Friday, January 14, 2022

கோதாஸ்துதியும், கோதை செய்த துதியும் - Day 30



பாசுரம் 30 - வங்கக்கடல்


வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
        திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட ஆற்றை அணிபுதுவைப்
        பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
        இங்கு இப்பரிசு உறைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கன் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
        எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்


29 பாசுரங்களையும் கோபியர் களின் கோரிக்கையாகப்பாடிய ஆண்டாள் இந்த 30ம் பாசுரத்தை பலஶ்ருதியாக முடிக்கிறாள்.
கானரூபமான திருப்பாவையை அனுஸந்திப்பவர்கள் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் என்கிறாள் ஆண்டாள்.

கோபியர்கள் அனுஷ்டானம் செய்ததை, ஆண்டாள் அனுகாரம் செய்து, இதனை எல்லோரும் அனுஸந்தானம் செய்யும்படி ப்ரார்த்திக்கிறாள்.
"வங்க கடல் கடைந்த மாதவனை"
என்பது ஸம்ஸாரக்கடலைத் தாண்டி அக்கரை செல்ல உலவும்
தோணியே எம்பெருமான் என்பதாகும். அவன் பள்ளி கொண்ட திருப்பாற்கடலைக் கடைந்தபோது வந்த அமுது - பிராட்டி.
அவளை மார்பில் கொண்ட மாதவன், ப்ரம்ஹாவையும், சிவனையும் பெற்ற கேசவனாகிய உன்னை மதிமுகமுடைய சேயிழையார்களாகிய நாங்கள் வந்து இறைஞ்சுகிறோம்.
அன்று நாங்கள் கேட்ட"பறை "
வாத்யமல்ல, உன்னிடம் "கைங்கர்யமே" என்கிறாள் ஆண்டாள்.

"அணிபுதுவை" என்பதன் மூலம் ஶ்ரீவில்லிபுத்தூரின் மேன்மையைக் காட்டுகிறாள்‌ ஆண்டாள். ஆழ்வாரும், தாயாரும்
ஒருசேரத் தோன்றிய புண்யபூமி ஶ்ரீவில்லிபுத்தூர். எம்பெருமான் வடபத்ரசாயியும் சேர்ந்துள்ளான்.
தண்தெரியல் பட்டர்பிரான் கோதை பாடிய இந்த 30 பாசுரங்களையும் தினமும் அனுஸந்தானம் செய்வோர் நான்கு தோளுடைய செங்கண் திருமாலின் கருணைக்குப் பாத்ரமாகி என்றும் இன்புற்று இம்மை சுகத்தோடு மோக்ஷானுபவமும் பெறுவர் என்று தலைகட்டுகிறாள் ஆண்டாள்!

*****************************************************************************
நமக்குப் பறைதரும் நாராயணனை!
பாற்கடலில் பையத்துயின்ற பரமனை!
ஓங்கி உலகளந்த உத்தமனை!
பத்மநாபனை!
மாயனை!
ஹரியை!
கேசவனை!
தேவாதி தேவனை!
வைகுந்தனை!
அருங்கலத் தை!
முகில் வண்ணனை!
மனத்துக்கினியானை!
புள்ளின் வாய் கீண்டானை!
பங்கயக்கண்ணனை!
வல்லானை!
மணிவண்ணனை!
குல விளக்கை!
ஓடாத தோள்வலியனை!
மலர் மார்பனை!
விமலனை!
சுடரை!
அபிமானனை!
பூவைப்பூவண்ணனை!
குன்றைக்குடையாக்கினானை!
நெடுமாலை!
கோல விளக்கை!
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தனை!
குறையொன்றுமில்லாத கோவிந்தனை!
அன்று காண் கோவிந்தனை!
செல்வத்திருமாலை!
சேதனர்களாகிய நாமனைவரும் கரணத்ரயம் படைத்ததன் பயனாக உள்ளத்திருத்தி, வாயினால் பாடி, செவியால் கேட்டு அனுபவித்து மகிழ்வோம்!

ஆக இப்படி எம்பெருமானின் இணையில்லா திருநாமங்களைக் கொண்டு தொடுத்த பாமாலையை அனுதினமும் அனுஸந்தித்து ஆண்டாளின் அருளுக்குப் பாத்ரமாவோமாக.

(The entire series is based on the Thiruppavai Upanyasams of Navalpakkam Sri Vasudevachar Swami and Sri Asuri Madhavaachar Swami held last year (2021))


 

*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏********************

Wednesday, January 12, 2022

கோதாஸ்துதியும், கோதை செய்த துதியும் - Day 29


इति विकसितभक्तेरुत्थितां वेङ्कटेशात्
बहुगुणरमणीयां वक्ति गोदास्तुतिं यः।
स भवति बहुमान्यः श्रीमतो रङ्गभर्तुः
चरणकमलसेवां शाश्वतीमभ्युपैष्यन् ॥२९॥


இவ்விதம் வேங்கட கவியிடம் பிறந்த காவ்ய குணங்கள் நிறைந்த இந்த கோதாஸ்துதியைச் சொல்பவர்கள் திருவரங்கனின் திருவடிக்கீழ் இவ்வுலகில்அவனது பஹுமான த்ருஷ்டிக்கு இலக்காவதுடன் விண்ணுலகிலும் கைங்கர்யப் பேற்றைப் பெறுகின்றனர். (கோதாஸ்துதி - 29)


பாசுரம் 29 - சிற்றம் சிறுகாலே


சிற்றஞ் சிறு காலே வந்துன்னைச் சேவித்து உன்
        பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்!
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
        குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!
        எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
        மற்றை நம் காமங்கள் மாற்று ஏல் ஓர் எம்பாவாய்



திருப்பாவையின் சாரம் என்னும் பாசுரம் இது. ஆண்டாள் ஆயர் பெண்களின் தலைவியாயிருந்து திருப்பாவை பாடினாள். சக தோழியை "கேளீரோ" என்னும் ஆண்டாள் இந்தப் பாசுரத்தில், ஆசார்யனாகமாறி க்ருஷ்ணனை "கேளாய்" என்கிறாள். "நாராயணனே நமக்கே பறை தருவான்" என்று ஏகாரமிட்டு உறுதி செய்த "பறையை", "உமக்கே நாமாட்செய்வோம்" என்று உறுதியாகச் பெற்று விட்ட தோரணையில் பேசிமுடிக்கிறாள்.

நாட்டாறுக்காக "மழையையும்"
கண்ணனுக்காக "பறையையும்"
தங்களுக்காக "குற்றேவலையும்" 
ப்ரார்த்திக்கிறாள்.
மிக்க விடியற் காலையில் நாங்கள் உனது பொற்றாமரை போன்ற ஒளிரும், ம்ருதுவான உன் திருவடிகளைப் பெற்று போற்றி
நாங்கள் வைக்கும் ப்ரார்த்தனையை கேளாய்! என்கிறாள்.

மிக உயர்ந்த ராஜ பரம்பரையிலோ, மகரிஷி குலத்திலோ பிறவாமல் (ராமன், வாமனன் போல) மாடு மேய்க்கும் இடையர் குலத்தில் நீ வந்து பிறந்தாய்!
எங்களுக்கு நீ கைங்கர்யமாகிய பறையைக் தராமலிருக்காதே.
இப்பிறவி மட்டுமல்ல, நீ எடுக்கும் எந்தப் பிறவியிலும் நீயும், நாங்களும் பிரியாதிருக்கும் பந்தம் தொடர்ந்து உனக்கே நாங்கள் கைங்கர்யம் செய்ய வேண்டும். இதைத்தவிர மற்றைய கார்யங்கள் எதனையும், எங்களிடமும், உன்னிடமும் (மற்றைய நம் காமங்கள்) ஏற்படாமல் மாற்றி விடு என்கிறாள் ஆண்டாள். இவள் ப்ரயோகிக்கும் "கோவிந்தா", என்ற பதத்துள் "கோதா"அடங்கிவிடுகிறாள்.

ஸ்வாபதேசம்

ப்ரபத்தி க்ஷண காலத்தில் அனுஷ்டிக்கப்படும் ஸாத்யோபாயம். "சிற்றஞ்சிறுகாலே" என்பது இந்த ப்ரபத்தியை நாள் கடத்தாது நல்லமன, தேக ஸ்திதி இருக்கும்போது அனுஷ்டிக்க வேண்டியதைக் குறிப்பது.
ஸ்வரூப ஸமர்ப்பணம், பர ஸமர்ப்பணம், பல ஸமர்ப்பணம்
ஆகிய மூன்று தளங்களைக் கொண்டது இந்த ப்ரபத்தி சாஸ்த்ரம் என்பதை ஆண்டாள் காட்டுகிறாள் இந்தப் பாசுரத்தில். இப்படி அனுஷ்டித்துப் பெறும் கைங்கர்யத் தைச் செய்யும்போது
உண்டாகும் உகப்பை உனக்கே அர்ப்பணிப்போம் என்பதை,
"மற்றை நம்....மாற்று" என்ற வரிகாட்டுகிறது. இதனை அனுஷ்டிக்க நமக்கு வழிகாட்டும் ஆசார்யனின் பொற்றாமரைக் திருவடிகளை பற்றி போற்றவேணும்.
ஆசார்யன் சிஷ்யர்களுக்கு ஸம்ப்ரதாய விஷயங்களை ஊட்டிச் செய்யும் கார்யத்தை, "பெற்றம் மேய்த்துண்ணும்" என்ற வரிதெரிவிக்கிறது.

