Wednesday, December 22, 2021

கோதாஸ்துதியும், கோதை செய்த துதியும் - Day 7

                                         

वल्मीकतः श्रवणतो वसुधात्मनस्ते
जातो बभूव स मुनिः कविसार्वभौमः।
गोदे किमद्भुतमिदं यदमी स्वदन्ते
वक्त्रारविन्द मकरन्द निभाः प्रबन्धाः ॥७॥

"திருப்பாவைக்குச் சமானமாக ப்ரஸித்தி, மாதுர்யம், அர்த்தானுபவம் வேறெந்த க்ரந்தத்துக்கும் கிடையாது எனபர் ஆன்றோர். ஸாக்ஷாத் பூமிதேவி அருளியதால் இந்த ஏற்றம்.

பூமிக்குக் காது போன்றது புற்று. அந்த புற்றிலிருந்து வந்தவர் வால்மீகி அவர் எழுதிய ராமாயண காவ்யம் அத்புதம் எனப்படும்போது கோதாதேவியின் வாய்மொழிக்கு ஈடு உண்டோ என்கிறார் ஸ்வாமி தேஶிகன் கோதாஸ்துதியில்‌ (கோதாஸ்துதி 7)


பாசுரம் 7 - கீசு கீசென்றெங்கும்


கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
        பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
        வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
        நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
        தேசமுடையாய்! திற ஏல் ஓர் எம்பாவாய்.



பாவை கோஷ்டியின் தலைவியை எழுப்பும் பாசுரம் இது.

சப்த(sound) பாசுரமாக ஆண்டாள் அனுபவிக்கிறாள். பறவை, ஆபரணம்,
ஆய்ச்சியர் தயிர்கடைதல், பகவன்நாமா ஆகிய ஒலிகள் நாயகப் பெண்பிள்ளாயான உனக்கு கேட்க வில்லையா? க்ருஷ்ணானுபவத்தினால் தேஜஸ்ஸுடன் ஒளிர்பவளே !
பகவதனுபவம் மிக்கதால் "பேய்ப்பெண்ணே" என்றழைத்து
கதவைத் திறவாய் என்கின்றனர் தோழியர்

ஸ்வாபதேசம்

வ்ரஜபாஷையில் கன்ஹா என்பதை நாம் கண்ணன் என்கிறோம். கிச்சா என்பதை கீசு கீசு என்று பறவைகள் சப்திப்பதாய்க்கொள்ளப்படுகிறது.
"கூட்டிலிருந்து கிளி எப்போதும் கோவிந்தா" "காலை எழுந்து கரிய குருவிக்கணங்கள் மாலின்வரவு சொல்லி" என்று நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் பறவைகள் எம்பெருமான் பேர்சொல்லும் அழகைக்காட்டுகிறாள்.
கேசவன், நாராயணன் எனப்பாடி பகவதானுபவம் செய்ய எழுந்து வரும்படி தலைவியை அழைக்கிறார்கள். 
ஆனைச்சாத்தம் கலந்து பேசுதல் என்பதன் மூலம் காலக்ஷேப கோஷ்டியில் சேர அழைக்கிறாள். இதிகாஸ புராணங்கள் இந்த உரையாடல்களை கீழ்க்கண்டபடி இப்பாசுரத்தில் ஸ்லாகிக்கின்றன.
க்ருஷ்ணார்ஜுன ஸம்வாதம், ஸுகர் பரீக்ஷித் ஸம்வாதம், உத்தவர் விதுரர்
ஸம்வாதம், மைத்ரேயர் விதுரர் ஸம்வாதம் ஆகியன ப்ரஸித்தமானவை.

காசு என்பது த்வயமந்த்ரமாகவும்
பிறப்பு என்பது திருமந்த்ரமாயும் கொள்ளப்படுகின்றன. இரண்டும்
ஆசார்யர்கள் நமக்களிக்கும் ஆபரணங்கள். அவர்கள் ஞானப் பிறப்பையளித்து பகவானுடன் நம்மைச் சேர்த்து வைக்கிறார்கள் இந்த காசும் பிறப்பும் கடைந்தெடுத்து அளிப்பனவே இதிகாச புராணங்களும், ப்ரபந்தங்களும். ஆக இந்த பகவதனுபவம் பெற நாயகியை தோழிகள் எழுப்புகின்றனர்.

