முகுந்தனடிபற்றி அந்தமிலாப் பேரின்பம் அடைய நாம் அறியவேண்டிய நூறு முக்ய விஷயங்களடங்கிய
"ப்ரதான ஶதகம்".**********************************************************************************
நம் ஶ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தத்தின் உயர்வை நிலைநாட்டி த்தெளிவாக நாம் பர தத்வத்தை ப்புரிந்துகொள்ள ஸ்வாமி தேஶிகன் அருளிச்செய்த க்ரந்தங்களுள் மிக முக்யமான வை மூன்று. அவை -
- ஶ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம்
- விரோத பரிஹாரம்
- ப்ரதான ஶதகம்
பரமாசார்யனாகிய ஸ்வாமி பரம க்ருபையுடன் நம் மந்த புத்தியில் ஸம்ப்ரதாயத்தில் ஏற்படும் சந்தேகங்களையும், குழப்பங்களையும் இந்த க்ரந்தங்கள் மூலம் போக்கிப்புரிய வைத்துள்ளார்.
ப்ரதான ஶதகம் என்ற இந்த க்ரந்தம் ஸ்வாமி தேஶிகன் மனமுவந்த க்ரந்தம்.
ஒரு ஜீவன் மோக்ஷம் அடையவேண்டுமானால் அறிந்துகொள்ள வேண்டிய முக்யமான 100 விஷயங்களை இதில் விரித்துரைத்துள்ளார். இக்ரந்தத்துக்கு ஸம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் தனியன்கள் உள்ளன.
ஸ்வாமி ஆழ்வார் ஆசார்யர்களைக் "குலபதிகள்" எனக்கொண்டாடி அவர்களது நல்வார்த்தைகளை அடியொற்றி இக்ரந்தத்தைச் செய்வதாகக் கீழ்காணும் இப்பாசுரத்தில் காட்டியுள்ளார்.
"பொங்கு புனல் ஆறுகளில் புவனமெல்லாம்
பொற்கழலால் அளந்தவன் தன் தாளால் வந்த*
கங்கையெனும் நதிபோலக் கடல்கள் ஏழில்
கமலை பிறந்து அவனுகந்த கடலே போலச்*
சங்குகளில் அவனேந்தும் சங்கேபோலத்
தாரில் அவன் தண்துளவத்தாரேபோல*
எங்கள் குலபதிகள் இவைமேலாம் என்றே
எண்ணிய நல்வார்தைகள் நாம்
இசைகின்றோமே"-----(அம்ருதாஸ்வாதினி--25)
எம்பெருமானுடன் ஸம்பந்தப்பட்ட நான்கு அடிப்படை ப்ரதானங்கள்
கங்கை, துளசி, பாற்கடல், பாஞ்ச ஜன்யம். இதற்கு ப்ரமாணம் ஶாஸ்த்ரம். ஆத்மாவுக்கு க்ஷேமத்தைத் தருவது ஶாஸ்த்ரம். இங்கிருந்து "ப்ரதானங்கள்" துவங்குகின்றன.
- வேதம் தான் இதில் ப்ரதானம். வேதத்தை விட உயர்ந்த ஶாஸ்த்ரமில்லை.
- வேதத்தில் ப்ரதானம் உபநிஷத். அந்யதா ஸித்த ப்ரமாணங்களால் வரும் கலக்கங்களை நீக்குவதால் வேதாந்தம் ப்ரதானம். பரம புருஷார்த்தம் சொல்வது வேதாந்தம்.
- உபநிஷத்தில் ப்ரதானம் புருஷ ஸூக்தம். புருஷஸுக்தம் இல்லாத வேத ஶாகைகளே இல்லை. அதுவே இதன் தனிப்பெருமை. ஶ்ரீமன் நாராயணனே பரப்ரும்ஹம் என்பதனை புருஷஸூக்தம் ஸ்தாபிக்கிறது.
- எம்பெருமானின் ஆராதனம் அடுத்த ப்ரதானம். ஒவ்வொரு ரிக்கிலும் 16 வித ஆராதனம் பெருமாளுக்குச் சொல்லப்பட்டுள்ளது.
- இந்த ஆராதனத்துக்கு மூன்று ப்ரதான மந்த்ரம் உண்டு. அவை வ்யாபக மந்த்ரம் எனப்படும்.
- அவை -
- அஷ்டாக்ஷரம் (ஓம் நமோநாராயணாய)
- த்வாதஶாக்ஷரம் (ஓம் நமோ பகவதே வாஸுதேவாய)
- ஷடாக்ஷரம் (ஓம் நமோ விஷ்ணவே)
- விஷ்ணு காயத்ரி இம்மூன்று மந்த்ரங்களையும் உள்ளடக்கியது.
- ஶ்ரிய:பதியான எம்பெருமானே இம்மூன்று மந்த்ரங்களால் ஆராதிக்கப் படுபவர்.