ஆசார்யனுக்கு சிஷ்யன் செய்யும் கைங்கர்யங்களை, "குற்றேவல் எங்களை" என்ற வரிகாட்டுகிறது.
மற்றும் ஒரு விளக்கம்.
  1. ப்ராப்யத்தில் த்வரை (சிற்றம் சிறுகாலே வந்துன்னை)
  2. சாத்யத்தில் சாதனை புத்தி (போற்றும் பொருள் கேளாய்)
  3. சபலமாம்படி அபேக்ஷித்தல்/நிர்பந்தித்து கேட்டல் (குற்றேவல் எங்களைக் கொள்ளாமல்)
  4. ப்ரயோசனாந்த்ர வைமுக்யம். வர்ணாஶ்ரம தர்ம வ்ருத்திக்காக ஆசை (இற்றை பறை கொள்வான்)
  5. விரோதி நிவ்ருத்தி ப்ரார்த்தனை (ஏழேழ் பிறவிக்கும் உந்தனோடு உறவேல்)
  6. பல ப்ரார்த்தனை (மற்றை நம் காமங்கள் மாற்று)
30 பாசுர மங்களும் தினம் ஸேவிக்காவிடினும், இந்த ஒரு பாசுரத்தையாவது தினம் ஸேவித்து உய்யும் வழி பெறவேணும் என்பது பராசரபட்டரின் கருத்து.


*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************

கோதாஸ்துதியும், கோதை செய்த துதியும் - Day 28


शतमखमणिनीला चारु कल्हार हस्ता
स्तनभरनमिताङ्गी सान्द्रवात्सल्यसिन्धुः।
अलकविनिहिताभिः स्रग्भिराकृष्टनाथा
विलसतु हृदि गोदा विष्णुचितात्मजा नः ॥२८॥


இந்த்ர நீலநிறத்தவளும், அழகிய நீலோத்பல மலரை ஏந்தியவளும், கனத்த மார்பகங்களினால் குனிந்தவளும், வாத்ஸல்யம் நிறைந்தவளும், சூடிக் களைந்த மாலைமேல் அரங்கனை மையல் கொள்ளச் செய்தவளும், பெரியாழ்வாரின் மகளுமாகிய கோதா தேவியே! என் சிந்தையில் நீ எப்போதும் உறைய வேணும்!  
(கோதாஸ்துதி - 28)


பாசுரம் 28 - கறவைகள் பின்சென்று


கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம்
        அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவி பெருந்தனை புண்ணியம் யாம் உடையோம்
        குறைவொன்றும் இல்லாத கோவிந்தா, உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
        அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
        இறைவா! நீ தாராய் பறை ஏல் ஓர் எம்பாவாய்


தமது ஆகிஞ்சன்யத்தை ஆண்டாளும், தோழிகளும் வெளிப்படுத்துகின்றனர் இப்பாசுரத்தில். ஸ்வாமி தேஶிகன் மிகவும் ஈடுபட்ட பாசுரம் இது.
சன்மானம் கேட்கும் உங்களுக்கு என்ன தெரியும் என்று கேட்கிறான் கண்ணன். கறவை மாடுகளுடன் சென்று காட்டில் இடையர்களுடன் மாடு மேய்த்து உண்ணத் தெரியும். வேறேதும் தெரியாது என ஶரணாகதிக்கு முக்கிய அங்கமான "கைமுதலின்மையை"
காட்டுகிறாள் ஆண்டாள். 
அறிவு, ஞானமின்றி, யோகம் முதலியன செய்யும் திறனுமில்லாத இடைக்குலத்தில் பிறந்துள்ளோம். இத்தகைய எங்களைக் கரைசேர்க்க நீயும் இரங்கி வந்து எங்களுடன் கலந்து பழகினாய். ஆக இப்படி ஏற்பட்ட சம்பந்தம் இனிப் பிரிக்க முடியாது. உன்னை இதுகாறும் நாங்கள் ஸ்நேகத்தால் சிறு பேரிட்டு அழைத்தமைக்கு கோபிக்காதே. எங்களுடைய கைங்கர்யத்தை ஏற்று பலன் தரவேண்டும் என்கிறாள்.


ஸ்வாபதேசம்

வானரங்களுடன் கலந்து பழகிய ராமபிரான் இங்கு மாடுகளுடன் கலந்து நிற்கிறான். "இறைவா" என்றழைத்து அவனது ஸ்வாமித்துவத்தைக் காட்டுகிறாள். க்ருத க்ருத்யனான
ப்ரபன்னனுடைய குறைகளைக் தான் ஏற்றுக்கொண்டு, தன்னிறைவை அவர்களுக்கு அளித்து, ரக்ஷணப் பொறுப்பை ஏற்பதால் "குறையொன்றுமில்லாஎம்த கோவிந்தா" என்கிறாள். இதனையே "தமதனைத்தும் அவர் தமக்கு வழங்கியும் தாம் மிக விளங்கும் அமைவுடைய அருளாளர் அடியிணைகள் அடைந்தேனே"---
என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.

எம்பெருமானுக்கும், ஜீவனுக்கும் உள்ள ஆத்ம பந்தம் என்றும் அழியாது என்பதை "உன்னோடுறவேல் .. ‌..ஒழியாது" என்கிறாள்.
  • இந்த ஸம்ஸாரத்தில் ஜீவர்கள் ஸத்கர்மங்கள் செய்வது துர்லபம் என்பதை முதலடி காட்டுகிறது.
  • எம்பெருமான் விஷயமான ஞானமின்றி அலைகிறது என்பது 2ம் அடி.
  • இப்படி பசுப்ராயராக இருக்கும் ஜீவன்களை கடைத்தேற்ற எம்பெருமான் நினைத்து இறங்குவது அவர்களின் புண்ய விசேஷத்தால் என்பது 3ம் அடியின் கருத்து.
  • இப்படி எம்பெருமான் அவதரித்தாலும், அனாதி காலமாய் அவனுக்கும் நமக்கும் இருக்கும் சேஷத்வம் நீங்குவதில்லை என்பது 4ம் அடி தரும் கருத்து.
  • இது ஒழிக்க ஒழியாத ஸம்பந்தம். பகவானை நினையாவிடினும் அவன் சேஷி என்பதில் ஐயமில்லை, என்பது 5ம்அடி.
  • ஸர்வேஶ்வரனாகிய ஸ்வாமியிடம் எப்படி நடக்க வேணும் என்ற சேஷத்வ ஞானமற்றவர்களாயுள்ளனர் ஜீவர்கள் என்பது 6ம்அடி.
  • எம்பெருமான் என்ற உணர்வின்றி ஸ்வதர்மங்களை விடுத்து செய்த கார்யங்களால் நீ கோபிக்காது பொறுத்து க்ஷமிக்க வேணும். எங்களைத் திருத்திப் பணி கொள்ளவேணும் உன் கருணையால் என்பது கடைசி இரு அடிகளின் கருத்து.

*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************

Monday, January 10, 2022

கோதாஸ்துதியும், கோதை செய்த துதியும் - Day 27



जातापराधमपि मामनुकम्प्य गोदे
गोप्त्री यदि त्वमसि युक्तमिदं भवत्या।
वात्सल्यनिर्भरतया जननी कुमारं
स्तन्येन वर्धयति दष्टपयोधराऽपि॥२७॥



கோதே! குழந்தை பாலுண்ணும்போது சிலசமயம்
கடித்தாலும் பொறுத்துக் கொள்ளும் தாய்போல், உன் வாத்ஸல்யத்தால் நான் செய்த பாபங்களைப் பொறுத்து என்னை ரக்ஷிக்கவேணும் (கோதாஸ்துதி - 27)


பாசுரம் 27 - கூடாரை வெல்லும்



கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப்
        பாடி பறை கொண்டு யாம் பெறு சம்மானம்
நாடு புகளும் பரிசினால் நன்றாக
        சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
        ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவார
        கூடியிருந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய்


இது ஆகிஞ்சன்யத்தை வெளிப் படுத்தும் பாசுரம்.
தன்னை எதிர்க்கும் எதிரிகளை வெல்பவன், தன்னை ஆஶ்ரயிக்கும் பக்தர்களிடம் தோற்பவன் கோவிந்தன். இதுவரை அவனை விளித்த நாமங்கள் சிறு பெயர்கள். இந்த கோவிந்த நாமமே உயர்ந்த நாமம். உன்னைப் பாடிப் பறை கொண்ட எங்களுக்கு நீ நாடு புகழும் பரிசுகளை அளிக்க வேண்டும் என்கின்றனர் தோழியர். சூடகம், தோள்வளை, தோடு, செவிப்பூ, கொலுசு ஆகியன சன்மானம். நீ உடுத்துக் களைந்த வஸ்த்ரத்தை நாங்கள் உடுப்போம். பின் நெய்யில் முழுக்கிய பால் சோறு முழங்கை வழிவாறக் கூடியிருந்து உண்டு மகிழ்வோம் என்கின்றனர் ஆண்டாளும், தோழியரும்.