ஞானம், அனுஷ்டானம் என்ற இரு இறக்கைகளைக் கொண்டு ஆசார்யர்கள் சேதனனை உய்விக்கச் செய்யும் மந்த்ரோபதேசங்கள், பதவாக்யார்த்தங்கள் திருமாளிகை தோறும் ஒலிப்பதே "கீசு கீசென்றெங்கும் ஆனைச்சாத்தம் கலந்து பேசின பேச்சு" என்பது. உபநிஷத்துடன் பகவத் விஷயமும் சேர்ந்து கமழ்வது "வாஸ நறுங்குழல் ஆய்ச்சியர் கூந்தல் மணம் போல". புத்தி என்ற மத்தினால் த்வயமாகிய தயிரைக்கடைந்து நாராயணனாகிய வெண்ணெயை எடுத்து மோக்ஷ வழிகாட்டுகின்றார் ஆசார்யன். இத்தகைய ஸப்தங்களைக் கேட்டும் இன்னும் உறங்குகிறாயே! க்ருஷ்ணானுபவத்தால் தேஜஸ்வியாகிய நீ எங்களது அஞானத்தையும் போக்க எழுந்துவா. நாராயணன், மூர்த்தி, கேசவனைப் பாடலாம் என்கிறார்கள் தோழிகள்.

*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************

Monday, December 20, 2021

கோதாஸ்துதியும், கோதை செய்த துதியும் - Day 6



शोणाऽधरेऽपि कुचयोरपि तुङ्गभद्रा
वाचां प्रवाहनिवहेऽपि सरस्वती त्वम्।
अप्राकृतैरपि रसैर्विरजा स्वभावात्
गोदाऽपि देवि कमितुर्ननु नर्मदाऽसि॥६॥



"கோதா தேவியே ! இயற்கையிலேயே நீ கோதா ஆகிலும் சிவந்த உதடுகளால் சோணபத்ரா என்ற சிவந்த நதியாகவும், சொல்லாதிக்கத்தால் ஸரஸ்வதி நதியாகவும், திவ்யமான ஶ்ருங்கார ரஸங்களால் குற்றமற்ற விரஜா நதியாகவும், உன் பர்த்தாவுக்கு அனுகூலமான நர்மதா நதியாகவும், மார்பகங்களில் துங்கபத்ரா நதியாகவும் ஆகிறாய் - (கோதாஸ்துதி - 6)

பாசுரம் 6 - புள்ளும் சிலம்பின்


இதுமுதல் 10ம் பாசுரம் வரை பாகவதர்களை எழுப்புவதாய் அமைந்துள்ளது.
பகவதனுபவத்தில் புதிதாய் ஈடுபட்ட பெண்ணை விளிக்கிறாள் ஆண்டாள் "பிள்ளாய்" என்று. விடிந்ததற்கு அடையாளமாக பறவையின் ஒலி, கருடனின் ஆலயத்தில் ஒலிக்கும் சங்கின் ஒலி, முனிவர்களும் யோகிகளும் எழும்போது சொல்லும் "ஹரி ஹரி" என்ற திருநாமத்தின் ஒலி. இவை எல்லாம் உனக்குக் கேட்க வில்லையா? பூதனையாகிய பேயிடம் விஷப்பாலையுண்டவனும், கபட சகடாசுரனைத் தன் திருவடிகளால் உதைத்தழித்தவனும், திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மீது யோக நித்ரை செய்பவனுமாகிய எம்பெருமானை த்யானிக்கும் யோகிகள் எழுந்திருக்கும்போது
சொல்லும் ஹரிநாமம் நம் உள்ளத்துள் புகுந்து குளிர்விக்கிறது.

ஸ்வாபதேசம்
ஹம்ஸாவதாரம் எடுத்த பகவானும், அவனருள் பெற்ற ஆசார்யர்களும் ஸத்வகுணம் பெற்ற சங்கைப் போல ப்ரணவத்தின் அர்த்த விசேஷங்களை நமக்கு உபதேசிப்பது கேட்கவில்லையா என்கிறாள்.
அவித்யை என்ற பூதனையை அழித்து, சரீரமாகிய வண்டியை
கெட்ட வழிகளில் ஈடுபடாமல் நல்வழிப் படுத்துவோர் ஆசார்யர்கள். இவர்கள் ஸம்ஸார போகத்தில் ஆசைப்படாது ப்ரபத்தி மார்க்கத்தில் சேதனர்களை சேர்த்து ஹரி என்ற பேரொலி எழுப்பி அவனுள்ளம் குளிரச்செய்து நம்மை அவன் கைங்கர்யத்தில் ஈடுபடுத்தி உபகாரம் செய்கிறார்கள்.