- இம்மூன்று மந்த்ரங்களுள் திரு அஷ்டாக்ஷரம் ப்ரதானம். ஸர்வ தத்வத்தையும் பளிச் சென்று சொல்வதால் இது ப்ரதானம்.
- பிறவிகள் இரண்டு. ஒன்று மாதா வயிற்றிலிருந்து பிறப்பது. மற்றொன்று மந்த்ரோக்தி மாதாவாக ஆசார்யனை பிதாவாக் கொண்டு பிறக்கும் வித்யா ஜன்மம் பிறவிகளுள் ப்ரதானம்.
- உபநயனமானவனுக்கு "த்விஜ" என்று பெயர். புது ஞானமும் அனுஷ்டானமும் கிடைத்து ஆசார்ய சம்பந்தத்தால் மந்த்ரோபதேசம் பெற்று புதுப்பிறவி கிடைக்கிறது.
- "அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்"--என்று இதனையே திருமழிசைப்பிரான் கூறுகிறார்.
- மூலமந்த்ரத்தில் ப்ரணவம் ப்ரதானம். மூலமாகிய இந்த ஒற்றை எழுத்து தனி மந்த்ரம். ப்ரணவமின்றி மந்த்ரங்கள் எதையும் சொல்லமுடியாது. அக்ஷரத்தில் தான் ப்ரணவமாயுள்ளதாய் எம்பெருமான் கூறுகிறான்.
- அ, உ, ம என்ற மூன்று எழுத்துக்களாலான ப்ரணவத்தில் ப்ரதானம் "அ". இதன் அர்த்தம் பலவாயினும் ரக்ஷகத்வம் ப்ரதானம்.
- அ, உ, ம என்ற அக்ஷரங்களுள் -
- 'அ' எம்பெருமானையும்
- 'உ' பிராட்டியுயையும்
- 'ம' ஜீவனையும் குறித்தாலும் ரக்ஷகத்வமே ப்ரதானம்.
- பரதத்வத்தை நிர்ணயம் செய்யும் வாக்யங்களுள் "நாராயண அனுவாகம்" ப்ரதானம். பரஜ்யோதி, பரப்ரும்ஹம், பரமாத்மா என்ற ஶப்தங்கள் குறிக்கும் பொருள் நாராயணனே. அவனே எல்லா பரவித்யைகளால் அறியப்படுகிறான்.
- நித்ய விபூதி, லீலாவிபூதி இரண்டும் பிராட்டி எம்பெருமானுடையது. இவர்களிருவருக்கும் சேஷித்வம் ஒன்றே. இருவராயிருப்பினும் இருவரும் சேர்ந்து ஒரே தத்வம். ஆக இரு விபூதியும் ப்ரதானம். அவற்றை ஆள்பவர்கள் பிராட்டியும் பெருமானும்.
- பரம்பரையாக பதி ப்ராதான்யமாயிருப்பதால் இந்த இரு சமானர்களில் நாராயணனே ஸர்வ ப்ரதானனாகின்றான்.
- எம்பெருமானைவிட வ்யாப்தி உள்ளவர் எவருமில்லை. அவனே பரப்ரும்ஹம், பரதத்வம், பரஜ்யோதி, பரமாத்மா, பரதேவதை, பராசக்தி, பராகாஷ்டை, பராயணம், பரம தபஸ், பவத்ராணம், மங்களானம். இவ்வாறு காட்டப்படும் எம்பெருமானே பரமப்ரதானம்.
- எம்பெருமானே ப்ரதானசேஷி. ராமானுஜன் என்பதில் அனுஜன் என்ற ஜீவனை நிரூபித்தாலும் அர்த்த ஸ்வபாவத்தாலே எம்பெருமானே ப்ரதானம்.
- எம்பெருமானே விஶ்வசேஷி. க்ருஷ்ணன் சாரதியாயிருந்து அர்ஜூனன் தேரிலிருந்தபோதும் க்ருஷ்ணன் ரக்ஷகன். அர்ஜுனன் ரக்ஷிகன்.
- புஷ்பத்தில் வாசனைபோல, தேனில் மதுரம் போல ப்ரபஞ்சமும் பரமாத்மாவும் பிரிக்க முடியாதது. ஆக ஜீவனுக்கும் அந்தர்யாமியாக உள்ள ஸ்வாமி ப்ரதானம்.
- ஜீவன் எம்பெருமானுக்கு அத்யந்த பாரதந்த்ரியனாயுள்ளான். இந்த ஶரீர ஆத்ம உறவில் ப்ரதான வேற்றுமை ரக்ஷகன் ரக்ஷிகன் வித்யாசத்தை அனுசந்தானம் செய்வதில் இதுவே ப்ரதானம்.
