Saturday, December 25, 2021

கோதாஸ்துதியும், கோதை செய்த துதியும் - Day 11

 


दिक् दक्षिणापि परिपक्त्रिम पुण्यलभ्यात्
सर्वोत्तरा भवति देवि तवावतारात्।
यत्रैव रङ्गपतिना बहुमानपूर्वं
निद्रालुनाऽपि नियतं निहिताः कटाक्षाः॥११॥

"கோதா தேவியே! இந்த தக்ஷிண தேசம் செய்த பல புண்யங்களின் பயனால் நீ இங்கு அவதரித்தாய்.
அதனால் இத்தேசம் எல்லாவற்றுக்கும் மேம்பட்ட தேசமாகியது. இக்காரணத்தால் தான் ஶ்ரீரங்கபதி இந்த திசையின் மேல் பஹூமான கடாக்ஷங்களை வீசுகிறான் (கோதா ஸ்துதி - 11)

பாசுரம் 11 - கற்றுக் கறவை


கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
        செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும்
குற்ற மொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
        புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்து நின்
        முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
        எற்றுக்கு உறங்கும் பொருள் ஏல் ஓர் எம்பாவாய்!



"குணவதியான செல்வப் பெண்டாட்டியே!" என்றழைக்கின்றனர் தோழிகள்.
இவள் குணவதி மட்டுமல்ல. அழகிலும், செல்வத்திலும் நிறைந்தவள். "கறவைக்கணங்கள்" என்பது செல்வச் செழிப்பைக் காட்டுகிறது. கறவைக்கணங்களை மேய்த்து, கறப்பதை கர்மயோகமாய் மகிழ்ச்சியுடன் செய்கிறார்கள் இந்த ஆயர் பாடியர். "கற்று" என்பதற்கு க்ருஷ்ண கடாக்ஷத்தால் கறவைக்கணங்கள் என்றும் இளமையாயுள்ளன என்று பொருள். கண்ணன் பிறந்தவுடன் வஸுதேவரே இளைஞன்போல் ஆகிவிட்டாராம். எதிரிகளின் திறலை அழிக்க வல்லோர்கள் இந்த கோபர்கள். கண்ணன் பிறந்தபின் அசுர பயம் அதிகரித்ததால், குலத்தொழிலுடன் போர் பயிற்சியும் பெற்றார்க்ள்.
வலுச்சண்டைக்குப் போகாத இவர்களது பண்பாட்டை, "குற்றம் ஒன்றில்லாத கோவலர்" என்கிறாள் ஆண்டாள். கோவலர் கொடியான இந்தப் பெண் புற்றுக்குள்ளிருக்கும் பாம்பு போன்ற தேஹகாந்தியும், காட்டில் உலவும் மயில் போன்ற வளமும் மிக்கவளாயிருக்கிறாள். ஆக நீ எங்களுடன் பாகவதனுபவம் செய்துமுகில் வண்ணன் புகழ்பாடி ஆட வரவேண்டாமா! ஏன் இன்னும் உறங்குகிறாய்? எழுந்திரு என்கின்றனர்.


ஸ்வாபதேஸம்

இப்பாசுரம் நம்மாழ்வாரைக் குறிப்பதாயுள்ளது. நாஸ்திக வாதிகளை வாதமிட்டு ஓடச் செய்யும் பராங்குசன். "செற்றார் திறலழிய சென்று செறுச் செய்யும்" என்பதால் பிறந்தது முதல் அழாது, பேசாது புளியம் பொந்தில் இருந்ததால் "குற்றமொன்றில்லாதவர்".
அழகில் சிறந்த இந்த ஆழ்வார் மீது எம்பெருமானே மையல் கொண்டாராம். ஆழ்வார் மேல் கொண்ட ஈடுபாடு, அவரைத் திருமேனியுடனேயே வைகுந்தம் அழைத்துச் செல்லத் துணிந்ததிலிருந்து வெளிப்படுகிறது. 
(திருவாய்மொழி 7-2-10)
"முகில் வண்ணன் அடி அடைய",
முகில் வண்ணன் அடிமேல் சொன்ன"
"முகில் வண்ண வானத்து இமையவர்" என்ற வரிகளை ஆண்டாள் இதில் பொருத்திக் காட்டுகிறாள். நாயகி ரூபத்தில் கொண்டையுடன் கூடிய ஆழ்வாரின் திவ்ய மங்கள விக்ரஹமே "செல்வ பெண்டாட்டி" என்பதில் தெரிகிறது.
க்ருஷ்ணன் தன் கரங்களாலேயே கறவைக்கணங்களைத் தான் ஒருவனாக அடங்க கறக்கிறான்.
ஈவிலாத தீவினைகளால் பலகோடி ஜீவராசிகளைப் பிறப்பித்து நிர்வகிக்கிறான் இந்த பசுக்கணங்கள்போல. பகைவன் இருப்பிடம் சென்று வென்று தன் திறலைக்காட்டுபவன் எம்பெருமான். தன்மேல் கர்மாதீனமான பாபங்கள் ஒட்டாதவாறு பல அவதாரங்களை செய்வதால் அவன் தோஷமற்றவன்.

*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************

No comments:

Post a Comment