Tuesday, January 4, 2022

கோதாஸ்துதியும், கோதை செய்த துதியும் - Day 21


रङ्गेश्वरस्य तव च प्रणयानुबन्धात्
अन्योन्यमाल्यपरिवृत्तिमभिष्टुवन्तः।
वाचालयन्ति वसुधे रसिकास्त्रिलोकीं
न्यूनाधिकत्व समता विषयैर्विवादैः ॥२१॥

கோதா தேவியே! நீயும் ரங்கராஜனும் மாலை மாற்றிக் கொள்ளும்போது பக்கத்திலிருந்த ரஸிகர்கள், உங்களில் ஒருவரை உயர்த்தியும், தாழ்த்தியும், சமமாகவும் பேசி உலகம் முழுதும் எதிரொலிக்கும் செய்கிறார்கள் (கோதாஸ்துதி - 21)


பாசுரம் 21 - ஏற்ற கலங்கள்


ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
        மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
        ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
        மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமாபோலே
        போற்றியாம் வந்தோம் புகழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்


இப்பாசுரத்தில் நீளா தேவியும் ஆயர் பெண்கள் கோஷ்டியில் சேர்ந்து ப்ரார்த்திக்கிறாள்.
வேதத்தால் கொண்டாடப் படுபவனே! அதனால் அறிவதற்கு அரிதானவனே! தேஜோமயமானவனே! ஏந்திய குடங்களனைத்தும் நிரம்பி வழியும் பாலைக் கொடுக்கும் வள்ளன்மை மிக்க பசுக்களைக்
கணக்கின்றி வைத்துக் கொண்டிருக்கும் நந்தகோபனின் மகனே!துயிலெழுந்து வரவேணும். தம் திறமையைத் தொலைத்து உன் வலிமையை நினைந்து, உன் வாயிலில் வந்து நிற்கும் பகைவர்களைப்போல நாங்களும் உன்னைப் போற்றி வந்துள்ளோம். எங்களது மங்களாசாசனத்தை ஏற்றுக்கொண்டு எங்களை ஆஶ்ரயிக்க வேணும் என்று கூறுகிறார்கள்.


ஸ்வாபதேசம்
"உகவாதார் அம்புக்குத் தோற்பர்கள். நாங்கள் தோற்றோம் உன் குணத்துக்கே!" -- என்று வந்துள்ளனர் தோழியர். பிராட்டி பகவானுக்கு எல்லா விதத்திலும் ஈடானவள். ஆயினும் பகவானுக்கு அடங்கி பாகவதர்களுடன் சேர்ந்து தொண்டு செய்பவளாக தன்னை ஆக்கிக் கொள்கிறாள். தனக்கு மேம்பட்டவர் எவருமில்லாத எம்பெருமானுக்கு விபவத்தில் "நந்த கோபனுடைய மகன்" என்பதில் அளவற்ற சந்தோஷமாம்.

ராவணவதம் முடிந்து வந்த ராமனைத் துதித்த
ப்ரம்ஹா, சிவனிடம், "நான் தஶரதன் புத்ரன்"--என்று சொல்லி மகிழ்ந்து, இப்படிச் சொல்வதையே நான் பெரிதாக மதிக்கிறேன் என்றான். நம்மில் ஒருவனாக வந்த இந்த மகன் நம்மைக் கைவிடமாட்டான் என்பது இதன் பொருள்.

"ஊற்றமுடையாய் ......தோற்றமாய் நின்ற சுடரே" என்கிறாள் ஆண்டாள். "சமாதானம் பேசப்போகிறாயா" என்ற த்ரௌபதியிடம், "நான் உன் கோவிந்தா என்ற கதறலுக்குக் கடன் பட்டுள்ளேன். கவலைப்படாதே என்று சொல்லிச் சென்றான் யுத்தத்தை ஆரம்பிக்க, ஆஶ்ருத பாதபக்ஷனாகிய எம்பெருமான். 

ஶ்ரீ வைகுண்டத்தில் எம்பெருமானின் கல்யாணகுணங்கள்  சுடர்விடாது. 
ஆனால் ப்ருக்ருதி மண்டலத்தில் அவன் பிறக்க பிறக்க சுடர்விட்டு ப்ரகாசிக்கிறது அவனது குணங்கள் என்று உபநிஷத்துக்கள் கொண்டாடுகின்றன.

"ஆற்றாது....போற்றியாம் வந்தோம்" என்பதற்கு "அகங்காரம் மமகாரம் ஒழிந்து உன்னைப் புகழ்ந்து, உன்னடிபணிந்து, எங்கள் இயலாமையை உணர்ந்து வந்துள்ளோம்" என்பது பொருள்.

"ஏற்ற கலங்கள் ....பசுக்கள்" ஸத்பாத்ரங்களான சீடர்களுக்கு பக்ஷபாதமின்றி ஞானமாகிய பாலை மிகுந்தளிக்கும் ஸதாசார்யன் என்பதாகும்.
"ஆற்றப் படைத்தான்.......துயிலெழாய்".... இத்தகைய ஆசார்யர்களுக்கு புத்ரனாயிருப்பவனாகிய எம்பெருமான் ஸம்ப்ரதாயம் வளர பாஞ்சராத்ரம் போன்ற ஆகமங்களை உபதேசித்து, விபவாதாரங்களைச் செய்து விளங்கினாய் .
இத்தகைய பெருமையுடைய நீ எங்கள் கைங்கர்யத்தை ஏற்க வேணும் என்கிறார்கள்.

*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************

No comments:

Post a Comment