ஸ்வாப தேசம்

யுத்தம் செய்த அழகால் ராவணனை வென்றான். கூடமாட்டேன் என்ற ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷன் ஆகியோரையும் வென்றான்.
கூடமாட்டேன் என்ற ஆழ்வார்கள் முன்னின்று வென்று பாடவைத்தான், வாத்ஸல்யத்தால் வென்றான். 

தன்னுடன் கூடியவரை வெல்ல மாட்டேன் என்பான். பரசுராமனளித்த வில்லை வாங்கிய ராமபிரானை வணங்கிய பரசுராமனின் புண்ணியங்களை எடுத்த அஸ்த்ரத்தால் அழிக்கிறார். சமுத்ர ராஜனிடமும் இதே நிலை தோல்விதான். புல் ப்ரும்ஹாஸ்த்ரமாகியது முதலில். காகாசுரன் ஶரணாகதி செய்த பின் அதற்கு தோற்ற எம்பெருமானின் கருணை ப்ரும்ஹாஸ்த்ரத்தை புல்லாக்கியது.

ராம பட்டாபிஷேகம் நடந்தபின் உலகமே புகழும் வண்ணம் ஹனுமனுக்குத் தன் கழுத்திலிருந்த முத்து மாலையை அளிக்கிறாள் ஸீதை. "நாங்கள் எம்மிலிருந்தொட்டிய  கச்சங்கம் நானும் அவனும் அறிதும்" என்கிறாள் ஆண்டாள். 

அதுபோன்ற சம்மானம் வேண்டும் எனக் கேட்கிறார் ஆண்டாள்.. ஹனுமனிடம் ராமனளித்த மோதிர அடையாளமும், பிராட்டி அளித்த சூடாமணியும் இருவருக்கும் சொல்லிய கதைகள் பல. தபஸ்வினி அனுசூயா தன் ஆபரணங்களை அனைத்தையும் ஸீதாபிராட்டிக்குப் பூட்டி அழகு பார்த்து ராமபிரான் முன்பு நிறுத்துகிறாராம்.

"கோவிந்தா" என்ற நாமம் சுரந்த புடவையால் த்ரௌபதியின் மானஸம்ரக்ஷணம் நடந்தது.
  • ஸத்கர்மாக்களைச் செய்ய மாட்டேன் என்றும் கூடாரை வெல்பவர்ஙள் ஆசார்யர்கள்.
  • சூடகம் என்பது கைகூப்புச்செய்கை.
  • தோள்வளை என்பது சங்கு சக்ரப் பொறி. 
  • தோடு, செவிப்பூ என்பன ஆசார்யன் சொல்லும் த்வய மந்த்ரம்.
  • பாடகம் என்பன சிஷ்யன் செய்யவேண்டிய அனுஷ்டானங்கள்.
  • த்வாதச புண்ட்ரம், அணியும் கச்சம் முதலியன பிற அணிகலன்களாகின்றன.
  • மூடநெய்பெய்த பால் சோறு போல பரம போக்யமான க்ருஷ்ணானுபவத்தைப் பெறுகிறான் ஶரணாகதி செய்த சேதனன் என்பது உட்பொருள்.

*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************

Sunday, January 9, 2022

கோதாஸ்துதியும், கோதை செய்த துதியும் - Day 26


रङ्गे तटिद्गुणवतो रमयैव गोदे
कृष्णाम्बुदस्य घटितां कृपया स्ववृष्ट्या।
दौर्गत्यदुर्विषविनाश सुधानदीं त्वां
सन्तः प्रपद्य शमयन्त्यचिरेण तापान् ॥२६॥



கோதா தேவியே! பெரிய பிராட்டி என்ற மின்னல் கொடி படர்ந்த
க்ருஷ்ண மேகமான ரங்கராஜன் கருணை மழை பொழிய, அதனால் பெருகி ஓடும் அமுத வெள்ளமான உன்னைப் பயன்கொண்டு பெரியோர்கள் தங்கள் தாபங்களைத் தணித்துக் கொள்கிறார்கள் (கோதாஸ்துதி - 26)


பாசுரம் 26 - மாலே மணிவண்ணா


மாலே! மணிவண்ணா மார்கழி நீராடுவான்
        மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
        பாலன்ன வண்ணத்துன் பாஞ்சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
        சாலப்பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
        ஆலின் இலையாய் அருள் ஏல் ஓர் எம்பாவாய்


ப்ரார்த்தனைப் பாசுரமாகிய இதில் நப்பின்னை மாலே!மணிவண்ணா! என விளிக்கிறாள். ஆய்ப்பாடி நங்கையிடம் அளவற்ற வ்யாமோஹம் கண்ணனுக்கு! அவர்கள் சொல்லுக்குக் கட்டுப் பட்டு எல்லாம் செய்ய சித்தமாயுள்ளான். 
பஞ்சவர்க்குத் தூது போனதும், அர்ஜுனனுக்கு சாரதியாயிருந்ததும் பக்த சித்தனானபடியாலே. 
சூர்ய மண்டலத்தில் கற்று ப்ருஹஸ்பதியின் (தேவகுரு) சிஷ்யனாகி, உத்தவர் என்ற புத்தி ஸத்தமரைத் தன் மந்த்ரியாக்கிக்கொண்ட க்ருஷ்ணன் எதை ஆலோசனையாகக் கேட்டாலும் "அடியேன்", என்றே உத்தவர் கூறுவாராம். 

18 அத்யாயங்களடங்கிய கீதையை உபதேசித்து பின் "புரிந்ததா" எனக் கேட்ட கண்ணனிடம், "நீ சொல்வதைச் செய்கிறேன்" என்றான் அர்ஜுனன். இதுதான் கீதையின் சாரம். முன்னோர்கள் சொன்னபடி
பாவை நோன்பு அனுஷ்டிக்க உபகரணங்களைத் தந்தருளவேணும் எனப் பட்டியலிடுகின்றனர். 
ஞாலத்தை நடுங்கச் செய்யும் பாலன்ன வண்ணச் சங்கு, பெரிய பறை, பல்லாண்டு பாட கோஷ்டி, கோலவிளக்கு, கோஷ்டிக்கொடி, விதானம் ஆகியன ஆலின் இலையில் கண்வளரும் நீ எமக்குத் தந்தருள வேணும் என்று ப்ரார்த்திக்கிறாள்.

ஸ்வாப தேசம்

மாலே! மணிவண்ணா! பக்த வ்யாமோஹம் உள்ளவன் எம்பெருமான். அதனால் மாலே என்கிறாள்‌.

"சமுத்ரத்தின் அக்கரையிலிருந்து கூப்பிட்ட உனக்கு ஆதிமூலமே என்றலறிய யானையைக் காக்க ஓடிவந்தது போல ஓடிவந்து ரக்ஷித்திருக்க வேணும்" என்று கூறி விபீஷணனைக் கண்களால் பருகினாராம். அத்தனை ஆஶ்ருத வாஞ்சை!

திருக்காட்கரை அப்பனாகிய வாமன மூர்த்தி நம்மாழ்வாருக்குத் தர்ஶனம் தரச் சென்றபோது, அவரைத் தன் கண்களால் பருகி ஹ்ருதயத்திலிட்டாராம் ஆழ்வார்.
காட்கரை அப்பனும் கண்களை மலர்த்தி உள்வாங்கினார் ஆழ்வாரை!

"மேலயார் செய்வனகள்"--பெரியோர்கள் அனுஷ்டித்தபடியால் நாங்களும் அனுஷ்டிக்கிறோம். தர்மம் அறிந்த பெரியோர்களின் அனுஷ்டானமே ப்ரமாணம். அதில் பலனும் ப்ரசித்தி எற நோன்பைப் பற்றிச் சொல்கின்றனர்.

அடுத்து நோன்புக்கு வேண்டிய உபகரணங்களைக் கேட்கின்றனர்.
"ஞாலத்தை எல்லாம்....கொடியே விதானமே"--அனுஷ்டானம் ப்ரபத்தி என்னும்போது, அதற்கான அங்கங்கள் உபகரணங்களாகின்றன.
த்ருவனைப் பேசவைத்து ஞானமளித்தது இந்த பாஞ்ச ஜன்யமே. க்ருஷ்ணன் செய்த சங்கநாதத்தைக் கேட்டு ருக்மிணி பிராட்டி கண்ணன் அருகே வந்து விட்டான் என்று மகிழ்ச்சி அடைந்தாளாம். "ருக்மிணி பிராட்டிக்குக் கேட்ட சங்கொலியும்,
ஸீதா பிராட்டிக்குக் கேட்ட சார்ங்க ஒலியும் போல் எனக்கு எப்போது கேட்கும்" என்கிறாள் நப்பின்னை.

சங்கநாதம் போன்றது ஆசார்ய ஸூக்திகள்.
பல்லாண்டு பாடும் ஆழ்வார் ஸூக்திகள்.
பறை கொட்டுவது போல் வாதக்ரந்தங்கள் குத்ருஷ்டிகளை மாய்க்க.
கோல விளக்கு போன்ற சாத்வீக ஞானம்.
பக்தி என்பதன் மூலம் யார் என்பதைக் காட்டும் கொடி.
அகங்காரம் நீங்கிய வைராக்யம் விதானம்.
இப்படியான உபாய அனுஷ்டானம் ஆனந்தம் தரவல்லது என்பதனை ஆண்டாள் காட்டுகின்றாள்.


