Wednesday, December 29, 2021

கோதாஸ்துதியும், கோதை செய்த துதியும் - Day 14



त्वद्भुक्तमाल्यसुरभीकृतचारुमौलेः
हित्वा भुजान्तरगतामपि वैजयन्तीम्।
पत्युस्तवेश्वरि मिथः प्रतिघातलोलाः
बर्हातपत्ररुचिमारचयन्ति भृङ्गाः ॥१४॥



"லோகேஶ்வரியே!நீ சூடிக்களைந்த மாலை எம்பெருமான் திருமுடியில் மணம் வீசிக்கொண்டிருப்பதை உணர்ந்த வண்டினங்கள்அவனது திருமார்பில் துலங்கும் மந்தார மாலையை விட்டு திருமுடியைச்சுற்றி வட்டமிட்டு மயில்தோகையாலான குடைபோல நிழலானது"(கோதாஸ்துதி -14)


பாசுரம் 14 - உங்கள் புழக்கடை




உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
        செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர்
        தங்கள் திருக்கொயில் சங்டகிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
        நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
        பங்கயக் கண்ணானைப் பாடு ஏல் ஓர் எம்பாவாய்

நங்காய்! நாணாதாய்! நாவுடையாய்! என்று அழைக்கிறாள்.
பொழுது புலர்ந்ததற்கு அடையாளமாக செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து அல்லி மலர்கள் மூடின. காவி உடைதரித்த வெண்
பற்களுடைய துறவிகள் சங்கொலித்துக் கொண்டு தங்கள் கோயில்களுக்கு அனுஷ்டானம் செய்யப் போகிறார்கள். எங்களை
வந்து எழுப்புவார்கள் என சொல்லிவிட்டு வராததற்கு நீ வெட்கப்படவில்லை. சங்கும் சக்கரமும் ஏந்தும் தடக்கையனும் பங்கையக்கண்களுமுடைய ஸ்ரீமன் நாராயணனைப் பாட நீ எழுந்து வா என்கிறாள் ஆண்டாள்.


ஸ்வாபதேசம்

சேதனர்களின் ஹ்ருதயத்தில் ஞானம் மலர்ந்து, அஞானம் நீங்குவதை "செங்கழுநீர். ...கூம்பினகாண்" என்று கூறுகிறார்.
முதன் முதலில் சிறிய திருவடி ராமனைப் பார்க்கும் போதே அவர் பரமாத்மா எனத் தெரிந்து கொண்டாராம். அதுபோல உள்ளே உறங்குபவள் ஞானம் உள்ளவளாயும், நாவன்மை உடையவளாயும் இருக்கிறாள்.
பேயாழ்வார் எம்பெருமானை மங்களாஸாசனம் செய்யும்போது நாபிக்கமலத்தில் ப்ரும்ஹா வீற்றிருப்பதை பார்க்கிறார். அக்கமலம் மலர்ந்து மூடுவதை அவனது திறந்து மூடிய கண்களின் நோக்கால் நிகழ்வது என உணர்ந்தாராம்.

"எங்களை முன்னம்......எழுந்திராய்"...வெகுகாலமாய் ஸம்ஸாரத்தில் தூங்கும் எங்களுக்கு குணபூர்ணரான நீ ஞானம் போதித்து அனுக்ரஹிக்கவேணும் என்கிறாள். தேவதாந்த்ர வ்யாவர்த்தகமாக அடையாளங்களைப் பெற்ற பகவானை உபதேசித்தருள வேண்டுகிறாள்.