*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************

Sunday, December 19, 2021

கோதாஸ்துதியும், கோதை செய்த துதியும் - Day 5




अस्मादृशामपकृतौ चिरदीक्षितानां
अह्नाय देवि दयते यदसौ मुकुन्दः।
तन्निश्चितं नियमितस्तव मौलिदाम्ना
तन्त्रीनिनादमधुरश्च गिरां निगुम्भैः ॥५॥

"கோதையே!நீ சூடிக்களைந்த மாலையாலும், உன் வீணா கானம் போன்ற பாமாலையாலும் எம்பெருமானை வஸப்படுத்தி என் போன்ற பாபிகளுக்கும் அநாயஸமாக அவன் க்ருபை கிடைக்கும்படி செய்கிறாய்" - என்கிறார் ஸ்வாமி (கோதாஸ்துதி -5)


பாசுரம் 5 -மாயனை மன்னு


எம்பெருமானின் பெருமைகளையும் அவனைஅடையும் வழிகளையும் அடைவதால் கிட்டும் பயனையும் சொல்கிறாள் இப்பாசுரத்தால் ஆண்டாள்.
தனக்குத் தீர்மானிக்கப்பட்ட பட்டாபிஷேகத்தை தன் ஸங்கல்பத்தால் நிறுத்தி பாதுகா பட்டாபிஷேகம், சுக்ரீவ பட்டாபிஷகம், விபீஷண பட்டாபிஷேகம் என்று நடத்திக்காட்டிய "மாயன்" ராமனாக. நம்மை மேலேற்ற அவன் கீழிறங்கி வரும் "மாயன்".காளியைப் பெற்று தன்னை வளர்க்கச்செய்த "மாயன்". இத்தகைய ஆச்சர்ய சேஷ்டிதங்கள் உடையவனும், நிலையான வடமதுரைக்குத் தலைவனும், பரிசுத்தமான யமுனை நதிக்கரையைச் சேர்ந்தவனுமாகிய இக்கண்ணன் இடைக்குலத்தை விளங்க வைக்கத்தோன்றிய அணிவிளக்கு. யசோதையை மணிவயிறு வாய்த்தவள் எனப் புகழ் பெறச் செய்த தாமோதரன்.
இத்தகைய கண்ணனை தூமலர் தூவித்தொழுது வாயினால் பாடி மனத்தால் த்யானம் செய்தால் (த்ரி கரணங்களையும் அவன் வசம் வைத்தால்) முற்பிறவிகளில் செய்த பாபங்கனைத்தும், இனி செய்ய இருக்கும் பாவங்களும் நெருப்பிலிட்ட பஞ்சு போல் பொசுங்கி விடும்.


ஸ்வாபதேசம்

எம்பெருமானின் எல்லா அவதாரங்களையும் ஆண்டாள் குறிப்பிடுகிறாள் இப்பாசுரத்தில். 
  • மாயன் --பரரூபம்
  • மதுரைமைந்தன் ---விபவம் (திருப்பாற்கடல்) 
  • துறைவனை ---வ்யூகம் 
  • விளக்கு ---அந்தர்யாமி 
  • தாமோதரன் ---அர்ச்சை 
தூய பெருநீர் என்பது விரஜையைக்குறிக்கும்.
தேவகி, யசோதை என் இரு தாய்மார்கள் அவனுக்கு. 
அதுபோல காயத்ரி, அஷ்டாக்ஷரம் என்ற இரு மந்த்ரங்களும் நமக்குத் தாய்க்கு ஒப்பானவை. இதன் பொருளை பகவான் நரநாரண அவதாரம் செய்து விளக்குகிறான். பக்தி என்ற கயிற்றுக்கு கட்டுப்படுபவன் எம்பெருமான். அவனைச் சரணாகதி செய்தோமாகில் சஞ்சித பாபங்களும், புத்திபூர்வமாய் பின்னால் செய்யும் பாபங்களும் பொசுங்கி விடும்.