*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************

Saturday, January 8, 2022

கோதாஸ்துதியும், கோதை செய்த துதியும் - Day 25


गोदे गुणैरपनयन् प्रणतापराधान्
भ्रूक्षेप एव तव भोग रसानुकूलः।
कर्मानुबन्धि फलदानरतस्य भर्तुः
स्वातन्त्र्य दुर्व्यसन मर्मभिदा निदानम् ॥२५॥


கோதா தேவியே!உன் புருவ நெறிப்பு பக்தர்களின் பாபக்கூட்டங்கள் பகவான் கவனத்துக்கு வராதபடி ஒளிக்கிறது. அவரவர் விதிப்படி பயன்தரும் என்ற வழக்கத்தை மாற்றி நன்மை அளிக்கப் செய்கிறது. (கோதாஸ்துதி - 25)

பாசுரம் 25 - ஒருத்தி மகனாய்


ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
        ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைத்த
        கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
        அருத்தித்து வந்தொம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
        வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்


சீரிய சிங்காசனத்தில் எழுந்தருளிய கண்ணனுக்குப் பல்லாண்டு பாடிய ஆண்டாள் குழாம் ஒரு ப்ரார்த்தனையை அவன் முன் வைக்கின்றனர், நெடுமாலே! என்று விளித்து. பக்ததர்களிடம்
மிகுந்த வ்யாமோஹம் கொண்டவனாயிற்றே அவன்!
தேவகி சீர்மைந்தனாய்ப் பிறந்து யசோதை இளஞ்சிங்கமாய் வளர்கின்றான். ஓரிரவில் இந்த அதிசயம் நடக்கிறது. 
இந்த இரவுக்கும் பல்லாண்டு பாடவேண்டும். ஏனெனில் கண்ணனை நமக்குத் தந்த இரவு. இதற்குச் சமான உயர்ந்த இரவு கிடையாது. ஶரணாகதி த்துவத்தைத் தருவற்குக் "கீதை" பிறக்கக் காரணமாயிருந்த இரவு. இதனையே "இருளன்ன மாமேனி" என்கிறார் நம்மாழ்வார்.

"காரிருள் எள்ளில் பிழைத்து" என்கிறாள் ஆண்டாள்.
ஆக தேவகிக்கு அதி அற்புதமான "அவதார ரசம்" தந்த எம்பெருமான் யசோதைக்கு "லீலா ரசம் " தருகிறான். ஓரிரவில் ஒளிந்து வளர்கிறான்.

தேஜோமயமான குழந்தையை அணைக்க முற்படும் தேவகியை அவனது அவதாரத் தோற்றம் கைகூப்ப வைக்கிறது. அவள் சொல்லுக்குக் கட்டுப்பட்டு உடனே சங்கு சக்கரத்தை மறைத்துக்கொள்கிறான்.
உலகனைத்தையும் உள்ளடக்கிய எம்பெருமானைத் தன்வயிற்றில் தாங்கிய பெருமை தேவகிக்கு! அந்த வைபவம் அனைத்தையும் தன் வாயுள்ளே காட்டினான் யசோதைக்கு!
ராவணாதிகளை தன் அஸ்த்ரத்தால் கட்டிய எம்பெருமான், தன் ஸௌலப்யத்தால் யசோதையின் கண்ணிக்குறுங் கயிற்றுக்குக் கட்டுண்டான்.
பல்லோர் வயிற்றில் நெருப்பைப் கொட்டிய கம்சன் வயிற்றில் அசரீரீ மூலம் நெருப்பைக் கொட்டினான் கண்ணன் இத்தகைய பெருமைகளையுடைய உன்னையே பலனாக அடைய வேண்டும் என்பதே எங்கள் ப்ரார்த்தனை. ஆயர்குலச் செல்வமாகிய நப்பின்னை பிராட்டி, க்ஷத்ரிய குலச்செல்வமாகிய ருக்மிணி பிராட்டி ஆகிய இருவருடன் ரக்ஷகனாக வந்து எங்களது பலப்ரார்த்தனையை ஏற்க வேண்டும் என்கிறாள் ஆண்டாள்.

ஸ்வாப தேசம்

ஸம்ஸாரம் என்பது ஓர் இரவு. இதில் வாழும் நமக்கு இரண்டு தாய்கள். நம்மைப் பிறப்பிக்கும் தாய். இவள் நம் உடலைத் தான் உண்டுபண்ணுகிறாள். ஆனால் ஆத்மாவை அதைப் பற்றிய அறிவை உண்டு பண்ணும் தாய் "காயத்ரீ மந்த்ரம்" என்னும் தாய். இவளையே "ஒருத்தி" என்கிறாள் ஆண்டாள். இவள் மூலமாக மற்றொரு பிறப்பு உண்டாகிறது .
அதனைத்தரும் தாய் "மூலமந்த்ரம்". இதன் மூலம் எம்பெருமானுக்கு அடிமை என்ற ஞானம் பெற்று பரமைகாந்தி ஆகிறான் ஜீவன்.
திருமந்த்ரத்தில் பிறந்து த்வயத்தில் வளர்ந்து ஶரணாகதி என்னும் உபாயத்தை அனுஷ்டித்து பிறவி நோய் தீர்க்கச் செய்கிறார் ஆசார்யன்.

"தரிக்கிலானாகி....நெடுமாலே"--
ஆனால் மனத்தாலும், வாக்காலும், உடலாலும் செய்யும் பாபங்கள் 
"கம்சன்" போன்றவை. அவற்றின் பலனைத் தரிக்க இயலாது தவிக்கிறோம்.
இந்த மோக்ஷ விரோதியாகிய பாபங்களை உன் கருணையால் அழித்து உன் கைங்கர்யத்தில் எங்களைச் சேர்த்து எங்களை மகிழ்விக்க வேண்டும் என்கின்றனர் பாவையர்.


*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************

கோதாஸ்துதியும், கோதை செய்த துதியும் - Day 24


आर्द्रापराधिनि जनेऽप्यभिरक्षणर्थं
रङ्गेश्वरस्य रमया विनिवेद्यमाने।
पार्श्वे परत्र भवती यदि तत्र नासीत्
प्रायेण देवि वदनं परिवर्त्तितं स्यात्॥२४॥



தேவியே!பாவம் செய்தவர்களைப் பற்றிப் பெரிய பிராட்டி பெருமானிடம் ரக்ஷித்தருளும்படி பரிந்துரைக்கும்போது, அங்கு நீ இருப்பதாலன்றோ, அந்த கார்யம் அனுகூலமாக நடக்கிறது. இல்லையேல் எம்பெருமான் முகம் மாறி இருப்பான் 
(கோதாஸ்துதி - 24)


பாசுரம் 24 - அன்றிவ்வுலகம்


அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
        சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடமுதைத்தாய் புகழ் போற்றி
        கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி
        வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
        இன்றுயாம் வந்தோம் இரங்கு ஏல் ஓர் எம்பாவாய்



இது ஆண்டாள் பாடும் மங்களாஸாஸனப் பாசுரம்.
எம்பெருமானின் திருவடி வைபவம், பாக்ய வைபவம், அதிமானுஷ சேஷ்டித வைபவம் என்று போற்றிப் பாடுகிறாள். 
  • வாமனனாய் வந்து மகாபலியிடம் மூன்றடி மண் யாசித்து, இம்மண்ணையும் ஆகாசத்தையும் அளந்த உன் திருவடிக்குப் பல்லாண்டு!!
  • பாரத தேசம் முழுவதும் நடந்து வந்து இலங்கை சேர்ந்து ராவணனை வென்ற உன் திறலுக்குப் பல்லாண்டு!!
  • சகடமாய் வந்த அசுரனைக் சகடத்துடன் பொடிப் பொடியாகும்படி உதைத்த உன் பிஞ்சு பாதங்களுக்குப் பல்லாண்டு!!
  • கன்றுருவில் வந்த அசுரனைக் சுழற்றி எறிந்த உன் கால் வலிமைக்குப் பல்லாண்டு!!
  • கோவர்த்தன மலையைத் குடையாகப் பிடித்து கோகுலத்தையே காத்த உன் குணத்துக்குப் பல்லாண்டு!!
  • க்ருஷ்ணாவதாரத்தில் ஸுதர்ஶனாழ்வான் நின் பகைவர்களை அழிக்கும் வேலாகி நின்ற உன் திருக் கரத்துக்குப் பல்லாண்டு!!!
இத்தகைய நின் கல்யாண குணங்களைப் பாடி அடிமை கொள்ள வந்துள்ளோம். மனமிரங்கி வந்து எங்களை ஏற்றுக்கொள் என்கிறாள் ஆண்டாள்.