*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************

Tuesday, December 28, 2021

கோதாஸ்துதியும், கோதை செய்த துதியும் - Day 13



नागेशयः सुतनु पक्षिरथः कथं ते
जातः स्वयंवरपतिः पुरुषः पुराणः।
एवं विधाः समुचितं प्रणयं भवत्याः
सन्दर्शयन्ति परिहासगिरः सखीनाम्॥१३॥


ஹே கோதா!பாம்பில் படுத்து கருடவாகனனாயிருக்கும் புராணபுருஷனை மணாளனாய் வரித்துள்ளாயே என்று பரிகசிக்கும் உன் தோழியர்க்கு நீ காட்டும் ஆனந்த மௌனம் அவனிடம் நீகொண்ட பேரன்பைக் காட்டுகிறது (கோதாஸ்துதி - 13)



பாசுரம் 13 - புள்ளின் வாய் கீண்டானை


புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
        கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்
        வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண்! போது அரிக்கண்ணினாய்
        குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்
        கள்ளம் தவிர்த்து கலந்து ஏல் ஓர் எம்பாவாய்

பள்ளிக் கிடத்தியோ பாவாய்!
போதரிக் கண்ணினாய்!என்று
உள்ளே உறங்குபவளை அழைக்கிறாள். ராம க்ருஷ்ணாதிகளை மாறி மாறி அனுபவிக்கும் பாசுரம் இது.
கொக்கு வடிவில் வந்த கம்ஸனால் ஏவப்பட்ட பகாசுரனை இரு பிளவாக்கினான் கண்ணன்.
பிராட்டி யைப் பிரித்த பாதகனான ராவணனின் பத்து தலைகளையும் புல்போல் கிள்ளி எறிந்தான் ராமன். இவர்களின் கீர்த்தியைப் பாடிக்கொண்டு நாம் பாவைக்களத்துக்கே வந்து விட்டோம். 
வெள்ளி உதயமாகி வியாழன் அஸ்தமித்து, பொழுது புலர்ந்ததற்கு அடையாளமாக பறவைகள் சிலம்புகின்றன. க்ருஷ்ணனுடன் ஜலக்ரீடை செய்துமகிழ வேண்டிய இச்சமயத்தில் நீ தனியே க்ருஷ்ணானுபவம் செய்வது சரியல்ல. எழுந்துவா என்று அழைக்கின்றனர் தோழியர்.

ஸ்வாபதேசம்

புள்ளின்வாய் கீண்டானை என்பது கொக்கு போல் கபடமான (சிறிய மீன்களை விட்டு பெரிய மீனைப் பிடிக்கக் காத்திருக்கும் கபடம்) செயல்களைச் செய்பவர்களை நாம் வெறுக்க வேண்டும் என்ற கருத்தை அறிவிக்கிறது.
பொல்லா அரக்கன் ராவணன். சாது அரக்கன் விபீஷணன். ராமனால் ஸஹோதரனாய் பாவிக்கப் பட்டவன்.
கிள்ளிக் களைந்தான் எனில் ராமன் நகத்தால் கிள்ளி எறிவதுபோல பாணத்தால் அநாயசமாய் செய்தான் என்பதாகும்.
"அத்திர அரக்கன் முடி பத்தும் ஒரு கொத்தென உதிர்த்த திறலோன்"-என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.
எம்பெருமான் ராவணன், பகாசுரன் ஆகியோரை அழித்து தம்மை நமக்கு அளித்த படியால் "கீர்த்தி" என்கிறாள் ஆண்டாள். ராம க்ருஷ்ணாவதாரங்களை முடித்துக்கொண்டு சென்ற
பின்பும் "திருவணை (ராம சேது), கீதை" இரண்டையும் நாம் உய்ய விட்டுச்சென்ற பரம உபகாரத்தைப் புகழ்ந்து பாட அழைக்கிறாள்.
ராவண குடும்பமே ராமனின் குணானுபவத்தில் மூழ்கிப் புகழ்ந்தது. ராவணன் ராமனின் வீரத்தைப் புகழ்ந்தான். கும்பகர்ணன் சௌர்யத்தில் ஈடுபட்டான். விபீஷணன் ஸௌஸீல்யத்தை ஸ்லாகித்தான். ஸுரப்பனகா அவன் ஸௌந்தர்யத்தில் மயங்கினாள்.

