Wednesday, January 12, 2022

கோதாஸ்துதியும், கோதை செய்த துதியும் - Day 29


इति विकसितभक्तेरुत्थितां वेङ्कटेशात्
बहुगुणरमणीयां वक्ति गोदास्तुतिं यः।
स भवति बहुमान्यः श्रीमतो रङ्गभर्तुः
चरणकमलसेवां शाश्वतीमभ्युपैष्यन् ॥२९॥


இவ்விதம் வேங்கட கவியிடம் பிறந்த காவ்ய குணங்கள் நிறைந்த இந்த கோதாஸ்துதியைச் சொல்பவர்கள் திருவரங்கனின் திருவடிக்கீழ் இவ்வுலகில்அவனது பஹுமான த்ருஷ்டிக்கு இலக்காவதுடன் விண்ணுலகிலும் கைங்கர்யப் பேற்றைப் பெறுகின்றனர். (கோதாஸ்துதி - 29)


பாசுரம் 29 - சிற்றம் சிறுகாலே


சிற்றஞ் சிறு காலே வந்துன்னைச் சேவித்து உன்
        பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்!
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
        குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!
        எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
        மற்றை நம் காமங்கள் மாற்று ஏல் ஓர் எம்பாவாய்



திருப்பாவையின் சாரம் என்னும் பாசுரம் இது. ஆண்டாள் ஆயர் பெண்களின் தலைவியாயிருந்து திருப்பாவை பாடினாள். சக தோழியை "கேளீரோ" என்னும் ஆண்டாள் இந்தப் பாசுரத்தில், ஆசார்யனாகமாறி க்ருஷ்ணனை "கேளாய்" என்கிறாள். "நாராயணனே நமக்கே பறை தருவான்" என்று ஏகாரமிட்டு உறுதி செய்த "பறையை", "உமக்கே நாமாட்செய்வோம்" என்று உறுதியாகச் பெற்று விட்ட தோரணையில் பேசிமுடிக்கிறாள்.

நாட்டாறுக்காக "மழையையும்"
கண்ணனுக்காக "பறையையும்"
தங்களுக்காக "குற்றேவலையும்" 
ப்ரார்த்திக்கிறாள்.
மிக்க விடியற் காலையில் நாங்கள் உனது பொற்றாமரை போன்ற ஒளிரும், ம்ருதுவான உன் திருவடிகளைப் பெற்று போற்றி
நாங்கள் வைக்கும் ப்ரார்த்தனையை கேளாய்! என்கிறாள்.

மிக உயர்ந்த ராஜ பரம்பரையிலோ, மகரிஷி குலத்திலோ பிறவாமல் (ராமன், வாமனன் போல) மாடு மேய்க்கும் இடையர் குலத்தில் நீ வந்து பிறந்தாய்!
எங்களுக்கு நீ கைங்கர்யமாகிய பறையைக் தராமலிருக்காதே.
இப்பிறவி மட்டுமல்ல, நீ எடுக்கும் எந்தப் பிறவியிலும் நீயும், நாங்களும் பிரியாதிருக்கும் பந்தம் தொடர்ந்து உனக்கே நாங்கள் கைங்கர்யம் செய்ய வேண்டும். இதைத்தவிர மற்றைய கார்யங்கள் எதனையும், எங்களிடமும், உன்னிடமும் (மற்றைய நம் காமங்கள்) ஏற்படாமல் மாற்றி விடு என்கிறாள் ஆண்டாள். இவள் ப்ரயோகிக்கும் "கோவிந்தா", என்ற பதத்துள் "கோதா"அடங்கிவிடுகிறாள்.

ஸ்வாபதேசம்

ப்ரபத்தி க்ஷண காலத்தில் அனுஷ்டிக்கப்படும் ஸாத்யோபாயம். "சிற்றஞ்சிறுகாலே" என்பது இந்த ப்ரபத்தியை நாள் கடத்தாது நல்லமன, தேக ஸ்திதி இருக்கும்போது அனுஷ்டிக்க வேண்டியதைக் குறிப்பது.
ஸ்வரூப ஸமர்ப்பணம், பர ஸமர்ப்பணம், பல ஸமர்ப்பணம்
ஆகிய மூன்று தளங்களைக் கொண்டது இந்த ப்ரபத்தி சாஸ்த்ரம் என்பதை ஆண்டாள் காட்டுகிறாள் இந்தப் பாசுரத்தில். இப்படி அனுஷ்டித்துப் பெறும் கைங்கர்யத் தைச் செய்யும்போது
உண்டாகும் உகப்பை உனக்கே அர்ப்பணிப்போம் என்பதை,
"மற்றை நம்....மாற்று" என்ற வரிகாட்டுகிறது. இதனை அனுஷ்டிக்க நமக்கு வழிகாட்டும் ஆசார்யனின் பொற்றாமரைக் திருவடிகளை பற்றி போற்றவேணும்.
ஆசார்யன் சிஷ்யர்களுக்கு ஸம்ப்ரதாய விஷயங்களை ஊட்டிச் செய்யும் கார்யத்தை, "பெற்றம் மேய்த்துண்ணும்" என்ற வரிதெரிவிக்கிறது.

ஆசார்யனுக்கு சிஷ்யன் செய்யும் கைங்கர்யங்களை, "குற்றேவல் எங்களை" என்ற வரிகாட்டுகிறது.
மற்றும் ஒரு விளக்கம்.
  1. ப்ராப்யத்தில் த்வரை (சிற்றம் சிறுகாலே வந்துன்னை)
  2. சாத்யத்தில் சாதனை புத்தி (போற்றும் பொருள் கேளாய்)
  3. சபலமாம்படி அபேக்ஷித்தல்/நிர்பந்தித்து கேட்டல் (குற்றேவல் எங்களைக் கொள்ளாமல்)
  4. ப்ரயோசனாந்த்ர வைமுக்யம். வர்ணாஶ்ரம தர்ம வ்ருத்திக்காக ஆசை (இற்றை பறை கொள்வான்)
  5. விரோதி நிவ்ருத்தி ப்ரார்த்தனை (ஏழேழ் பிறவிக்கும் உந்தனோடு உறவேல்)
  6. பல ப்ரார்த்தனை (மற்றை நம் காமங்கள் மாற்று)
30 பாசுர மங்களும் தினம் ஸேவிக்காவிடினும், இந்த ஒரு பாசுரத்தையாவது தினம் ஸேவித்து உய்யும் வழி பெறவேணும் என்பது பராசரபட்டரின் கருத்து.


*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************

No comments:

Post a Comment