ஸ்வாபதேசம் 
அன்று மகாபலி தர இயலாத மூன்றடியை நான் தருகிறேன் என்கிறாள் ஆண்டாள் 
  1. ஓங்கி உலகளந்த
  2. அம்பரம் ஊடறுத்து
  3. அன்றிவ்வுலகமளந்தாய் - என
இரண்டு அடிகளால் மகாபலியின் மமகாரத்தையும், மூன்றாம் அடியால் அவனது அகங்காரத்தை அவன் தலையில் வைத்தும் அழித்தான். ஆக ஜீவர்களாகிய நாம் அவன் திருவடியில் தலையை சேர்க்க வேண்டும். அவன் முன்னே தலை குனிந்தால் வாழ்வில் நிமிரலாம் என்பது தத்துவம். 

தண்டகாரண்யத்தில் ராக்ஷஸர்களால் தங்களுக்கேற்பட்டு வரும் கஷ்டங்கள் தீர ராமபிரான் வரவை எதிர்பார்த்திருந்த ரிஷிகள் அவனைப் பார்த்தவுடன் அவனது அழகில் மயங்கி தம் கஷ்டங்களை மறந்து பல்லாண்டு பாடினர். கருடாரூடனாகிய எம்பெருமானைக் கண்டதும் பெரியாழ்வார் பல்லாண்டு பாடினார்.

"அன்றிவ்வுலகம்......அடிபோற்றி" ஸ்ருஷ்டிகாலத்தில் இந்த எல்லா உலகங்களையும் படைத்த உன் திருவடிகளில் ஶரணாகதி செய்து போற்றுகிறோம்.

"இலங்கைசெற்றாய்...போற்றி"--- அவ்வுலகங்களில் விபவமாயும், அந்தர்யாமியாயும், ஆசார்யராயும் அவதரித்து மனதை விவேகம் மூலம் அழிக்கும் திறலைப்போற்றுகிறோம்.

"சகடம் உதைத்தாய்....போற்றி"ஜீவன்களின் கர்மாவாகிய வண்டியை அழிக்கும் உன் கீர்த்தியைப் போற்றுகிறோம்.

"கன்று.....கழல் போற்றி"---கன்று போல் விரும்பக்கூடிய புண்ய பாபங்ஙளை அழிக்கவல்ல உன் வீரத்தைப் போற்றுகிறோம்.

"குன்று...குணம்போற்றி"....சிகரம் போன்ற வைகுண்ட லோகத்தில்
ஏக சக்ராதிபதியாக வெண்கொற்றக் குடையுடன் வீற்றிருக்கும் உன் குணத்தைப் போற்றுகிறோம்.

வென்று...வேல் போற்றி".... மோக்ஷ விரோதிகளாக தடைகளை அழிக்கும் வேல் போன்ற உன் ஸங்கல்பத்தைப் போற்றுகிறோம்.

"என்றென்றும்.....இரங்கேலோரெம்பாவாய்"----இவ்விதமாக உன் திருக்கல்யாண குணங்களைப் பாடி பரமபதத்தில் கைங்கர்யம் கொள்வதற்கு வேண்டி வந்துள்ளோம். அருள் புரிவாயாக. என்பது உட்பொருள்.

வானரங்களைக்கொண்டு ராவணனை வென்றான் எம்பெருமான். "இக்கரை" யிலிருந்து "அக்கரை" சேர்க்கும் "அக்கரை"அவனுக்கு மட்டுமே உண்டு.

*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************

Thursday, January 6, 2022

கோதாஸ்துதியும், கோதை செய்த துதியும் - Day 23


अर्च्यं समर्च्य नियमैर्निगमप्रसूनैः
नाथं त्वया कमलया च समेयिवांसम्।
मातश्चिरं निरविशन्निजमादिराज्यं
मान्या मनुप्रभृतयोऽपि महीक्षीतस्ते॥२३॥



மாதா கோதா தேவியே! உன்னுடன்கூடிய அரங்கனை மனு,மாந்தாதா முதலானோர் பல நியமங்களையும், மந்த்ரபுஷ்பங்களையும் கொண்டு அர்ச்சித்து தம் சாம்ராஜ்யத்தை நெடுங்காலம் ஆளும் திறம் பெற்றார்கள் (கோதாஸ்துதி - 23)


பாசுரம் 23 - மாரிமலைமுழைஞ்சில்


மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
        சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்ப்பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
        மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப் பூவண்ணா உன்
        கோயில் நின்று இங்ஙனே போந்தருளி, கோப்புடைய
சீரிய சிங்காசனத்திலிருந்து, யாம் வந்த
        காரியம் ஆராய்ந்து அருள் ஏல் ஓர் எம்பாவாய்

மழைக்காலத்தில் குகையில் நிலைத்துக் கிடந்துறங்கும்
சிங்கம் உணர்ச்சி பெற்று தீப்பொறி பறக்கக் கண்விழித்து
பிடரியைச் சிலிர்த்துக் கொண்டு உடம்பை உதறி, உரத்த கர்ஜனை செய்து கொண்டு வெளியே வருவதுபோல் பூப்போன்ற மென்மையும் அழகுமுடைய நீ உன் கோயிலிலிருந்து வந்து ஆஸ்தான மண்டபம் சேர்ந்து சீரிய ஸிம்ஹாசனத்தில் எழுந்தருளி, வேறு பலன்களைக்கருதாமல் உன் திருவடிக்கே ஆட்செய்ய வந்துள்ள எங்களது காரியத்தைப் பரிசீலித்து எங்களுக்கு அருள வேணும் என்கின்றனர் கோபியர்.
இது எம்பெருமானின் நடையழகுப் பாசுரம். உத்ஸவ காலத்தில் வீதி உலா வரும்போது நம்பெருமாள் மெதுவாக நின்று நின்று குசலம் விசாரித்துச் செல்வது போலச் செல்வானாம்.

தண்டகாரண்யத்தில் ஏகாந்தத்திலிருந்த ராமனைப் பார்த்து நடை பயிற்சி செய்த யானையைக் கண்டு ஸீதை சிரித்தாளாம். ஸீதையைப் பார்த்து நடை பயின்று தோற்ற ஹம்ஸத்தைக் கண்டு ராமன் சிரித்தானாம். "நாரணன் நம்பி நடக்கிறான்" என்கிறாள் ஆண்டாள். 

ராகவ ஸிம்ஹமாய் ஸீதையைக் கைபிடித்த எம்பெருமான் யாதவ ஸிம்ஹமாய் ருக்மிணி பிராட்டியை மணக்கிறான்.
ஹிரண்யகசிபுவைப் பார்த்த மாத்ரத்தில் சீரிய சிங்கமாய்
வெளிவந்த எம்பெருமான், அவனருகே நின்ற அசுரக் குழந்தை ப்ரஹ்லாதனைப் பார்த்த மாத்ரத்தில் பூவைப்போல மென்மையாகினான்.

ஸ்வாபதேசம்

இப்பாட்டில் க்ருஷ்ணாவதார சிறப்பை ஆண்டாள் காட்டுகிறாள். பாற்கடலில் மலைக்கு ஒப்பான ஆதிசேஷனின் பர்யங்கம் என்ற குகையில் பிராட்டியுடன் மன்னி யோகநித்ரை செய்யும் எம்பெருமான் முன்னே பூபாரம் தாங்க முடியாத பூமிதேவி கம்சன், சிசுபாலன் முதலியோரால் உண்டான கஷ்டம் நீங்க வேண்டும் என வேண்டியபடியால் ஸங்கல்ப ஞானத்தைப் பெற்றான் (அறிவுற்று தீவிழித்து) எழுந்த எம்பெருமான் தன் திருமேனியிலிருந்து, கருப்பு, வெண்மைநிற கேஸத்தையும் எடுத்து வீசியதை "வேரிமயிர் பொங்க" என்கிறாள்.

வாஸனையுடைய இக்கேஸத்தை விடுவித்து, அழகிய தேக உறுப்புக்களை பெற்று ஆதிஸேஷனையும் உதறி, ஆலஸ்யத்தை நீக்கி உடனே அவதாரம் செய்து முழங்கினான் தேவகி வஸுதேவர் மகனாய் வந்துதித்தான்.
பொற்கொல்லன் மெழுகில் ஒட்டிய பொன்னைப்போல ஞானமில்லாத இப்ருக்ருதியில் ஞானமுள்ள ஜீவன் ஒட்டியிருப்பதைக் கண்டு அறிவுற்றுத் தீவிழித்து கரணகளேபரங்களுடன், முக்குணங்களையும் அளித்து மூரிநிமிர்ந்து ஶ்ருஷ்டி செய்து ஸ்தூலத்தில் ஸூக்ஷ்மமாயுள்ளான்.

இப்பாசுரம் அஹோபிலத்தில் எழுந்தருளியுள்ள ந்ருஸிம்ஹனைப் பற்றியது என்றும் சொல்வர். அஹோபில மலையில் மன்னிக்கிடந்த மாலோலன் இக்கலியுக ஜனங்கள் நற்கதி பெறும் பொருட்டு பரிவாரங்களுடன் வெளியே வந்து ஸஞ்சாரமாக பல
க்ராமங்களையும், நகரங்களையும் அடைந்து மக்களை தன் வசமாக்கினான் அழகிய சிங்கர்கள் மூலமாக என்பது வ்ருத்தாந்தம்.