"பிள்ளைகள் எல்லாரும் பாவைக்களம் புக்கார்"---ப்ரபத்திக்கு அதிகாரிகளான எல்லாரும் ஆத்ம ஞானம் பெற ஆசார்யர்கள் காலக்ஷேபம் சொல்லுமிடம் சேர்ந்தனர் என்பதாகும்.

"வெள்ளி-----உறங்கிற்று"---ஞானம் பிறந்து அஞானம் அழிந்தது.
"குள்ள குளிர.....கள்ளம் தவிர்ந்து"---மோக்ஷத்தை அடைய விரும்பாதவளாய், ஸம்ஸாரத்தில் தூங்குகிறாயே! நல்ல ஞானம் பெற்று ஆத்மாபஹரத்தை விட்டு பகவதனுபவம் பெறுவாயாக என்பது உள்ளார்த்தம்.

*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************

Monday, December 27, 2021

கோதாஸ்துதியும், கோதை செய்த துதியும் - Day 12


प्रायेण देवि भवती व्यपदेशयोगात्
गोदावरी जगदिदं पयसा पुनीते।
यस्यां समेत्य समयेषु चिरं निवासात्
भागीरथी प्रभृतयोऽपि भवन्ति पुण्याः ॥१२॥


"கோதாவரி என்ற நதி தன்னுள் உன் பெயரைத்தாங்குவதாலேயே
பாவனம் பெறுகிறது. அதனால்தான் கங்கை, யமுனை ஆகிய நதிகள் குறிப்பிட்ட சமயம் வந்து உன்னிடம் தங்கி தங்கள் பாபத்தைப் போக்கி புண்யம் பெறுகின்றன (கோதாஸ்துதி - 12)


பாசுரம் 12 - கனைத்திளம்

கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிறங்கி
        நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
        பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
        மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
        அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏல் ஓர் எம்பாவாய்

நற்செல்வன் தங்காய்! எனக்கூப்பிடுகிறாள் ஆண்டாள்.
இளம் எருமைகள் தம் கன்றுக்கு இரங்கி தானே பாலைப் பொழிகின்றதால் தரையில் பால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலே பனிமழை. இரண்டுக்கும் நடுவே மால் வெள்ளமாக க்ருஷ்ணானுபவத்தில் நீ திளைக்கிறாய். நாங்கள் உன் வாயிலில் நின்று ராவணனை வென்ற ராமபிரானது புகழ் பாடுவது கேட்க வில்லையா? மனத்துக்கினியானைப் பாடவாராய். உன் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள் என அழைக்கிறாள்.


ஸ்வாபதேசம்

"திருமாலிருஞ்சோலை என்றேன் திருமால் என் நெஞ்சு நிறையப் புகுந்தான்"--என்பது போல தன்னையே தரும் கற்பகம் எம்பெருமான் என்பது "கனைத்து" என்ற சொல் உணர்த்துகிறது.
நற்செல்வன் என்பதால் பாகவத கைங்கர்யம் கொள்ளப்படுகிறது.
பரதன், ஶத்ருக்னன், லக்ஷ்மணன்,‌ விபீஷணன் ஆகியோர் கைங்கர்ய செல்வர்களாகிறார்கள். ராவண பாணம் ஹனுமானைத் தாக்கியதால் சினம் கொண்டான் ராமன். ஸீதா பிராட்டியைப் பிரிந்து வருந்தி அவள் மனத்துக்கினியானாகினான்.

