Tuesday, December 28, 2021

கோதாஸ்துதியும், கோதை செய்த துதியும் - Day 13



नागेशयः सुतनु पक्षिरथः कथं ते
जातः स्वयंवरपतिः पुरुषः पुराणः।
एवं विधाः समुचितं प्रणयं भवत्याः
सन्दर्शयन्ति परिहासगिरः सखीनाम्॥१३॥


ஹே கோதா!பாம்பில் படுத்து கருடவாகனனாயிருக்கும் புராணபுருஷனை மணாளனாய் வரித்துள்ளாயே என்று பரிகசிக்கும் உன் தோழியர்க்கு நீ காட்டும் ஆனந்த மௌனம் அவனிடம் நீகொண்ட பேரன்பைக் காட்டுகிறது (கோதாஸ்துதி - 13)



பாசுரம் 13 - புள்ளின் வாய் கீண்டானை


புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
        கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்
        வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண்! போது அரிக்கண்ணினாய்
        குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்
        கள்ளம் தவிர்த்து கலந்து ஏல் ஓர் எம்பாவாய்

பள்ளிக் கிடத்தியோ பாவாய்!
போதரிக் கண்ணினாய்!என்று
உள்ளே உறங்குபவளை அழைக்கிறாள். ராம க்ருஷ்ணாதிகளை மாறி மாறி அனுபவிக்கும் பாசுரம் இது.
கொக்கு வடிவில் வந்த கம்ஸனால் ஏவப்பட்ட பகாசுரனை இரு பிளவாக்கினான் கண்ணன்.
பிராட்டி யைப் பிரித்த பாதகனான ராவணனின் பத்து தலைகளையும் புல்போல் கிள்ளி எறிந்தான் ராமன். இவர்களின் கீர்த்தியைப் பாடிக்கொண்டு நாம் பாவைக்களத்துக்கே வந்து விட்டோம். 
வெள்ளி உதயமாகி வியாழன் அஸ்தமித்து, பொழுது புலர்ந்ததற்கு அடையாளமாக பறவைகள் சிலம்புகின்றன. க்ருஷ்ணனுடன் ஜலக்ரீடை செய்துமகிழ வேண்டிய இச்சமயத்தில் நீ தனியே க்ருஷ்ணானுபவம் செய்வது சரியல்ல. எழுந்துவா என்று அழைக்கின்றனர் தோழியர்.

ஸ்வாபதேசம்

புள்ளின்வாய் கீண்டானை என்பது கொக்கு போல் கபடமான (சிறிய மீன்களை விட்டு பெரிய மீனைப் பிடிக்கக் காத்திருக்கும் கபடம்) செயல்களைச் செய்பவர்களை நாம் வெறுக்க வேண்டும் என்ற கருத்தை அறிவிக்கிறது.
பொல்லா அரக்கன் ராவணன். சாது அரக்கன் விபீஷணன். ராமனால் ஸஹோதரனாய் பாவிக்கப் பட்டவன்.
கிள்ளிக் களைந்தான் எனில் ராமன் நகத்தால் கிள்ளி எறிவதுபோல பாணத்தால் அநாயசமாய் செய்தான் என்பதாகும்.
"அத்திர அரக்கன் முடி பத்தும் ஒரு கொத்தென உதிர்த்த திறலோன்"-என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.
எம்பெருமான் ராவணன், பகாசுரன் ஆகியோரை அழித்து தம்மை நமக்கு அளித்த படியால் "கீர்த்தி" என்கிறாள் ஆண்டாள். ராம க்ருஷ்ணாவதாரங்களை முடித்துக்கொண்டு சென்ற
பின்பும் "திருவணை (ராம சேது), கீதை" இரண்டையும் நாம் உய்ய விட்டுச்சென்ற பரம உபகாரத்தைப் புகழ்ந்து பாட அழைக்கிறாள்.
ராவண குடும்பமே ராமனின் குணானுபவத்தில் மூழ்கிப் புகழ்ந்தது. ராவணன் ராமனின் வீரத்தைப் புகழ்ந்தான். கும்பகர்ணன் சௌர்யத்தில் ஈடுபட்டான். விபீஷணன் ஸௌஸீல்யத்தை ஸ்லாகித்தான். ஸுரப்பனகா அவன் ஸௌந்தர்யத்தில் மயங்கினாள்.

"பிள்ளைகள் எல்லாரும் பாவைக்களம் புக்கார்"---ப்ரபத்திக்கு அதிகாரிகளான எல்லாரும் ஆத்ம ஞானம் பெற ஆசார்யர்கள் காலக்ஷேபம் சொல்லுமிடம் சேர்ந்தனர் என்பதாகும்.

"வெள்ளி-----உறங்கிற்று"---ஞானம் பிறந்து அஞானம் அழிந்தது.
"குள்ள குளிர.....கள்ளம் தவிர்ந்து"---மோக்ஷத்தை அடைய விரும்பாதவளாய், ஸம்ஸாரத்தில் தூங்குகிறாயே! நல்ல ஞானம் பெற்று ஆத்மாபஹரத்தை விட்டு பகவதனுபவம் பெறுவாயாக என்பது உள்ளார்த்தம்.

*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************

No comments:

Post a Comment