மாரி மாறாத தண்ணப்மலையாம் திருமலையிலிருந்து, ஹஸ்தி கிரி சென்று, ஹயக்ரீவ, கருடகடாக்ஷம் பெற்று, நடாதூர் அம்மாள், அப்புள்ளார் அருள் பெருக்கால் அனைத்துக் கலைகளும் கற்றுத் தேர்ந்து, அரங்கம் சேர்ந்து, சீரிய சிங்கமென வாதியரை விரட்டி, கவிதார்க்கிக ஸிம்ஹமாகி, க்ரந்தங்கள் பலவற்றை நம் ஸம்ப்ரதாயம் உய்ய, நமக்காக அருளியுள்ளார் நம் ஸ்வாமி தேஶிகன். 

ஆக நம்பெருமாளின் "கதியே" நமக்கு "கதி" என்றார்.
இவனது நடையழகாகிய "ஸஞ்சாரம்" ஸேவித்தால் நமக்கு
"ஸஞ்சாரம்" (பிறப்பு/இறப்பு) இருக்காது என்பது திண்ணம்.


*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************

Wednesday, January 5, 2022

கோதாஸ்துதியும், கோதை செய்த துதியும் - Day 22

 


दूर्वादलप्रतिमया तव देहकान्त्या
गोरोचना रुचिरया च रुचेन्दिरायाः।
आसीदनुज्झितशिखावलकण्ठशोभं
माङ्गल्यदं प्रणमतां मधुवैरिगात्रम् ॥२२॥


"கோதே! ஒருபுறம் பச்சைப்பசும்புல் போன்ற உன் நிறத்தினாலும், மறுபுறம் பெரிய பிராட்டியின் கோரோசனையின் மஞ்சள் நிறத்தினாலும் மயில் கழுத்தின் சாயல் பெற்ற எம்பெருமான் மங்களகரமாக பக்தர்களுக்குக் காட்சி தருகின்றான்" 
(கோதாஸ்துதி - 22)

பாசுரம் 22 - அங்கண்மா ஞாலத்து


அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
        பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
        கிண்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
        திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டுங்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
        எங்கள் மேல் சாபம் இழிந்து ஏல் ஓர் எம்பாவாய்

பெரிய தேசங்களைத் தம் அடிக்கீழ் கொணர்ந்து ஆட்சி செய்து நம்மில் மேம்பட்டவரில்லை என்ற அபிமானத்தை விட்டு உன் ஸிம்ஹாஸனத்தின் கீழ் கூட்டமாய் பணிந்து நிற்கும் ராஜாக்களைப்போல நாங்கள் உன்னடியை அடைந்துள்ளோம். இப்படி வந்துள்ள எங்களை மலர்ந்த தாமரை யொத்து சூர்ய சந்த்ரர்கள் ஒரே சமயத்தில் உதித்தது போன்ற கண்களால் அன்புடன் மலர்ந்து நோக்கி, எங்கள் சாபங்கள் போகும்படி க்ருபை செய்ய வேண்டும் என்கின்றனர் கோபியர்.

ஸ்வாப தேசம்

ஐம்புலன்களுடன் கூடிய அழகிய சரீரத்திலிருக்கும் ஜீவராசிகள்
நானே ஸ்வதந்த்ரன் என்பன போன்ற அபிமானங்களை விட்டு ஶ்ரீ வைகுண்டத்தில் உன் பர்யங்கத்தின் கீழ் கூடியிருக்கும் நித்ய முக்தர்களின் கூட்டம் போல நாங்களும் முக்தானுபவம் பெற ஶரணாகதி செய்ய வந்துள்ளோம். எங்கள் பாபத்தைப் பார்த்து கண்களைச் சிறுச்சிறிதே மூடி விழித்தால் உன் பரிபூர்ண கடாக்ஷம் எம்மேல் பட்டு எங்களது ஸஞ்சித, ப்ராரப்த பாவங்களைப் போக்குவாயாக என்பதாம்.

"அபிமான பங்கம்" என்பதற்கு ராமாயணத்திலிருந்து உதாரணம் ஒன்று. ராவணவதம் முடிந்தபின் ந்தோதரி புலம்புகிறாள் இப்படி. "தானவ அரசனான மயன் என் தந்தை. ராக்ஷஸ அரசன் என் கணவன்‌. இந்த்ரனையே ஜெயித்தவன் என் புத்ரன் இந்த்ரஜித். சூர்யனின் ஒளியோ, வெப்பமோ இந்த ராஜ்யத்தில் விழுந்ததில்லை. அப்ஸரஸ்ர ஸ்த்ரீகள் குடையும், சாமரமும் ஏந்தி வருவர் ராவணன் பின்னால். ஆனால் ராவணன் வீழ்ந்ததும் என் இந்த கர்வமும் அழிந்தது. சூர்ய ஒளி இலங்கையில் விழுந்தது. வட்டமிடும் கழுகுகளின் நிழல் ராவணன் மீது விழுந்தது குடை பிடிப்பது போல" என்கிறாள்.

ஶ்ரீரங்கநாதன் புறப்பாட்டிற்குச் செல்லும் போது பாதுகைகளை அணிந்து, ஸயன சமயத்தில் களைவான். திரும்ப காலை எழுந்ததும் அவர் முதலில் கடாக்ஷிக்கும் பாதுகைகள் போல கண்ணா நீ எங்களைக் கடாக்ஷிக்க வேணும் என்கின்றனர் கோபியர்.
ஶரணாகதனின் தோஷத்தைப் பார்க்காத வாத்ஸல்யம் மிக்க திருக்கண் மலராலும், பாபத்தைக் கண்டு தண்டிக்கத் தோன்றும் மற்றொரு சற்றே மூடிய கண்ணாலும் சிறுச் சிறிதாய் எங்களை விழித்துப் பார்த்து எங்கள் பாவங்களைப் போக்குவாயாக என்பதாம்.

அகல்யா சாபம் தீர்த்த ராம பாத தூளிகள் போல, உன் திருவடித் துகள்பட்டு எங்கள் சாபம் தீர வேண்டும் கண்ணா என்கின்றனர் கோபியர்.

*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************

Tuesday, January 4, 2022

கோதாஸ்துதியும், கோதை செய்த துதியும் - Day 21


रङ्गेश्वरस्य तव च प्रणयानुबन्धात्
अन्योन्यमाल्यपरिवृत्तिमभिष्टुवन्तः।
वाचालयन्ति वसुधे रसिकास्त्रिलोकीं
न्यूनाधिकत्व समता विषयैर्विवादैः ॥२१॥

கோதா தேவியே! நீயும் ரங்கராஜனும் மாலை மாற்றிக் கொள்ளும்போது பக்கத்திலிருந்த ரஸிகர்கள், உங்களில் ஒருவரை உயர்த்தியும், தாழ்த்தியும், சமமாகவும் பேசி உலகம் முழுதும் எதிரொலிக்கும் செய்கிறார்கள் (கோதாஸ்துதி - 21)


பாசுரம் 21 - ஏற்ற கலங்கள்


ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
        மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
        ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
        மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமாபோலே
        போற்றியாம் வந்தோம் புகழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்


இப்பாசுரத்தில் நீளா தேவியும் ஆயர் பெண்கள் கோஷ்டியில் சேர்ந்து ப்ரார்த்திக்கிறாள்.
வேதத்தால் கொண்டாடப் படுபவனே! அதனால் அறிவதற்கு அரிதானவனே! தேஜோமயமானவனே! ஏந்திய குடங்களனைத்தும் நிரம்பி வழியும் பாலைக் கொடுக்கும் வள்ளன்மை மிக்க பசுக்களைக்
கணக்கின்றி வைத்துக் கொண்டிருக்கும் நந்தகோபனின் மகனே!துயிலெழுந்து வரவேணும். தம் திறமையைத் தொலைத்து உன் வலிமையை நினைந்து, உன் வாயிலில் வந்து நிற்கும் பகைவர்களைப்போல நாங்களும் உன்னைப் போற்றி வந்துள்ளோம். எங்களது மங்களாசாசனத்தை ஏற்றுக்கொண்டு எங்களை ஆஶ்ரயிக்க வேணும் என்று கூறுகிறார்கள்.


ஸ்வாபதேசம்
"உகவாதார் அம்புக்குத் தோற்பர்கள். நாங்கள் தோற்றோம் உன் குணத்துக்கே!" -- என்று வந்துள்ளனர் தோழியர். பிராட்டி பகவானுக்கு எல்லா விதத்திலும் ஈடானவள். ஆயினும் பகவானுக்கு அடங்கி பாகவதர்களுடன் சேர்ந்து தொண்டு செய்பவளாக தன்னை ஆக்கிக் கொள்கிறாள். தனக்கு மேம்பட்டவர் எவருமில்லாத எம்பெருமானுக்கு விபவத்தில் "நந்த கோபனுடைய மகன்" என்பதில் அளவற்ற சந்தோஷமாம்.

ராவணவதம் முடிந்து வந்த ராமனைத் துதித்த
ப்ரம்ஹா, சிவனிடம், "நான் தஶரதன் புத்ரன்"--என்று சொல்லி மகிழ்ந்து, இப்படிச் சொல்வதையே நான் பெரிதாக மதிக்கிறேன் என்றான். நம்மில் ஒருவனாக வந்த இந்த மகன் நம்மைக் கைவிடமாட்டான் என்பது இதன் பொருள்.