ஆசார்யன் தனியன்களை தான் ஸேவித்து சிஷ்யர்களையும் ஸேவிக்கச்செய்வது "கனைத்து" என்ற பதம் உணர்த்துகிறது. 
"பனித்தலை" என்பதன் மூலம் வேதங்களின் சிரோபூஷணமாகிய உபநிஷத்துக்களையும், "நனைத்தில்லம் சேறாக்கும்" என்பதால் பால் பெருக்கெடுத்தோடுமாப்போல அதனை பகவத் விஷயத்துடன் கலந்து சிஷ்யர்களுக்கு அளிப்பது கூறப்படுகிறது. 
"நற்செல்வன்" என்பவன் க்ருஷணானுபவமும், அவனது தங்கை மனத்துகினியானாகிய ராமானுபவம் செய்பவர்கள்.
கன்று நான்கு காம்பு மூலம் சுரப்பது போல் ஆசார்யன் சிஷ்யர்களுக்கு நான்கு விதமாக விஷயங்களை சாதிக்கின்றனர்‌.
  1. கருணையுடன் தானாகவே உகந்து உபதேசித்தல்
  2. தான் பெற்ற ப்ரும்ஹானுபவத்தை பகிர்தல்
  3. சிஷ்யன் ப்ரார்த்திப்பதைச்சொல்வது.
  4. பரமத நிரஸனம் செய்து நம் ஸம்ப்ரதாயத்தின் மேன்மை சொல்வது. 
நற்செல்வன் தங்காய் என்பதற்கு "ஞானச்செல்வனாகிய ஆசார்யன்
தன் சிஷ்யனுககு பதம்படா நெஞ்சைச் சேறாக்க வல்ல சில
ஈரச்சொற்களைச் சில தார்மிகர்கள் வைத்துப் போந்தார்களே"
என்று ஈடு வ்யாக்யானம் காட்டுகிறது.

*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************

Saturday, December 25, 2021

கோதாஸ்துதியும், கோதை செய்த துதியும் - Day 11

 


दिक् दक्षिणापि परिपक्त्रिम पुण्यलभ्यात्
सर्वोत्तरा भवति देवि तवावतारात्।
यत्रैव रङ्गपतिना बहुमानपूर्वं
निद्रालुनाऽपि नियतं निहिताः कटाक्षाः॥११॥

"கோதா தேவியே! இந்த தக்ஷிண தேசம் செய்த பல புண்யங்களின் பயனால் நீ இங்கு அவதரித்தாய்.
அதனால் இத்தேசம் எல்லாவற்றுக்கும் மேம்பட்ட தேசமாகியது. இக்காரணத்தால் தான் ஶ்ரீரங்கபதி இந்த திசையின் மேல் பஹூமான கடாக்ஷங்களை வீசுகிறான் (கோதா ஸ்துதி - 11)

பாசுரம் 11 - கற்றுக் கறவை


கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
        செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும்
குற்ற மொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
        புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்து நின்
        முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
        எற்றுக்கு உறங்கும் பொருள் ஏல் ஓர் எம்பாவாய்!



"குணவதியான செல்வப் பெண்டாட்டியே!" என்றழைக்கின்றனர் தோழிகள்.
இவள் குணவதி மட்டுமல்ல. அழகிலும், செல்வத்திலும் நிறைந்தவள். "கறவைக்கணங்கள்" என்பது செல்வச் செழிப்பைக் காட்டுகிறது. கறவைக்கணங்களை மேய்த்து, கறப்பதை கர்மயோகமாய் மகிழ்ச்சியுடன் செய்கிறார்கள் இந்த ஆயர் பாடியர். "கற்று" என்பதற்கு க்ருஷ்ண கடாக்ஷத்தால் கறவைக்கணங்கள் என்றும் இளமையாயுள்ளன என்று பொருள். கண்ணன் பிறந்தவுடன் வஸுதேவரே இளைஞன்போல் ஆகிவிட்டாராம். எதிரிகளின் திறலை அழிக்க வல்லோர்கள் இந்த கோபர்கள். கண்ணன் பிறந்தபின் அசுர பயம் அதிகரித்ததால், குலத்தொழிலுடன் போர் பயிற்சியும் பெற்றார்க்ள்.
வலுச்சண்டைக்குப் போகாத இவர்களது பண்பாட்டை, "குற்றம் ஒன்றில்லாத கோவலர்" என்கிறாள் ஆண்டாள். கோவலர் கொடியான இந்தப் பெண் புற்றுக்குள்ளிருக்கும் பாம்பு போன்ற தேஹகாந்தியும், காட்டில் உலவும் மயில் போன்ற வளமும் மிக்கவளாயிருக்கிறாள். ஆக நீ எங்களுடன் பாகவதனுபவம் செய்துமுகில் வண்ணன் புகழ்பாடி ஆட வரவேண்டாமா! ஏன் இன்னும் உறங்குகிறாய்? எழுந்திரு என்கின்றனர்.


