Wednesday, December 22, 2021

கோதாஸ்துதியும், கோதை செய்த துதியும் - Day 8

 


भोक्तुं तव प्रियतमं भवतीव गोदे
भक्तिं निजां प्रणयभावनया गृणन्तः।
उच्चावचैः विरहसङ्गमजैरुदन्तैः
शृङ्गारयन्ति हृदयं गुरवस्त्वदीयाः ॥८॥

அனைத்து ஆழ்வார்களும் ஒரு தட்டிலும் ஆண்டாள் மட்டும் ஒருதட்டிலும் இருந்தால் இவளுக்கு ஈடாக மாட்டார்கள். நாயிகா
 பாவத்தில் பாட வழிகாட்டியவரே ஆண்டாள்தான். கண்ணனோடு இருக்கையிலே உவகைமழை பிரியும்போது சோகமழை இரண்டையும் பொழிந்துள்ளார்.
(கோதாஸ்துதி -8)

பாசுரம்- 8  - கீழ் வானம்


கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
        மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
        கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
        மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
        ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏல் ஓர் எம்பாவாய்.

கைங்கர்யத்தில் ஈடுபடுவதால் குதூகலமுடைய பாவாய்!!லக்ஷ்மணப்பெருமாள் ராமபிரான் வனவாசம் செல்லும்போது எம்பெருமான் கைங்கர்யத்தில் யாரும் பங்கு கேட்காமல் முழுதும் தனக்கே கிடைக்கும் என்று குதூகலித்தமைபோல பொழுது புலர்ந்த அடையாளமாக கீழ்வானம் வெளுத்தது. 
எருமைகள் சிறுபுல் மேய புறப்பட்டன. போகின்ற பாகவதர்களையும் நிறுத்தி உன்னை எழுப்ப நிற்கின்றோம். நாமனைவரும் எம்பெருமானைப் பாடி பறை கொள்ள வேணும். 

எப்பேர்பட்ட எம்பெருமான்! கேசி என்ற குதிரையின் வாய்பிளந்தவனை, கம்ஸனால் மதுரையில் ஏவப்பட்ட மல்லர்களை வென்றானை, தேவாதிதேவனைச் சென்று ஸேவிக்கையில் அவன் ஆஹா என்று மகிழ்ந்து அருள்வான். கண்ணனின் லீலைகள், அவன் செய்த ஸம்ஹாரங்கள் எல்லாமே ரஸமானவை. பக்ஷிகளும் ம்ருகங்களும் விடியலை எதிர் நோக்குமாப்போல நாம் கண்ணனை எதிர் நோக்கவேணும். "காலிப்பின்னே வருகின்ற கடல் வண்ணன் கோலத்தை வந்துகாணீர்"---என்பதுபோல.
"மற்பொரும் தாமக்களம் புகுந்த மதுரைப் புரத்தென்னை உய்த்திடுமின்"அந்த மல்லர்களுக்குக் கிடைத்ததே கண்ணனின் ஸ்பர்சம்! என ஏங்குகிறாள் ஆண்டாள்.
தேவாதி தேவன் மிக போக்யமானவன். விபவத்தில் க்ருஷ்ணனைப் போல அர்ச்சையில் வரதனும் மிக்க ரஸமானவர். யுகந்தோறும் தேவர்கள் பலர்வந்து ஸேவிப்பதால் தேவாதிராஜனாகிறான் வரதன்.
இத்தகைய தேவாதிராஜனை சென்று "திருவேங்கட யாத்திரை போல, அர்ச்சிராதியாத்திரை போல, அக்ரூரர் யாத்திரைபோல "
நாம் ஸேவிக்க வேணும் என்கிறாள் ஆண்டாள்.


ஸ்வாபதேசம்
ஸம்ஸாரம் என்ற இருட்டிலிருந்து ஸத்வ குணம் மேலோங்கிய ஶரணாகதனுக்கு விடியல் கிடைக்கிறதை "கீழ்வானம் வெள்ளென்று" என்பது குறிக்கிறது.
எருமையின் மெத்தனம் போல மெதுவாக மோக்ஷம் வேண்டும் பக்தி யோகத்தை "எருமை சிறுவீடு" எனக்காட்டுகிறார்.
பக்தியோகம் செய்யப் போகிறவர்களைத் தடுத்து
ஆசார்யனிடம் ஶரணாகதி செய்ய அனுப்புகிறாள் - "போகாமல் காத்து உன்னைக் கூவுவான்" என்று.
மா வாய் பிளந்தானை என்பதில் அஹங்காரத்தை அழிக்கிறான் என்கிறார்.
காமம் க்ரோதம் என்ற இரு மல்லர்களை அழித்து கண்ணனிடம் ஆசை ஏற்படச்செய்கிறார் ஆசார்யன்.
இத்தகைய ப்ரம்ஹ தத்வத்தை நமக்களிக்கும் ஆசார்யன் தேவாதி தேவன். அவர் தனியன்களை ஸ்மரித்து அவரை ஸேவிப்போம் வாருங்கள் என்கிறாள் ஆண்டாள்.

*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************

No comments:

Post a Comment