*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************************

கோதாஸ்துதியும், கோதை செய்த துதியும் - Day 4




कृष्णान्वयेन दधतीं यमुनानुभावं
तीर्थैर्यथावदवगाह्य सरस्वतीं ते ।
गोदे विकस्वरधियां भवती कटाक्षात्
वाचः स्फुरन्ति मकरन्दमुचः कवीनाम् ॥४॥


ஆண்டாள் கடாக்ஷமிருந்தால் வாக்கில் விலாஸமிருக்கும்
யமுனா நதி க்ருஷ்ணனிடம் அன்வயமாயிருப்பதுபோல
சரஸ்வதி ஆண்டாளிடம் அன்வயமாயிருக்கிறாள் என்கிறார் ஸ்வாமி தேஶிகன் (கோதாஸ்துதி 4)




*** பாசுரம் 4 - ஆழிமழைக்கண்ணா ***


ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
     ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேரி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
     பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து
     தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
     மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்

மேக தேவதையை வேண்டிக்கொள்ளும் பாசுரம் இது. எங்களது நோன்பினால் சந்தோஷமடைந்து வஞ்சனை செய்யாது மழை கொடுக்க வேண்டும். ஊழி முதல்வரான கருத்த திருமேனியும், பருத்த தோளுமுடைய எம்பெருமானின் திருக்கையிலேந்திய சக்கரம் போல் மின்னி, மற்றோர் கரத்தில் ஒளிரும் சங்கம் ஒலிப்பதுபோல் இடிமுழங்க வேணும். இத்தகைய ஆர்பரிப்புகளுடன் நீ கடலினுள் புகுந்து முகந்தெடுத்த நீரை எம்பெருமானின் சரமழைபோல
எல்லா இடங்களிலும் பாரபட்சமின்றி பொழிந்து மகிழ்விக்க வேணும் என்கிறாள் ஆண்டாள்.
எம்பெருமானின் கையிலிருக்கும் மூன்று ஆயுதங்களும் ஆண்டாள் முன் நிற்கின்றன. அம்பரீஷனின் அலவலைமையைத் தவிர்க்க மின்னிய சக்கரம்போல மின்ன வேணும். துர்யோதனின் ஆத்ம பலத்தைக் குலைத்த சங்கநாதம் போல இடிக்க வேண்டும். ராம ராவண யுத்தத்தில் ராவணனின் "மூலபலம்" என்ற படையை எதிர்கொண்ட ராமன் தொடுத்த "சரமழையை" நினைவுகூர்கிறாள் ஆண்டாள்.


ஸ்வாபதேசம்

மேகங்கள்உப்புநீரைமதுரமாக்கித்
தருவதுபோல் ஆசார்யன் வேதார்த்ங்களை நமக்களித்து ஞானம் பெறச் செய்கிறார்.
ப்ரத்யுபகாரம் எதிர்பார்க்காத மழை போல் ஆசார்யனும் எந்த லாபமும் எதிர்பார்ப்பதில்லை.
மேகங்கள் போல ஆசார்யனும் சஞ்சாரம் செய்து ஞான மழை பொழிகின்றார்.
மழை மேகம் மின்னுவதுபோல ஆசார்யன் ஞானத்தால் ப்ரகாசிக்கிறார். சங்கமுழக்கம்போல தம் கருத்தை ஸ்தாபிக்க ஆசார்யனும் சிம்ஹ கர்ஜனை செய்கிறார்.
மேகம் வர்ஷிக்கும் மழை போல் ஆசார்யனும் வாதங்களை வர்ஷித்து 
எம்பெருமானை ஸ்தாபிக்கிறார்.

*******************🦜🦜🦜🙏🙏🙏🙏🦜🦜🦜*********************

Saturday, December 18, 2021

கோதாஸ்துதியும், கோதை செய்த துதியும் - Day 3



त्वत्प्रेयसः श्रवणयोरमृतायमानां
तुल्यां त्वदीय मणिनूपुर शिञ्जितानाम्।
गोदे त्वमेव जननि त्वदभिष्टवार्हां
वाचं प्रसन्नमधुरां मम संविधेहि॥३॥


"என்னைப் பெற்ற தாயே! உன் கணவன் எம்பெருமானுக்கு கர்ணாம்ருதமாயிருக்கும் உன்சலங்கை ஒலிபோல உன்னைப்பற்றிய துதி என் வாக்கிலிருந்து தெளிவும், இனிமையும் பெற்று வெளிவர அருளவேணும்"-(கோதாஸ்துதி - 3)


*** பாசுரம் 3 - ஓங்கி உலகளந்த ***


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நொலூடு கயல் உகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்து ஏல் ஓர் எம்பாவாய்.