ஸ்வாபதேஸம்

இப்பாசுரம் நம்மாழ்வாரைக் குறிப்பதாயுள்ளது. நாஸ்திக வாதிகளை வாதமிட்டு ஓடச் செய்யும் பராங்குசன். "செற்றார் திறலழிய சென்று செறுச் செய்யும்" என்பதால் பிறந்தது முதல் அழாது, பேசாது புளியம் பொந்தில் இருந்ததால் "குற்றமொன்றில்லாதவர்".
அழகில் சிறந்த இந்த ஆழ்வார் மீது எம்பெருமானே மையல் கொண்டாராம். ஆழ்வார் மேல் கொண்ட ஈடுபாடு, அவரைத் திருமேனியுடனேயே வைகுந்தம் அழைத்துச் செல்லத் துணிந்ததிலிருந்து வெளிப்படுகிறது. 
(திருவாய்மொழி 7-2-10)
"முகில் வண்ணன் அடி அடைய",
முகில் வண்ணன் அடிமேல் சொன்ன"
"முகில் வண்ண வானத்து இமையவர்" என்ற வரிகளை ஆண்டாள் இதில் பொருத்திக் காட்டுகிறாள். நாயகி ரூபத்தில் கொண்டையுடன் கூடிய ஆழ்வாரின் திவ்ய மங்கள விக்ரஹமே "செல்வ பெண்டாட்டி" என்பதில் தெரிகிறது.
க்ருஷ்ணன் தன் கரங்களாலேயே கறவைக்கணங்களைத் தான் ஒருவனாக அடங்க கறக்கிறான்.
ஈவிலாத தீவினைகளால் பலகோடி ஜீவராசிகளைப் பிறப்பித்து நிர்வகிக்கிறான் இந்த பசுக்கணங்கள்போல. பகைவன் இருப்பிடம் சென்று வென்று தன் திறலைக்காட்டுபவன் எம்பெருமான். தன்மேல் கர்மாதீனமான பாபங்கள் ஒட்டாதவாறு பல அவதாரங்களை செய்வதால் அவன் தோஷமற்றவன்.

*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************

கோதாஸ்துதியும், கோதை செய்த துதியும் - Day 10

 


तातस्तु ते मधुभिदः स्तुतिलेश वश्यात्
कर्णामृतैः स्तुतिशतैरनवाप्त पूर्वम्।
त्वन्मौलिगन्धसुभगामुपहृत्य मालां
लेभे महत्तरपदानुगुणं प्रसादम् ॥१०॥

"ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையைத் தன் வைஜயந்தி மாலையை விட பவித்ரமானதாக் கருதுகிறான் கண்ணன். அவள் சூடிக்களைந்த மாலையை அரங்கனுக்களித்து, அவளையும்
பரிணயம் செய்து கொடுத்து "பெருமானுக்கே மாமனார் ஆகியதால் அவர் பெரியாழ்வார் எனப் போற்றப்படுகிறார்" என்கிறார் ஸ்வாமி தேஶிகன் (கோதாஸ்துதி - 10)


பாசுரம் 10 - நோற்றுச் சுவர்க்கம்


நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
        மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
        போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும்
        தோற்று முனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தலுடையாய் அருங்கலமே
        தேற்றமாய் வந்து திற ஏல் ஓர் எம்பாவாய்!