- ப்ரணவத்தில் 'அ' காரம் காப்பவனையும் 'ம'காரம் காக்கப் படுபவனையும் குறிக்கும். இந்த அக்ஷரங்களுள் மறைந்நதுள்ள விபக்திகளின் புரிதலே ப்ரதானம்.
- ப்ரணவத்தின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டால் தத்வஞானம் கிடைக்கும். இதனால் அறியும் மோக்ஷோபாயம் ப்ரதானம்.
- மோக்ஷோபாய அனுஷ்டானங்களில் ப்ரதானம் அங்கங்களுடன் கூடிய ப்ரபத்தியே.
- இந்த ப்ரபத்தி அனுஷ்டானத்தில் ஆத்ம ஸமர்ப்பணம் எனப்படும் "அங்கியே" ப்ரதானம்.
- ப்ரபத்தியில் 3 ஸமர்ப்பணங்களுண்டு -
- ஸ்வரூப ஸமர்ப்பணம் (ஆத்ம)
- ஆத்மாவைக் காக்கும் பொறுப்பு ஸமர்ப்பணம்
- பல (Phala) ஸமர்ப்பணம். இவற்றுள் இரண்டாவதே ப்ரதானம்.
- ப்ரபத்தி அனுஷ்டான மந்த்ரோபதேசத்தில் சரமஶ்லோக வாக்யம் ப்ரதானம்
- ஸாத்யோபாயமாக ஜீவன் அனுஷ்டிக்கும் ப்ரபத்தியினால் வஸீகரிக்கப்பட்டு அதனை ஸ்வீகரிக்கும் எம்பெருமான் ப்ரதானம்.
- அஹிர்புத்ந்ய ஸம்ஹிதைசொல்லும் 'நம:' பத அர்த்தத்மாகிய ஸ்தூல, ஸூக்ஷ்ம, பரம் என்பதில் ஸ்தூல யோஜனைப்படி ஸாத்யோபாயம் ப்ரதானம்.
- நிருக்தம் என்பது வேதத்தின் ஓர் அங்கம் (சொற்களைப் பிரித்துப் பொருள் கொள்வது.) அதன்படி நம: என்ற சொல்லில் 'ம' என்ற எழுத்து ஜீவனையும் 'ந' என்ற எழுத்து ஜீவன் ஸ்வதந்த்ரனல்லன் என்றும் குறிக்கிறது. இது ப்ரதானம்.
- ஜீவன் செய்யும் ப்ரபத்தி எம்பெருமானிடம் வஸீகரணத்தை ஏற்படுத்துவதால் ப்ரயோஜனப்படி ஶரணாகதியே ஸாத்யோபாய ப்ரதானம்.
- நம: சப்தத்தில் உள்ளுறைப்பொருளாகிய ஸ்ரீமன் நாராயணனே ப்ரபத்திக்கு ப்ரதானம்.
- நாராயண பதத்துக்கு நாரங்களுக்கு ஆதாரம் என்றும், நாரங்கள் எம்பெருமானுக்கு ஆதாரமாயிருப்பர் என்றும் அர்த்தம் கிடைக்கினும், முன்னதே ப்ரதானம்.
- மூல மந்த்ரத்திற்கு பல அர்த்தங்களிருப்பினும் ஸ்வரூபம், உபாயம், பலம் (Phalam ) இவை மூன்றையும் சேர்த்து சொல்லும் அர்த்தமே ப்ரதானம்.
- ப்ரபத்தி மந்த்ரத்தில் த்வயம் ப்ரதானம். இதன் பூர்வ கண்டம் ஸித்தோ-ஸாத்யோபாயத்தையும், உத்தர கண்டம் பலனையும் சொல்கிறது.
- த்வயத்தில் 'சரணௌ' ப்ரதானம். திருவடி என்றால் திவ்யமங்கள விக்ரஹம் மனதில்வரும். சுபமும், ஆஶ்ரயமுமாக இருப்பது எம்பெருமான் திருமேனிமட்டுமே. தாஸர்களுக்குப் பரம போக்யமானது அவன் திருவடி. அதனைப்பிடித்துக்கொண்டால் அவனால் மீறமுடியாது.(அநாதிக்ரமணீயம் ஹி சரணக்ரஹணீயம்)
- திருவடியைப் பற்றினாலும் அவனது ஸங்கல்பமும் ஶரணாகதியில் அவனுக்குள்ள உபாயத்வம் என்ற குணம் ப்ரதானம்.
- அவனையடைய எம்பெருமானே வழியாகவும் பலனாயும் உள்ளது ப்ரதானம்.
- ப்ரபத்தி வித்தையின் அர்த்தங்களை விளக்கும் சாஸ்த்ரங்களில் எம்பெருமான் திருவாக்கிலிருந்து வந்த 'பாஞ்சராத்ர ஸாஸ்த்ரம்' ப்ரதானம்.