வ்ரதம் அனுஷ்டித்தால் வரும் பலன் சொல்கிறாள் இங்கே.
ராம க்ருஷ்ணாவதாரத்துக்கில்லாத பெருமை ஓங்கி உலகளந்த வாமனனுக்கு. "உத்தமனே"! என்கிறாள். அவன் திருநாமம் பாடி வ்ரதமிருந்தால் கிடைக்கும்பலன் மூன்று - ஜல, நெல், பால் ஸம்ருத்தி.


வேதாந்தார்த்தம்

அஷ்டாக்ஷரமாகிய திருநாமம் பாடினால் அவனுகந்து நம்மை ஏற்பான். கட்டிப்பொன்போல எம்பெருமான் பணிப்பொன்போன்றது அவன் நாமம். நாமத்தை தரிக்கவும் பாடவும் முடியும் அனன்ய சேஷத்வம், அனன்ய உபாயத்வம், அனன்யபோக்யத்வம் என்ற மும்மழையால் ஆத்மா பலம் பெறுகிறது செந்நெல் உயர்வதுபோல். கயல்கள உழல்வது எம்பெருமான் பெறும் கைங்கர்யம்.
வாங்கக் குடம் நிறைக்கும் பெரும்பசுக்கள் போல ஆசார்யர்கள் வள்ளண்மையால் நமக்குஅளிக்கும் ஞானம் சொல்லப்படுகிறது. நீங்காத செல்வம் என்பது எம்பெருமானுடனே சேர்ந்து நாம் அனுபவிக்கும் அந்த மிலா பேரின்பம்.
"ஓங்கி உலகளந்த......தீங்கின்றி"-
த்ரிவிக்ரமனாக வளர்ந்து உலகங்களை அளந்த க்ருஷ்ணனுடைய "யத்ப்ரபத்திம் விநா ஸர்வைர்யஸ்யமாயா துரத்யயா
தனஞ்ஜய ரதோத்தம்ஸம் தத் ப்ரபத்யே பரம் மஹ:"
---என்ற தனியனின் அர்த்தத்தை (அவன் விரித்த வலையில் சிக்கி நாம் அல்லல்படுகிறோம். அம்மாயத்திரை விலக, அர்ஜூனன் தேர்தட்டில் ப்ரகாசமாக ஒளிரும் பரம் பொருளாகிய க்ருஷ்ணனை சரண் புகுகிறேன்) நினைத்து ஶரணாகதி ரஹஸ்யத்தைப்பலரும் அறியும் வகையில் உபதேசித்து அனுஷ்டித்தால் அனன்யசேஷத்வம் முதலான தீங்கின்றி இருப்பர்.


*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************

Thursday, December 16, 2021

கோதாஸ்துதியும், கோதை செய்த துதியும் - Day 2



वैदेशिकः श्रुतिगिरामपि भूयसीनां
वर्णेषु माति महिमा न हि मादृशां ते।
इत्थं विदन्तमपि मां सहसैव गोदे
मौनन्द्रुहो मुखरयन्ति गुणास्त्वदीयाः ॥२॥

"கோதையே! உன் மகிமை என் வாக்கிற்கு எட்டாதது என்பதை நானறிவேன். ஆயினும் உன் குணங்கள் என் மௌனத்தையும்
கலைத்துப் பேச வைத்து விட்டனவே"! (கோதாஸ்துதி - 2)

*** பாசுரம் 2 - வையத்து வாழ்வீர்காள் ***

                                

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
        செய்யும் கிரிசைகள் கேளீரோ, பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
        நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
        செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
        உய்யுமாறு எண்ணி உகந்து ஏல் ஓர் எம்பாவாய்.

வையத்து வாழ்வீர்காள்!! என்று ஆண்டாள் எல்லோரையும் விளிக்கிறாள். வ்ரதமிருக்க அனுஷ்டிக்கவேண்டியவை எவை என முதலில் சொல்கிறாள். நாட்காலை நீராடுதல், பரமனடி பாடுதல், தானதர்மங்கள் செய்தல் ஆகியன.

செய்யக்கூடாதன‌ - நெய் பால் உண்ணோம், கண்ணில் மையிடோம் கூந்தலில் பூச்சூடோம், செய்யாதன செய்யோம், கோள் சொல்லமாட்டோம் - என்கிறாள் ஆண்டாள்.


வேதாந்தார்த்தம்

வராஹ அவதாரத்தில் எம்பெருமான் சொல்லவந்த அவதாரமே ஆண்டாள்.
க்ருஷ்ணானுபவத்துக்கு தேஹாலங்காரம் வேண்டாம். ஆத்மாலங்காரம்தான் முக்யம். பொறுமை, புலனடக்கம், காமமின்மை ஆகியன ஆத்மாவின் ஆபரணங்கள். உய்யும் வழி ஶரணாகதி அதனை அடைய ஆறு அங்கங்கள் என்பதனை "உய்யுமாறு" என்கிற பதம் காட்டுகிறது.
தர்மத்தையே நினை, பாடு, பேசு, அனுமதி கேள், பார் என்கிறது இப்பாசுரம். 
இதனை அனுஷ்டிப்பவர்களுக்கு ஆசார்யனுக்ரஹமும், எம்பெருமானின் கடாக்ஷமும் கிடைத்து மோக்ஷம் கிடைக்கும்.

"நாமும் நம்பாவைக்கு....பாடி"---
நமக்காக ஏற்பட்ட ஶரணாகதி என்ற நோன்பைச் செய்யவும், அதற்கு வேண்டிய சடங்குகளைச் செவியால் கேட்டும், அனுஷ்டித்தும் பயன் பெறுவீர்களாக. த்வயமந்த்ரத்தின்
த்யான ஶ்லோகத்தின்படி அவனை வணங்கி அம்மந்த்ரத்தைச்சொல்லி ப்ரபத்தி செய்தல்வேண்டும்.

"நெய் உண்ணோம்......தீக்குறளை ஓதோம்"----காமவிகாரங்களைத்தரும் பொருட்களை உண்ணாமலும், காம்ய கர்மாக்களை விலக்கியும் சரீர அலங்காரங்களைத் தவிர்த்தும் நித்யகர்மானுஷ்டானங்களைச்செய்தும், பரஹிம்சை, நிஷித்த கர்மா பாகவத அபசாரம் இவைகளைச் செய்யாமல், வாக்காலே தவிர்க்க
வேண்டியவைகளைத் தவிர்த்து செயல் படவேண்டும்.

"ஐயமும்....காட்டி.." ஆசார்ய உபகாரம், பாகவத கைங்கர்யம்
முடிந்தவரை செய்து உய்யும் வகை நினைந்து சந்தோஷி
க்க கற்க வேண்டும்.

*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************



Wednesday, December 15, 2021

கோதாஸ்துதியும் கோதை செய்த துதியும் - Day 1

பாக்யம் செய்தவர்க்கே க்ருபை புரிபவன் எம்பெருமான். திருமாலின் திருவருள் பெறப் பாடப்பட்டதே திருப்பாவை.

அத்திருவருளைப்பெற முக்யமான ஶரணாகதியை முதலில் சொல்லிப் பாரம் தீர்க்க அவதரித்தவளே ஆண்டாள்.
"நாராயணனே நமக்குப் பறை" என்று ஆரம்பித்து, "இறைவா நீ தாராய் பறை" எனமுடிக்கிறாள். 
ஆசார்ய சம்பந்தம் காட்டும் இந்த விஷ்ணுசித்தனின்‌ கோதை ஶ்ரீவில்லிபுத்தூரில் அவதாரம் செய்தாள். வாக்கினால் திருப்பாவை என்ற அமுதத்தைப் பொழிந்து ஶரணாகதி என்ற உபாயம் மூலம் நம்மை எம்பெருமானிடம் சேர்க்கிறாள். 

ஶ்ரீவில்லிபுத்தூரே ஆய்ப்பாடி, அரங்கனே கண்ணன், தோழிகளை கோபிகள் என அனுகாரம் செய்து காட்டினாள் ஆண்டாள்.


