Wednesday, January 12, 2022

கோதாஸ்துதியும், கோதை செய்த துதியும் - Day 28


शतमखमणिनीला चारु कल्हार हस्ता
स्तनभरनमिताङ्गी सान्द्रवात्सल्यसिन्धुः।
अलकविनिहिताभिः स्रग्भिराकृष्टनाथा
विलसतु हृदि गोदा विष्णुचितात्मजा नः ॥२८॥


இந்த்ர நீலநிறத்தவளும், அழகிய நீலோத்பல மலரை ஏந்தியவளும், கனத்த மார்பகங்களினால் குனிந்தவளும், வாத்ஸல்யம் நிறைந்தவளும், சூடிக் களைந்த மாலைமேல் அரங்கனை மையல் கொள்ளச் செய்தவளும், பெரியாழ்வாரின் மகளுமாகிய கோதா தேவியே! என் சிந்தையில் நீ எப்போதும் உறைய வேணும்!  
(கோதாஸ்துதி - 28)


பாசுரம் 28 - கறவைகள் பின்சென்று


கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம்
        அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவி பெருந்தனை புண்ணியம் யாம் உடையோம்
        குறைவொன்றும் இல்லாத கோவிந்தா, உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
        அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
        இறைவா! நீ தாராய் பறை ஏல் ஓர் எம்பாவாய்


தமது ஆகிஞ்சன்யத்தை ஆண்டாளும், தோழிகளும் வெளிப்படுத்துகின்றனர் இப்பாசுரத்தில். ஸ்வாமி தேஶிகன் மிகவும் ஈடுபட்ட பாசுரம் இது.
சன்மானம் கேட்கும் உங்களுக்கு என்ன தெரியும் என்று கேட்கிறான் கண்ணன். கறவை மாடுகளுடன் சென்று காட்டில் இடையர்களுடன் மாடு மேய்த்து உண்ணத் தெரியும். வேறேதும் தெரியாது என ஶரணாகதிக்கு முக்கிய அங்கமான "கைமுதலின்மையை"
காட்டுகிறாள் ஆண்டாள். 
அறிவு, ஞானமின்றி, யோகம் முதலியன செய்யும் திறனுமில்லாத இடைக்குலத்தில் பிறந்துள்ளோம். இத்தகைய எங்களைக் கரைசேர்க்க நீயும் இரங்கி வந்து எங்களுடன் கலந்து பழகினாய். ஆக இப்படி ஏற்பட்ட சம்பந்தம் இனிப் பிரிக்க முடியாது. உன்னை இதுகாறும் நாங்கள் ஸ்நேகத்தால் சிறு பேரிட்டு அழைத்தமைக்கு கோபிக்காதே. எங்களுடைய கைங்கர்யத்தை ஏற்று பலன் தரவேண்டும் என்கிறாள்.


ஸ்வாபதேசம்

வானரங்களுடன் கலந்து பழகிய ராமபிரான் இங்கு மாடுகளுடன் கலந்து நிற்கிறான். "இறைவா" என்றழைத்து அவனது ஸ்வாமித்துவத்தைக் காட்டுகிறாள். க்ருத க்ருத்யனான
ப்ரபன்னனுடைய குறைகளைக் தான் ஏற்றுக்கொண்டு, தன்னிறைவை அவர்களுக்கு அளித்து, ரக்ஷணப் பொறுப்பை ஏற்பதால் "குறையொன்றுமில்லாஎம்த கோவிந்தா" என்கிறாள். இதனையே "தமதனைத்தும் அவர் தமக்கு வழங்கியும் தாம் மிக விளங்கும் அமைவுடைய அருளாளர் அடியிணைகள் அடைந்தேனே"---
என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.

எம்பெருமானுக்கும், ஜீவனுக்கும் உள்ள ஆத்ம பந்தம் என்றும் அழியாது என்பதை "உன்னோடுறவேல் .. ‌..ஒழியாது" என்கிறாள்.
  • இந்த ஸம்ஸாரத்தில் ஜீவர்கள் ஸத்கர்மங்கள் செய்வது துர்லபம் என்பதை முதலடி காட்டுகிறது.
  • எம்பெருமான் விஷயமான ஞானமின்றி அலைகிறது என்பது 2ம் அடி.
  • இப்படி பசுப்ராயராக இருக்கும் ஜீவன்களை கடைத்தேற்ற எம்பெருமான் நினைத்து இறங்குவது அவர்களின் புண்ய விசேஷத்தால் என்பது 3ம் அடியின் கருத்து.
  • இப்படி எம்பெருமான் அவதரித்தாலும், அனாதி காலமாய் அவனுக்கும் நமக்கும் இருக்கும் சேஷத்வம் நீங்குவதில்லை என்பது 4ம் அடி தரும் கருத்து.
  • இது ஒழிக்க ஒழியாத ஸம்பந்தம். பகவானை நினையாவிடினும் அவன் சேஷி என்பதில் ஐயமில்லை, என்பது 5ம்அடி.
  • ஸர்வேஶ்வரனாகிய ஸ்வாமியிடம் எப்படி நடக்க வேணும் என்ற சேஷத்வ ஞானமற்றவர்களாயுள்ளனர் ஜீவர்கள் என்பது 6ம்அடி.
  • எம்பெருமான் என்ற உணர்வின்றி ஸ்வதர்மங்களை விடுத்து செய்த கார்யங்களால் நீ கோபிக்காது பொறுத்து க்ஷமிக்க வேணும். எங்களைத் திருத்திப் பணி கொள்ளவேணும் உன் கருணையால் என்பது கடைசி இரு அடிகளின் கருத்து.

*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************

No comments:

Post a Comment