரை ரக்ஷிக்க காவல் காக்கின்றான்.

மோக்ஷம் பெற ஶரணாகதி தவிர வேறு உபாயமில்லை என்ற திடசித்தமும் நமபிக்கையும் நாம் பெறுவதுடன் நம்மைச்  சேரந்தவர்க்கும் எடுத்துச் சொல்லி 

ப்ரபத்தி அனுஷ்டிக்கும்படிச் செய்வதே நம் சாதனையாயிருக்க வேணும்..

"வரிக்கின்றனன் பரன் யாவரை என்னும் மறையதனில்
விரிக்கின்றதும் குறி ஒன்றால் வினையரை ஆதலில்நாம்
உரைக்கின்ற நன்னெறி ஓரும்‌ படிகளில் ஒர்ந்து
உலகம் தரிக்கின்ற தாரகனார் தகவால் தரிக்கின்றனமே"(அதி 31)

*****************************************************************************
25. ப்ரபாவ வ்யவஸ்தாதிகாரம்

26. ப்ரபாவ ரக்ஷாதிகாரம்

******************************************************************************

சிறிதும் மிகையோ, குறைப்போ இன்றி ப்ரபத்தி ஶாஸ்த்ரத்தின் மேன்மையையும் அதன் பரபாவத்தை ரக்ஷிக்க மேற்கொள்ளவேண்டிய முறைகளையும் இவ்வதிகாரங்கள் விளக்குகின்றன.

வேத ஸாஸ்த்ரத்திலிருந்து சிறிதும் விலகாத இந்த ப்ரபத்தி ஶாஸ்த்ரம் மிக உயர்ந்தது.மறைந்துள்ள புதையலைக்காட்டிக் கொடுக்கும் "மை" போல ஸம்ப்ரதாய மேன்மையை நன்கறிந்த ஆசார்யர்களின் உபதேசத்தாலன்றி நமக்குள் உறையும் எம்பெருமானை நாம் அறிய முடியாது.

இப்படி அறிந்த எம்பெருமானுக்கு கடமை என்றில்லாது  ப்ரேமையுடன் கைங்கர்யம் செய்தல் வேணும்.

"ஓட்டத்துக்கு அப்பம் தின்பார் போல" (அப்பத்தை சுவைத்து ரஸித்துச் சாப்பிடாது அடைத்து விழுங்கும் பந்தயக்காரன்போல)

ப்ரேமையில்லாத கைங்கர்யத்தில் எம்பெருமானுக்கு உகப்பிருக்காது. அவரவர் வர்ணாஶ்ரம தர்மத்துக்கேற்ப வரையறைக்குட்பட்ட வாழ்க்கை முறைகளை அனுஷ்டிக்க வேணும்."விதுரநீதி"படைத்த விதுரன் சிறந்த ஞானி. ஆனால் தன் வர்ணாஸஶ்ரம தர்மம் கருதி தன் ஞான சக்தியால் ஸனத்ஸுஜாதரரை ப்ரார்த்தித்து அவர்மூலம்  ப்ரும்ஹ வித்தையை த்ருதராஷ்டிரனுக்கு உபதேசிக்கச் செய்தார்.

இதுவே மஹாபாரதத்தில் "ஸனத் ஸுஜாதீயம்" என்றழைக்கப்படுகிறது. நம்மாழ்வார் வேதத்தைச் சொல்ல வில்லை. வேதத்தின் பொருளைத்தான் சொல்கிறார் திருவாய்மொழி மூலம்.

சரீரத்தில் ஆசைவைத்து ஆத்மாவை இழக்கக்கூடாது. சுற்றியுள்ள பந்தத்தால் பகவதனுபவத்தை இழந்துவிடக்கூடாது. அந்தணர்/அந்தியர் பேதமின்றி எம்பெருமான் மோக்ஷமளிக்கிறான்.

ப்ரபத்தி என்னும் மேன்மைமிக்க கடலின் ஒரு திவிலையைக்கூட  நம்மால் வர்ணிக்க முடியாது ஆக இதன் மகத்துவத்தை நாம் ஓங்கி உரைக்க வேணும்.

"தகவால்தரிக்கின்றதன்னடியார்களைத்தன் திறத்தில்
மிக ஆதரம் செய்யும் மெய்யருள் வித்தகன் மெய்யுரையின்
அகவா யறிந்தவர் ஆரண நீதி நெறி குலைதல்
உகவாரென எங்கள் தேசிகர் உண்மை உரைத்தனரே" (அதி 32)

"உண்மை உரைக்கும்மறைகளில் ஓங்கிய உத்தமனார்
வண்மைஅளப்பரிதாதலின் வந்து கழல் பணிவார்
தண்மை கிடக்கத் தரமளவென்ற வியப்பிலராம்
உண்மை உரைத்தனர்ஓரம்தவிர உயர்ந்தனரே" (அதி 33)

***************************************************************to be contd.*******

No comments:

Post a Comment