Thursday, December 23, 2021

கோதாஸ்துதியும், கோதை செய்த துதியும் - Day 9


मातः समुत्थितवतीमधिविष्णुचित्तं
विश्वोपजीव्यममृतं वचसा दुहानां।
तापच्छिदं हिमरुचेरिव मूर्तिमन्यां
सन्तः पयोधि दुहितुः सहजां विदुस्त्वाम् ॥९॥



"கதிர் மதியம் போல் முகத்தான்"
"திங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல"---என்று எம்பெருமானைப் போற்றுகின்றாள் ஆண்டாள்.
ஆனால் ஸ்வாமி தேஶிகன் கோதாபிராட்டியை அமிர்த
மதனத்தில் தோன்றியவளாகையால் சந்த்ரன்போல குளிர்ச்சியும், ஸம்ஸார தாபத்தைப போக்குபவளாயும், எல்லோரும் அனுபவிக்கும்படி அமுதமயமான பாடல்களைப் பொழிபவளாயும் இருக்கிறாள் என கோதாஸ்துதியில் புகழ்கிறார் (கோதாஸ்துதி - 9)


பாசுரம் 9 - தூமணி மாடத்து


தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
        தூபம் கமழ துயில் அணை மேல் கண் வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!
        மாமீர்! அவளை எழுப்பீரோ? உம் மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
        ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
        நாமம் பலவும் நவின்று ஏல் ஓர் எம்பாவாய்.

இப்பாசுரத்தில் ஆண்டாளின் விளிச்சொல் "மாமான் மகளே"! என்பது. 
ப்ருந்தாவனத்தில் ஒரு தோழியை எழுப்புகிறார். ஶரீர/ஆத்ம பந்துவாக தோழியை வரிப்பதில் ஒரு சந்தோஷம். ஶ்ரீபாஷ்யகாருடன் ஶரீர ஸம்பந்தம் தனக்கில்லையே என்று கூரத்தாழ்வான் வருந்துகிறார்.
தூமணிமாடத்தில் சுற்றும் விளக்கெரிய தூபம் கமழ நல்லணையில் உறங்குகிறாள் இந்தப் பெண்.

பாகவதகுழாம் வந்து எழுப்பியும் பதில் அளிக்காத இவள் ஊமையா, செவிடா, அல்லது இப்போதுதான் உறங்க ஆரம்பித்திருக்கிறாளா, அல்லது
மந்திரம் செய்து உறங்க வைத்தார்களா! மாமாயன், மாதவன், வைகுந்தன் என்ற நாமங்களைச்சொல்லி எழுப்பலாம் வாருங்கள் என அழைக்கிறாள் ஆண்டாள்.


ஸ்வாப தேசம்

ஜகத் ஶ்ருஷ்டிகர்த்தாவாகிய எம்பெருமான் மிக்க ஸௌலப்யத்துடன் இந்த ஆய்ப்பாடியில் வந்து பிறந்துள்ளான். 
அவனே "மாமாயன்" அவனுக்கு சுப்ரபாதம் பாட வாருங்கள். "லோகபந்துர், லோகநாதோ, மாதவோ, பக்த வத்ஸல:" என்ற ஸஹஸ்ர நாம வரிகளை ஆண்டாள் பிடிக்கிறாள்.

கண் படைத்த பயன் கண்ணனைத் காண, நா படைத்த பயன் அவன் நாமங்களைச் சொல்ல, காது படைத்த பயன் அவன் புகழ் கேட்க என்பதனை உணர்த்துகிறாள்.
"சிறையிருந்து ஏற்றம் பெற்றாள் ஸீதாபிராட்டி" என்றால் "சிறையில் பிறந்து ஏற்றம் பெற்றவன் இந்த மாமாயன்".
ஶரணாகதி செய்தவன் ஆத்மாவைக்காக்கும் பொறுப்பை எம்பெருமானிடம் விட்டு விடுவதால் பயமும் , பரமும் தொலைந்தவனாய் மார்பில் கைவைத்து தூங்குகிறான்.
ஆசார்யன் தந்தையைப் போல் தன் சிஷ்யனுக்கு எம்பெருமான் பற்றிய ஞானத்தை ப்ரகாசிக்கச் செய்கிறான். அந்த ஞானம் பெற்றதால் சிஷ்யன் துயிலணைமேல் கண்வளர அவனை எழுப்புகிறார்.

ஒரு ஜீவன் தன்தனயனுக்கு பிறவிதந்து, ப்ரும்ஹோபதேசம்
செய்து, அன்னமளித்து மூன்று முறை தந்தையாகிறார்.
ஆசார்யன் என்பவர் ஞானமளித்து, பயத்தை நீக்கி இரண்டு முறை தந்தையாகிறார். ஆக 5 தந்தைகள் ஒருவனுக்கு. உபதேசம் பெற்று
த்வயமர்த்தானுஸந்தானம் செய்யும் த்யான நிலையே "ஊமையோ அன்றிப் செவிடோ" என்பது.

*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************

No comments:

Post a Comment