Saturday, January 8, 2022

கோதாஸ்துதியும், கோதை செய்த துதியும் - Day 25


गोदे गुणैरपनयन् प्रणतापराधान्
भ्रूक्षेप एव तव भोग रसानुकूलः।
कर्मानुबन्धि फलदानरतस्य भर्तुः
स्वातन्त्र्य दुर्व्यसन मर्मभिदा निदानम् ॥२५॥


கோதா தேவியே!உன் புருவ நெறிப்பு பக்தர்களின் பாபக்கூட்டங்கள் பகவான் கவனத்துக்கு வராதபடி ஒளிக்கிறது. அவரவர் விதிப்படி பயன்தரும் என்ற வழக்கத்தை மாற்றி நன்மை அளிக்கப் செய்கிறது. (கோதாஸ்துதி - 25)

பாசுரம் 25 - ஒருத்தி மகனாய்


ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
        ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைத்த
        கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
        அருத்தித்து வந்தொம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
        வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்


சீரிய சிங்காசனத்தில் எழுந்தருளிய கண்ணனுக்குப் பல்லாண்டு பாடிய ஆண்டாள் குழாம் ஒரு ப்ரார்த்தனையை அவன் முன் வைக்கின்றனர், நெடுமாலே! என்று விளித்து. பக்ததர்களிடம்
மிகுந்த வ்யாமோஹம் கொண்டவனாயிற்றே அவன்!
தேவகி சீர்மைந்தனாய்ப் பிறந்து யசோதை இளஞ்சிங்கமாய் வளர்கின்றான். ஓரிரவில் இந்த அதிசயம் நடக்கிறது. 
இந்த இரவுக்கும் பல்லாண்டு பாடவேண்டும். ஏனெனில் கண்ணனை நமக்குத் தந்த இரவு. இதற்குச் சமான உயர்ந்த இரவு கிடையாது. ஶரணாகதி த்துவத்தைத் தருவற்குக் "கீதை" பிறக்கக் காரணமாயிருந்த இரவு. இதனையே "இருளன்ன மாமேனி" என்கிறார் நம்மாழ்வார்.

"காரிருள் எள்ளில் பிழைத்து" என்கிறாள் ஆண்டாள்.
ஆக தேவகிக்கு அதி அற்புதமான "அவதார ரசம்" தந்த எம்பெருமான் யசோதைக்கு "லீலா ரசம் " தருகிறான். ஓரிரவில் ஒளிந்து வளர்கிறான்.

தேஜோமயமான குழந்தையை அணைக்க முற்படும் தேவகியை அவனது அவதாரத் தோற்றம் கைகூப்ப வைக்கிறது. அவள் சொல்லுக்குக் கட்டுப்பட்டு உடனே சங்கு சக்கரத்தை மறைத்துக்கொள்கிறான்.
உலகனைத்தையும் உள்ளடக்கிய எம்பெருமானைத் தன்வயிற்றில் தாங்கிய பெருமை தேவகிக்கு! அந்த வைபவம் அனைத்தையும் தன் வாயுள்ளே காட்டினான் யசோதைக்கு!
ராவணாதிகளை தன் அஸ்த்ரத்தால் கட்டிய எம்பெருமான், தன் ஸௌலப்யத்தால் யசோதையின் கண்ணிக்குறுங் கயிற்றுக்குக் கட்டுண்டான்.
பல்லோர் வயிற்றில் நெருப்பைப் கொட்டிய கம்சன் வயிற்றில் அசரீரீ மூலம் நெருப்பைக் கொட்டினான் கண்ணன் இத்தகைய பெருமைகளையுடைய உன்னையே பலனாக அடைய வேண்டும் என்பதே எங்கள் ப்ரார்த்தனை. ஆயர்குலச் செல்வமாகிய நப்பின்னை பிராட்டி, க்ஷத்ரிய குலச்செல்வமாகிய ருக்மிணி பிராட்டி ஆகிய இருவருடன் ரக்ஷகனாக வந்து எங்களது பலப்ரார்த்தனையை ஏற்க வேண்டும் என்கிறாள் ஆண்டாள்.

ஸ்வாப தேசம்

ஸம்ஸாரம் என்பது ஓர் இரவு. இதில் வாழும் நமக்கு இரண்டு தாய்கள். நம்மைப் பிறப்பிக்கும் தாய். இவள் நம் உடலைத் தான் உண்டுபண்ணுகிறாள். ஆனால் ஆத்மாவை அதைப் பற்றிய அறிவை உண்டு பண்ணும் தாய் "காயத்ரீ மந்த்ரம்" என்னும் தாய். இவளையே "ஒருத்தி" என்கிறாள் ஆண்டாள். இவள் மூலமாக மற்றொரு பிறப்பு உண்டாகிறது .
அதனைத்தரும் தாய் "மூலமந்த்ரம்". இதன் மூலம் எம்பெருமானுக்கு அடிமை என்ற ஞானம் பெற்று பரமைகாந்தி ஆகிறான் ஜீவன்.
திருமந்த்ரத்தில் பிறந்து த்வயத்தில் வளர்ந்து ஶரணாகதி என்னும் உபாயத்தை அனுஷ்டித்து பிறவி நோய் தீர்க்கச் செய்கிறார் ஆசார்யன்.

"தரிக்கிலானாகி....நெடுமாலே"--
ஆனால் மனத்தாலும், வாக்காலும், உடலாலும் செய்யும் பாபங்கள் 
"கம்சன்" போன்றவை. அவற்றின் பலனைத் தரிக்க இயலாது தவிக்கிறோம்.
இந்த மோக்ஷ விரோதியாகிய பாபங்களை உன் கருணையால் அழித்து உன் கைங்கர்யத்தில் எங்களைச் சேர்த்து எங்களை மகிழ்விக்க வேண்டும் என்கின்றனர் பாவையர்.


*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************

No comments:

Post a Comment