- ப்ரபத்தியை விளக்கும் க்ரந்தங்களுள் அமுதம் போன்றதும் குறைகளற்றதுமான ஆழ்வார்களின் திவ்யப்ரபந்தம் ப்ரதானம்.
- ப்ரபத்தியை விளக்கும் இதிகாசங்களுள் ஶரண்ய தம்பதி வாக்ய விசேஷபூஷிதமான ராமாயணம் ப்ரதானம்.
- வேதம் உபநிஷதங்களனைத்தும் ஒரு தட்டிலும், மஹாபாரதத்தை இன்னொரு தட்டிலும் வைத்தால் இரண்டும் சமமாயிருக்கும் என்பதால் மஹாபாரதம் பஞ்சம வேதம் எனப்படும் ப்ரதானம்.
- தர்ம அர்த்த காம மோக்ஷத்தை போதிக்கும் மஹாபாரதத்தில் அத்யாத்ம வித்தையைப் போதிக்கும் பகுதி ப்ரதானம்.
- அத்யாத்ம விஷயத்தில் ஸர்வ உபநிஷத்தின் ஸாரமாகிய கீதோபதேசம் ப்ரதானம்.
- பகவத் கீதையில் 18ம் அத்யாயத்தின் இரு ஶ்லோகங்கள் ப்ரதானம்.
- இந்த இரண்டுள் சரமஶ்லோகம் ப்ரதானம்.
- சரம ஶ்லோகத்தில் பூர்வ வாக்யம் ப்ரதானம்- ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ. இது கட்டளை விதிவாக்யம்.
- இரண்டாம் வாக்யம் பலனைச் சொல்கிறது மோக்ஷ விரோதிகளைக் களையும் வழிகளைச் சொல்வதால் ஸ்வத:ப்ராப்த ஸ்வாமிலாபம் ப்ரதானம்.
- மாஸூச: என்பதற்கு "சோகம் தவிர்" என்று பொருள். இது நிவ்ருத்தக வாக்யம் கீதையில் 3 இடங்களில் இதற்கான வழிகள் சொல்வதால் ப்ரதானம்.
- ப்ரபத்தி செய்த ப்ரபன்னர்கள் த்ருப்தர் (மோக்ஷத்தில் விளம்பத்தை (தாமதம்) ஸஹிப்பவர்), ஆர்தர் (உடனே மோக்ஷம் வேண்டுபவர்) இதில் ஆர்த்த ப்ரபன்னர் ப்ரதானம்.
- ஆர்த்தர்களில் மிகக் குறுகிய காலத்தில் மோக்ஷம் விழைபவர்கள் ப்ரதானம்.
- த்ருப்த ப்ரபன்னர்களுக்கு அர்ச்சிராதி சிந்தனாதிளும் மோக்ஷ எதிர்ப்பார்ப்பும் ப்ரதானம்.
- ப்ரபன்னனுக்கு அந்திம ப்ரத்யயம் எம்பெருமான் தன் ஸங்கல்பத்தாலே அளிப்பான். "மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகமெண்ணுமே" என ஆழ்வார் கூறுவதுபோல.வரதன் கூறும் ஆறு வார்த்தைகளுள் அந்திம ஸ்ம்ருதி ப்ரதானம்.
- எம்பெருமான் உகக்கும் கைங்கர்யங்கள் -
- ஆக்ஞாகைங்கர்யம்.
- அனுஞா கைங்கர்யம். இதில் முன்னது ப்ரதானம்.
- இவற்றுள் ஶாஸ்த்ரம் அனுமதித்த (விஹித கரணகார்யம்) கைங்கர்யங்களைச் செய்வது ப்ரதானம். அல்லாதவைகளை (நிஷிதவர்ஜனம்) விலக்குவது முக்யம். (பிறர் தோஷங்களைக் காணும்போது குருடர்களாயும், பரஸ்த்ரீயிடம் பேடியாகவும், பழிச் சொல் கேட்க நேரிட்டால் ஊமையாகவும் இருப்பவர்கள் எனக்கு ப்ரிய மானவர்கள் என்கிறார் எம்பெருமான்.)
- அனுஞா கைங்கர்யத்தில் (இந்த்ரியங்களால் செய்வது) க்ரியாம்ஸ கைங்கர்யம். (மனஸால் செய்வது) ஞான கைங்கர்யம். இதில் ஞானாம்சம் ப்ரதானம். (காலக்ஷேபம் சொல்வது, கேட்பது, பாராயணம் ஆகியன இதிலடங்கும்)
- ஶாஸ்த்ரத்தை மீறுபவன், ஆசார்ய சம்மதமின்றி ஞானம் சம்பாதிப்பவன், ஆசார்ய உபதேசத்தில் நிலைநிற்காதவன், உபதேசத்தில் நம்பிக்கை இல்லாதவன், தேவதாந்த்ர ஸ்பர்ஸம் உள்ளவன் ஆகியோர் ப்ரபன்னனால் விடத்தக்கவர்கள். இவர்களுள் கடைசியில் சொல்லப்ட்டவன் ப்ராதனமாய் விடத்தக்கவன் .