"ஆற்ற அனந்தல் உடையாய்" என்று கூறி எழுப்புகிறாள் இந்த
தோழியை. இவள் தோழிகளுள்ளே சிரோ பூஷணமாயிருப்பவள்.
க்ருஷ்ணானுபவமாகிய மானஸ நோன்பினைச் செய்து சொர்க்கம் சென்றவள் போல உறங்குகிறாள்.
அவளிடம் துழாய் வாசம் வருகிறது. அந்த துழாய் மாலை சூடிய நாராயணனைப் போற்றிப் பாட எங்களுடன் வா என அழைக்கிறாள். அதற்கு எந்த பதிலுமில்லை. அதனால் செஞ்சோற்றுக் கடன்தீர்க்க ராமனுடன் போரிட்டு மாண்ட கும்ப கர்ணன் தன் உறக்கத்தை உன்னிடம் தந்து
சென்றானோ. உறக்கத்தை விட்டு எழுந்து வந்து கதவைந்திற --என்கிறாள் ஆண்டாள்.

நாற்றத்துழாய் நாச்சியாருக்குச் சொல்லும் கதைகள் பல.
"நீலார்  தண்ணந்துழாய் கொண்டு என்நெறிமென் குழல் மேல் சூட்டீரே" என்கிறாள். கண்ணன் வரவை எதிர்நோக்கி பதட்டத்துடனிருந்த ருக்மிணி பிராட்டியின் மனதுக்கு ஶாந்தி அளித்தது க்ருஷ்ணன் சூடி வந்த துளசி கந்தமே.
பெரிய மாலையானால் -  "தோளிணைமேலும்" 
சிறிய மாலையானால் - "சுடர்முடிமேலும்"
உதிரியாயிருப்பின் -"தாளிணைமேலும்" புணர்ந்த தண்ணந்துழாய் அம்மான் என்கிறார் நம்மாழ்வார்.

"மாற்றமும் தாராரோ" என்பதில் மதுரகவிக்கு அருளியது சொல்லப்படுகிறது. நான்காம் வர்ணத்தில் பிறந்த நம்மாழ்வார் முதல் வர்ணத்தில் பிறந்த மதுர கவிக்கு ஆசார்யனாகிறார். 
"அத்தை தின்று அங்கே கிடக்கும்" - என்று முன்முதலாக மதுர கவிக்குத் திருவாய் மலர்ந்தருளினார்.

*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************

Thursday, December 23, 2021

கோதாஸ்துதியும், கோதை செய்த துதியும் - Day 9


मातः समुत्थितवतीमधिविष्णुचित्तं
विश्वोपजीव्यममृतं वचसा दुहानां।
तापच्छिदं हिमरुचेरिव मूर्तिमन्यां
सन्तः पयोधि दुहितुः सहजां विदुस्त्वाम् ॥९॥



"கதிர் மதியம் போல் முகத்தான்"
"திங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல"---என்று எம்பெருமானைப் போற்றுகின்றாள் ஆண்டாள்.
ஆனால் ஸ்வாமி தேஶிகன் கோதாபிராட்டியை அமிர்த
மதனத்தில் தோன்றியவளாகையால் சந்த்ரன்போல குளிர்ச்சியும், ஸம்ஸார தாபத்தைப போக்குபவளாயும், எல்லோரும் அனுபவிக்கும்படி அமுதமயமான பாடல்களைப் பொழிபவளாயும் இருக்கிறாள் என கோதாஸ்துதியில் புகழ்கிறார் (கோதாஸ்துதி - 9)


பாசுரம் 9 - தூமணி மாடத்து


தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
        தூபம் கமழ துயில் அணை மேல் கண் வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!
        மாமீர்! அவளை எழுப்பீரோ? உம் மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
        ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
        நாமம் பலவும் நவின்று ஏல் ஓர் எம்பாவாய்.

இப்பாசுரத்தில் ஆண்டாளின் விளிச்சொல் "மாமான் மகளே"! என்பது. 
ப்ருந்தாவனத்தில் ஒரு தோழியை எழுப்புகிறார். ஶரீர/ஆத்ம பந்துவாக தோழியை வரிப்பதில் ஒரு சந்தோஷம். ஶ்ரீபாஷ்யகாருடன் ஶரீர ஸம்பந்தம் தனக்கில்லையே என்று கூரத்தாழ்வான் வருந்துகிறார்.
தூமணிமாடத்தில் சுற்றும் விளக்கெரிய தூபம் கமழ நல்லணையில் உறங்குகிறாள் இந்தப் பெண்.