श्री विष्णुचित्तकुलनन्दनकल्पवल्लीं
श्रीरङ्गराजहरिचन्दनयोगदृश्याम्।
साक्षात् क्षमां करुणया कमलामिवान्यां
गोदामनन्यशरणः शरणं प्रपद्ये ॥१॥

"விஷ்ணு சித்தரின் குலக்கொடியாகப்பிறந்து அழகிய மணவாளன் என்ற ஹரி சந்தன மரத்தைத் தழுவி விளங்கும் பூமிப்பிராட்டியின் அவதாரமாயும், கருணை என்னும் குணத்தினால் மற்றொரு கமலை என்னும் படியாக இருப்பவளுமாகிய கோதா தேவியே! புகலொன்றில்லா அடியேன் உன்னைச்சரணடைகின்றேன்" - என்கிறார் ஸ்வாமி தேஶிகன் (கோதாஸ்துதி-1)

*** பாசுரம் 1  - மார்கழிதிங்கள் ***



மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
        நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
        கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
        கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
        பாரோர் புகழப் படிந்து ஏல் ஓர் எம்பாவாய்.

வ்ரதமிருக்கும் ஆசார்யனாகிய ஆண்டாள் அதற்கான கால தேசத்தையும், அடையவேண்டிய பொருள், அதற்கான உபாயம் இவற்றைக்காட்டுகிறாள்.
யசோதை எப்படி கண்ணனைக் காப்பாற்றித்தந்தாளோ அதுபோல ஆசார்யர்கள் ஸம்ப்ரதாயத்தைக் காத்ததுக் கொடுத்தார்கள்.
வ்ரத மாஸம் ஸாத்வீகமான மார்கழி மாதம். திட்டமான குளிர்ச்சியும் வெப்பமும் உள்ள காலம். மதி நிறைந்த இக்காலத்தில் ஆய்ப்பாடிச் சிறுமியரை வ்ரதம் அனுஷ்டி
க்க ஆண்டாள் அழைக்கின்றாள்.
யசோதையின் இளம்சிங்கமாயும், நந்தகோபன் குமாரனாயும் உள்ள கண்ணனைக்குறித்து வ்ரதம்.
துஷ்டர்களுகளுக்கு சூர்யனாயும் சிஷ்டர்களுக்கு சந்த்ரனாயும் இருக்கும் திருமுகத்தனாகிய நாராயணனே நமக்குப் பறையாகிய புருஷார்த்தத்தை அளிக்க வல்லவன். அவனடிபணிவோம் வாருங்கள் என அழைக்கிறாள்.

"ஆய்ப்பாடியை" இந்த இருள் தருமாஞாலமாயும், எம்பெருமானின் கல்யாண குணங்களை அறிந்தும், அறியாத சிறுவர்கள் போன்றவர்களாய் "சீர்மல்கும் செல்வச்சிறுமீர்காள்" எனவும் உருவகப்படுத்தியுள்ளார். இவர்கள் ஆத்ம குணங்களும் நிறைந்தவர்களாகையால், இந்த நன்னாளில் சிறந்த "ப்ரபத்தி உபாயம்" அனுஷ்டிக்க அழைப்பதுவே "நீராடப் போதுவீர்.... நேரிழையீர்" என்பதாகும்.
கூர்மையான வேல் போன்ற ஸங்கல்பம் உடையவனும், நம் பாபங்களை அழிக்க வல்லவனும், நித்ய யுவாவுமாயுள்ள இவனே க்ருஷ்ணாவதாரம் செய்துள்ள ஸர்வேஶ்வரன். ப்ரபத்தி செய்த நமக்கே மோக்ஷானந்தத்தைத் தருவான் என்பதை
"ஏரார்ந்த....பறை தருவான்" என்றவரிகளால் சொல்கிறாள்.
கண்ணபிரான் கர்ம, ஞான, பக்தியோகம் செய்ய முடியாது கலங்கிய அர்ச்சுனனுக்குக் கடைசியாகக் காட்டிய ஶரணாகதி மார்க்கத்தை,
ஆண்டாள் இந்த முதல் பாசுரத்தாலே காட்டியுள்ளாள்.

*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏*****************