- ஆசார்ய உபதேசத்தில் நிலை நிற்பவனும் அனுஷ்டானமுள்ளவனும், பக்தி, சக்தியுள்ளவனும் உபதேசம் பெற ப்ரதானமானவன்.
- ஶாஸ்த்ரங்கள் 40 அனுஷ்டானங்களையும், 8 ஆத்ம குணங்களையும் ஸிஷ்யனுக்கு விதிக்கிறது. இதில் அனுஷ்டானம் குறைவாயினும், பூர்ணமான குணமுள்ளவன் ப்ரதானம்.
- தயா, ஶாந்தி, அனஸூயா, ஸௌசம் (ஆசாரம்), அனாயாஸம் (அலுப்பின்மை), மார்த்தவம், அகார்பண்யம் (இல்லை என நினைக்காமை), அஸ்ப்ரு:(ஆசையின்மை) இவையே ஆத்ம குணங்கள்
- பகவத், பாகவத கைங்கர்யங்களில் பின்னது ப்ரதானம். மனம் வாக்கு காயம் மூன்றும் இணைந்து பகவத் விஷயத்தில் ஈடுபடும். இதில் மனம் ராஜா. பிற சேவகர்கள் பகவத் ஸேஷத்வத்தின் பரீவாகமே பாகவதாராதனம். (மதுரகவி காட்டிய வழி, சத்ருக்னன் பரதனை ஆராதித்தது, வடுக நம்பி ராமானுஜரை ஆராதித்தது போல)
- ஸத்கார, ஸல்லாப, ஸஹவாஸ, பீதி, ப்ரீதி யோக்யாதிகார பாகவதர்களுல் ஸம்யக் ஞானாதிகள் (அதாவது உயர்ந்த ஞானஸ்த்தர்கள்) ஸத்காரயோக்யரில் ப்ரதானம். (இஞ்சிமேடு, உத்தமூர் நாவல் பாக்கம் ஸ்வாமிகள் போல)
- நிர்வேதாதிகர் (ஸம்ஸாரத்தில் நிர்வேதப்படுபவர்கள்) ஸல்லாப யோக்யரில் ப்ரதானம்.
- பாகவதர்களுள் ஸம்ஸார பந்தத்திலிருந்து முழுதுமாய் விடுபட்ட பாகவதனுடன் சேர்ந்து வசிக்க விரும்பும் ஸஹவாஸ யோக்யர் ப்ரதானம்.
- மஹான்களிடம் பக்தியும், ஸஹ பாகவதர்களிடம் மதிப்பும், மரியாதையும் கொண்டு தன் பெருமையைக் காட்டாதவர் பீதி யோக்யரில் ப்ரதானம்.
- தென்றல், சந்தனம் போல் குளிர்ந்து பாகவதர்களிடம் ப்ரீதியுடன் பகவதனுபவத்தில் திளைக்கும் பாகவதர்கள் ப்ரீதி யோக்யரில் ப்ரதானம்.
- ஆசார்ய கைங்கர்யம் பாகவத கைங்கர்யத்துள் ப்ரதானம்.
- பகவத், பாகவத, ஆசார்யகைங்கர்யத்துள் ஆசார்ய கைங்கர்யத்தை பாகவத கைங்கர்யத்துடன் இணைத்துப் செய்வது ப்ரதானம்.
- பெருமாள் ஆராதனம், ஆசார்ய கைங்கர்யம், பாகவத கைங்கர்யம் மூன்றும் சேர்ந்து கிடைப்பது ப்ரதானம்.
- ஶாஸ்த்ரம் சொல்லும் வழியில் இம்மூவருக்கும் உகப்பு ஏற்படும்படிச் செய்யும் கைங்கர்யம் ப்ரதானம் (ஒடம் கட்டுவது, பர்ணசாலை அமைப்பது ஆகியன ராமன் உகப்புக்கு இளையபெருமாள் செய்த கைங்கர்யம்) கைங்கர்யத்தை ஏற்பவர்களின் உகப்பு ப்ரதானம்.
- கைங்கர்யத்தில் ஈடுபடும்போது பாவ (Bhaava) விஸேஷம் ப்ரதானம். தனக்கு கவுரவம் தேடாத மனோநிலை. தம்மை உகப்பாரைத் தாமுகப்பார் என்பது போல ப்ரீதியுடன் செய்யும் கைங்கர்யத்தை எம்பெருமான் ஏற்றுப் பலனளிப்பார்.
- கைங்கர்யத்தின் பயனாகிய உகப்பே ப்ரதானம். சேதன கைங்கர்யம் ஸ்வப்ரயோசனமானது. அசேனத்தில் ஸ்வார்த்தம் என்ற அம்சம் இல்லை. பரமபுருஷ ப்ரீதிக்கு நம் ப்ரீதி ஸேஷம்."என் சந்தோஷம் உன் சந்தோஷத்துக்கு அதீனம்" என்கிறார் ஆளவந்தார்."அநாத ஜீவிதனாயிருக்கும் எனக்கு ஸனாத நாதனாயிருப்பவன் நீ" என்கிறார்.
- எம்பெருமானின் பர, வ்யூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்சை என்ற 5 நிலைகளில் கைங்கர்யங்களுக்கு அர்ச்சை ப்ரதானம். (திருமேனி)
- எம்பெருமானிடம் திட பக்தியும், அவனைப்பற்றிய புரிதலும் இருக்கும் பாகவதனுக்கு பகவான் எந்த நிலையிலும் உறைபவன் என்று உணர்வதால் மேற்சொன்ன எந்த நிலையையும் பக்தி செய்ய ப்ரதானம்.
- இஜ்யா காலம் கைங்கர்யத்துக்கு ப்ரதானம். திருவாராதனம் செய்ய உகந்த காலம்.
- க்ருத, த்ரேதா, த்வாபர, கலி என்ற 4 யுகங்களில் கைங்கர்யத்துக்கு கலியுகமே ப்ரதானம் என்கிறார் வ்யாசர்.
- க்ருத யுகத்தில் ஸத்வம் மேலோங்கியிருந்தால் த்யானம் ப்ரதானம்
- த்ரேதையில் யாகம்
- த்வாபரத்தில்ஆராதனம்
- கலியில் நாமஸங்கீர்த்தனம். ஶ்ரமப்பட்டுச் செய்யும் யாக யக்ஞத்தை விட ஶ்ரேஷ்டமானது நாமஸங்கீர்த்தனம். "குருவான பலன் லகுவான உபாயத்தால்" கிடைக்கிறது.
- கைங்கர்யத்தில் ஈடுபடும்போது மனம், உரை, செயல் என்ற கர்ணத்ரயம் ப்ரதானம். இவை ஒருங்கிணைந்து கைங்கர்யத்தில் ஈடுபடவேணும் ஶரீரம் ஓர் ஐஶ்வர்யம். இது ஜீவனத்துக்கு மட்டும் ஏற்பட்டதல்ல. மனித ஶரீரம் விசித்ரமானது.
- நாம் ஸம்பாதிக்கும் கைங்கர்ய உபகரணங்களில் துளசி ப்ரதானம்.
- கைங்கர்யத்துக்கு திவ்ய தேசம் ப்ரதானம்.
- திவ்ய தேசத்துள் ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரம் ப்ரதானம்.
- (திருப்பதி) இதில் எம்பெருமான் தானே ஆவிர்பவிக்கிறான்.
- ஸைத்த க்ஷேத்ரம் ஸித்த புருஷர்களால் ப்ரதிஷ்டை மானவை
- (காஞ்சி) ஆர்ஷக்ஷேத்ரம் ரிக்ஷிகளாலும்
- (உப்பிலியப்பன்) வைஷ்ணவ க்ஷேத்ரம்
- (அஹோபிலம்) மஹான்களால் ப்ரதிஷ்டையானவை.
- திவ்ய தேசங்களில் வாழக்கிடைக்காவிடில் கருந்தட முகில்வண்ணனைக் கைகொண்டு தொழும் பாகவதர்கள் வாழும் ஊர் ப்ரதானம்.
- கைங்கர்யத்துக்குத் தகுதிபெற தீர்த்தங்களில் அவகாஹனம் (ஸ்நானம்) செய்தல் ப்ரதானம். இதில் அதிக ஶுத்தி தரவல்லது மானஸ தீர்த்தம்.(பகவானை ஸ்மரிப்பது) தூயோமாய் வந்தோம் என்கிறாள் ஆண்டாள்.
- கைங்கர்ய நிலையில் சாண்டில்ய முனிவர் சொன்ன கர்ணத்ரய ஶுத்தியுள்ள நிலை ப்ரதானம்.
- மனஸ் தோஷம் (கோபம், மோகம் ) வாக்கு தோஷம் (பொய், கோள் சொல்லுதல்) ஶரீர தோஷம் (பரஹிம்ஸை) ஆகியன ஜெயிக்கப்பட வேண்டியவை. இவற்றுள் தவிர்க்கப்பட வேண்டிய ப்ரதானமானது அதிக ஆசை.
- ஆசை கோபத்தைப் பெருக்கும். ஸத்வ குணம் நிறைந்த பாகவதர்களின் ஸத் உபதேசம் நிறைந்த ஸத்ஸங்கம் ப்ரதானமாகி சேதனனை நல்வழிப்படுத்தும்.
- ஸாஸ்த்ர மீறல்களால் கைங்கர்யங்களில் ஏற்படும் தோஷம் அபசாரம் எனப்படும். இதில்அஸஹ்யாபசாரம் தவிர்க்க படவேண்டிய ப்ரதானமாகும் (பொறுக்கமுடியாத தோஷங்கள்)
- ஆசார்ய த்ரோஹம், அவர் செய்த பேருபகாரத்தை மறத்தல், அவரைக் குறைகூறுவது ஆகியன தோஷங்களுள் ப்ரதானம்.
- கைங்கர்யத்தில் அபராதம் ஏற்படக்கூடாது. ஏற்பட்டால் அவரிடமே அஞ்சலி செய்து மன்னிக்கும்படி கேட்பது ப்ரதானம். அதுவே பரிகாரமாய் எம்பெருமானின் அனுக்ரஹத்தைப் பெற்றுத்தரும். நாம் செய்த தவறை மன்னித்து பெருமான் அனுக்ரஹிகிறானே என்ற க்ருதஞதை தோன்ற வேண்டும்.
- பாகவதாபசாரத்துக்கு அவரிடமே சென்று அஞ்சலி செய்து க்ஷமாபணம் பெறுவது ப்ரதானம்."அஹம் பக்த பராதீன:" - என்கிறான் பெருமான்.
- தவறு செய்யும் சேதனனுக்கு -
- செய்த தவறுக்கு அனுதாபம்
- தவறு செய்யக்கூடாதென்ற முடிவு
- செய்த தவறுக்கு ப்ராயச்சித்தம் தேடல்
- ப்ராயச்சித்தம் அனுஷ்டித்தல் ஆகியன தேவை. இவை ஏதும் இல்லாதவனுக்கு ஆசார்யனின் ஆந்ருஸம்ஸ்யம் (கருணை) ப்ரதானம்.
- ஆசார்யன் தீர்க்க பந்து. மாதா பிதாக்களையடுத்து ஜீவன் நன்றாக இருக்க முயற்சிப்பவர் ஆசார்யன். ஆசார்யன் கருணை கிடைத்தபின் அனுதாபம் பிறந்தால் எம்பெருமான் அவனைத் தேற்றும் வார்த்தை ப்ரதானம்.
- குருவர்கத்தில் ஆசார்யனும் பெற்றோரும் அடங்குவர். இவர்களுள் ஆத்மா கடைத்தேற உதவும் ஆசார்யன் ப்ரதானம்.
- வேதாந்த ஶாஸ்த்ரங்களை உபதேசித்த ஆசார்யர்களுள் மூலமந்த்ர உபதேசம் தந்தவரே ப்ரதானம் பரமாசார்யன். பேரருளாளன் வார்த்தையை விட பெரியநம்பிகள் வார்த்தையைப் பெரிதாக மதித்தது திருக்கோட்டியூர் நம்பியிடம் சென்று மந்த்ரார்த்தம் கேட்டார் பகவத் ராமானுஜர்.
- ஆசார்யனும் ப்ராசார்யனும் (ஆசார்யனின் ஆசார்யன்) ஒன்றாக இருக்கும் சமயத்தில் ப்ராசார்யனுக்கே வந்தனம் செய்வது ப்ரதானம்.
- ஆசார்யனின் நியமனம் பெற்று எம்பெருமான் கைங்கர்யத்தில் ஈடுபடுதல் ப்ரதானம். (அனந்தாழ்வான் ராமானுஜர் விருப்பத்துடன் திருமலையில் புஷ்ப கைங்கர்யத்தில் ஈடுபட்டார்.)
- பகவத் ஸந்நிதியில் பகவான்தான் ப்ரதானம் ஆங்கே பாகவதரல்லாத நாஸ்திகனுக்கு உபசாரம் செய்தால் அது அபசாரத்தில் ப்ரதானம்.
- வேறோர் தெய்வம் தொழாத ஏகாந்திகளுள் மோக்ஷத்தைத்தவிர வேறோர் பலனைக் கேட்காத ப்ரபன்னன் ப்ரதானம்.
- எம்பெருமான் கைங்கர்யத்தில் வேறுபலனை எதிர்ப்பார்க்காத க்ருத க்ருத்யனின் கைங்கர்யம் ப்ரதானம்.
- இத்தகையவன் ஞானம், பக்தி, நித்ய கைங்கர்யம் ஆகியவற்றைப் பெற எம்பெருமானை அபேக்ஷிப்பது ப்ரதானம்.
- நல்ல விசேஷ ஞானம் பெற ஞான வ்ருத்தர்களாயிருப்பவர்களிடம் சென்று ஸேவித்து உபாஸித்தல் ப்ரதானம்.
- பகவானுக்கு தாஸன் என்ற ரஸம் ஏற்படத் தடையாயுள்ள காம, க்ரோதாதிகளை ஒழித்து ஸத்வகுண அபிவ்ருத்தி செய்வது ப்ரதானம்.
- குணங்களால் வரும் பயன் ஏராளமாயினும் ஸத்வகுணத்தால்வரும் பயன் ப்ரதானம்."ந மம" என்பது ஸாத்விகத்யாகம். இந்த்ரியங்களை அடக்கி வரும் வைராக்ய ஸுகம் ப்ரதானம்.
- பக்தி அல்லது ப்ரபத்தி யோகத்தினைச் செய்த முமுக்ஷூக்குக் கிடைக்கும் பகவத் கைங்கர்யம் ப்ரதானம். இந்த கைங்கர்யம் நடப்பதில் சில தடங்கல்கள் வரலாம். நம் சாதனையால் கிடைத்தது என்ற ஸ்வாதந்த்ரயத்தில் மூழ்கும் வாய்ப்பும் உண்டு. அவற்றைக் கடந்து எம்பெருமான் க்ருபையாலும் ஸங்கல்பத்தாலும் கிடைத்த இந்த நிரதிஸயானந்த ரூபமான முக்தி ஸர்வ ஸுகங்களிலும் ப்ரதானம். இதில் அனுபவம் அவிச்சின்னமாய் ப்ரவாகமாய் இருப்பதால் நித்ய நிர்தாரிக நிருபாதிக கைங்கர்யமாகி ஸர்வத்திலும் ப்ரதானமாகின்றது இந்த முக்தி ஸுகம்.
- அகாரார்த்தமான எம்பெருமானுக்கு மகாரார்த்தமான ஜீவன் என்றும் ஸேஷம். முக்தன் அனுபவிக்கும் இந்த நித்ய நிரவதிக கைங்கர்ய ஸுகம் எம்பெருமான் அனுபவிக்கும் ஸுகத்துக்கு ஈடாகும். மோக்ஷ தாயகனாகிய முகுந்தன் இந்த ஸ்வதந்த்ரத்தை முக்தனுக்கு அளிக்கிறான். ஆக அனைத்து சேதன அசேதனத்தையும் ஶரீரமாய்க் கொண்டு அந்தர்யாமியாய் அவற்றுள் உறையும் எம்பெருமான் ஶ்ரீமன் நாராயணனே உயர்ந்த ப்ரதானம் என்று சொல்லி நிறைக்கிறார் ஸ்வாமிதேஶிகன்.
க்ரந்தபலன்
ஸகலப்ரமாணங்கள், ஞானங்கள், தத்துவங்கள் எல்லாவற்றுக்கும் ப்ரதானமாயுள்ளவன் எம்பெருமான் ஒருவனே. மற்றெல்லாம் அப்ரதானம். அவற்றைவிட்டு அவனைப்பற்றி அவன் கைங்கர்யத்தை ப்ரதானமாய்க் கொள்ள வேண்டும்.
ஶ்ரீமத் வேங்கட நாத: ஸஹ்ருதய ஹ்ருதய ப்ர்ஸதநம் ஶ்ரேஷ்டம்.
வ்யக்தம் ப்ரதான ஶதகம் வ்யதனுத கவிதக கரிகடா ஸிம்ஹ:.
கீழ்க்காணும் அம்ருதாஸ்வாதினி (27) பாசுரத்துடன் இந்தப்ரதான ஶதகம் என்ற க்ரந்தத்தைத் தலைக்கட்டுகிறார் ஸ்வாமி தேஶிகன்.
"காசினியின் மணி அனைத்தும் காயா வண்ணன்
கடைந்தெடுத்த கவுத்துவத்தின் சீர்மைக்கொவ்வா*
காசி முதலாகிய நல் நகரி எல்லாம்
கார்மேனி அருளாளர் கச்சிக்கொவ்வா*
மாசின் மனந்தெளி முனிவர் வகுத்ததெல்லாம்
மாலுகந்த ஆசிரியர் வார்த்தைக் கொவ்வா*
வாசி யறிந்து இவை உரைத்தோம் வையத்துள்ளீர்*
வைப்பதாக இவை கொண்டு மகிழ்மினீரே".
ஸ்வாமி தேஶிகன் ஆய்ந்துரைத்த இப்ரதான ஶதகத்தால் தெளிந்து முகுந்தனடிபற்றி அந்தமில் பேரின்பத்தில் திளைப்போமாக.
(This is based on the Kaalakshepam of Naavalpakkam Sri U.Ve.Vasudevachariyar Swami through GSPK)🙏🙏🙏🌻🌻🌺🌺🌷🌷🌹🌹🌻🌻🌺🌺🌷🌷🌹🌹🌻🌻🌺🌺🌷🌷🌹🌹🙏🙏🙏