பாகவதகுழாம் வந்து எழுப்பியும் பதில் அளிக்காத இவள் ஊமையா, செவிடா, அல்லது இப்போதுதான் உறங்க ஆரம்பித்திருக்கிறாளா, அல்லது
மந்திரம் செய்து உறங்க வைத்தார்களா! மாமாயன், மாதவன், வைகுந்தன் என்ற நாமங்களைச்சொல்லி எழுப்பலாம் வாருங்கள் என அழைக்கிறாள் ஆண்டாள்.


ஸ்வாப தேசம்

ஜகத் ஶ்ருஷ்டிகர்த்தாவாகிய எம்பெருமான் மிக்க ஸௌலப்யத்துடன் இந்த ஆய்ப்பாடியில் வந்து பிறந்துள்ளான். 
அவனே "மாமாயன்" அவனுக்கு சுப்ரபாதம் பாட வாருங்கள். "லோகபந்துர், லோகநாதோ, மாதவோ, பக்த வத்ஸல:" என்ற ஸஹஸ்ர நாம வரிகளை ஆண்டாள் பிடிக்கிறாள்.

கண் படைத்த பயன் கண்ணனைத் காண, நா படைத்த பயன் அவன் நாமங்களைச் சொல்ல, காது படைத்த பயன் அவன் புகழ் கேட்க என்பதனை உணர்த்துகிறாள்.
"சிறையிருந்து ஏற்றம் பெற்றாள் ஸீதாபிராட்டி" என்றால் "சிறையில் பிறந்து ஏற்றம் பெற்றவன் இந்த மாமாயன்".
ஶரணாகதி செய்தவன் ஆத்மாவைக்காக்கும் பொறுப்பை எம்பெருமானிடம் விட்டு விடுவதால் பயமும் , பரமும் தொலைந்தவனாய் மார்பில் கைவைத்து தூங்குகிறான்.
ஆசார்யன் தந்தையைப் போல் தன் சிஷ்யனுக்கு எம்பெருமான் பற்றிய ஞானத்தை ப்ரகாசிக்கச் செய்கிறான். அந்த ஞானம் பெற்றதால் சிஷ்யன் துயிலணைமேல் கண்வளர அவனை எழுப்புகிறார்.

ஒரு ஜீவன் தன்தனயனுக்கு பிறவிதந்து, ப்ரும்ஹோபதேசம்
செய்து, அன்னமளித்து மூன்று முறை தந்தையாகிறார்.
ஆசார்யன் என்பவர் ஞானமளித்து, பயத்தை நீக்கி இரண்டு முறை தந்தையாகிறார். ஆக 5 தந்தைகள் ஒருவனுக்கு. உபதேசம் பெற்று
த்வயமர்த்தானுஸந்தானம் செய்யும் த்யான நிலையே "ஊமையோ அன்றிப் செவிடோ" என்பது.

*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************

Wednesday, December 22, 2021

கோதாஸ்துதியும், கோதை செய்த துதியும் - Day 8

 


भोक्तुं तव प्रियतमं भवतीव गोदे
भक्तिं निजां प्रणयभावनया गृणन्तः।
उच्चावचैः विरहसङ्गमजैरुदन्तैः
शृङ्गारयन्ति हृदयं गुरवस्त्वदीयाः ॥८॥

அனைத்து ஆழ்வார்களும் ஒரு தட்டிலும் ஆண்டாள் மட்டும் ஒருதட்டிலும் இருந்தால் இவளுக்கு ஈடாக மாட்டார்கள். நாயிகா
 பாவத்தில் பாட வழிகாட்டியவரே ஆண்டாள்தான். கண்ணனோடு இருக்கையிலே உவகைமழை பிரியும்போது சோகமழை இரண்டையும் பொழிந்துள்ளார்.
(கோதாஸ்துதி -8)

பாசுரம்- 8  - கீழ் வானம்


கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
        மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
        கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
        மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
        ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏல் ஓர் எம்பாவாய்.

கைங்கர்யத்தில் ஈடுபடுவதால் குதூகலமுடைய பாவாய்!!லக்ஷ்மணப்பெருமாள் ராமபிரான் வனவாசம் செல்லும்போது எம்பெருமான் கைங்கர்யத்தில் யாரும் பங்கு கேட்காமல் முழுதும் தனக்கே கிடைக்கும் என்று குதூகலித்தமைபோல பொழுது புலர்ந்த அடையாளமாக கீழ்வானம் வெளுத்தது. 
எருமைகள் சிறுபுல் மேய புறப்பட்டன. போகின்ற பாகவதர்களையும் நிறுத்தி உன்னை எழுப்ப நிற்கின்றோம். நாமனைவரும் எம்பெருமானைப் பாடி பறை கொள்ள வேணும். 

எப்பேர்பட்ட எம்பெருமான்! கேசி என்ற குதிரையின் வாய்பிளந்தவனை, கம்ஸனால் மதுரையில் ஏவப்பட்ட மல்லர்களை வென்றானை, தேவாதிதேவனைச் சென்று ஸேவிக்கையில் அவன் ஆஹா என்று மகிழ்ந்து அருள்வான். கண்ணனின் லீலைகள், அவன் செய்த ஸம்ஹாரங்கள் எல்லாமே ரஸமானவை. பக்ஷிகளும் ம்ருகங்களும் விடியலை எதிர் நோக்குமாப்போல நாம் கண்ணனை எதிர் நோக்கவேணும். "காலிப்பின்னே வருகின்ற கடல் வண்ணன் கோலத்தை வந்துகாணீர்"---என்பதுபோல.
"மற்பொரும் தாமக்களம் புகுந்த மதுரைப் புரத்தென்னை உய்த்திடுமின்"அந்த மல்லர்களுக்குக் கிடைத்ததே கண்ணனின் ஸ்பர்சம்! என ஏங்குகிறாள் ஆண்டாள்.
தேவாதி தேவன் மிக போக்யமானவன். விபவத்தில் க்ருஷ்ணனைப் போல அர்ச்சையில் வரதனும் மிக்க ரஸமானவர். யுகந்தோறும் தேவர்கள் பலர்வந்து ஸேவிப்பதால் தேவாதிராஜனாகிறான் வரதன்.
இத்தகைய தேவாதிராஜனை சென்று "திருவேங்கட யாத்திரை போல, அர்ச்சிராதியாத்திரை போல, அக்ரூரர் யாத்திரைபோல "
நாம் ஸேவிக்க வேணும் என்கிறாள் ஆண்டாள்.


ஸ்வாபதேசம்
ஸம்ஸாரம் என்ற இருட்டிலிருந்து ஸத்வ குணம் மேலோங்கிய ஶரணாகதனுக்கு விடியல் கிடைக்கிறதை "கீழ்வானம் வெள்ளென்று" என்பது குறிக்கிறது.
எருமையின் மெத்தனம் போல மெதுவாக மோக்ஷம் வேண்டும் பக்தி யோகத்தை "எருமை சிறுவீடு" எனக்காட்டுகிறார்.
பக்தியோகம் செய்யப் போகிறவர்களைத் தடுத்து
ஆசார்யனிடம் ஶரணாகதி செய்ய அனுப்புகிறாள் - "போகாமல் காத்து உன்னைக் கூவுவான்" என்று.
மா வாய் பிளந்தானை என்பதில் அஹங்காரத்தை அழிக்கிறான் என்கிறார்.
காமம் க்ரோதம் என்ற இரு மல்லர்களை அழித்து கண்ணனிடம் ஆசை ஏற்படச்செய்கிறார் ஆசார்யன்.
இத்தகைய ப்ரம்ஹ தத்வத்தை நமக்களிக்கும் ஆசார்யன் தேவாதி தேவன். அவர் தனியன்களை ஸ்மரித்து அவரை ஸேவிப்போம் வாருங்கள் என்கிறாள் ஆண்டாள்.

*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************