"ஊற்றமுடையாய் ......தோற்றமாய் நின்ற சுடரே" என்கிறாள் ஆண்டாள். "சமாதானம் பேசப்போகிறாயா" என்ற த்ரௌபதியிடம், "நான் உன் கோவிந்தா என்ற கதறலுக்குக் கடன் பட்டுள்ளேன். கவலைப்படாதே என்று சொல்லிச் சென்றான் யுத்தத்தை ஆரம்பிக்க, ஆஶ்ருத பாதபக்ஷனாகிய எம்பெருமான். 

ஶ்ரீ வைகுண்டத்தில் எம்பெருமானின் கல்யாணகுணங்கள்  சுடர்விடாது. 
ஆனால் ப்ருக்ருதி மண்டலத்தில் அவன் பிறக்க பிறக்க சுடர்விட்டு ப்ரகாசிக்கிறது அவனது குணங்கள் என்று உபநிஷத்துக்கள் கொண்டாடுகின்றன.

"ஆற்றாது....போற்றியாம் வந்தோம்" என்பதற்கு "அகங்காரம் மமகாரம் ஒழிந்து உன்னைப் புகழ்ந்து, உன்னடிபணிந்து, எங்கள் இயலாமையை உணர்ந்து வந்துள்ளோம்" என்பது பொருள்.

"ஏற்ற கலங்கள் ....பசுக்கள்" ஸத்பாத்ரங்களான சீடர்களுக்கு பக்ஷபாதமின்றி ஞானமாகிய பாலை மிகுந்தளிக்கும் ஸதாசார்யன் என்பதாகும்.
"ஆற்றப் படைத்தான்.......துயிலெழாய்".... இத்தகைய ஆசார்யர்களுக்கு புத்ரனாயிருப்பவனாகிய எம்பெருமான் ஸம்ப்ரதாயம் வளர பாஞ்சராத்ரம் போன்ற ஆகமங்களை உபதேசித்து, விபவாதாரங்களைச் செய்து விளங்கினாய் .
இத்தகைய பெருமையுடைய நீ எங்கள் கைங்கர்யத்தை ஏற்க வேணும் என்கிறார்கள்.

*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************

Monday, January 3, 2022

கோதாஸ்துதியும், கோதை செய்த துதியும் - Day 20


धन्ये समस्तजगतां पितुरुत्तमाङ्गे
त्वन्मौलिमाल्यभर संभरणेन भूयः ।
इन्दीवरस्रजमिवादधति त्वदीया-
न्याकेकराणि बहुमान विलोकितानि ॥२०॥

அம்மா! எம் பிதாவாவாகிய எம்பெருமானுடைய திருமுடியை நீ சூடிக்களைந்த மாலையைச் சூட்டிப் புனிதமாக்கிய பின், உன் அலை அலையான கடைக்கண் பார்வையாலே நீலோத்பல மாலையொன்றுமிட்டு கழுத்தையும் அலங்கரித்தாய் போலும் (கோதாஸ்துதி - 20)

பாசுரம் 20 - முப்பத்து மூவர்


முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
        கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்
செப்பமுடையாய், திறலுடையாய் செற்றார்க்கு
        வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்
செப்பன்ன, மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
        நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
        இப்போதே எம்மை நீராட்டு ஏல் ஓர் எம்பாவாய்


முப்பத்து மூன்று வகையான தேவர்களுக்கும்‌ துன்பம் வருமுன்பே அவர்கள் நினைத்த இடத்துக்குச் சென்று துயர் துடைக்கும் மிடுக்குடையவனே! உன்னை அடைந்தவர்களைக் காப்பாற்றியும், அவர்களது விரோதிகளைத் 
ண்டித்தும் நிர்வகிக்கும் விமலா! செப்பென்ற ஸ்தனங்களும், பவளவாயும், நுண்ணிய இடையும் கொண்ட திருவாகிய நப்பின்னையே! இருவரும் எழுந்திருங்கள். நோன்புக்கு வேண்டிய விசிறி கண்ணாடி இவைகளைத் தந்து உன் மணவாளனுடன் வந்து எங்களைக் கடாக்ஷிக்க வேணும்,  என்கின்றனர் தோழிகள்.

ஸ்வாபதேசம்
"முப்பத்து மூவர்...அமரர்க்கு"-- எல்லா தேவதைகளுக்கும் அந்தர்யாமியாயிருக்கும் எம்பெருமான் நாமளிக்கும் காணிக்கைகளைப் பெற்றுக்கொள்ளும் மிடுக்குடையவன்.

செப்பமுடையாய்--தேர்த்தட்டிலும், கடற்கரையிலும் சொன்னபடி அடைக்கலம் அடைந்தவர்களை ரக்ஷிக்கும் ஆர்ஜவம் உடையவன்!

திறலுடையாய்---தடைகளை நீக்கி நிர்வகிக்கும் திறலுடையவன்.

செற்றார்க்கு-----விமலா - ஆஶ்ரித விரோதிகளிடத்தில் துன்பம் உண்டாக்கப்ண்ணுவது எம்பெருமானுக்குக் குற்றமாகாது. ஜயத்ரதனைக் கொல்லும் பொருட்டு சூர்யனை மறைத்துப் பகலை இரவாக்ககினான் பரமன். பாரத யுத்தத்தில் ஆயுதம் எடுக்காவிடினும், ஒவ்வொரு முறையும் தேரோட்டியாக சாட்டையை சொடுக்கும் போதும் பல எதிரிகள் வீழ்ந்தனர் என்பதை "பற்றலர்வீயக் கோல்கொண்டு பார்த்தன் தேர்முன் நின்றானை"--என்கிறார் கலியன்.

கண்ணன், அர்ஜுனன் தேர்தட்டில் ஏறியவுடனேயே கௌரவ பத்னிகளின் திருமாங்கல்யம் ஒரே சமயத்தில் அசைந்தனவாம்
பாஞ்சாலியின் துயிலுரிந்த வருத்தத்தை அந்த நூறு பத்னிகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளித்தானாம்.
"பாண்டவர் தம்முடைய மறுக்கமெல்லாம் ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன்மலை" எனகிறார் பெரியாழ்வார்.

ஆசார்ய வைபவத்தை இப்பாசுரம் அழகாய்க் காட்டுகிறது. ஸ்த்ரீகளுக்கு மூன்று விஷயங்கள் அழகைத்தருவதுபோல ஆசார்யன் மூன்று விஷயங்களை சிஷ்யனுக்குத் தெரியப் படுத்துகிறார். 
  • சிறு மருங்குல் போல அஷ்டாக்ஷரத்தில் பிராட்டி இருப்பது தெரியாது. 
  • மென்முலை யொத்த த்வயத்தில் லக்ஷ்மீ ஸ்பஷ்டமாகத் தெரிகிறாள் சைதன்யஸ்தன்ய தாயினியாக எப்போதும் ரக்ஷிப்பதால். 
இவையிரண்டையும் ப்ரபன்னனுக்கு ஆசார்யன் திருவாக்கால் (செவ்வாய்) சொல்லித் தெளிய வைக்கிறார் சரம ஶ்லோகமாக.

*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************

கோதாஸ்துதியும், கோதை செய்த துதியும் - Day 19


तुङ्गैरकृत्रिमगिरः स्वयमुत्तमाङ्गैः
यं सर्वगन्ध इति सादरमुद्वहन्ति।
आमोदमन्यमधिगच्छति मालिकाभिः
सोऽपि त्वदीय कुटिलालकवासिताभिः॥१९॥


மாதாவே! அநாதியான வேதங்களும், உபநிஷத்துக்களும்
"ஸர்வ கந்த மயன்" என்று போற்றிக் கொண்டாடுகின்ற எம்பெருமான் உன் கருங்குழலில் சூட்டிய மாலையைத் தன் தலையில் ஏற்கிறான் (கோதாஸ்துதி - 19)

பாசுரம் 19 - குத்துவிளக்கெரிய


குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
        மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
        வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
        எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லையால்
        தத்துவம் அன்று தகவு ஏல் ஓர் எம்பாவாய்

குத்து விளக்கு நாலாபுறமும் எரிய,யானைத் தந்தத்தாலான
கால்களையுடைய. கட்டிலின் மீது விரித்த குளிர்ச்சியும், ம்ருதுவானதும், அழகிய வெண்மைநிற வாசனை நிறைந்த பஞ்ச சயனத்தில் (இந்த ஐந்தும் படுக்கையின் லக்ஷணங்கள்) கொத்தான மலரணிந்த கூந்தலுடைய நப்பின்னையின் ஸ்தனங்களில் தலைவைத்துறங்கும் கண்ணபிரானை எழுப்புகின்றனர் தோழிகள்.
மையிட்ட கண்களுடைய நப்பின்னையே! நீ உன் மணாளனை ஒருநொடிப் பொழுதுகூடத் தூக்கத்தை விட்டு எழுந்திருக்க விடுவதில்லை. இது உன் ஸ்வபாவத்துக்கு ஏற்புடையதல்ல என்கிறார்கள்.


