Wednesday, December 15, 2021

கோதாஸ்துதியும் கோதை செய்த துதியும் - Day 1

பாக்யம் செய்தவர்க்கே க்ருபை புரிபவன் எம்பெருமான். திருமாலின் திருவருள் பெறப் பாடப்பட்டதே திருப்பாவை.

அத்திருவருளைப்பெற முக்யமான ஶரணாகதியை முதலில் சொல்லிப் பாரம் தீர்க்க அவதரித்தவளே ஆண்டாள்.
"நாராயணனே நமக்குப் பறை" என்று ஆரம்பித்து, "இறைவா நீ தாராய் பறை" எனமுடிக்கிறாள். 
ஆசார்ய சம்பந்தம் காட்டும் இந்த விஷ்ணுசித்தனின்‌ கோதை ஶ்ரீவில்லிபுத்தூரில் அவதாரம் செய்தாள். வாக்கினால் திருப்பாவை என்ற அமுதத்தைப் பொழிந்து ஶரணாகதி என்ற உபாயம் மூலம் நம்மை எம்பெருமானிடம் சேர்க்கிறாள். 

ஶ்ரீவில்லிபுத்தூரே ஆய்ப்பாடி, அரங்கனே கண்ணன், தோழிகளை கோபிகள் என அனுகாரம் செய்து காட்டினாள் ஆண்டாள்.


श्री विष्णुचित्तकुलनन्दनकल्पवल्लीं
श्रीरङ्गराजहरिचन्दनयोगदृश्याम्।
साक्षात् क्षमां करुणया कमलामिवान्यां
गोदामनन्यशरणः शरणं प्रपद्ये ॥१॥

"விஷ்ணு சித்தரின் குலக்கொடியாகப்பிறந்து அழகிய மணவாளன் என்ற ஹரி சந்தன மரத்தைத் தழுவி விளங்கும் பூமிப்பிராட்டியின் அவதாரமாயும், கருணை என்னும் குணத்தினால் மற்றொரு கமலை என்னும் படியாக இருப்பவளுமாகிய கோதா தேவியே! புகலொன்றில்லா அடியேன் உன்னைச்சரணடைகின்றேன்" - என்கிறார் ஸ்வாமி தேஶிகன் (கோதாஸ்துதி-1)

*** பாசுரம் 1  - மார்கழிதிங்கள் ***



மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
        நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
        கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
        கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
        பாரோர் புகழப் படிந்து ஏல் ஓர் எம்பாவாய்.

வ்ரதமிருக்கும் ஆசார்யனாகிய ஆண்டாள் அதற்கான கால தேசத்தையும், அடையவேண்டிய பொருள், அதற்கான உபாயம் இவற்றைக்காட்டுகிறாள்.
யசோதை எப்படி கண்ணனைக் காப்பாற்றித்தந்தாளோ அதுபோல ஆசார்யர்கள் ஸம்ப்ரதாயத்தைக் காத்ததுக் கொடுத்தார்கள்.
வ்ரத மாஸம் ஸாத்வீகமான மார்கழி மாதம். திட்டமான குளிர்ச்சியும் வெப்பமும் உள்ள காலம். மதி நிறைந்த இக்காலத்தில் ஆய்ப்பாடிச் சிறுமியரை வ்ரதம் அனுஷ்டி
க்க ஆண்டாள் அழைக்கின்றாள்.
யசோதையின் இளம்சிங்கமாயும், நந்தகோபன் குமாரனாயும் உள்ள கண்ணனைக்குறித்து வ்ரதம்.
துஷ்டர்களுகளுக்கு சூர்யனாயும் சிஷ்டர்களுக்கு சந்த்ரனாயும் இருக்கும் திருமுகத்தனாகிய நாராயணனே நமக்குப் பறையாகிய புருஷார்த்தத்தை அளிக்க வல்லவன். அவனடிபணிவோம் வாருங்கள் என அழைக்கிறாள்.

"ஆய்ப்பாடியை" இந்த இருள் தருமாஞாலமாயும், எம்பெருமானின் கல்யாண குணங்களை அறிந்தும், அறியாத சிறுவர்கள் போன்றவர்களாய் "சீர்மல்கும் செல்வச்சிறுமீர்காள்" எனவும் உருவகப்படுத்தியுள்ளார். இவர்கள் ஆத்ம குணங்களும் நிறைந்தவர்களாகையால், இந்த நன்னாளில் சிறந்த "ப்ரபத்தி உபாயம்" அனுஷ்டிக்க அழைப்பதுவே "நீராடப் போதுவீர்.... நேரிழையீர்" என்பதாகும்.
கூர்மையான வேல் போன்ற ஸங்கல்பம் உடையவனும், நம் பாபங்களை அழிக்க வல்லவனும், நித்ய யுவாவுமாயுள்ள இவனே க்ருஷ்ணாவதாரம் செய்துள்ள ஸர்வேஶ்வரன். ப்ரபத்தி செய்த நமக்கே மோக்ஷானந்தத்தைத் தருவான் என்பதை
"ஏரார்ந்த....பறை தருவான்" என்றவரிகளால் சொல்கிறாள்.
கண்ணபிரான் கர்ம, ஞான, பக்தியோகம் செய்ய முடியாது கலங்கிய அர்ச்சுனனுக்குக் கடைசியாகக் காட்டிய ஶரணாகதி மார்க்கத்தை,
ஆண்டாள் இந்த முதல் பாசுரத்தாலே காட்டியுள்ளாள்.

*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏*****************



1 comment: