Friday, December 31, 2021

கோதாஸ்துதியும், கோதை செய்த துதியும் - Day 16



त्वन्मौलि दामनि विभोः शिरसा गृहीते
स्वच्छन्दकल्पित सपीति रसप्रमोदाः।
मञ्जुस्वनाः मधुलिहो विदधुः स्वयं ते
स्वायंवरं कमपि मङलतूर्यघोषम् ॥१६॥


தாயே!எம்பெருமானுக்கும் உனக்கும் நடந்த ஸ்வயம்வரத்தில் நடந்த மாலை மாற்றல் வைபவத்தில் தம் இஷ்டப்படி மது உண்டு களித்து வண்டுகள் தம் தீங்குரலினால் மங்கள தூரிய கோஷம் முழக்கின. (கோதாஸ்துதி -16)


பாசுரம் 16 -  நாயகனாய் நின்ற


நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
        கோயில் காப்பானே! கொடித் தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்
        ஆயர் சிறுமியரோமுக்கு, அறைபறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
        தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ
        நேய நிலைக் கதவம் நீக்கு ஏல் ஓர் எம்பாவாய்



நந்தகோபனின் திருமாளிகை காப்பவனே! கொடி பறக்கும் வாயில் காப்பவனே! மணிக்கதவைத் திறப்பாயாக!
கண்ணன் எங்கள் நோன்புக்கான பறை என்ற வாத்யத்தைத் தருவதாய் நேற்றே உறுதி செய்து விட்டான். நாங்கள் நீராடி தூய்மையுடன் கண்ணனை எழுப்ப ஸுப்ரபாதம் பாட வந்துள்ளோம். ஆகவே மறுக்காமல் இந்த நேச நிலைக் கதவைபத் திறந்தருள வேணும் என்கிறாள் ஆண்டாள்.


ஸ்வாப தேசம்
கண்ணன் உள்ளே உறங்குவதால் நந்தகோபன் மாளிகையைக் கண்ணும் கருத்துமாய் காவல் காக்கின்றனர். நித்யசூரிகள் ஶ்ரீ வைகுண்டத்தைக் காக்குமாப்போல ஶ்ரீரங்கத்தைப்
பஞ்சாயுதங்களும் காக்கின்றன என்கிறார் குலசேகராழ்வார்.

"உறகல் உறகல் உறகல் ஒண்சுடராழியே சங்கே*
அறவெறிநாந்தக வாளே 
அழகிய சார்ங்கமே தண்டே" - என்கிறார் பெரியாழ்வார்.

"புஜங்கம விஹங்கம ப்ரவர ஸைன்ய நாதா: ப்ரபோ*
ததைவ குமுதாதயோ நகர கோபுர 
த்வாரபா:"---என்று அபீதிஸ்தவத்தில் ஸ்வாமி தேஶிகன், நித்யசூரிகள், கோபுரம் காப்போர், வாயில் காப்போர் எல்லோரும் விழித்திருந்து இந்த பூமியயையும் ஶ்ரீரங்கத்தையும் காப்பாற்றுங்கள் என்கிறார்.

கைங்கர்யபரர்களை அவர்களது கைங்கர்யத்தையொட்டி அழைக்கும் வழக்கம் ஆண்டாள் காலத்திருந்தது என்பது "கோயில் காப்பான், வாயில்காப்பான்" என்றழைப்பதிலிருந்து புரிகிறது. இதனையே எம்பெருமானார் கோயில் கைங்கர்யங்களில் பின்பற்றினார்.

"கொடிதோன்றும் தோரண வாயில்காப்பான்" என்பதில் ஆசாராயர்களிடம் நம்மைக் கொண்டு சேர்ப்பவரை உபாஸிப்பதாய்க் காட்டுகிறாள் ஆண்டாள். ராமாவதாரத்தில்

ஶ்ரீராமனை மகரிஷிகள் அனுபவிக்கக் கேட்டதை "நென்னலேவாய்நேர்ந்தான்" எனக்குறிப்பிடுகிறாள் க்ருஷ்ணாவதாரத்தில் கோபிகைகளாக. விபீஷணனின் நல்ல உள்ளத்தை அறிந்து அனுமன் ராமனிடம் அழைத்துச் சென்றது போல உண்மையான பக்தி கொண்ட எங்களை உள்ளே செல்ல அனுமதிக்க வேணும் என்கிறாள்.

நேராகபகவானை உபாஸிக்காமல் ஆசார்யனை முன்னிட்டுக்கொண்டு செல்ல வேணும் என்கிறாள் ஆண்டாள்.
(நேராக பகவானை அடைய நினைத்த ஸூர்ப்பநகாவின் மூக்கும் காதும் அறுபட்டது) என்பது திருக்குடந்தை ஆண்டவன் நிர்வாகம். 

குருடன் மற்றொருவர் உதவியுடன் செல்வது, நொண்டி படகோட்டி உதவியுடன் அக்கரை சேர்வது, ராஜாவைப் பார்க்காமலேயே ராஜ ஸேவகர்களின் குடும்பம் ராஜபோகம் அனுபவிப்பது போல ஆசார்யனை முன்னிட்டுக் கொண்டு அரங்கனை அடையமுடியும் என்கிறார் ஸ்வாமிதேஶிகன் (ந்யாஸ திலகம் - 21)

க்ருஷ்ணன் இருக்க நந்தகோபனை நாயகன் என விளிக்கக் காரணம் ஶ்ரீவைகுண்டத்தில் பொறுப்புக்கள் அனைத்தும் விஷ்வக்ஸேனர் கையிலிருப்பது போல இங்கே நந்தகோபனிடம் ஒப்படைத்திருப்பதைக் குறிக்கிறது. ராமன் பிறந்தது த்ரேதாயுகம் தர்மத்திற்குக் குறைவில்லை. ராமனோ மஹா வீரன். அண்டை நாட்டு ராஜாக்கள் அவனுள் அடக்கம். தந்தை தஶரதனோ பேரரசன். அதனால் அவனுக்குக் காவல் வேண்டாம் ஆனால் க்ருஷ்ணனோ கலியுகத்தின் தோளைத்தொட்ட த்வாபரயுகத் தில் பிறந்ததால் அதர்மம் மிகுதி. தந்தையோ புல்லை மிதிக்க யோசிக்கும் ஸாத்வீகன். மகனோ இடைப்பிள்ளை. எடுப்பார் கைப்பிள்ளை. கம்ச பயத்தோடு சுற்றியிருந்த அரசர்களும் பகைவர்கள். அதனால் காவல் அதிகம் நந்தன் மாளிகைக்கு.
நாயகானாகிய ஆசார்யன் கோயில் காப்பானாக ப்ரணவத்தையும், அஷ்டாக்ஷரத்தையும் உபதேசிக்கும் பொருட்டு, வாயில் போன்ற "நம:" ஶப்தத்தின் பொருளைச் சொல்லி நம்மைத் தயார் செய்கிறார். ஜீவன் ஸ்வதந்த்ரனல்லன். அகிஞ்சனன் என் உணர்த்தி மோக்ஷவாயிலைத்திறக்க உதவுபவராக ஆசார்யனை "மணிக்கதவம்" என்பதன் மூலம் உணர்த்துகிறாள் ஆண்டாள்.

*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************

No comments:

Post a Comment