ஸ்வாபதேசம்

பிராட்டியும், பெருமானும் மோக்ஷமளிப்பதில் அவரவர் அடியவர்களை விட்டுக் கொடுப்பதில்லை. நப்பின்னை வீரமங்கை என்பதால் கோட்டுக்கால் கட்டில். ருக்மிணி ராஜப
த்னியாகையால் தங்கக் கட்டில்.சத்யபாமா அழகி என்பதால் வெள்ளிக்கட்டில் அமைத்திருந்தனராம். மோக்ஷமடைந்து முக்தன்
ஶ்ரீவைகுண்டம் சேர்ந்து திருமாமணி மண்டபத்தில் ஆதிசேஷபர்யங்கத்தில் வீற்றிருக்கும் எம்பெருமான் திருமடியில் சென்றமர்கின்றான். அப்படிச் செல்லும்போது ஆதிஸேஷனைத் துகைத்துக் கொண்டு ஏறுவானாம். இதனையே "மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி" - என்கிறாள்.

மைத்தடங்கண்ணியான நீ உன் மணாளானுடனிருக்கிறாய். க்ருஷ்ணனைப் பிரிந்த ஒரு கணம் ஒருயுகமாயுள்ளது. எங்களை இன்னும் காக்க வைப்பது ஏற்புடையதல்ல என்கின்றனர் தோழிகள். ராவணவதம் முடிந்து ஸீதா பிராட்டியைக்காண வந்த ஹனுமான் ராக்ஷஸிகளை நசுக்கி விடுவாதகக் கூற அவர்களுக்குப் பரிந்து பேசிய பிராட்டி யைப் போல நீயும் எங்களுக்காக இரங்க வேண்டும் என்று வேண்டுகின்றனர் தோழிகள்.

ஸ்திரமான ஸம்ப்ரதாய ப்ரதியே "குத்து விளக்கு" என்பதாம். ஒரு ஆசார்யனிடமிருந்து இன்னொரு ஆசார்யன் வருவதை வழிவழியாக வரும் தீபம் குறிக்கிறது. அஞானத்தைப் போக்கும் ஞான தீபம் இது. நிரபாய ஸம்ப்ரதாய பரம்பரையே இந்த குத்துவிளக்கு.
விளக்கு ப்ரகாசத்தால் தன்னையும் காட்டி பிறவற்றையம் காட்டுமாப்போல நப்பின்னையே! நீ உன் க்ருபையைத் தந்து, கண்ணனையும் காட்டித்தர வேணும் என்கின்றனர். 

நான்கு வேதங்களையும் கால்களாய் கொண்ட கோட்டுக்கால் கட்டில் சுமக்கும் திவ்ய தம்பதிகளை அடைவதற்கு முன் அந்த பர்யங்கத்தில் வீழ்கினறனர். குத்து விளக்கின் 5 முகங்கள் போல எம்பெருமானின் ஐந்து நிலைகள், பஞ்ச இந்த்ரியங்கள், அர்த்த பஞ்சகம் முதலியன ஆசார்ய உபதேசத்தால் அறியப்படுகின்றன.

ப்ரளய காலத்தில் அசித்தைப்போலக் கிடக்கும்
ஜீவன்களளுக்காக இரங்கி மோக்ஷம் வரையில் இவைகளை அழைத்துச்செல்லும் விசாலமான மனமுடையவனே "மலர்மார்பா" என்பதாம். இப்பாசுரம் பட்டர் உகந்த பாசுரம் என்பர்.


*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************

Saturday, January 1, 2022

கோதாஸ்துதியும், கோதை செய்த துதியும் - Day 18


चूडापदेन परिगृह्य तवोत्तरीयं
मालामपि त्वदलकैरधिवास्य दत्ताम्।
प्रायेण रङ्गपतिरेष बिभर्ति गोदे
सौभाग्यसंपदभिषेकमहाधिकारम् ॥१८॥


கோதா! நீ மேலே சாற்றிய பட்டையும், சூடிக் களைந்த மாலையைத் தன் தலையிலும் ஏற்ற எம்பெருமான், ஸர்வ லோக
சாம்ராஜ்யத்தில் மஹாதிகாரத்தில் பரியட்டம்கட்டி மாலை போட்டுப் பட்டம்சூட்டப் பெற்றார் போலுள்ளான் (கோதாஸ்துதி - 18)


பாசுரம் 18 - உந்து மதகளிற்றன்


உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
        நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்
        வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்
        பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
        வந்து திறவாய் மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்

புருஷாகாரம் செய்யும் பிராட்டியை எழுப்பும் பாசுரம் இது.
நப்பின்னை பிராட்டியே!மதஜலம் பெருக்கும் யானைகளை உடையவனும்,குறையாத தோள் வலிமை கொண்டவனும் ஆகிய நந்தகோபரின் நாட்டுப்பெண்ணே!
மணங்கமழும் கூந்தலுடையநீ வந்து கதவைத் திறப்பாயாக!
கோழிகள் வந்தெங்கும் கூவுகின்றன. குருக்கத்தி கொடி படர்ந்த பந்தல்களில் குயில்கள் பலமுறை கூவி விடிந்ததை தெறிவிக்கின்றன. பந்து பொருந்திய விரல்களை உடையவளே! உன் கணவன் கண்ணனுடைய புகழ் பாட வந்துள்ளோம். உன் செந்தாமரைக் கையிலணிந்த வளைகள் ஒலிக்க வந்து கதவைத் திறப்பாயாக!என்கின்றனர் தோழிகள்.


ஸ்வாப தேசம்
புருஷாகாரம் செய்யும் பிராட்டி அருகே இருந்ததால் காகாசுரன் உயிர் பிழைத்தான். ராவணன் எம்பெருமான் கோபத்துக்கு ஆளானான். நம் குறைகளைப் பிராட்டி கேட்டு, பெருமானையும் கேட்கச் செய்வதால் அவளை முன்னிட்டுக் கொண்டே பகவானிடம் செல்ல வேண்டும்.
ஶரணாகதி என்று வந்த ஜீவனின் குற்றங்களுக்கேற்ப தண்டனை
அளிக்க முன்வரும் பகவானிடம் பரிந்துரை செய்து பிராட்டி ஶரணாகதனுக்கு மோக்ஷமும், அல்லாதவர்களுக்கு தண்டனையும் அளித்தால் லோக நிர்வாகம் பாதிக்காது என்று அவனுக்கே உபதேசம் செய்பவள்.

இத்தனை சிறப்பான குணங்களையுடையவள் நப்பின்னை.
க்ருஷ்ணனை மகனாயடைந்த நந்தகோபனுக்கு வஸுதேவர் யானைகளையும், வஸுதேவர்ருக்கு வேண்டிய பசுக்களை நந்தகோபரும் அளிப்பார்களாம். 

ஸீதை தன்னை தஶரதனின் மருமகள் என அறிமுகப் படுத்திக் கொள்கிறாள் ஹனுமனிடம். அதுபோல நப்பின்னை தன்னை நந்தகோபன் மருமகள் எனச்சொல்கிறாள். ஒருகையில் பந்தும், மற்றோர் கையில் கண்ணனையும் பிடித்துக் கொண்டு உறங்குகிறாள்.

நித்ய விபூதி, லீலா விபூதி என இரண்டையும் நிர்வகிக்கும் செல்வாக்கு உடையவள். ராமானுஜர் இந்த பாசுரத்தைப்பாடி பிக்ஷைகைட்டு கதவைத் தட்ட, வந்து திறந்த அத்துழாயை (பெரிய நம்பியின் திருக்குமாரத்தி) ஆண்டாளாக நினைத்து மயங்கி வீழ்ந்ததாக வரலாறு.

உபய விபூதியை நிர்வகிக்கும் யானை போன்றவனும், வீணாகாத ஸங்கல்பம் என்னும் நலத்தைப் பெற்றவரும் ஆகிய எம்பெருமானின் ஜேஷ்ட மகிஷியே! கேசவனை அடையத்தடையாயுள்ள பாபத்தை நீக்குபவள் இவளே!
ஸாரமான தானியங்களை மட்டும் கொத்தும் கோழிகள் போல (ஸாரக்ராஹிகள்) எம்பெருமானிருக்குமிடம் சென்று ப்ரபத்தி செய்யும் பாகவதோத்தமர்களைக் குறிக்கிறது. (ஶ்ரீவைஷ்ணவ லக்ஷணங்களாக கொக்கு போல் இருப்பான், கோழி போல் இருப்பான், உப்பைப் போலிருப்பான், உம்மைப் போலிருப்பான் என்பது ப்ரஸித்தம்)

வேதாந்த சாகைகள் மாதவிப் பந்தல் எனவும் அதில் கூறும் ஶ்ரீய: பதியின் பெருமையை உறைக்கும் வால்மீகி, ஸுகர் போன்றவர்களை குயில்கள் எனவும் உருவகப்டுத்தப்ட்டுளது.
பந்து போன்ற எங்களை லீலோபகரணமாக்கி விளையாடும் எம்பெருமானுக்கு நாங்கள் போகோபகரணமாக வேணும். அதற்கு பிராட்டியின் வளையோசை துணையாயிருந்து சீற்றத்தைத் தணிக்க வேணும் என்பது உட்பொருள்.


*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************